மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் “அனைவரும் உடன்பிறந்தோர்” என்ற புதிய திருமடலைப் பாராட்டி கருத்து தெரிவித்துள்ள, இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் கட்டக்-புவனேஸ்வர் பேராயர் ஜான் பார்வா அவர்கள், இந்த புதிய திருமடலின் தலைப்பே, பூர்வீக இனத்தவரின் இதயங்களுக்கு மிகநெருக்கமாக உள்ளதை எடுத்துக்காட்டுகின்றது என்று கூறியுள்ளார்.
பூர்வீக இன மக்கள், இயல்பிலேயே, குழுமப் பண்பு கொண்டவர்கள், சமுதாய அளவில், மிகவும் ஒன்றித்து வாழ்பவர்கள் என்பதால், திருத்தந்தையின் இந்த திருமடல், அந்த மக்களின் வாழ்வையே பிரதிபலிக்கின்றது என்றும், இந்த திருமடல், உண்மையிலேயே, திருத்தந்தை வழங்கியுள்ள மிகப்பெரும் கொடை என்றும், பேராயர் பார்வா அவர்கள் கூறியுள்ளார்.
பூர்வீக இன மக்கள், இதயத்திலிருந்து பேசுகின்றவர்கள், இயேசு, அம்மக்களை இதோ உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர் (cf.யோவா.1.47) என்று அழைப்பார் என்பதால், திருத்தந்தையின் சொற்கள், அம்மக்களுக்குப் பொருத்தமானவை என்று கூறியுள்ள பேராயர் பார்வா அவர்கள், இம்மக்கள், மூத்த குடிமக்களை மதித்து மரியாதை செலுத்தும் சமதர்ம குழுமத்தினர் என்றும் குறிப்பிட்டார்.
இளைஞர்கள், நற்செய்தியின் சாரத்தை உள்வாங்கவேண்டும் என்று திருத்தந்தை இந்த திருமடலில் கேட்டுக்கொண்டுள்ளார், பூர்வீக இன இளைஞர்கள், தங்களின் மரபுகளையும், பழக்கவழக்கங்களையும், வயதுமுதிர்ந்தோரிடமிருந்து, மாலை நேரங்களில் நடைபெறும் கூட்டங்களில் கற்றுக்கொள்கின்றனர் என்றும், பேராயர் பார்வா அவர்கள் கூறினார்.
நம் திருத்தந்தை, இந்த திருமடலில் உலகை மூடியுள்ள இருளான மேகங்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார், இது இன்றைய நம் உலகிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், நமது உலகம், கடவுளின் அன்புச்சுடர் வெளியிடும் இதமான தன்மையைப் பெறத் தவறியுள்ளது என்றும், கோபம், காழ்ப்புணர்வு, கர்வம் போன்றவை, உண்மையான அமைதி மற்றும், அன்பை அனுபவிப்பதிலிருந்து நம்மைத் தடைசெய்கின்றன என்றும், கட்டக்-புவனேஸ்வர் பேராயர் கூறினார்.
பூர்வீக இன மக்கள், நம்பிக்கையின் மக்கள் எனவும், நவீனமயமாக்கம் மற்றும், தாராளமயமாக்கம் ஆகிய சாத்தான்களின் பிடியிலிருந்து விடுதலைபெறவேண்டியுள்ளது எனவும் உரைத்த பேராயர் பார்வா அவர்கள், இந்த மக்களுக்கு உதவும் நல்ல சமாரியர்கள் தேவைப்படுகின்றனர் என்று கூறினார். (AsiaNews)
No comments:
Post a Comment