ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
பிறருக்குக் கொடுக்கும் கலையை வாழ்வில் வளர்த்துக்கொண்டவர்கள், மகிழ்விலும் வளர்கின்றனர் என்று, பிறரன்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் திருவாளர் Magnus MacFarlane-Barrow அவர்கள் வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
ஸ்காட்லாந்து நாட்டவரான Magnus அவர்கள், 19 நாடுகளில் கல்வி கற்கும் ஏறத்தாழ பத்து இலட்சம் ஏழை குழந்தைகளுக்கு, 'Mary's Meals', அதாவது, 'மரியாவின் உணவு' என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள ஓர் அமைப்பின் வழியே, ஒவ்வொரு நாளும், ஒருவேளை உணவை வழங்கிவருகிறார்.
“Give: Charity and the Art of Giving Generously” "கொடுங்கள்: பிறரன்பும் தாராள மனதுடன் தரும் கலையும்" என்ற பெயரில், Magnus அவர்கள் அண்மையில் வெளியிட்ட ஒரு நூலைக் குறித்து வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில், கொடுப்பவர்கள் ஒருபுறம், மற்றவர்கள் அனைவரும் பெறுபவர்கள் என்று பிரித்துப் பார்ப்பதைக் காட்டிலும், நாம் அனைவருமே கொடுப்பவர்கள் மற்றும் பெறுபவர்கள் என்று எண்ணுவதே சரியான சிந்தனை என்று கூறினார்.
கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில் பொருளாதாரச் சரிவு உலகெங்கும் நிலவி வந்தாலும், மக்களின் பசியைப் போக்க முன்வருபவர்கள் இன்னும் கூடிவருகின்றனர் என்பது, மனிதர்களிடையே உள்ள கொடுக்கும் குணத்தை வெளிப்படுத்துகிறது என்று திருவாளர் Magnus அவர்கள் தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.
கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக 'Mary's Meals' பிறரன்பு பணியை ஆற்றிவரும் Magnus MacFarlane-Barrow அவர்கள், 2016ம் ஆண்டு மே 11ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை புனித பேதுரு வளாகத்தில் சந்தித்ததை, தன் வாழ்வின் ஒரு முக்கிய நிகழ்வாக தன் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
அச்சந்திப்பின்போது, தான் திருத்தந்தையிடம் தங்கள் பணியைப் பற்றிக் கூறியதும், அவர், "முன்னேறிச் செல்லுங்கள், முன்னேறிச் செல்லுங்கள், இறைவன் உங்கள் பணியை நிறைவாய் ஆசீர்வதிப்பாராக!" என்று சொன்ன சொற்களையும், Magnus அவர்கள் தன் பேட்டியில் நினைவுகூர்ந்தார்.
No comments:
Post a Comment