Tuesday, 26 February 2019

சிறியோருக்கு பாதுகாப்பு வழங்கும் ஓர் இடமாக, திருஅவை

சிறியோருக்கு பாதுகாப்பு வழங்கும் ஓர் இடமாக, திருஅவை தன் தந்தையின் தோளில் அமர்ந்து திருத்தந்தைக்கு செவிமடுக்கும் சிறுவன்

கத்தோலிக்கத் திருஅவை, சிறியோருக்கு பாதுகாப்பு வழங்கும் ஓர் இடமாகவும், மக்களின் நம்பிக்கைக்குரிய ஓர் இடமாகவும் எப்போதும் திகழவேண்டும் - திருத்தந்தை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
அருள்பணியாளர்களால் சிறார், பாலியல் முறையில் தவறாக நடத்தப்பட்டது குறித்தப் பிரச்சனையும், சிறார் அடைந்த வேதனைகளும், தவிறிழைத்தோரை திருஅவையின் அதிகாரிகள் காப்பாற்ற மேற்கொண்ட முயற்சிகளும் பல ஆண்டுகளாக தொடர்ந்துகொண்டிருப்பதை, முடிவுக்குக் கொணர, ஒருங்கிணைத்து எடுக்கப்பட்ட முயற்சியே, வத்திக்கானில் நடைபெற்ற அண்மையக் கூட்டம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மூவேளை செப உரையின் இறுதியில் கூறினார்.
பாலியல் வழியில் சிறார் அடைந்த கொடுமைகளைத் தடுக்க, 'திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு' என்ற தலைப்பில், கடந்த 4 நாள்கள் திருப்பீடத்தில் இடம்பெற்ற கூட்டம் குறித்து தன் மூவேளை செப உரையின் இறுதியில் பேசியத் திருத்தந்தை, திருஅவையின் அனைத்து கண்டங்களிலிருந்தும் வந்திருந்தோர், இக்கொடுமைக்குத் தீர்வு காணும் உறுதியுடன் வந்திருந்தனர் என்று எடுத்துரைத்தார்.
பாலியல் கொடுமைகளால் பாதிக்கப்பட்டோரின் குரலுக்குச் செவிமடுக்கவும், அவர்களிடமும், இறைவனிடமும் மன்னிப்பு வேண்டவும், திருஅவையின் பொறுப்பாளர்களுக்கு உள்ள கடமைகளை உணரவும், வருங்காலத்தில் இத்தகையத் தவறுகள் நிகழாதவண்ணம் உறுதிப்பாட்டை எடுக்கவும் இந்தக் கூட்டத்தில் முடிந்தது என்பதை, வலியுறுத்திக் கூறினார் திருத்தந்தை.
கத்தோலிக்கத் திருஅவை, சிறியோருக்கு பாதுகாப்பு வழங்கும் ஓர் இடமாகவும், மக்களின் நம்பிக்கைக்குரிய ஓர் இடமாகவும் எப்போதும் திகழவேண்டும் என்பதை உறுதி செய்யவேண்டிய வண்ணம், திருஅவையில் அனைத்து நடவடிக்கைகளும் அமைய வேண்டும் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மூவேளை செப உரையின் இறுதியில் கூறினார்.

No comments:

Post a Comment