Saturday 1 February 2014

செய்திகள் - 28.01.14

செய்திகள் - 28.01.14
 ------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை - இறைப்புகழ்பாடி செபிப்பது இயல்பானது

2. கிறிஸ்தவ ஒன்றிப்பிற்காகச் செபிக்க டுவிட்டரில் திருத்தந்தை அழைப்பு

3. திருத்தந்தை பிரான்சிஸ் : யூத இன அழிப்புக் கொடுஞ்செயல்கள் இனிமேல் ஒருபோதும் நடக்காதிருக்கட்டும்

4. புதிய இனப் படுகொலைகளைத் தடுப்பதற்குத் தளர்வுறாமல் விழிப்புடன் செயல்பட ஐ.நா. அழைப்பு

5. வன்முறைக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து செயல்படுவோம், இஸ்லாமபாத் ஆயர்

6. சீனாவில் தொடர்ந்து ஆலயங்கள் தாக்கப்படுகின்றன, கர்தினால் ஜென் 

7. கொலம்பியாவில் வன்முறையாளர்கள் நம்பிக்கையைக் கொலை செய்ய விரும்புகின்றனர், Cali பேராயர்

8. பயங்கரவாதக் குழுக்களுக்குப் பிணையல்தொகை செலுத்துவது நிறுத்தப்பட ஐ.நா. வலியுறுத்தல்

9. எலிகளிலிருந்து பரவும் ப்ளேக் எதிர்காலத்தில் மீண்டும் தோன்றலாம்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை - இறைப்புகழ்பாடி செபிப்பது இயல்பானது

சன.28,2014. இறைபுகழ்பாடி செபிப்பது என்பது இயற்கையாக எழக்கூடியது, அது நீதியானதும் கூட, என இச்செவ்வாய் காலை திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தான் தங்கியிருக்கும் மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில், காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நாளின் திருப்பலி முதல் வாசக வார்த்தைகளை மையமாக வைத்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
கடவுளின் பேழை முன் தாவீது மன்னர் நடனமாடியதைப்பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனின் புகழ் பாடி செபிப்பதற்கு தாவீது மேற்கொண்ட வழி இது எனக்கூறி, தன் முதிர்ந்த வயதில் தாய்மைப்பேற்றை வழங்கிய இறைவனை நினைத்து புகழ்ந்த சாரா 'தன்னை இறைவன் மகிழ்ச்சியால் நடனமாட வைத்தார்' எனக் கூறியதையும் தான் இப்போது நினைவுகூர்வதாக எடுத்துரைத்தார்.
இறைவனிடம் ஒன்றைக் கேட்பது, அவருக்கு நன்றியுரைப்பது, அவரை வணங்குவது போன்ற செபங்களை நாம் புரிந்து கொள்ளலாம், ஆனால் புகழ்பாடி செபிப்பது என்பது இயல்பாக வரக்கூடியது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உன்னதமான இறைவனை புகழ்ந்துபாடிச் செபிப்பது நியாயமானதும் கூட என்ற திருத்தந்தை அவர்கள், இறைவ‌னைப் புக‌ழ்ந்துபாடி செபிப்ப‌து என்ப‌து ந‌ம்மையும் வ‌ள‌முள்ள‌தாக‌ மாற்றுகின்ற‌து என்றார்.
செபம் என்பது உற்சாகமற்ற ஓர் படிவத்திற்குள் அடக்கப்பட்டதாக இல்லாமல், இயல்பாக நம்மிடமிருந்து எழும் புகழ்மாலையாக இருக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி

2. கிறிஸ்தவ ஒன்றிப்பிற்காகச் செபிக்க டுவிட்டரில் திருத்தந்தை அழைப்பு

சன.28,2014. 'கிறிஸ்தவ ஒன்றிப்பிற்காகச் செபிப்போம். நம்மை ஒன்றிணைப்பதற்கு அழகான அரிய விடயங்கள் பல உள்ளன' என இச்செவ்வாயன்று தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உலக கிறிஸ்தவ சபைகளுடன் இணைந்து கத்தோலிக்க திருஅவை நடத்திய கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கான செப வாரம் கடந்த சனிக்கிழமையன்று நிறைவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை பிரான்சிஸ் : யூத இன அழிப்புக் கொடுஞ்செயல்கள் இனிமேல் ஒருபோதும் நடக்காதிருக்கட்டும்

சன.28,2014. யூத இன அழிப்புக் கொடுஞ்செயல்கள் இனிமேல் ஒருபோதும் நடக்காதிருக்கட்டும், ஏனெனில் அவை மனித சமுதாயத்துக்கு அவமானமாக இருக்கின்றன என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.
யூத இன அழிப்புக் கொடுஞ்செயல்களில் இறந்தவர்களை நினைவுகூரும் அனைத்துலக நாளான இத்திங்களன்று யூதமத ராபி Abraham Skorka அவர்களுக்கு, தான் கைப்பட எழுதிய கடிதத்தில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.
அர்ஜென்டீனா நாட்டு புவனோஸ் ஐரெஸ் யூத மத ராபியும், தனது நண்பருமான Skorka அவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய இக்கடிதம், உரோம் நகரில் இத்திங்கள் மாலை நடைபெற்ற இசைக் கச்சேரியில் வாசிக்கப்பட்டது.  
இரண்டாம் உலகப் போரின்போது யூத இன அழிப்புக் கொடூரங்களுக்குப் பின்னர் அவ்விடங்களில் கிடந்த 12 வயலின்களும், cello என்ற மற்றோர் இசைக் கருவியும் இந்த இசைக் கச்சேரியில் முதன்முறையாக இத்திங்களன்று வாசிக்கப்பட்டன. இஸ்ரேல் நாட்டு Luthier Amnon Weinstein என்பவர் இந்தக் கருவிகளைக் கண்டுபிடித்து பழுதுபார்த்து பாதுகாத்து வருகிறார்.  
யூத இன அழிப்புக் கொடுஞ்செயல்களில் இறந்தவர்களை நினைவுகூரும் அனைத்துலக நாள் ஆண்டுதோறும் சனவரி 27ம் தேதியன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாள், 1945ம் ஆண்டில் ஜெர்மன் வதைப்போர் முகாம்களிலிருந்து மக்கள் விடுதலை செய்யப்பட்ட நாளாகும்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி    

4. புதிய இனப் படுகொலைகளைத் தடுப்பதற்குத் தளர்வுறாமல் விழிப்புடன் செயல்பட ஐ.நா. அழைப்பு
சன.28,2014. இரண்டாம் உலகப் போரின்போது நாத்சிக் கொள்கைகளால் அழிக்கப்பட்ட அறுபது இலட்சம் யூதர்களுக்கு ஐக்கிய நாடுகள் நிறுவனமும் இத்திங்களன்று மரியாதை செலுத்தியது  
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் கடைப்பிடிக்கப்பட்ட யூத இன அழிப்பு நினைவு நாள் நிகழ்ச்சியில் உரையாற்றிய ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அவர்கள், யூதமத விரோதப்போக்கின் ஆபத்துகளும், இவை போன்ற எவ்வித காழ்ப்புணர்வுச் செயல்களும் இனிமேல் உலகில் இடம்பெறாதிருக்கட்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
அதேவேளை, இத்தகைய கொடுஞ்செயல்கள் உலகில் நடவாதிருப்பதில் ஐ.நா. கவனமாகச் செயல்படும் எனவும் கூறிய பான் கி மூன் அவர்கள், கம்போடியா, ருவாண்டா, Srebrenica போன்ற இடங்களில், இனப் படுகொலைகளின் நச்சுத்தன்மை இன்றும் தொடர்கின்றன என்ற தனது கவலையையும் தெரிவித்தார்.
ஹங்கேரியிலிருந்து 5 இலட்சத்துக்கு மேற்பட்ட யூதர்கள், ஜெர்மனியின் நாத்சி வதைப்போர் முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டதன் 70ம் ஆண்டின் நினைவாக இத்திங்களன்று ஐ.நா.வில் பல நினைவுப் பொருள்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்ட.
ஆதாரம்:UN
5. வன்முறைக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து செயல்படுவோம், இஸ்லாமபாத் ஆயர்
சன.28,2014. வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு எதிரான அரசின் தீவிர முயற்சிகளுக்கு ஆதரவை வழங்குவோம் என, பாகிஸ்தானின் இஸ்லாமபாத் ஆயர் ரூஃபின் அந்தோணி அவர்கள் அந்நாட்டுக் கிறிஸ்தவர்களைக் கேட்டுக்கொண்டார்.
பாகிஸ்தானில் இத்திங்களன்று செப அமைதி நாளைக் கடைப்பிடித்த கிறிஸ்தவ சமூகத்திடம் இவ்வாறு உரையாற்றிய ஆயர் அந்தோணி அவர்கள், பயங்கரவாதத்தை வேரோடு ஒழிப்பதற்கான அரசு மற்றும் இராணுவத்தின் நடவடிக்கைகளுக்குச் சார்பாகச் செயல்படுவோம் எனக் கூறினார்.
கடந்த காலங்களில் இரத்தம் சிந்தும் தாக்குதல்களைக் கண்டிருக்கிறோம், ஆலயங்களும் பள்ளிகளும் தாக்கப்பட்டுள்ளன, பயங்கரவாத நடவடிக்கைகளில் நம் அன்புக்குரியவர்களை இழந்திருக்கிறோம் என்றுரைத்த ஆயர் அந்தோணி அவர்கள், நமது வருங்காலத் தலைமுறை அச்சமின்றி வாழ்வதற்கு நாட்டில் அமைதி ஏற்படவேண்டுமெனச் செபிப்போம் எனக் கூறினார்.  
பாகிஸ்தானில் வன்முறைக்குப் பலியானவர்களையும், போலியோ தடுப்பு மருந்து நடவடிக்கைகளை ஊக்கப்படுத்திய மறைந்த அருள்பணியாளர் Anwar Patras அவர்களையும் நினைவுகூரும் விதமாக, இஸ்லாமபாத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மெழுகுதிரி ஏந்தியவண்ணம் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.  
பாகிஸ்தானில் இந்த 2014ம் ஆண்டின் முதல் வாரங்களில் நடைபெற்ற பயங்கரவாதச் செயல்களில் பலர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: AsiaNews
6. சீனாவில் தொடர்ந்து ஆலயங்கள் தாக்கப்படுகின்றன, கர்தினால் ஜென் 

சன.28,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமைப்பணி நம்பிக்கையளிக்கும் அதேவேளை, சீனாவின் மத விவகாரத் துறையும் சீன அரசுக்கு விசுவாசமாக இருக்கும் கத்தோலிக்கத் திருஅவையும், திருத்தந்தைக்கு விசுவாசமாக இருக்கும் ஆயர்களையும் விசுவாசிகளையும் அடிமைகளாக நடத்த விரும்புகின்றன என்று ஹாங்காங் கர்தினால் ஜோசப் ஜென் கூறினார்.
சீனா, வியட்நாம், கொரியா ஆகிய நாடுகள் தொடங்கவிருக்கும் புதிய ஆண்டுக்கு இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நல்வாழ்த்துச் சொல்லியது குறித்து ஆசிய செய்தி நிறுவனத்திடம் பேசிய கர்தினால் ஜென், சீனாவில் திருஅவையின் நிலைமை கவலை தருவதாகவே உள்ளது எனக் கூறினார்.
இந்தப் புதிய குதிரை ஆண்டிலும் ஆலயங்கள் தாக்கப்படுவது தொடர்கின்றன எனவும், இதனால் அதிகாரிகள் மதங்களை மட்டும் அழிக்கவில்லை, நாட்டின் நல்ல பெயரையும் அழிக்கின்றனர் எனவும் கூறினார் ஹாங்காங்கின் முன்னாள் பேராயர் கர்தினால் ஜென். 

சீனா, வியட்நாம், கொரியா ஆகிய நாடுகளில் சனவரி 31ம் தேதியன்று தொடங்கும் புதிய ஆண்டு, குதிரை ஆண்டாகும். 

ஆதாரம்: AsiaNews
7. கொலம்பியாவில் வன்முறையாளர்கள் நம்பிக்கையைக் கொலை செய்ய விரும்புகின்றனர், Cali பேராயர்

சன.28,2014. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் Caliயில் புனித செசீலியா ஆலயம் அவமரியாதை செய்யப்பட்டு அவ்வாலயத்தில் இருவர் கொலை செய்யப்பட்டிருப்பதற்குத் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்  Cali பேராயர் Darío de Jesús Monsalve Mejía.
கொலம்பிய அரசும், ஆயுதம் தாங்கிய வன்முறைக் குழுக்களும் வன்முறைகளைக் கைவிடுமாறு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ள பேராயர் Monsalve Mejía அவர்கள், இக்குழுக்கள் அமைதிக்கான நடவடிக்கைகளில் உடனடியாக இறங்குமாறு கேட்டுள்ளார்.
இவ்வன்முறை குறித்து பீதெஸ் செய்தி நிறுவனத்துக்குத் தகவல் அனுப்பியுள்ள பேராயர் Monsalve Mejía அவர்கள், இக்குழுக்கள் நம்பிக்கையைக் கொலை செய்ய விரும்புகின்றனர் எனக் கவலை தெரிவித்துள்ளார்.  
கடந்த வெள்ளியன்று, வன்முறையாளர்கள், புனித செசீலியா ஆலயத்தை அவமரியாதை செய்ததுடன், அவர்கள், திருட முயன்றபோது, அவர்களிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முயற்சித்த ஓர் ஆணையும், அவ்வாலயத்தில் செபித்துக்கொண்டிருந்த ஒரு பெண்ணையும் கொலை செய்துள்ளனர்.
ஆதாரம்: Fides
8. பயங்கரவாதக் குழுக்களுக்குப் பிணையல்தொகை செலுத்துவது நிறுத்தப்பட ஐ.நா. வலியுறுத்தல்
சன.28,2014. பயங்கரவாதக் குழுக்களுக்குப் பிணையல்தொகை செலுத்துவது நிறுத்தப்படுமாறு உலக நாடுகளை ஐ.நா. பாதுகாப்பு அவை இத்திங்களன்று வலியுறுத்தியுள்ளது.
அல்-கெய்தாவோடு தொடர்புடைய குழுக்கள் பிணையக் கைதிகளுக்கான ஈட்டுத்தொகையாக, கடந்த மூன்றரை ஆண்டுகளில் மட்டும் குறைந்தது 10 கோடியே 50  இலட்சம் டாலரைப் பெற்றுள்ளதாக, பிரித்தானிய ஐ.நா. தூதுவர் Mark Lyall Grant கூறினார்.  
நைஜரில் மூன்றாண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்ட மூன்று ப்ரெஞ்ச் குடிமக்களுக்கான பிணையல் தொகையாக, கடந்த அக்டோபரில் 2 கோடி யூரோக்கள் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆயினும் இதற்கு பிரெஞ்ச் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
நாடுகள் பயங்கரவாதக் குழுக்களுக்குப் பிணையல்தொகை செலுத்துவதைத் தடைசெய்யும் ஒப்பந்தம், 2001ம் ஆண்டிலே கொண்டுவரப்பட்டது. இத்திங்களன்று ஐ.நா. பாதுகாப்பு அவையில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தில் சட்டரீதியான புதிய ஒழுங்குமுறைகள் எதுவும் சேர்க்கப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
ஆதாரம்: BBC
9. எலிகளிலிருந்து பரவும் ப்ளேக் எதிர்காலத்தில் மீண்டும் தோன்றலாம்

சன.28,2014. பழங்காலத்தில் இருந்த ப்ளேக்எனப்படும் ஒரு வகையான கொள்ளை நோயைப் போலவே கொடூரமான ஒரு கொள்ளை நோய், எலிகள் போன்ற உயிரினங்களிடமிருந்து உருவாகும் ஆபத்து இருப்பதாக அமெரிக்க அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆறாம் நூற்றாண்டிலும், 14ம் நூற்றாண்டிலும் பல இலட்சக்கணக்கான உயிரிழப்புகளுக்குக் காரணமான பிளேக்எனப்படும் கொள்ளை நோய்க்கு, எலிகள் போன்ற உயிரினங்களிடமிருந்து உருவாகிய கிருமியேக் காரணம் எனக்கூறும் ஆராய்ச்சியாளர்கள், இத்தகைய நோய் மீண்டும் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பினும், அந்த நோய் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதை நவீன சிகிச்சைகள் தவிர்க்கும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டுள்ளனர்.
பிளேக்எனப்படும் கொள்ளை நோயினால் ஆறாம் நூற்றாண்டில் 3 கோடிக்கும் அதிகமான மக்களும், 14ம் நூற்றாண்டில் 5 கோடிக்கும் அதிகமான மக்களும் உயிரிழந்துள்ளனர்.

ஆதாரம்: BBC

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...