Tuesday 12 February 2019

மரங்களே மழையின் விதைகள்

மரங்களே மழையின் விதைகள்

 மனதை கொள்ளை கொள்ளும் இயற்கை காட்சி

மனிதரைத் தாக்கும் நோய்களைத் தீர்க்கும் மருந்துகளில் 75 விழுக்காடு, காடுகளில் இருந்தே கிடைக்கின்றது என்ற உண்மையை, விளம்பரங்கள் மறக்கடித்துவிட்டன.
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
உயிர்கள் படைக்கப்பட்டபோதே, அவற்றின் வாழ்வுக்காக, இயற்கை வளங்களும் சேர்த்தே படைக்கப்பட்டன. இயற்கை வளங்களோடு, உயிரினங்களின் வாழ்க்கை, சிறப்பாக நடைபெற்று வந்தது. கருவறை முதல் கல்லறை வரை, வாழ்வியல் முறைகள் அனைத்தும், இயற்கையைச் சார்ந்தே அமைந்திருந்தன. நிலம், நீர், காற்று என, அனைத்தையும், கடவுளாக வைத்து வழிபட்ட நமது முன்னோர், ஆலமரம், அரசமரம், வேப்பமரம், வில்வம் என, கோவிலுக்கு ஒரு மரத்தை வைத்து வணங்கி விழா எடுத்தனர். கதைகளும், காவியங்களும், அதையொட்டியே எழுதப்பட்டன. மரங்களே மழையின் விதைகள் என்பதை உணர்ந்த நமது முன்னோர், காடுகளைக் காப்பாற்றி, தலைமுறையை வாழ்வித்தனர். நலமான, மேம்பட்ட சூழலில், இயற்கையுடன் இணைந்தே வாழ்ந்தனர்.
காலம் வேகமாக மாறியது. தனிமனித உடைமைப் போக்கு உருவானது. அறிவியலின் ஆதிக்கம் பெருகியது. விளைவு, மனிதருக்கு மட்டுமே பூமி, என்ற நிலை உருவானது. அதுவும் மாறி, அறிவியல் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு மட்டுமே இயற்கை வளம் யாவும் சொந்தம், என்ற நிலை உருவாகியுள்ளது. கால மாற்றத்திலும், குடும்பச் சூழலிலும், இயற்கையுடன் மனிதர் கொண்டிருந்த உறவில் விரிசல் ஏற்பட்டது. மனிதத் தேவைகளைத் தாண்டி, இப்போது, விளம்பர திருப்தியே, மாசு படிந்த உலகத்தை உருவாக்கி, மாய சமூகத்தை உருவாக்கியுள்ளது. மனிதரைத் தாக்கும் நோய்களைத் தீர்க்கும் மருந்துகளில் 75 விழுக்காடு, காடுகளில் இருந்தே கிடைக்கின்றது என்ற உண்மையை, விளம்பரங்கள் மறக்கடித்து விட்டன.
இயற்கையைப் பாதுகாப்பதற்கு, தொழில் முறை உற்பத்தியைக் குறைக்கவேண்டிய அவசியமில்லை, ஆனால், மாசுபடுத்தாத வழிகளை பயன்படுத்த வேண்டும், இதனால், இயற்கை பாதுகாக்கப்படுவதுடன், மனிதரின் தேவையும் பூர்த்தியாகும். சீரான இடைவெளியுடன் அமைக்கப்பட்ட இரயில் தண்டவாளம் போல, மனிதரும், இயற்கையும் இணைந்திருப்பதுதான் சமுதாயத்திற்கு நல்லது.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...