Tuesday, 13 October 2020

அனைவரும் உடன்பிறந்தோர் புதிய திருமடல்- 2

 அசிசியில் புதிய திருமடலில் கையெழுத்திட்டுத் திரும்புகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்


போர், கடந்த கால வரலாற்றிலிருந்து வெளிவருகின்ற பூதம் அல்ல, மாறாக, அது தொடர்ந்த அச்சுறுத்தலாக, அனைத்து உரிமைகளும் புறக்கணிப்படுவதையும் குறித்து நிற்கின்றது - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் 37வது அரசுத்தலைவராகப் பணியாற்றிய ரிச்சர்டு நிக்சன் (1969-1974) அவர்கள், ஒரு பிரச்சார மேடையில் பேசியபோது, அமெரிக்கத் தேர்தலில் எனக்கு எதிராகப் போட்டியிடும் கென்னடி அவர்கள், நிறைய பொய் பேசுவார் என்று சொல்லிவிட்டு அமர்ந்தாராம். அவருக்குப் பிறகு ஒலிவாங்கியைப் பிடித்த கென்னடி அவர்கள், நான் பொய் பேசுவேன் என்பதெல்லாம் பொய் என்று மறுத்துவிட்டு, சரி, இதோ இந்த கூட்டத்தில் அமர்ந்திருக்கின்ற நீங்கள் எல்லாரும் மிக அழகாக இருக்கிறீர்கள் என்று நான் சொல்லுவது பொய்யா என்ன? என்று கேட்டாராம். அவ்வாறு கேட்டு, கூட்டத்திலிருந்து பலத்த கைதட்டலை வாங்கினாராம் கென்னடி. இன்றைய உலகில், பெரும்பாலும் அழகான பொய்களே அதிகம் விரும்பப்படுகின்றன. இக்காலக்கட்ட நடவடிக்கைகளை ஏன் அக்டோபர் 8, கடந்த வியாழனன்று, வட இந்தியாவில் இடம்பெற்றுள்ள ஒரு செயலைப் பார்க்கையில், புனையப்படும் பொய்களால் பல ஆர்வலர்களும், அப்பாவிகளும் கடுந்துன்பங்களுக்கு உள்ளாகின்றனர் என்பதை அறிகிறோம். ஜார்க்கண்ட் மாநிலத்தில், அக்டோபர் 8, கடந்த வியாழக்கிழமை இரவில், தமிழகத்தைச் சேர்ந்த, மனித உரிமை ஆர்வலரான 83 வயது நிரம்பிய இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களை,  எவ்வித முன் அரசாணையின்றி, NIA எனப்படும் இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு வலுக்கட்டாயமாக மும்பைக்கு அழைத்துச் சென்று சிறையில் அடைத்துள்ளது. இவர், ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக, அந்த மாநிலத்தில், பழங்குடி மக்களின் நலன் மற்றும், உரிமைகளுக்காக தன்னை முழுவதும் அர்ப்பணித்து வாழ்ந்து வருகிறவர்.

அருள்பணி சுவாமி அவர்கள் கைதுசெய்யப்பட்டதை எதிர்த்து, தமிழகத்தின் நாட்டைக் காப்போம் அமைப்பின் சார்பில், அதன் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.சே.இராசன் அவர்கள், கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த கைது, மனித உரிமை மற்றும் மனிதநேயம் ஆகியவற்றை புறந்தள்ளியதோடு, சனநாயக விரோதச் செயலுமாகும். அக்டோபர் 06, கடந்த செவ்வாயன்று, அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் NIA அமைப்பு, அவரை ஜூலை மாதத்தில் 15 மணி நேரம் விசாரித்ததாகவும், விசாரணைக்கு இவர் முழுமையாக ஒத்துழைத்தாகவும் கூறியுள்ளார். அடுத்தகட்ட விசாரணைக்காக அந்த அமைப்பு, அவரை மும்பை அலுவலகத்திற்கு வரவேண்டும் என்று கூறியுள்ளது. தனது வயது மற்றும், தற்போதைய கொள்ளைநோயைக் காரணம் காட்டி, அவ்வளவு தூரம் தன்னால் வர இயலாது என்று, அருள்பணி சுவாமி அவர்கள் கூறியுள்ளார். மேலும், “விசாரணையின்போது, மாவோயிஸ்ட் அமைப்பினர்களுடன் தொடர்புடையதுபோல கூறும் சில ஆவணங்கள் அவரது கணினியிலிருந்து எடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டு, அவரிடம் அதைக் காட்டியுள்ளனர். ஆனால் அவை அனைத்தும் அவரது கணினியில் திருட்டுத்தனமாகப் புகுத்தப்பட்டவை என்றும், அவற்றிற்கும் தனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும், அவர் அவர்களிடம்  தெரிவித்ததாகவும், அந்த காணொளியில் கூறியிருக்கிறார். மேலும், இந்த வழக்கில் பூர்வீக இனத்தவர், தலித்துகள் மற்றும், விளிம்புநிலை மக்களுக்காக குரல் எழுப்பிவந்த மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், மாணவத் தலைவர்கள், கவிஞர்கள், அறிவாளர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டிருப்பது, மிகப் பெரிய சனநாயக விரோத செயல் என்று, நாட்டைக் காப்போம் அமைப்பு அறிவித்துள்ளது.

சமய சுதந்திரம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “அனைவரும் உடன்பிறந்தோர்  Fratelli tutti)” என்ற தனது புதிய திருமடலின் எட்டாவது மற்றும், இறுதிப் பிரிவில், சமய சுதந்திரத்திற்கு உறுதி வழங்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார். இன்றைய நம் உலகில் உடன்பிறந்த உணர்வு மேலோங்க மதங்கள் உழைக்க வேண்டும். அதேநேரம், வன்முறை மற்றும், பயங்கரவாதச் செயல்களுக்கு, மத நம்பிக்கை ஒருபோதும் அடிப்படையாக அமையக் கூடாது. அவ்வாறு அமைந்தால், அது மதத்தின் பெயரை இழிவுபடுத்துவதாகும். பயங்கரவாதம், பணத்தாலோ ஆயுதங்களாலோ ஆதரவளிக்கப்படக் கூடாது. ஏனெனில் பயங்கரவாதம், உலகின் பாதுகாப்பிற்கும், அமைதிக்கும் எதிரான, கண்டிக்கப்படவேண்டிய உலகளாவிய குற்றம் (282-283).  மதங்கள் மத்தியில் அமைதிப் பயணம் இயலக்கூடியதே. இதற்கு அனைத்து நம்பிக்கையாளரின் அடிப்படை உரிமையான, சமய சுதந்திரத்திற்கு உறுதி வழங்கப்படவேண்டியது அவசியம்(279). திருஅவையும், அரசியலில் ஈடுபடாமல், அதேநேரம், பொது நலன் மற்றும், ஒருங்கிணைந்த மனித முன்னேற்றம் பற்றி கருத்தாய் இருக்கிறது. நற்செய்தி கோட்பாடுகளின்படி, திருஅவை, மனிதரின், குறிப்பாக, வறியோர், விளிம்புநிலையில் உள்ளோர், புலம்பெர்ந்தோர் போன்றோரின் நலன் பற்றி கவலை  கொள்கிறது (276-278). மேலும், உலகில் அமைதி நிலவுவதற்கு, மதத் தலைவர்கள், உண்மையான இடைநிலையாளர்களாகச் செயல்படவேண்டும். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது புதிய திருமடலில் கேட்டுக்கொண்டுள்ளபடி, 83 வயது நிரம்பிய இயேசு சபை அருள்பணி சுவாமி அவர்களும், அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ள ஏழை எளிய பூர்வீக இன மக்களின் உரிமைக்காக குரல்கொடுத்து, அநியாய அரசுகளின் அக்கிரமங்களை எதிர்த்து, மக்களின் துயரத்தில் துணைநின்ற போராளி மற்றும், அந்த மக்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்திருந்தவர். 

கனிவன்பின் அற்புதம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “அனைவரும் உடன்பிறந்தோர்” என்ற தனது திருமடலின் ஆறாவது பிரிவில், “சமுதாயத்தில் உரையாடலும் நட்பும்” என்ற தலைப்பில், “சந்திப்புக் கலை” பற்றி விளக்கியுள்ளார். ஒருவர் ஒருவரை, குறிப்பாக, உலகின் கடைக்கோடியில் வாழ்வோர், சமுதாயத்தில் வாய்ப்பிழந்தோர் மற்றும், பழங்குடி இன மக்களைச் சந்திக்கையில், நாம் அவர்களிடமிருந்து ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொள்கிறோம். இந்த உலகில் பயனற்றவர், மதிப்புக்குறைந்தவர் என்று  எவரும் இல்லை(215). ஒருவரோடு உண்மையாகவே உரையாடுகையில், அவரின் நியாயமான ஏக்கங்கள் பற்றி அறிந்து, அவர்மீது மதிப்பு உயரும். இத்தகைய சந்திப்பில், கனிவன்பால் வெளிப்படும் புதுமைகள் பற்றி அறியவருவோம். கனிவன்பு, இருளின் மத்தியில் சுடர்விடும் விண்மீன். இது, கொடூரங்கள், மனப்பதட்டம், வெறித்தனமான கிளர்ச்சிகள்...போன்றவற்றிலிருந்து நம்மை விடுதலையாக்கும். பரிவன்பு உள்ள ஒருவர், நலமான இணக்க வாழ்வை உருவாக்குகிறார், மற்றும், மனக்கொந்தளிப்புகளால் உறவுப் பாலங்கள் எரிக்கப்படும் இடங்களில், நல்லிணக்கப் பாதைகளைத் திறந்து வைக்கிறார் (222-224).

அமைதியின் கலை மற்றும், மன்னிப்பின் முக்கியத்துவம்

“புதுப்பிக்கப்பட்ட சந்திப்பின் பாதைகள்” என்ற தலைப்பைக் கொண்டுள்ள, அனைவரும் உடன்பிறந்தோர் என்ற திருமடலின் ஏழாவது பிரிவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அமைதியின் மதிப்பு மற்றும், அதை ஊக்குவிக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை விளக்கியுள்ளார். உண்மை, நீதி மற்றும், இரக்கம் ஆகியவற்றோடு தொடர்புடையது அமைதி. இது, பழிவாங்கும் உணர்விலிருந்து விலகி, மற்றவருக்குப் பணியாற்றும் மற்றும், ஒப்புரவையும், ஒருவர் ஒருவரின் முன்னேற்றத்தை வளர்க்கும் ஆவலையும் தூண்டும்(227-229). அமைதியைக் கட்டியெழுப்புவது, ஒருபோதும் முடிவுறாத செயல். எனவே, அந்தச் செயலில் மனிதரின் மாண்பும், பொது நலனும் மையத்தில் இடம்பெறவேண்டும்(230-232). மேலும், மன்னிப்பு, அமைதியோடு தொடர்புடையது. எவரையும் ஒதுக்காமல், எந்த விதிவிலக்கும் இன்றி எல்லாரையும் அன்புகூரவேண்டும். நசுக்குவோரை அன்புகூர்தல் என்பது, அவர், அடுத்திருப்பவரைத் தொடர்ந்து நசுக்குவதற்கு அனுமதிப்பது அல்ல, மாறாக, அவர் மனமாற்றம் அடைய உதவுவதாகும். அதேநேரம், அநீதியால் துன்புறுவோர், தங்களது மாண்பைப் பாதுகாத்துக்கொள்வதற்கு, தங்கள் சக்தியெல்லாம்கூட்டி உரிமைக்காகப் போராடவேண்டும். ஏனெனில், மனித மாண்பு கடவுளின் கொடை (241-242).  மேலும், மன்னிப்பு என்பது, தண்டனையிலிருந்து விலக்கீடு கொடுப்பது அல்ல, மாறாக, அது நீதி மற்றும், நினைவாகும். மன்னிப்பது என்பது, மறப்பது அல்ல, மாறாக, அது, தீமையின் அழிக்கும் அதிகாரத்தையும், பழிவாங்கும் ஆவலையும் துறப்பதற்குத் தூண்டுவதாகும். உலகில் இடம்பெற்றுள்ள, யூத இனப்படுகொலைகள், ஹிரோஷிமா நாகசாகி அணு குண்டு தாக்குதல்கள், சித்ரவதைகள், இன்னும் பல இனப்படுகொலைகள் போன்ற கொடூரங்களை ஒருபோதும் நம்மால் மறக்க முடியாது. அவை மீண்டும் நிகழதாவாறு, எப்போதும்  புதுப்பிக்கப்பட்டதாய், அவை நினைவுகூரப்படவேண்டும். நன்மை, மன்னிப்பு மற்றும், உடன்பிறந்த உணர்வைத் தேர்ந்துகொண்டவர்களை நினைப்பதுபோல, அவற்றையும் நாம் நினைவில் இருத்தவேண்டும் (246-252).

போர், மனித சமுதாயத்தின் தோல்வி

புதிய திருமடலின் ஏழாவது பிரிவில், போர் மற்றும், மரண தண்டனை பற்றிய தன் எண்ணங்களையும் திருத்தந்தை வழங்கியுள்ளார். உலக அளவில் மரண தண்டனை ஒழிக்கப்படவேண்டும், இதில் கொலைசெய்பவரும், தனது மாண்பை இழக்கிறார், மனிதரின் மாண்பு கடவுள் வழங்கிய கொடை என்று திருத்தந்தை கூறியுள்ளார். மேலும், போர், கடந்த கால வரலாற்றிலிருந்து வெளிவருகின்ற பூதம் அல்ல, மாறாக, அது தொடர்ந்த அச்சுறுத்தலாக, அனைத்து உரிமைகளும் புறக்கணிப்படுவதையும் குறித்து நிற்கின்றது. போர், அரசியல் மற்றும், மனித சமுதாயத்தின் தோல்வியாகும். அது, தீமையின் சக்திகளின் முன்பாக வேதனையளிக்கும் தோல்வியாகும். மேலும், கடந்த காலத்தில் மட்டுமல்ல, இன்றும் பயன்படுத்தப்படும் வேதிய மற்றும், உயிரியல் ஆயுதங்கள், பல அப்பாவி குடிமக்களைத் தாக்குகின்றன. இதற்கு நியாயமும் சொல்லப்படுகின்றன. இதனால், இனிமேல் போரே வேண்டாம் என்று, நாம் மிக ஆவேசத்துடன் குரல் எழுப்ப வேண்டும். துண்டு துண்டாக இடம்பெறும் உலகப் போரை, நாம் அனுபவித்து வருகிறோம். போர்கள் எல்லாம், ஒன்றோடொன்று தொடர்புடையவை. அணு ஆயுதங்கள் முற்றிலும் ஒழிக்கப்படவேண்டியது, நன்னெறி மற்றும், மனிதாபிமானக் கடமையாகும். ஆயுதங்களில் போடப்படும் பண முதலீடுகள், பசியை அகற்றும் உலகளாவிய நிதியை உருவாக்கப் பயன்படுத்தப்படலாம் (255-262). இவ்வாறு உலக சமுதாயத்திடம் பரிந்துரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 11, இஞ்ஞாயிறு நண்பகலில், வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு ஆற்றிய மூவேளை செப உரைக்குப்பின், அர்மேனியாவுக்கும், அஜெர்பைசானுக்கும் இடையே நிலவும் போரில் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களுக்காகச் செபித்தார். மேலும், இரஷ்யாவின் தலையீட்டால், அக்டோபர் 10, இச்சனிக்கிழமை நண்பகலிலிருந்து கடைப்பிடிக்கப்பட்டுவரும் போர்நிறுத்தத்தையும் திருத்தந்தை வரவேற்றார். இந்த கொரோனா கொள்ளைநோய் காலத்தில் திருத்தந்தையும், ஐ.நா. தலைமைப் பொதுச்செயலரும், உலகில் போர் இடம்பெறும் பகுதிகளில், போர்நிறுத்தத்திற்கு, தொடர்ந்து அழைப்பு விடுத்து வருவது நாம் அறிந்ததே. ஆயினும் உலகில் அங்கும் இங்குமாக, போர்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன என்பது கசப்பான உண்மை.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது புதிய திருமடலின் இறுதியில், உரிமைக்காக குரல் எழுப்பிய, மார்ட்டின் லூத்தர் கிங், பேராயர் டெஸ்மன்ட் டுட்டுட்டு, மகாத்மாக காந்தி, அருளாளர் சார்லஸ் தெ ஃபோக்கோ ஆகியோர் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இந்த திருமடலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனித சமுதாயத்தின் இதயத்தில் உடன்பிறந்த உணர்வு குடிகொள்ளட்டும் என்று இறைவனை மன்றாடியுள்ளார்.

அருள்பணி ஸ்டான் சுவாமியின் விடுதலைக்காக...

ஜார்க்கண்ட் மாநிலத்தில் வாழ்கின்ற பூர்வீக இன மக்களை தன் உடன்பிறப்புக்களாகப் பார்த்து, அவர்களின் உரிமை வாழ்வுக்காக உழைத்த, தமிழரான இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களைக் கைது செய்து சிறைப்படுத்தியிருப்பது, சனநாயக அத்துமீறல், மனித உரிமை மீறல் என்று குரல் எழுப்புவோம். மனித உரிமைகளை அடக்கி ஆள நினைக்கும் சக்திகளைத் துணிந்து எதிர்த்து நிற்போம். அருள்பணி சுவாமி அவர்களுக்கு ஆதரவாக, சிறைப்படுத்தாதே, சிந்தனையைச் சிறைப்படுத்தாதே என்று, அக்டோபர் 12, இத்திங்கள் மாலையில், இந்தியாவில் நாடு தழுவிய எழுச்சி இடம்பெறுகிறது. அதற்கு நம் முழு ஆதரவைத் தெரிவித்து அதில் இணைவோம். தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி என்பதை, உணரவேண்டியவர்கள் உணரவைப்போம். ஏழை எளியோரின் வாழ்வு வளம்பெற உழைப்போருக்கு ஆதரவளிப்போம். அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களுக்கு நீதி கிடைக்கட்டும், அவர் வெகுவிரைவில் விடுதலை பெறட்டும் என, உடன்பிறந்த உணர்வோடு கடவுளைப் பிரார்த்தனை செய்வோம்.

No comments:

Post a Comment