Tuesday, 13 October 2020

பழங்குடியினர் பணியில் ஈடுபட்ட இயேசு சபை துறவி கைது

 இயேசு சபை அருள்பணியாளர் Stan Swamy


இந்தியாவின் பூர்வீகக் குடிமக்களின் உரிமைகளுக்காகவும், பூர்வீக இன இளையோர், எவ்வித ஆதாரமும் இன்றி காவல்துறையால் கைதுசெய்யப்படுவதை எதிர்த்தும் உழைத்துவந்த இயேசு சபை அருள்பணியாளர் மீது வழக்கு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில், ஏறத்தாழ, 50 ஆண்டுகளாக, பழங்குடி மக்களிடையே பணியாற்றிவரும் 83 வயதான இயேசு சபை அருள்பணியாளர் Stan Swamy அவர்களை, இவ்வியாழன் இரவு, வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளது, NIA எனப்படும் இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு.

இராஞ்சியிலுள்ள Bagaicha எனுமிடத்தில் தங்கியிருந்த அருள்பணி Stan Swamy அவர்களது இல்லத்திற்கு, இரவில் சென்று, தங்கள் காவலில் பலவந்தமாக எடுத்துச்சென்ற தேசிய புலனாய்வு அமைப்பு, அவரை அழைத்துச்செல்வது குறித்த எந்த உத்தரவையும் காட்டத் தவறியுள்ளது.

தெற்காசிய இயேசு சபையினரின் தலைவரான அருள்பணி ஜார்ஜ் பட்டேரி அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், அருள்பணி Stan Swamy அவர்களை வலுக்கட்டாயமாக, சட்டத்திற்குப் புறம்பான முறையில், எவ்வித கைது உத்தரவையும் காட்டாமல், அழைத்துச் சென்றிருக்கும் அரசு அதிகாரிகளின் போக்கை வன்மையாகக் கண்டனம் செய்கிறோம் என்று கூறியுள்ளார்.

இந்திய ஆயர் பேரவையின் முன்னாள் செயலரும், இராஞ்சி உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயருமான தியடோர் மஸ்கரீனாஸ் அவர்கள் UCA செய்தியிடம் தன் கருத்துக்களை வெளியிட்ட வேளையில், பல வழிகளில் உடல் நலன் குறைந்திருந்த 83 வயது நிறைந்த அருள்பணியாளரை இந்தக் கொள்ளைநோய் காலத்தில் இவ்வாறு அழைத்துச் சென்றிருப்பது மிகவும் கொடுமையானது என்று கூறினார்.

இதுவரை காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து விசாரணைகளிலும் முழு ஒத்துழைப்பு கொடுத்துவந்த அருள்பணியாளர் Stan Swamy அவர்களை, இந்திய புலனாய்வுத் துறை, இரவோடிரவாக அழைத்துச் சென்றிருப்பது, இருளின் ஆதிக்கத்தையே வெளிப்படுத்துகிறது என்று ஆயர் மஸ்கரீனாஸ் அவர்கள் மேலும் கூறியுள்ளார்.

இந்தியாவின் பூர்வீகக் குடிமக்களின் உரிமைகளுக்காகவும், பூர்வீக இன இளையோர், எவ்வித ஆதாரமும் இன்றி காவல்துறையால் கைதுசெய்யப்படுவதை எதிர்த்தும்,  தொடர்ந்து குரல் எழுப்பி வந்த இயேசுசபை அருள்பணி Stan Swamy அவர்களை, மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுடன் தொடர்புடைவர் என்ற குற்றச்சாட்டுக்களுடன், ஏற்கனவே ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 8ம் தேதிக்கு இடைப்பட்ட நாள்களில், பலமுறை விசாரணையை மேற்கொண்டுள்ளது, இந்த புலனாய்வு அமைப்பு.

இந்தியாவை பெருமளவில் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கோவிட்-19 கொள்ளைநோயின் தீவிரத்தால், 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர், பொது இடங்களில் வரக்கூடாது என்று ஜார்கண்ட் அரசு விதித்துள்ள தடையையும் மீறி, 83 வயது நிறைந்த அருள்பணியாளரை அழைத்துச் சென்றுள்ள NIA புலனாய்வு அமைப்பு, இவ்வெள்ளிக்கிழமை காலை, அவரை, விமானம் வழியாக மும்பை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பயங்கரவாதம் தொடர்புடைய குற்றச்சாட்டுகளுடன், இவ்வளவு வயது முதிர்ந்த (83) ஒருவர் மீது வழக்கு பதிவுச்  செய்யப்பட்டிருப்பது, இதுவே முதன் முறையாகும் என்கின்றன, செய்தி நிறுவனங்கள்.

தமிழகத்தில் பிறந்து, வளர்ந்து, ஜார்கண்ட் மாநில பழங்குடி மக்களிடையே 50 ஆண்டுகளாக பணியாற்றிக் கொண்டிருக்கும் இயேசு சபை அருள்பணி Stan Swamy அவர்கள்,  NIA புலனாய்வு அமைப்பினரிடம் மருத்துவச் சான்றிதழ்களை சமர்ப்பித்தால் போதும் என இராஞ்சி நகர காவல்துறை உயர் கண்காணிப்பாளர் செப்டம்பர் மாதம் 30ம் தேதி உறுதி வழங்கியுள்ளபோதிலும், இவ்வியாழன் இரவு, அவர் NIA அதிகாரிகளால் வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக,  Bagaichaவிலுள்ள இயேசு சபை மையத்தின் இயக்குனர், இயேசு சபை அருள்பணி சாலமன் அவர்கள் தெரிவித்தார். (AsiaNews/ UCAN)

No comments:

Post a Comment