கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
2006ம் ஆண்டில் இறைபதம் சேர்ந்த 15 வயது நிரம்பிய, வளர்இளம்பருவ Carlo Acutis என்பவர், அக்டோபர் 10, இச்சனிக்கிழமையன்று, அருளாளராக அறிவிக்கப்பட்டதையொட்டி, இத்திங்களன்று டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
'நம் வாழ்வில் இறைவனுக்கு முதலிடம் கொடுப்பதையும், நம் சகோதர சகோதரிகளில், குறிப்பாக, ஏழைகளில் இறைவனைக் கண்டு, அவர்களுக்குப் பணிபுரிவதிலும் உண்மை மகிழ்வைக் கண்டுகொள்ள முடியும் என்பதை இன்றைய இளையோருக்கு காட்டுவதில், அருளாளர் Carlo Acutis அவர்களின் சாட்சிய வாழ்வு அமைந்துள்ளது', என்ற சொற்கள், திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.
மேலும், தன் அண்மையத் திருமடல் 'FratelliTutti' என்பதை மையமாக வைத்து, இரு டுவிட்டர் செய்திகளையும், ஞாயிறு திருப்பலி நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து ஒரு டுவிட்டர் செய்தியையும், தன் மூவேளை செப உரையில் கூறியதை மையமாக வைத்து நான்காவது டுவிட்டரையும் இஞ்ஞாயிறன்று வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
சுவர்களை உடைத்து, நம் இதயங்களை, அயலவர்களின் முகங்களாலும் பெயர்களாலும் நிறைக்கும்போது நாம், வாழ்வில் நிறைவைக் காண்கிறோம், என தன் முதல் டுவிட்டரில் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒருவரின் தோற்றத்தை கணக்கில் கொள்ளாமல், அனைவருமே, புனிதத்தன்மையுடைவர்கள் மற்றும், நம் அன்புக்கு பாத்திரமானவர் என்பதை உணர்ந்து, ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு உதவினால், அது நம் வாழ்வை கொடையாக வழங்கியதை நியாயப்படுத்தும், என தன் இரண்டாவது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இறைவனின் திருமண விருந்துக்கு விடப்பட்ட அழைப்பை ஏற்றுக்கொள்வது மட்டும் போதாது, மாறாக, மனமாற்றத்தின் பயணத்தில் திறந்தமனம் கொண்டவர்களாய் செயல்படவேண்டியது அவசியம் என தன் மூன்றாவது டுவிட்டரிலும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் மேற்கு கடற்கரைப்பகுதியிலும், தென் அமெரிக்காவின் மத்தியப் பகுதியிலும் பெருந்தீயால் பாதிக்கப்பட்டோருடன், தான் அருகிலிருப்பதாக, தன் நான்காவது டுவிட்டரிலும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
No comments:
Post a Comment