Thursday, 1 October 2020

திருத்தந்தையர் வரலாறு : பதவி துறந்த முதல் திருத்தந்தை

 வத்திக்கானின் முன் பகுதி


திருத்தந்தை Pontian அவர்களும், எதிர் திருத்தந்தை Hippolytus அவர்களும் கைது செய்யப்பட்டனர். மன்னர், இருவரையும் சர்தேனியா தீவுக்கு கடத்தினார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

ஒரு திருத்தந்தைக்கு எதிராக இன்னொரு திருத்தந்தை முடிசூட்டிக்கொண்டு ஒரே நேரத்தில் இரு திருத்தந்தையர்கள் வாழ்ந்த புனித கலிஸ்டசின் காலத்திற்குப் பின்னரும் எதிர் திருத்தந்தை Hippolytusஅவர்களின் எதிர்ப்புப் பிரச்சாரம் தொடர்ந்தது. உண்மையான திருத்தந்தைக்கு எதிராக, Hippolytus அவர்களின் தத்துவ இறையியல் வாதங்கள் புழதிவாரி இறைத்துக்கொண்டிருந்தவேளையில், புனித Calistus அவர்களுக்குப்பின் திருத்தந்தையானார் திருத்தந்தை முதலாம் உர்பான். உண்மை திருத்தந்தைக்கு எதிராக Hippolytus அவர்கள், தன்னை முடிசூட்டிக்கொண்டு, தொடர்ந்தது வித்தியாசமான முறையில் ஒரு முடிவுக்கு வந்தது. அதை பிறகு பார்ப்போம்.

கி.பி. 222ம் ஆண்டில் Marcus Aurelius Severus Alexander என்பவர் உரோமையப் பேரரசராகப் பதவியேற்றபோது கிறிஸ்தவத்திற்கு பாதுகாப்பு வழங்கினார். அவரது அன்னை Julia Mammaea அவர்களும் கிறிஸ்தவத்தை ஆதரித்ததால், கிறிஸ்தவர்கள் அமைதியில் வாழ்ந்தனர். ஆனால் கிறிஸ்தவர்களுக்கு சட்டப்பூர்வமான எவ்வித சலுகைகளும் கிட்டவில்லை. இருப்பினும் திருத்தந்தை முதலாம் உர்பான் அவர்களின் பாப்பிறை தலைமைப்பணி காலத்தில் உரோம் கிறிஸ்தவர்கள், அரசின் சித்ரவதைகளற்ற, ஓர் அமைதி வாழ்வை மேற்கொண்டார்கள் எனக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.

திருத்தந்தை முதலாம் உர்பான் அவர்களுக்குப் பின் திருத்தந்தையாக வந்தார் புனித Pontian.  கி.பி.230முதல் 235 வரை ஏறத்தாழ 5 ஆண்டுகளே இவர் பாப்பிறையாக இருந்தார். இவர் காலத்திலும் எதிர் திருத்தந்தை Hippolytusன் ஆட்சி தொடர்ந்தது. சிலகாலம் அமைதியில் வாழ்ந்துவந்த கிறிஸ்தவர்களுக்கு மீண்டும் ஒரு பேரிடி வந்து தாக்கியது. 235ம் ஆண்டில் மன்னர் Maximinus Thracian, கிறிஸ்தவர்களை, குறிப்பாக கிறிஸ்தவத் தலைவர்களை சித்ரவதைப்படுத்தத் தொடங்கினார். இதில் திருத்தந்தை Pontianம் எதிர்திருத்தந்தை Hippolytusம் கைது செய்யப்பட்டனர். இருவரையும் சர்தேனியா தீவுக்கு கடத்தினார் மன்னர். இதனால் ரோமையத் திருஅவையின் தலைமைப்பீடம் காலியானது. அதற்கு புதிய ஒருவரை தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்ததால் திருத்தந்தை Pontian தானாகவே முன்வந்து பதவி விலகினார். திருஅவையில் திருத்தந்தை ஒருவர் பதவி விலகியது இதுவே முதன் முறை. இந்த வேளையில் ஓர் அதிசயம் நடந்தது. முன்று திருத்தந்தையர்களை எதிர்த்து ஆட்சி நடத்திய Hippolytusம் தலைமைத் திருஅவையோடு ஒப்புரவாகினார். நம்  திருத்தந்தை Pontian, சர்தேனியா சுரங்கத்தில் வேலைசெய்ய கட்டாயப்படுத்தப்பட்டு பல்வேறு சித்ரவதைகளை அனுபவித்து அங்கேயே மறைசாட்சியாய் உயிரிழந்தார். இவரின் உடல், பின்னர் திருத்தந்தை Fabian   அவர்களின் காலத்தில்தான் உரோமைக்கு கொணரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

  கி.பி.235ம்ஆண்டு திருத்தந்தை Pontian பதவி விலகியபோது திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார் திருத்தந்தை Anterus. இவரின் ஆட்சி காலம் வெறும்  40 நாட்களே என வரலாறு கூறுகின்றது. இவர் கிரேக்க நாட்டைச்சேர்ந்தவர். திருச்சபைக்காக உயிரிழந்தவர்களின் வரலாறு சேகரிக்கப்பட்டு திருச்சபையில் பாதுகாக்கப்படவேண்டும் என்ற இவரின் கட்டளையும் ஆவலும் அரசு அதிகாரிகளின் கோபத்தை கிளப்பி இவரும் திருச்சபைக்காக மறைசாட்சியாக உயிர்விட காரணமாக அமைந்தது.

No comments:

Post a Comment