Tuesday, 12 February 2019

உத்தரபிரதேசத்தில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு

உத்தரபிரதேசத்தில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு இந்திய கிறிஸ்தவர்கள்

கிறிஸ்தவ வழிபாட்டில் பங்குபெற்றோர் தாக்கப்பட்டுள்ளது, மற்றும், விவிலியப் பிரதிகள் கொளுத்தப்பட்டது குறித்து காவல்துறையின் மெத்தனமான நடவடிக்கை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
அரசியல் இலாபத்திற்காக, கிறிஸ்தவர்களை கொடுமைப்படுத்துவது தொடர்வதன் ஒரு பகுதியாக, இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் கடந்த வியாழனன்று மூன்று கிறிஸ்தவர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார் இந்திய கிறிஸ்தவர்கள் உலக அவையின் தலைவர்.
உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ள சப்பார் கிராமத்தில் செப வழிபாட்டில் கலந்து கொண்டிருந்த கிறிஸ்தவக் குழு ஒன்றின்மீது, மதத் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், பெண்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர் என்றும், இத்தாக்குதலில் மூவர் மிகத்தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இந்திய கிறிஸ்தவர்கள் உலக அவைத் தலைவர் சாஜன் ஜார்ஜ் அவர்கள் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் வழங்கிய புகாரை பதிவுச் செய்ய காவல்துறை மறுத்துள்ளது என சுட்டிக்காட்டிய சாஜன் ஜார்ஜ் அவர்கள், மத சுதந்திரம் என்பது உத்தரபிரதேசத்தில் மிகவும் சீர்குலைந்துவிட்டதால், கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாக குற்றஞ்சாட்டினார்.
பெண்களும் இங்கு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது, அவர்களின் மாண்புக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி என்பதையும் சுட்டிக்காட்டிய சாஜன் ஜார்ஜ் அவர்கள், செபக்கூட்டத்திற்குள் புகுந்த ஏறத்தாழ 25 இந்து மத அடிப்படைவாதிகள், அங்கிருந்த விவிலியப் பிரதிகள் சிலவற்றையும் தீயிட்டுக் கொளுத்தியுள்ளதாக மேலும் கூறினார்.
தாக்கப்பட்ட இடத்திற்கு வந்த காவல்துறையினர், புகாரை வாங்க மறுத்ததோடு, காயம்பட்டவர்கள் சிகிச்சை பெறவும் அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார், இந்திய கிறிஸ்தவர்கள் உலக அவையின் தலைவர் சாஜன் ஜார்ஜ்.

No comments:

Post a Comment