Tuesday, 12 February 2019

பனையோலையில் மணவோலை

பனையோலையில் மணவோலை பனையோலையில் அச்சடிக்கப்பட்ட திருமண அழைப்பிதழ் - தி இந்து

பனையோலைகளில் செய்யப்படும் திருமண அழைப்பிதழ், காகிதப் பயன்பாட்டைக் குறைக்க உதவும். தமிழரின் கலாச்சாரத்தை உலகெங்கும் எடுத்துக்கூறவும், இது, சிறந்ததொரு வழியாகும்.
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்
தை மாதம் பிறந்ததும், நம் குடும்பங்களில், திருமணங்கள் நடைபெறும். வாழை மரம், மலர்கள், சந்தனம், மஞ்சள், குங்குமம், அரிசி, பருப்பு, காய்கறி என்று... பல வழிகளில், இயற்கையோடு நம்மை இணைய வைக்கும் ஓர் அழகிய நிகழ்வு, நம் இல்லங்களில் நிகழும் திருமணங்கள்.
அண்மைய ஆண்டுகளில், நம் திருமணங்கள், இயற்கையைவிட்டு வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டதோ என்று கவலைப்பட வேண்டியுள்ளது. இயற்கையாகக் கிடைக்கக்கூடிய மலர்கள், வாழை மரம், பந்தியில் போடப்படும் வாழை இலை ஆகியவை, செயற்கையான ‘பிளாஸ்டிக்’ வடிவங்களில் நம் திருமணங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
இத்தகையச் சூழலில், மீண்டும் நாம் இயற்கையோடு இணைந்த திருமண விழாவைக் கொண்டாட, நம் திருமண அழைப்பிதழ்களிலிருந்து ஆரம்பிப்போம். பனையோலைகளால் உருவாகும் அழைப்பிதழைப் பற்றி, ‘தி இந்து’ நாளிதழில் காட்சன் சாமுவேல் என்பவர் எழுதிய ஒரு குறுங் கட்டுரையிலிருந்து சில தகவல்கள்...
காலம் காலமாக, செய்திகளைப் பரிமாற, பனையோலைகளைப் பயன்படுத்துவது, தமிழர் மரபு. மணவோலைகள் மங்கலவோலைகள் என்றே கருதப்பட்டன. பனையோலைகளில் பூசப்படும் மஞ்சளே, பின்னாளில், காகிதங்களில் அச்சடித்த அழைப்பிதழ்களின் ஓரங்களை அலங்கரிக்க ஆரம்பித்தன. இன்றும், கிறிஸ்தவ ஆலயங்களில், திருமண அறிவிப்புகள் வாசிப்பதை, ‘ஓலை வாசித்தல்’  என்றே குறிப்பிடுவார்கள்.
அண்மையக் காலங்களில், பனையோலைகளில் செய்யப்படும் அழகிய திருமண அழைப்பிதழ்கள், மக்களின் ஆதரவைப் பெற்றுவருகின்றன. பாரம்பரியத்தின் அடையாளமாக, இயற்கையோடு இயைந்த வாழ்வின் அடையாளமாக, பனையோலைத் திருமண அழைப்பிதழ்கள் திகழ்கின்றன.
எவரும் எளிதில் செய்யக்கூடிய வகையில் காணப்படும் இவ்வோலைகளை, சில அடிப்படைப் புரிதல்கள் இருந்தாலே, சிறப்பான முறையில் செய்துவிடலாம். முதலாவதாக ஓலைகளைத் தெரிவுசெய்ய அறிந்திருக்க வேண்டும். பின்னர், இவற்றைச் சரியான முறையில் பிரித்தெடுத்து, நன்கு வெயிலில் உலர்த்தி, சீராக ஒரே அளவில் நீளம், அகலம் இருக்குமாறு வெட்டி எடுத்துக்கொள்வது ஏற்றது. சீராக வெட்டிய மூன்று ஓலைகளை இணைத்து ஓட்டை இட்டு அவற்றைக் குஞ்சலம் இட்ட நாடாவால் கட்டி, தேவையான தகவல்களை அச்சடித்துவிட்டால், பனையோலைத் திருமண அழைப்பிதழ் தயார்.
பனையோலைகளில் செய்யப்படும் இவ்வித அழைப்பிதழ், காகிதப் பயன்பாட்டைக் குறைக்க உதவும். தமிழரின் கலாச்சாரத்தை உலகெங்கும் எடுத்துக்கூறவும், இது, சிறந்ததொரு வழியாகும்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...