Saturday, 22 February 2014

செய்திகள் - 22.02.14

செய்திகள் - 22.02.14
 ------------------------------------------------------------------------------------------------------

1. திருஅவை புதிய கர்தினால்களிடம், ஒன்றிப்பு, துணிச்சல், ஒத்துழைப்பு, செபம் ஆகியவற்றைக் கேட்கிறது, திருத்தந்தை பிரான்சிஸ்

2. இச்சனிக்கிழமை திருவழிபாட்டில் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

3. கடவுள் நம்மை எப்போதும் அன்பு கூருகிறார், திருத்தந்தை பிரான்சிஸ்

4. இதயத்தின் மொழியைப் பேசுவேன், திருத்தந்தை பிரான்சிஸ்

5. காங்கோ குடியரசில் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத வன்முறைகள், ஆயர்கள்

6. இந்தியாவில் முதியோர் பராமரிப்பு குறைந்து வருகிறது

7. எவரெஸ்ட் முகாமில் பாதுகாப்பு குழுவை அமர்த்துவதற்கு நேபாளம் தீர்மானம்

8. கோடை மழை இயல்பை அறிய அரபிக்கடலில் துளையிடப்படுகிறது

9. 72 விழுக்காட்டு அமெரிக்கர்கள் இந்தியாவிற்கு ஆதரவு

------------------------------------------------------------------------------------------------------

1. திருஅவை புதிய கர்தினால்களிடம், ஒன்றிப்பு, துணிச்சல், ஒத்துழைப்பு, செபம் ஆகியவற்றைக் கேட்கிறது, திருத்தந்தை பிரான்சிஸ்

பிப்.22,2014.  கர்தினால்கள் திருஅவைக்குத் தேவைப்படுகின்றனர், எல்லாக் காலத்திலும் எல்லா நேரங்களிலும் நற்செய்தியை அறிவிப்பதற்கும், உண்மைக்குச் சாட்சியம் அளிப்பதற்குமான அவர்களின் துணிச்சல், அவர்களின் ஒத்துழைப்பு, இன்னும் சிறப்பாக, திருத்தந்தையோடும் கர்தினால்களுக்குள்ளும் ஒன்றிப்பு, இறைமக்களுக்கான அவர்களின் செபம் போன்றவை தேவைப்படுகின்றன எனக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் முற்பகல் 11 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில், 18 புதிய கர்தினால்களுக்குச் சிவப்புத் தொப்பி, மோதிரம் ஆகியவற்றை வழங்கும் திருவழிபாட்டில் இவ்வாறு உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், கர்தினால்களின் கருணை, குறிப்பாக, இக்காலத்தில் துன்பமும் வேதனையும் அனுபவிக்கும் உலகின் பல நாடுகளுக்கு அவர்களின் கருணை தேவைப்படுகின்றது என்று கூறினார்.
பாகுபாடு மற்றும் அடக்குமுறைகளால் துன்புறும் திருஅவைச் சமூகங்கள் மற்றும் அனைத்துக் கிறிஸ்தவர்களுடனான நமது ஆன்மீக நெருக்கத்தைத் தெரிவிப்போம் என்றும், இம்மக்கள் விசுவாசத்தில் உறுதியாய் இருக்கவும், தீமையை நன்மையால் வெல்லவும் அவர்களுக்கான நம் செபம் திருஅவைக்குத் தேவைப்படுகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.
நம் சொல்லாலும், நம்பிக்கையாலும், செபங்களாலும் அமைதியை ஏற்படுத்துபவர்களாக இருப்பதற்குத் திருஅவைக்கு நாம் தேவைப்படுகின்றோம் எனவும், இக்காலத்தில் வன்முறை மற்றும் போர்களை அனுபவிக்கும் மக்களுக்கு அமைதியையும் ஒப்புரவையும் வேண்டுவோம் எனவும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை.
இயேசு தம் சீடர்களுக்குமுன் போய்க்கொண்டிருந்தார்..”(மாற்.10:32) என்ற நற்செய்தி திருசொற்களுடன் மறையுரையைத் தொடங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு எப்போதும் நமக்கு முன்னே போய்க்கொண்டிருக்கிறார், நமக்குப் பாதையைக் காட்டுகிறார், இதுவே நம் நம்பிக்கை மற்றும் மகிழ்வின் ஊற்று எனக் கூறினார்.
இயேசு சிலுவையின் பாதையைத் தேர்ந்துகொண்டதால் அப்பாதை எளிதானதோ அல்லது வசதியானதோ அல்ல, ஆயினும், இயேசுவின் சீடர்கள் போன்று நாம் பயப்படத் தேவையில்லை, ஏனெனில் அவர் வெற்றி பெற்றுவிட்டார், சிலுவையே நம் நம்பிக்கை என்றும் திருத்தந்தை கூறினார்.
இயேசு சீடர்ளைத் தம்மிடம் வரவழைத்து விளக்கியது பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு நம்மையும் அழைப்பதற்கு நாம் அனுமதிப்போம், நாம் ஒன்றிணைந்து ஆண்டவருக்குப் பின்னால் நடப்போம், விசுவாசிகள் மத்தியில், புனித தாய்த்திருஅவை மத்தியில் நாம் எப்போதும் இயேசுவால் ஒன்றாக அழைக்கப்படுகின்றோம் எனக் கூறி, தனது மறையுரையை நிறைவு செய்தார்.
புதிய கர்தினாலாக அறிவிக்கப்பட்டிருந்த Msgr.Loris Capovilla அவர்கள் உடல்நிலை காரணமாக இத்திருவழிபாட்டில் கலந்துகொள்ளவில்லை.     

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. இச்சனிக்கிழமை திருவழிபாட்டில் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

பிப்.22,2014. இச்சனிக்கிழமையன்று தூய பேதுரு பசிலிக்கா பேராயலத்தில், 18 புதிய கர்தினால்களுக்கு, சிவப்புத் தொப்பியும், மோதிரமும் வழங்கப்பட்ட திருவழிபாட்டில் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும் பங்கெடுத்தார்.
இத்திருவழிபாட்டைத் தொடங்குவதற்கு முன்னர் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் அமர்ந்திருந்த இருக்கைக்குச் சென்று அவரை வாழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்திருவழிபாட்டில் அனைத்துக் கர்தினால்களின் பெயரில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார் இப்புதிய கர்தினால்களில் ஒருவரான திருப்பீடச் செயலர் பேராயர் பியத்ரோ பரோலின்.
புதிய கர்தினால்களுள் இருவர் ஆசியர்கள். தென் கொரியாவின் செயோல் பேராயர் Andrew Yeom Soo jung அவர்களும், பிலிப்பின்சின் Cotabato பேராயர் Orlando Quevedo அவர்களும் இவ்விருவர் ஆவர்.
இச்சனிக்கிழமையோடு திருஅவையில் மொத்தக் கர்தினால்களின் எண்ணிக்கை 218. இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்கு உட்பட்டவர்கள் 122. தற்போது முதன்முறையாக, ஐரோப்பாவிலிருந்து 61 கர்தினால்களும், உலகின் பிற பகுதிகளிலிருந்து  61 கர்தினால்களும் உள்ளனர்.
இன்னும், இஞ்ஞாயிறு காலை 10 மணிக்கு புதிய கர்தினால்களுடன் திருப்பலியும் நிகழ்த்துவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. கடவுள் நம்மை எப்போதும் அன்பு கூருகிறார், திருத்தந்தை பிரான்சிஸ்

பிப்.22,2014. நம்பிக்கையை ஒருபோதும் இழக்காதிருப்போம்! கடவுள் நம்மை எப்போதும், நம் தவறுகள் மற்றும் நம் பாவங்களுடன்கூட அவர் நம்மை அன்பு கூருகிறார் என்று, தனது டுவிட்டர் செய்தியில் இச்சனிக்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், வருகிற அக்டோபர் 5 முதல் 19 வரை வத்திக்கானில் நடைபெறவிருக்கும் குடும்பம் பற்றிய உலக ஆயர்களின் சிறப்பு மாமன்றத்துக்கு, பிரான்ஸ், பிலிப்பின்ஸ், பிரேசில் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 3 கர்தினால்களைத் தலைவர்களாக நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வெள்ளியன்று நடைபெற்ற கர்தினால்கள் அவையின் சிறப்புக் கூட்டத்தில் இத்தலைவர்களை அறிவித்தார் திருத்தந்தை. 
பாரிஸ் கர்தினால் Andre Vingt-Trois, மனிலா கர்தினால் Luis Tagle, பிரேசிலின்  Aparecida கர்தினால் Raymundo Assis ஆகிய மூவரும் குடும்பம் பற்றிய உலக ஆயர்களின் சிறப்பு மாமன்றத்துக்குத் தலைவர்களாகச் செயல்படுவார்கள். 
2015ம் ஆண்டில் நடைபெறும் உலக ஆயர்கள் மாமன்றமும் குடும்பம் குறித்தே அமையும் எனவும் அறிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. இதயத்தின் மொழியைப் பேசுவேன், திருத்தந்தை பிரான்சிஸ்

பிப்.22,2014. மிகவும் எளிமையான மற்றும் அதிக உண்மையானதுமாகிய இதயத்தின் மொழியைப் பேசுவேன், இந்த மொழிக்கு இரு விதிகள் கொண்ட சிறப்பு இலக்கணம் இருக்கின்றது என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் Texas மாநிலத்தில் நடந்த பெந்தகோஸ்து கருத்தரங்குக்கு அனுப்பிய செய்தியில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், எல்லாவற்றுக்கும் மேலாக கடவுளை அன்பு கூர்வதும், பிறரை அன்பு கூர்வதுமே அந்த இரு விதிகள் என்றும் கூறியுள்ளார்.
நாம் ஒருவர் ஒருவரை, சகோதரர்களாகச் சந்திக்க வேண்டும் என்றும், நான் உங்கள் சகோதரர் என்ற முறையில் உங்களிடம் பேசுகிறேன் என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், இந்த நம் ஆசைகள் வளர அனுமதிப்போம், எனக்காகச் செபியுங்கள் என்றும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. காங்கோ குடியரசில் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத வன்முறைகள், ஆயர்கள்

பிப்.22,2014. எம் மக்கள் பீரங்கிக்கு இரையாகும் மக்கள் தொகுதி அல்ல என்பதை சப்தமாகவும் தெளிவாகவும் சொல்வோம் என, காங்கோ சனநாயகக் குடியரசின் Katanga ஆயர்கள் கூறினர்.
Katanga தென் மாநிலப் பகுதியில் Bakata-Katanga ஆயுதம் ஏந்திய குழுவினால் நடத்தப்படும் வன்முறைக்குக் கண்டனம் தெரிவித்துள்ள ஆயர்கள், அப்பகுதியில் நிலைமை மோசமாக இருப்பதாகவும் கூறினர்.
சூறையாடுதல், பாலியல் வன்செயல்கள், கொலைகள், சித்ரவதைகள், எரித்தல் போன்ற வன்முறைகளில் ஈடுபடுவதற்கு Bakata-Katanga புரட்சிக்குழு இளையோரை நன்றாகப் பழக்கி வைத்திருக்கின்றது என்றும் ஆயர்கள் தங்கள் அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆயிரக்கணக்கான அகதிகளுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்காததால் அவர்கள் மத்தியில் இறப்பு விகிதமும் அதிகரித்து வருகின்றது என்றும் காங்கோ குடியரசின் Katanga ஆயர்கள் கூறினர்.

ஆதாரம் : Fides                         

6. இந்தியாவில் முதியோர் பராமரிப்பு குறைந்து வருகிறது

பிப்.22,2014.    2021ம் ஆண்டுக்குள் இந்தியாவில் வயதானவர்களின் எண்ணிக்கை 14 கோடியாக இருக்கும்வேளை, அவர்களைப் பராமரிப்பதற்கான சக்தியை நாடு கொண்டிருக்கவில்லை என திருப்பீட வாழ்வு அவையின் உறுப்பினர் எச்சரித்தார்.
வயது முதிர்தலும் உடல்உறுப்புக் குறைபாடும் என்ற தலைப்பில் உரோமையில் இவ்வெள்ளியன்று நிறைவடைந்த, திருப்பீட வாழ்வு அவையின் கருத்தரங்கில் கலந்து கொண்ட அதன் உறுப்பினர் பாஸ்கால் கர்வாலோ, இந்தியாவுக்கு மிகவும் பொருத்தமான தலைப்புகள் இக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
உலகில் முதியோரை அதிகமாகக் கொண்டுள்ள நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது என்றும், இந்திய மக்கள் தொகை இளையோரிலிருந்து முதியோரை அதிகமாகக் கொண்டிருக்கத் தொடங்கியுள்ளது என்றும் கர்வாலோ கூறினார்.
2050ம் ஆண்டில் இந்தியாவில் வயதானவர்களின் எண்ணிக்கை 31 கோடியாக 60 இலட்சமாக இருக்கும் எனவும் கர்வாலோ கூறினார்.

ஆதாரம் : AsiaNews                               

7. எவரெஸ்ட் முகாமில் பாதுகாப்பு குழுவை அமர்த்துவதற்கு நேபாளம் தீர்மானம்

பிப்.22,2014. உலகின் மிகப்பெரிய எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும்வேளை, எவரெஸ்ட் அடிவார முகாமில் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவை அமர்த்துவதற்கு நேபாளம் தீர்மானித்துள்ளது.
கடந்த ஏப்ரலில் ஐரோப்பிய மலையேறிகளுக்கும், Sherpas குழுவுக்குமிடையே 7,470 மீட்டர் உயரத்தில் சண்டை மூண்டதையொட்டி பாதுகாப்பு குழுவை அமர்த்துவதற்கு நேபாளம் தீர்மானித்துள்ளது.
1953ம் ஆண்டில் எட்மண்ட் ஹில்லரியும், டென்சிங் நார்கேயும் முதன்முதலில் எவரெஸ்டில் ஏறியதற்குப் பின்னர் 3,000த்துக்கு அதிகமானோர் அம்மலை உச்சிக்குச் சென்றுள்ளனர்.
உலகின் மிகப்பெரிய எவரெஸ்ட் 8,848 மீட்டர் உயரமுடையது.

ஆதாரம் : BBC                          

8. கோடை மழை இயல்பை அறிய அரபிக்கடலில் துளையிடப்படுகிறது

பிப்.22,2014. இந்தியாவில், கோடை மழையின் இயல்பை அறிய, இமயமலையின் படிமங்கள் நிறைந்த பகுதியான, அரபிக்கடலில், துளையிட்டு ஆய்வு செய்யும் பணி, அடுத்தாண்டு, மார்ச் மாதத்திற்குப் பின் துவங்கும், என, மத்திய, பூமி அறிவியல் துறையின் செயலர் சைலேஷ் நாயக் தெரிவித்தார்.
இந்திய வானிலை சங்கம் மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகம் சார்பில், பருவமழை கண்காணிப்பு மற்றும் போலி நிகழ்வு குறித்து இவ்வெள்ளியன்று துவங்கிய அனைத்துலக நான்கு நாட்கள் கருத்தரங்கில் இவ்வாறு சைலேஷ் நாயக் கூறினார்.
இந்தியாவில் பெய்யும் கோடை மழையானது, விவசாயம், நீர் ஆதாரங்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தையே பாதித்து வருகிறது எனவும், கோடை மழையில் நிகழும் மிகப்பெரிய மாற்றமானது, பெருவெள்ளத்தையும், வறட்சியையும் ஏற்படுத்துகிறது எனவும். கோடை மழைக்கும், இமய மலையின் வளர்ச்சிக்கும் தொடர்புண்டு எனவும் அவர் கூறினார்.
25 ஆயிரம் ஆண்டுகளுக்குரிய, மழைப்பொழிவின் வரலாறு, வண்டல் படிமங்கள் மூலம் கிடைக்கின்றன என்பதால், பழைய வரலாறு அடிப்படையில், இனிவரும், காலங்களில் பருவமழையின் இயல்பைக் கணிக்கலாம் என்றுரைத்த சைலேஷ் நாயக், இந்தியப் பெருங்கடல் ஆழ்கடல் துளையிடும் திட்டத்தின்படி, அரபிக் கடலில், 2015ல், லட்சுமி பேசின் பகுதியில் துளையிட்டு, அதில் கிடைக்கும் படிமங்கள் கொண்டு ஆய்வு நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

ஆதாரம் : தினமலர்

9. 72 விழுக்காட்டு அமெரிக்கர்கள் இந்தியாவிற்கு ஆதரவு

பிப்.22,2014. 72 விழுக்காட்டு அமெரிக்கர்கள் தங்களின் விருப்ப நாடாக இந்தியாவைத் தேர்வு செய்துள்ளனர்.
அமெரிக்காவில் ஒவ்வோர் ஆண்டும் தங்களுக்கு விருப்பமான நாடுகள் குறித்து அந்நாட்டு மக்களிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதுபோல் இவ்வாண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இந்தியாவை விருப்ப நாடாக 72 விழுக்காட்டு மக்கள் தேர்வு செய்துள்ளனர்.
இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 4 விழுக்காடு அதிகமாகும். அதே நேரத்தில் பாகிஸ்தானை விருப்ப நாடாக தேர்வு செய்துள்ளவர்களின் எண்ணி்க்கை 17 விழுக்காடாகும்.
இந்தக் கருத்துக் கணிப்பு 50 அமெரிக்க மாநிலங்களில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட ஏறக்குறைய ஆயிரத்து 23 பேர்களிடம் நடத்தப்பட்டது.
வெளிநாடுகளை விரும்பும் வரிசையி்ல் கனடா நாட்டை 93 விழுக்காட்டினர் தேர்வு செய்துள்ளனர். தொடர்ந்து இங்கிலாந்து 90 விழுக்காடு, ஜெர்மனி 81 விழுக்காடு, ஜப்பான் 80 விழுக்காடு, பிரான்ஸ் 78 விழுக்காடு, தென் கொரியா 64 விழுக்காடு என மக்கள் தங்களின் விருப்ப நாடுகளாகத் தேர்வு செய்துள்ளனர்.

ஆதாரம் : PTI
 

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...