Tuesday, 26 February 2019

Pulwama தாக்குதலுக்கு இந்திய ஆயர் பேரவை கண்டனம்

Pulwama தாக்குதலுக்கு இந்திய ஆயர் பேரவை கண்டனம் Pulwamaவில் நிகழ்ந்த தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு மரியாதை

நாட்டின் எல்லையைப் பாதுகாக்க, வீரத்துடன் அயராது உழைத்து வரும் இராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல், அருவறுக்கத்தக்கச் செயல் - இந்திய ஆயர் பேரவை
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
வன்முறை எந்நாளும், எந்த ஒரு பிரச்சனையையும் தீர்க்கப்போவதில்லை என்று, இந்திய ஆயர் பேரவையின் பொதுச்செயலர், ஆயர் தியடோர் மாஸ்கரீனஸ் அவர்கள் ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.
பிப்ரவரி 14, இவ்வியாழனன்று, இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் Pulwama என்ற இடத்தில், இராணுவ வீரர்கள் சென்ற பேருந்தின் மீது, குண்டுகள் நிறைக்கப்பட்ட ஒரு கார் மோதி, நிகழ்த்தப்பட்ட தாக்குதலில், 40க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த தீவிரவாதத் தாக்குதல் குறித்து இந்திய ஆயர் பேரவை சார்பில் தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்ட ஆயர் மாஸ்கரீனஸ் அவர்கள், துயரத்தில் மூழ்கியிருக்கும் நாட்டு மக்கள் அனைவரோடும் சேர்ந்து, இந்தியத் திருஅவையும் தன் அனுதாபத்தையும் செபங்களையும் பதிவு செய்கிறது என்று கூறினார்.
நாட்டின் எல்லையைப் பாதுகாக்க, வீரத்துடன் அயராது உழைத்து வரும் இராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல், அருவறுக்கத்தக்கச் செயல் என்று கூறிய ஆயர் மாஸ்கரீனஸ் அவர்கள், தங்கள் உறவுகளை இழந்தோருக்காக இந்தியத் திருஅவையின் செபங்களை அர்ப்பணித்தார்.
Pulwamaவில் நிகழ்ந்த இந்தத் தாக்குதலுக்கு, பாகிஸ்தானைச் சேர்ந்த ஓர் இஸ்லாமிய தீவிரவாதக் குழு பொறுப்பேற்றுள்ளதாகவும், இத்தாக்குதலில் இறந்தோரின் எண்ணிக்கை தற்போதைய நிலையில் 45ஆக உயர்ந்துள்ளது என்றும் ஊடகங்கள் கூறுகின்றன. (AsiaNews)

No comments:

Post a Comment