Tuesday, 12 February 2019

தஞ்சை அகழியைத் தனித்து சுத்தப்படுத்திய பெண்

தஞ்சை அகழியைத் தனித்து சுத்தப்படுத்திய பெண் மாசுபடிந்த நீர் தேங்கி நிற்கும் குளம்

வெளியில் நின்று குறை கூறியவண்ணம், ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவதை விட, களத்தில் இறங்கினால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
பொருளாதாரத் துறையில், எம்.ஏ., எம்.பில்., பட்டப் படிப்புகளை முடித்த நர்மதா அவர்கள், சென்னையில், தனியார் பள்ளியொன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். 2015ம் ஆண்டு, தன் வேலையை விட்டுவிட்டு, பொதுப் பணியாற்ற துவங்கினார்.
2016ம் ஆண்டு, செப்டம்பர் 26ம் தேதி, அம்பத்தூர் ஏரிக்குச் சென்ற நர்மதா அவர்கள், அங்கு, செடி கொடிகள் அடர்த்தியாக வளர்ந்து, தண்ணீர் செல்ல வழியில்லாமல் இருப்பதைப் பார்த்தார். உடனே, தனி ஆளாக, களத்தில் இறங்கி, அங்கு மண்டிக்கிடந்த செடி, கொடிகளை அகற்றினார். தகவலறிந்து வந்த அரசு அலுவலர்கள், அந்த ஏரியை, தாங்களே சுத்தம் செய்வதாகத் தெரிவித்துள்ளனர். தனது முயற்சிக்கு உடனடி பலன் கிடைத்ததால் உற்சாகமடைந்த நர்மதா அவர்கள், மற்ற இடங்களிலும் இதைப்போன்ற மாற்றங்களை ஏற்படுத்த விரும்பினார். இதையடுத்து, அதே ஆண்டு, அக்டோபர் மாதம், பேருந்தில் தஞ்சாவூருக்கு வந்த நர்மதா அவர்கள், நகரின் நுழைவுப் பகுதியான கொடிமரத்து மூலை அருகே, தஞ்சாவூர் பெரிய கோட்டை அகழியில், ஆகாயத் தாமரை மற்றும் செடிகள் மண்டிக் கிடப்பதை பார்த்தார். பேருந்திலிருந்து இறங்கிய நர்மதா அவர்கள், தனி ஆளாக அவற்றை அகற்றத் தொடங்கினார்.
இதுகுறித்து நர்மதா அவர்கள் கூறும்போது, “நான் பிறந்தது சென்னை. எனது கணவரின் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம், ராஜபாளையத்தில் உள்ள சொக்கலிங்கபுரம். ராஜபாளையம் முழுவதுமே தண்ணீர் பஞ்சம் நிலவும் ஊர். அங்கு தண்ணீருக்காக மக்கள் படும் பாடு சொல்லி மாளாது. அதன் தாக்கம் என்னைத் தொடர்ந்தது. எனவே, நீர்நிலைகளைக் காக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. கடந்த மாதம் அம்பத்தூர் ஏரியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டேன். அதைத் தொடர்ந்து, இம்மாதம் தஞ்சாவூர் அகழியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டேன். தஞ்சாவூர் அகழி, மோசமான நிலையில் உள்ளது. கழிவு நீர் தேங்கி, கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. நான் குளத்தில் இறங்கி பணி செய்ததை, பொதுமக்கள், ஆர்வத்துடன் பார்த்து, பாராட்டினாலும், தூய்மைப் பணிக்கு யாரும் முன்வராதது வருத்தமளிக்கிறது. மக்களுக்கும், அரசுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான் இதைச் செய்கிறேன். வெறுமனே ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவதை விட, களத்தில் இறங்கினால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும்” என்கிறார்.

No comments:

Post a Comment