Tuesday, 12 February 2019

இயற்கையின் மகத்துவத்தை உணர்த்தும் மரங்கள்

இயற்கையின் மகத்துவத்தை உணர்த்தும் மரங்கள் இயற்கையின் மகத்துவம் காட்டும் ஓவியம்

நூறு அடி உயரம் வளரும் கொடைபனை மரங்கள் அறுபது ஆண்டுகள் கழித்தே பூக்களைக் கொடுக்கும்
மேரி தெரேசா - வத்திக்கான்
மரங்களைச் சார்ந்தே மனித வாழ்வு அமைந்துள்ளது. மரமே புனிதமானதுதான். அது காற்றையே ஹோமப் புகையாகவும், மழையையே மங்களத் தீர்த்தமாகவும் அனுப்பும் மண்ணின் மகத்தான சீதனம். இயற்கையின் நூதனம், இருத்தலின் சாதனம். அவற்றின் வேருக்கு நீர் பாய்ச்சி, விழுதுகளுக்கு மனிதர்களாகிய நாம் வழிவிட வேண்டும். தெய்வ வழிபாடு காரணமாகவே பெரும்பாலான இடங்களில் பழைய மரங்கள் பாதுகாக்கப்படுகின்றன என்று சொல்கிறார், பழமையான மரங்கள் பாதுகாக்கப்படுவதில் அக்கறை காட்டும், முன்னாள் வனத்துறை அதிகாரி சுந்தரராஜு அவர்கள். திருச்சியில் காவிரிக் கரையில் ஐந்நூறு ஆண்டுகள் பழமையான ஆலமரம் ஒன்று பாதுகாப்பாக உள்ளது. அதை மக்கள் தெய்வமாக வழிபடுகிறார்கள். அதேபோல சிவகங்கையில் உலக்கைப் பாலை என்ற மரம், ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டுகளாக எந்தச் சேதமும் இல்லாமல் பாதுகாப்பாக உள்ளது. திருநெல்வேலி தாமிரபரணி கரையில் (முண்டந்துறை மலை அடிவாரம்) அமைந்துள்ள நெல்லையப்பர் கோயிலில் உள்ள தல விருட்சமான களாக்காய் மரம், ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளாகப் பாதுகாப்பாக உள்ளது. கொடைக்கானலில் ஐந்நூறு ஆண்டுகள் பழமையான மலைநாவல் மரம், ஸ்ரீவில்லிப்புத்தூரில் தனியார் பள்ளியில் ஏறக்குறைய எழுநூறு ஆண்டுகளான புளியமரம், ஏற்காடு மலைப்பகுதிகளில் உள்ள வேங்கை, அத்தி, தேனியில் சுருளி அருவிக்கு அருகில் 114 அடி உயரம் கொண்ட தானி மரம் என மரங்களின் விவரங்களை அடுக்கிக்கொண்டே செல்கிறார் சுந்தரராஜு. இயற்கையின் மகத்துவத்தை உணர்த்தும் சின்னங்களாக மரங்கள் உள்ளன என்று எண்ணுகிறேன் என்கிறார் இந்த மரஆர்வலர். நூறு அடி உயரம் வளரும் கொடைபனை மரங்கள் அறுபது ஆண்டுகள் கழித்தே பூக்களைக் கொடுக்கும் என்றும், ஓர் ஆண்டு முழுக்க கனிகளை கொடுத்துவிட்டு மடிந்துவிடும் என்றும் தெரிவித்தார் சுந்தரராஜு.

No comments:

Post a Comment