ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
அக்டோபர் 10, கடந்த சனிக்கிழமையன்று, அசிசி நகர் புனித பிரான்சிஸ் பெருங்கோவிலில் அருளாளராக உயர்த்தப்பட்ட கார்லோ அக்குத்திஸ் அவர்களின் திருநாள், அக்டோபர் 12, இத்திங்களன்று முதல்முறையாக கத்தோலிக்கத் திருஅவையில் கொண்டாடப்படுகிறது.
அருளாளர் கார்லோ அக்குத்திஸ் பற்றி திருத்தந்தை
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 11, இஞ்ஞாயிறன்று வழங்கிய மூவேளை செப உரையின் இறுதியில், வளர் இளம் பருவத்தினரான கார்லோ அவர்கள் அருளாளராக உயர்த்தப்பட்டதை நினைவுகூர்ந்து பேசுகையில், இந்த இளைஞர், திருநற்கருணை மீது ஆழ்ந்த அன்பு கொண்டிருந்தார் என்பதை குறிப்பிட்டுப் பேசினார்.
மேலும், அருளாளர் கார்லோ அவர்கள், தனக்குக் கிடைத்த சுக வாழ்வில் உறைந்துபோகாமல், தான் வாழ்ந்த சூழலில் இருந்த தேவைகளுக்கு ஏற்ப, சமுதாயத்தின் வலுவற்ற மனிதரிடையே கிறிஸ்துவைக் கண்டார் என்பதையும், திருத்தந்தை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
இறைவனுக்கு முதலிடம் வழங்குவதிலும், நம் சகோதரர், சகோதரிகளுக்கு பணியாற்றுவதிலும், இளையோர் தங்கள் உண்மையான மகிழ்வைக் காணமுடியும் என்பதை, அருளாளர் கார்லோ அக்குத்திஸ் அவர்களின் வாழ்வு சொல்லித்தருகிறது என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.
10 இலட்சம் குழந்தைகளின் செபமாலை
மேலும், அக்டோபர் 18, வருகிற ஞாயிறன்று, குழந்தைகள் இணைந்து மேற்கொள்ளும் 10 இலட்சம் செபமாலை என்ற பக்தி முயற்சியில் அனைத்து கத்தோலிக்கரும் இணைவதற்கு, திருத்தந்தை தன் மூவேளை செப உரையில் அழைப்பு விடுத்தார்.
உலகெங்கும் வன்முறைகளை சந்தித்துவரும் கிறிஸ்தவர்களுக்காக செபிக்கும் நோக்கத்துடன், “Aid to the Church in Need” என்ற பாப்பிறை பிறரன்பு அமைப்பு, பத்து இலட்சம் குழந்தைகள் இணைந்து செபிக்கும் செபமாலை முயற்சியை ஏற்பாடு செய்துள்ளது.
No comments:
Post a Comment