Wednesday, 26 February 2014

செய்திகள் - 25.02.14

செய்திகள் - 25.02.14
------------------------------------------------------------------------------------------------------

1. உலகின் அனைத்துக் குடும்பங்களுக்கும் திருத்தந்தை கடிதம்

2. திருத்தந்தை : போர்கள், சிறாரை அகதிகள் முகாம்களில் பசியால் வாடவைக்கின்றன

3. நாம் அனைவரும் வாழும் நற்செய்திகளாக மாறுவதற்கு அழைக்கப்பட்டுள்ளோம், திருத்தந்தை பிரான்சிஸ்

4. பொருளாதார விவகாரங்களை மேற்பார்வையிட புதிய வத்திக்கான் செயலகத்தை  உருவாக்கியுள்ளார் திருத்தந்தை

5. ஈராக்கின் எதிர்காலத்துக்கு உண்ணாநோன்பும் செபமும் தேவை, முதுபெரும் தந்தை சாக்கோ

6. உலக அளவில் ஆண்டுதோறும் பத்து இலட்சம் குழந்தைகள் பிறந்தவுடன் இறப்பு

7. இலங்கை மீது சர்வதேச விசாரணை தேவை: நவி பிள்ளை அறிக்கை

8. வளர்ந்துவரும் தீவு நாடுகளின் அனைத்துலக ஆண்டு

------------------------------------------------------------------------------------------------------

1. உலகின் அனைத்துக் குடும்பங்களுக்கும் திருத்தந்தை கடிதம்

பிப்.25,2014. வருகிற அக்டோபரில் குடும்பம் குறித்து நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்துக்கு, உலகின் குடும்பங்கள் தங்கள் நடைமுறைப் பரிந்துரைகள் மற்றும் செபத்தின் மூலம் ஆதரவு வழங்குமாறு கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நற்செய்தி அறிவிப்புச் சூழலில் குடும்பத்துக்கான மேய்ப்புப்பணி சவால்கள் என்ற தலைப்பில் நடைபெறவுள்ள இந்தச் சிறப்பு மாமன்றத்தை முன்னிட்டு உலகின் அனைத்துக் குடும்பங்களுக்கும் இச்செவ்வாயன்று கடிதம் எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், அருள்பணியாளர்கள், அர்ப்பணிக்கப்பட்ட துறவியர், பொதுநிலையினர் என அனைத்து இறைமக்களையும் இம்மாமன்றம் ஈடுபடுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
வருகிற அக்டோபர் உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தைத் தொடர்ந்து அடுத்த ஆண்டில் இடம்பெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றமும், குடும்பம் என்ற தலைப்பிலே நடைபெறும் எனவும் திருத்தந்தையின் கடிதம் கூறுகிறது.
2015ம் ஆண்டு செப்டம்பரில் பிலடெல்ஃபியாவில் உலக குடும்பங்கள் மாநாடும் நடைபெறும் எனக் கூறியுள்ள திருத்தந்தை, குடும்பங்களின் செபம் உலக ஆயர்கள் மாமன்றத்துக்கு விலைமதிப்பில்லாத சொத்தாக இருக்கும் எனவும், குடும்பங்கள் தனக்காகச் செபிக்குமாறும் கேட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை : போர்கள், சிறாரை அகதிகள் முகாம்களில் பசியால் வாடவைக்கின்றன

பிப்.25,2014. அகதிகள் முகாம்களில் சிறார் பசியோடு வாடும்வேளை, ஆயுதங்களை உற்பத்தி செயபவர்களும், அவற்றை விற்பவர்களும் சமுதாய அரங்குகளில் ஆடம்பர களியாட்ட விருந்துகளை நடத்துகின்றனர் என இச்செவ்வாயன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இச்செவ்வாய் காலை திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, தனது மறையுரை முழுவதிலும் அமைதிக்காக உருக்கமாக அழைப்பு விடுத்தார், அதோடு, உலகில் இடம்பெறும் சண்டைக்கு எதிராக, கடுமையாகக் கண்டனம் தெரிவித்தார்.
உங்களிடையே சண்டை, சச்சரவுகள் எங்கிருந்து வருகின்றன என்று இந்நாளைய முதல் வாசகத்தில் திருத்தூதர் யாக்கோபு கேள்வி கேட்டிருப்பதையும், தங்களில் யார் பெரியவர் என இயேசுவின் சீடர்களுக்குள் எழுந்த வாக்குவாதங்களைச் சொல்லும் நற்செய்தி வாசகத்தையும் மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சண்டைகளையும் வெறுப்பையும், பகைமையையும் சந்தையில் வாங்க முடியாது, அவை உலகப் பொருள்களுக்கான நமது சிற்றின்ப நாட்டங்களில், நம் இதயங்களில் தொடங்குகின்றன என்று கூறினார்.
உலகில் அதிகரித்துவரும் சண்டைகள், மோதல்கள், சச்சரவுகள், மரணங்கள் ஆகியவை பற்றி ஒவ்வொரு நாளும் நாம் கேட்டுவருகிறோம், இன்று நடைபெறும் சண்டைகளைப் பட்டியலிட முயற்சித்தால் பல பக்கங்கள் தேவைப்படும் என்றும் உரைத்த திருத்தந்தை, பெரிய போர்கள் தவிர எல்லா இடங்களிலும் சிறிய சண்டைகளும் இடம்பெறுகின்றன, ஒவ்வொருவரும் தங்களது சொந்த ஆதாயங்களைப் பாதுகாப்பதற்காக ஒருவர் ஒருவரைக் கொலை செய்கின்றனர் என்றும் தெரிவித்தார்.
கடவுளிடமிருந்து நம்மை விலக்கி வைக்கும் சண்டை உணர்வு நம் குடும்பங்களிலும்கூட இருக்கின்றன என்றும், தந்தையும் தாயும் அமைதிப் பாதையைக் காண முடியாமல் சண்டையைத் தெரிவுசெய்து அதில் வழக்கறிஞர்களை ஈடுபடுத்துகின்றனர் என்றும் கூறிய திருத்தந்தை, குடும்பங்களிலும், சமூகங்களிலும் எல்லாவிடங்களிலும் சண்டை தொடர்கின்றது என்ற கவலையையும் தெரிவித்தார்.
சண்டை குறித்த செய்திகளுக்கு நாம் பழக்கப்பட்டவர்களாக மாறாதிருப்பதற்கு ஆண்டவரிடம் அருள் வேண்டுவோம் எனவும் திருத்தந்தை இறுதியில் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. நாம் அனைவரும் வாழும் நற்செய்திகளாக மாறுவதற்கு அழைக்கப்பட்டுள்ளோம், திருத்தந்தை பிரான்சிஸ்

பிப்.25,2014.  திருமுழுக்கு பெற்ற நாம் அனைவரும் மறைபோதகத் திருத்தூதர்கள், நாம் உலகில் வாழும் நற்செய்திகளாக மாறுவதற்கு அழைக்கப்பட்டுள்ளோம் என, இச்செவ்வாய் தனது டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், மறைந்த திருத்தந்தை 6ம் பவுல் அவர்களின் பரிந்துரையால் நடைபெற்ற புதுமை ஒன்றை, திருப்பீட புனிதர் நிலைக்கு உயர்த்தும் பேராயத்தின் ஆலோசனை இறையியலாளர் குழு ஏற்றுக்கொண்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாயின் கருப்பையில் கடும் பிரச்சனைகளை எதிர்நோக்கிய குழந்தை ஒன்று திருத்தந்தை 6ம் பவுல் அவர்களின் பரிந்துரையால் முழுவதும் குணமாகிப் பிறந்துள்ளது. தற்போது அதன் நலவாழ்வும் நன்றாக உள்ளது எனச் சொல்லப்பட்டுள்ளது.
1990களின் மத்தியில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிஃபோர்னியாவில் தாயின் கருப்பையில் வளர்ந்த குழந்தை ஒன்று கடும் பிரச்சனைகளை எதிர்நோக்கியது, இந்நோய் மூளைச் சிதைவுக்குக் காரணமாகக்கூடும் என மருத்துவர்கள் எச்சரித்தனர், மருத்துவர்கள் அக்குழந்தையைக் கருக்கலைப்பு செய்துவிடுமாறும் ஆலோசனை கூறினர், ஆனால் அக்குழந்தையின் தாய் திருத்தந்தை 6ம் பவுல் அவர்களிடம் செபித்தார். அக்குழந்தை எவ்விதப் பிரச்சனையுமின்றி பிறந்ததென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. பொருளாதார விவகாரங்களை மேற்பார்வையிட புதிய வத்திக்கான் செயலகத்தை  உருவாக்கியுள்ளார் திருத்தந்தை

பிப்.25,2014. திருப்பீடம் மற்றும் வத்திக்கான் நாட்டின் அனைத்துப் பொருளாதார மற்றும் நிதி நிர்வாகத்தை மேற்பார்வையிடுவதற்கென புதிய பொருளாதாரச் செயலகத்தை இத்திங்களன்று உருவாக்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்தப் புதிய பொருளாதாரச் செயலகம் நிதிசார்ந்த திட்டங்கள், வரவுசெலவு, நிதி அறிக்கை தயாரித்தல் ஆகியவற்றுக்குப் பொறுப்பேற்கும். இந்தச் செயலகம் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த எட்டு கர்தினால்கள், ஆயர்கள் மற்றும் 7 பொதுநிலையினரைக் கொண்ட 15 பேர் அடங்கிய ஒரு புதிய குழுவினால் மேற்பார்வையிடப்படும்.
புதிய பொருளாதாரச் செயலகத்தின் தலைவராக ஆஸ்திரேலியாவின் சிட்னி கர்தினால் ஜார்ஜ் பெல் அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இச்செயலகத்தின் பொதுச் செயலர், இதன் அன்றாட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை, கர்தினால் ஜார்ஜ் பெல் அவர்களுக்கு வழங்குவார்.
நம்பிக்கைக்கு உரியவரும், அறிவாளியுமான வீட்டுப்பொறுப்பாளர்(Fidelis dispensator et prudens லூக்.12,42) என்ற தலைப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்திங்களன்று வெளியிட்ட தனது சொந்த முயற்சியினால்(Motu proprio) என்ற அறிக்கையில் இந்தப் புதிய பொருளாதாரச் செயலகம் குறித்து விளக்கப்பட்டுள்ளது.
வத்திக்கான் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குதல், வத்திக்கானுக்குச் சொத்துக்கள் வாங்குதல் போன்றவைகளை, தற்போது செய்துவரும் APSA என்ற அப்போஸ்தலிக்கப் பீடத்தின் சொத்து நிர்வாகத் துறை, வத்திக்கானின் மத்திய வங்கியாக, தனது பணிகளைத் தொடர்ந்து ஆற்றும் எனவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. ஈராக்கின் எதிர்காலத்துக்கு உண்ணாநோன்பும் செபமும் தேவை, முதுபெரும் தந்தை சாக்கோ

பிப்.25,2014. ஈராக்கிலும், மத்திய கிழக்குப் பகுதியிலும் நல்லதோர் எதிர்காலம் அமையவும், ஈராக்கிலிருந்து கிறிஸ்தவர்கள் வெளியேறுவதைத் தடுக்கவும்  உண்ணாநோன்பும் செபமும் தேவை என, ஈராக்கின் கல்தேய வழிபாட்டுமுறையின் முதுபெரும் தந்தை முதலாம் இரபேல் லூயிஸ் சாக்கோ அவர்கள் கூறினார்.
தவக்காலத்துக்கென மேய்ப்புப்பணி அறிக்கை வெளியிட்டுள்ள முதுபெரும் தந்தை லூயிஸ் சாக்கோ அவர்கள், தவக்காலத்தில் உண்ணாநோன்பும் ஆழமான செபமும் தேவை எனக் கூறியுள்ளார்.
இரத்தும் சிந்தும் சண்டைகளுக்கும், வன்முறைகளுக்கும் மத்தியில் உண்மையான ஒப்புரவை ஏற்படுத்துவதற்குச் செபமும் உண்ணாநோன்பும் உதவும் என்ற தனது நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார் முதுபெரும் தந்தை சாக்கோ.
வருகிற மார்ச் 5ம் தேதி தவக்காலம் தொடங்குகிறது.

ஆதாரம் : AsiaNews

6. உலக அளவில் ஆண்டுதோறும் பத்து இலட்சம் குழந்தைகள் பிறந்தவுடன் இறப்பு

பிப்.25,2014. குழந்தைகளின் முதல் 24 மணிநேர வாழ்வு மிகவும் ஆபத்தானதாக இருக்கும்வேளை, உலக அளவில் ஒவ்வோர் ஆண்டும் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் தாங்கள் பிறந்த முதல் நாளிலேயே இறக்கின்றனர் என, குழந்தைகள் நலவாழ்வு தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிறந்தவுடன் இடம்பெறும் இறப்புகளைத் தவிர்த்தல் என்ற தலைப்பில் இத்திங்களன்று அறிக்கை வெளியிட்டுள்ள Save the Children என்ற குழந்தைகள் நலவாழ்வு நிறுவனம், தாய்க்கும் குழந்தைக்கும் இலவச நலவாழ்வு வசதிகள் வழங்கப்பட்டு, திறமையான மருத்துவத் தாதிகள் இருந்தால் இந்த இறப்புகளில் பாதியைத் தடுக்க முடியும் எனக் கூறியுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் 12 இலட்சம் குழந்தைகள் பிறக்கும்வேளை, பிரசவத்தின்போது ஏற்படும் சிக்கல்களும், தாயின் நோய்களும், குறைப்பிரசவமும் குழந்தைகள் பிறந்தவுடன் இறப்பதற்கு முக்கிய காரணங்களாக அவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 
ஆண்டுதோறும் ஏறக்குறைய 4 கோடிப் பெண்கள், சரியான பயிற்சி பெற்றவர்களின் உதவி இல்லாமல் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் நிலமையை மாற்ற வேண்டுமென அரசுகளைக் கோரியுள்ளது Save the Children நிறுவனம்.
இந்த நிலமையுள்ள மோசமான நாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ள அந்த நிறுவனம், 300 மருத்துவத் தாதிகளே உள்ளனர் என்பதையும் குறிப்பிட்டுள்ளது.

ஆதாரம் : The Huffington Post
7. இலங்கை மீது சர்வதேச விசாரணை தேவை: நவி பிள்ளை அறிக்கை

பிப்.25,2014. இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது காணாமற்போனவர்கள் குறித்த அரசின் விசாரணைகள் முடிவுறாத நிலையில் உள்ளது என்று மனித உரிமை ஆர்வலர்களும், உள்ளூர் தன்னார்வப் பணியாளர்களும் கூறுகின்றனர்.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் 1990க்கும் 2009க்கும் இடைப்பட்ட காலத்தில் கடத்தப்பட்டவர்கள் மற்றும் கட்டாயமாகக் காணாமற்போனவர்கள் குறித்து அரசின் புலனாய்வுக் குழு நடத்திய முதல்கட்ட விசாரணைகள் இன்னும் முடிவுறாத நிலையில் உள்ளது என்று மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
அதேநேரம், இந்தப் புலனாய்வுக் குழுவின் விசாரணையை மேலும் 6 மாதங்களுக்கு, அதாவது இவ்வாண்டு ஆகஸ்ட் 12 வரை அரசுத்தலைவர் மகிந்த இராஷபக்ஷ நீட்டித்துள்ளார்.  
இதுவரை இந்தப் புலனாய்வுக் குழுவிடம்,16 ஆயிரம் புகார்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
மேலும், இலங்கையில் நடந்து முடிந்த போரின் இறுதிக்கட்டங்களில் நடந்ததாகக் கூறப்படும் பெருமளவான மனித உரிமை மீறல்கள் குறித்து நியாயமான விசாரணையை நடத்த இலங்கை தவறிவிட்டது என்று ஐநா மனித உரிமைகள் அவைத் தலைவர் நவி பிள்ளை அவர்களின் அறிக்கை ஒன்று கூறுகிறது.
இந்த அறிக்கை அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும்.

ஆதாரம் : AsiaNews

8. வளர்ந்துவரும் தீவு நாடுகளின் அனைத்துலக ஆண்டு

பிப்.25,2014. இத்திங்களன்று ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் தொடங்கப்பட்டுள்ள வளர்ந்துவரும் தீவு நாடுகளின் அனைத்துலக ஆண்டு, அந்நாடுகளில் அதிகரித்துவரும் சுற்றுச்சூழல் சீர்கேட்டையும், சமூக-பொருளாதாரப் பின்னடைவையும் குறைக்க உதவும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்துள்ளனர் ஐ.நா. அதிகாரிகள்.
உலகில் பெருமளவான சிறிய தீவு நாடுகள், வெப்பநிலை மாற்றத்தால் கடும் பிரச்சனைகளை எதிர்நோக்கிவரும்வேளையில் இந்த அனைத்துலக ஆண்டு சிறப்பிக்கப்படுவது அந்நாடுகளின் பிரச்சனைகள் குறைய உதவும் என்றும் ஐ.நா. அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நியுயார்க்கில் வருகிற செப்டம்பர் 23ல் நடைபெறவுள்ள வெப்பநிலை மாற்றம் குறித்த அனைத்துலக மாநாட்டுக்கும், இந்த அனைத்துலக ஆண்டு ஆரம்ப நிகழ்வில் அழைப்பு விடுத்தார் பான் கி மூன்.
நாடுகளின் குழு ஒன்றுக்கென ஓர் அனைத்துலக ஆண்டு அர்ப்பணிக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறையாகும்.
மாலத்தீவுகள் கடலுக்குள் மூழ்கும் ஆபத்தை எதிர்நோக்குவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
  
ஆதாரம் : UN

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...