Tuesday, 26 February 2019

இரத்த உறவுகளாக மாறிய மரங்கள்

இரத்த உறவுகளாக மாறிய மரங்கள் மரத்தைக் காப்பாற்றும் இந்தியச் சிறுவன்

சிக்கிம் மாநிலத்தில், ‘மைத்’, ‘மைத்தனி’, ‘ஸ்மிருதி’ ஆகிய மூன்று முறையில் மரங்களைத் தத்தெடுத்து வளர்ப்பவர்கள் எக்காரணம் கொண்டும் மரத்தை வெட்ட அனுமதி இல்லை. சரியான காரணம் இருக்குமானால் வனத்துறை அனுமதி வேண்டும்
மேரி தெரேசா - வத்திக்கான்
காடுகளில் இழந்துவிட்ட மரங்களை ஈடு செய்யவும், இயற்கை விவசாயத்திற்கு ஆக்கம் தரும் வன வேளாண்மையை மேம்படுத்தவும், மரங்களுடன் மனிதர் கொண்டுள்ள பாரம்பரிய உறவுகளைத் தக்க வைக்கவும், மனிதரின் இரத்த உறவுகளாகவே மரங்களை நேசித்து வளர்க்கிறார்கள் சிக்கிம் மாநில மக்கள். அம்மாநிலத்தில் ‘மைத்’ என்ற பாரம்பரிய வழக்கம் ஒன்று தொன்றுதொட்டு உள்ளது. இப்படிப்பட்ட ஒரு பாரம்பரியப் பண்பு மங்கிவிடாமல் அதனைப் பட்டை தீட்டி மிளிர வைக்கும் விதமாக சிக்கிம் மாநில முதல்வர் பவன்குமார் சமலிங் அவர்கள், ‘சிக்கிம் வனமரங்கள் பாதுகாப்பு விதிமுறைகள் – 2017’ என்ற பெயரில் ஒரு புதுமையான சட்டத்தை நிறைவேற்றியுள்ளார். மக்கள் மரங்களோடு கொண்டுள்ள இரத்த உறவை மூன்று விதமாக வகைப்படுத்தி, அவ்வுறவைக் காப்பாற்ற சில விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். முதலாவது, ‘மைத்’ என்று அறிவித்து ஒரு ஆண் ஒரு மரத்தை தத்தெடுத்துக் கொண்டால், அம்மரம் அவரின் சகோதரனாகக் கருதப்படும். இரண்டாவது, ‘மைத்தினி’ என்று அறிவித்து ஒரு பெண் ஒரு மரத்தைத் தத்தெடுத்துக் கொண்டால் அம்மரம் அந்தப் பெண்ணின் சகோதரியாகக் கருதப்படும். மூன்றாவது, குடும்பத்தில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் நினைவாக, குடும்பத்தினர் ஒரு மரத்தைத் தத்தெடுத்துக் கொண்டால், அம்மரம், ‘ஸ்மிருதி’ அதாவது நீத்தார் நினைவு என்று கருதப்படும். இப்படிப்பட்ட உறவுப்பெயர்கள் சூட்டி மரங்களைத் தத்தெடுக்க வேண்டும். அவரவர் தங்களுக்குச் சொந்தமாக உள்ள நிலத்தில் உள்ள மரங்களை மட்டுமே தத்தெடுக்கவேண்டுமென்ற கட்டாயம் இல்லை. மற்றவர் நிலத்தில் வளரும் மரத்தையும் மேற்குறிப்பிட்ட முறைகளில் தத்தெடுக்கலாம். அவ்வாறு தத்தெடுக்கும்போது மற்றொருவர் நிலத்தில் உள்ள மரத்திற்கு நிகராக, மரமதிப்பை சந்தை விலைக்கு ஏற்ப நிர்ணயித்து நில உரிமையாளருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அதே போன்று, வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள மரங்களையும் தத்தெடுக்கத் தடையில்லை. வனத்துறையிடம் முறையான ஒப்புதல் பெற்றால் போதுமானது. எந்த மரத்தை யார் தத்தெடுத்தாலும் அவர் இறக்கும்வரை அதை வளர்ப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தாங்கள் தத்தெடுத்த மரத்தை வெட்டினால், அது வனத்துறை நிலத்தில் உள்ள மரமானால் அந்த மரத்தின் மதிப்புக்கு நிகராக நான்கு மடங்கும், தனியார் நிலம் என்றால் இரண்டு மடங்கும் அபராதமாகச் செலுத்த வேண்டும். சிக்கிம் அரசின் இந்த மர வளர்ப்புக் கொள்கை, இமயமலை சார்ந்த உத்தராஞ்சல், ஹிமாசலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் போன்ற மாநிலங்களிலும் பின்பற்றப்படுமானால், இமயத்து பனிமலை உருகாமலும், இமயமலைக் காடுகள் நிலச்சரிவுகளிலிருந்தும் காப்பாற்றப்படும். (நன்றி தினமணி)

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...