Wednesday 26 February 2014

செய்திகள் - 26.02.14

செய்திகள் - 26.02.14
------------------------------------------------------------------------------------------------------

1. முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் : திருஅவையின் தலைமைப் பொறுப்பிலிருது விலகுவது என்ற முடிவை, மிகவும் தெளிவான மனநிலையில் எடுத்தேன்

2. திருஅவையின் எண்ணத்திலும், உள்ளத்திலும் குடும்பங்கள் மையமாகியுள்ளன - பேராயர் Vincenzo Paglia

3. திருத்தந்தை பிரான்சிஸ், கொரியாவுக்கு வருகை தருவது, தலத்திருஅவைக்குப் புத்துணர்வைக் கொணரும் - கர்தினால் Yeom Soo-jung

4. திருஅவையின் ஆரம்பக்காலம், வறுமையில் தோய்ந்திருந்தது - ஆசியக் கர்தினால் Orlando Quevedo

5. ஹெயிட்டி கத்தோலிக்கர்களை, உலகக் கத்தோலிக்க வரைப்படத்தில் தெளிவான ஓர் அங்கமாக மாற்றிய திருத்தந்தைக்கு நன்றி புதியக் கர்தினால் Chibly Langlois

6. இன்றைய தகவல் தொழில்நுட்பம் முன்வைக்கும் சவால்களுக்குப் பதிலளிப்பதற்குக் கத்தோலிக்க ஊடகத்துறையினர் அழைப்பு

7. இந்தியாவில், குறிப்பாக, குஜராத் மாநிலத்தில் மத விடுதலையை உறுதி செய்யும் நடவடிக்கைகளை ஐ.நா. மேற்கொள்ளும்

8. போர் ஆயுதமாக பாலியல் வன்செயல் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க உச்சி மாநாடு

------------------------------------------------------------------------------------------------------

1. முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் : திருஅவையின் தலைமைப் பொறுப்பிலிருது விலகுவது என்ற முடிவை, மிகவும் தெளிவான மனநிலையில் எடுத்தேன்

பிப்.26,2014. திருஅவையின் தலைமைப் பொறுப்பிலிருது விலகுவது என்ற முடிவை, மிகவும் தெளிவான மனநிலையில் தான் எடுத்ததாகவும், அந்த முடிவைக் குறித்து ஊடகங்களில் அவ்வப்போது வெளியாகும் கருத்துக்கள் அர்த்தமற்றவை என்றும் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 11ம் தேதியன்று, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், புனித பேதுருவின் வழித்தோன்றல் என்ற தன் உயர்நிலையைத் துறப்பதாக அறிவித்த அந்த முடிவின் ஓராண்டு நிறைவையொட்டி, அவர் வழங்கியுள்ள கருத்துக்களை, ‘La Stampa’ என்ற இத்தாலிய நாளிதழ், பிப்ரவரி 26, இப்புதனன்று வெளியிட்டுள்ளது.
இந்த ஓராண்டு நிறைவையொட்டி, ஊடகங்களில் வெளியான பல்வேறு கருத்துக்களுக்குப் பதிலிறுக்கும் வண்ணம், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், ஒரு சில எண்ணங்களைத் தன் கைப்பட எழுதி, ‘La Stampa’ நாளிதழுக்கு அனுப்பிவைத்தார்.
தனக்கு அடுத்ததாகத் திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் தனக்கு நலம் மிகுந்த உறவு நிலவுவதாகவும், ஒய்வு பெற்றுள்ள நிலையில், திருஅவைக்காக செபிப்பதே தன் முக்கிய பணியென்றும் முன்னாள் திருத்தந்தை தெளிவுபடுத்தியுள்ளார்.
தற்போது தான் அணிந்துவரும் வெள்ளை உடுப்பைக் குறித்தும் கருத்துக்களை வெளியிட்டுள்ள முன்னாள் திருத்தந்தை, தற்போதையத் திருத்தந்தை அணியும் உடைக்கும், தான் அணியும் உடைக்கும் தெளிவான வேறுபாடுகள் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருஅவையின் எண்ணத்திலும், உள்ளத்திலும் குடும்பங்கள் மையமாகியுள்ளன - பேராயர் Vincenzo Paglia

பிப்.26,2014. முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு, திருஅவையின் எண்ணத்திலும், உள்ளத்திலும் குடும்பங்கள் மையமாகியுள்ளன என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
'அன்புள்ள குடும்பத்திற்கு' என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள மடலை, பிப்ரவரி 25, இச்செவ்வாயன்று செய்தியாளர்களிடம் வெளியிட்ட, திருப்பீட குடும்பப்பணி அவையின் தலைவர் பேராயர் Vincenzo Paglia அவர்கள், இவ்வாறு கூறினார்.
குடும்பங்களை மையக்கருத்தாகக் கொண்டு, இவ்வாண்டு அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் ஆயர்கள் சிறப்பு மாமன்றத்திலும், வருகிற ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டின் பிலடெல்பியாவில் நடைபெறவிருக்கும் உலகக் குடும்ப மாநாட்டிலும் குடும்பங்கள் பொருளுள்ள வகையில் கலந்துகொள்ள, திருத்தந்தையின் இம்மடல் தூண்டுகிறது என்று பேராயர் Paglia அவர்கள் குறிப்பிட்டார்.
நம்பிக்கை ஆண்டின் ஒரு முக்கிய நிகழ்வாக, புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற அகில உலகக் குடும்ப விழாவையும், திருமணத்திற்கு நிச்சயம் செய்திருந்த 30,000க்கும் அதிகமான தம்பதியருடன், இம்மாதம் 14ம் தேதி, திருத்தந்தை மேற்கொண்ட சந்திப்பையும் சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசிய பேராயர் Paglia அவர்கள், குடும்பங்கள் திருஅவையின் பயணத்தில் முக்கியமான உடன் பயணிகள் என்பதைக் கூறினார்.

ஆதாரம் : Zenit / VIS

3. திருத்தந்தை பிரான்சிஸ், கொரியாவுக்கு வருகை தருவது, தலத்திருஅவைக்குப் புத்துணர்வைக் கொணரும் - கர்தினால் Yeom Soo-jung

பிப்.26,2014. உலகின் பல நாடுகளிலிருந்தும், கொரியாவுக்கு வந்து பணியாற்றிய மறைப் பணியாளர்களின் தியாகம் நிறைந்த உழைப்பிற்கு, கொரியத் தலத்திருஅவை தன் நன்றியை, பணிகள் வழியே வெளிப்படுத்தும் தருணம் வந்துள்ளது என்று கர்தினால் Andrew Yeom Soo-jung அவர்கள் கூறினார்.
பிப்ரவரி 22, கடந்த சனிக்கிழமையன்று, திருத்தத்தை பிரான்சிஸ் அவர்கள் கர்தினால்களாக உயர்த்திய 19 பேரில் ஒருவரான Seoul பேராயர், கர்தினால் Yeom Soo-jung அவர்கள், தன் புதிய பொறுப்பைக் குறித்து கொரிய செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைக் கர்தினாலாக உயர்த்தியத் திருச்சடங்கில், சமாதான வாழ்த்துப் பரிமாற்றம் செய்தபோது, தான் கொரியாவை மிகுந்த அன்புகூர்வதாகத் தெரிவித்தார் என்றும், கொரிய மக்கள், திருத்தந்தையின் மீது ஆழ்ந்த அன்பு கொண்டுள்ளனர் என்று தான் பதிலுக்குக் கூறியதாகவும் கர்தினால் Yeom Soo-jung அவர்கள் குறிப்பிட்டுப் பேசினார்.
ஆசிய இளையோர் நாள் கொண்டாட்டங்களின்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொரியாவுக்கு வருகை தருவது, தங்கள் தலத்திருஅவைக்குப் பெரிதும் புத்துணர்வைக் கொணரும் ஒரு நிகழ்வாக அமையும் என்று கர்தினால் Yeom Soo-jung அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : AsiaNews

4. திருஅவையின் ஆரம்பக்காலம், வறுமையில் தோய்ந்திருந்தது - ஆசியக் கர்தினால் Orlando Quevedo

பிப்.26,2014. இயேசு கிறிஸ்துவின் இவ்வுலகப் பயணம், வறியோருடன் மேற்கொள்ளப்பட்டது என்றும், திருஅவையின் ஆரம்பக்காலம், வறுமையில் தோய்ந்திருந்தது என்றும் ஆசியக் கர்தினால் ஒருவர் கூறினார்.
அண்மையில் புதிதாகக் கர்தினால் பொறுப்பேற்ற 19 பேரில் ஒருவரான, பிலிப்பின்ஸ் நாட்டுப் பேராயர் Orlando Quevedo அவர்கள், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறினார்.
கத்தோலிக்கரும், இஸ்லாமியரும் சம எண்ணிக்கையில் வாழும் Mindanao என்ற தீவில், Cotabato உயர் மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றிவரும் கர்தினால் Quevedo அவர்கள், கிறிஸ்தவ, மற்றும் இஸ்லாமிய மக்கள் ஒப்புரவுடன் வாழும் வழிகள் குறித்தும் பேசினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் பணிகள் குறித்து வெளியிட்டுவரும் பல கருத்துக்கள், சமுதாயத்தின் விளிம்பில் வாழும் மக்களுக்கு, ஆசியத் திருஅவை ஆற்றிவரும் பணிகளுக்குப் பெரும் உந்துதலாக உள்ளன என்றும் கர்தினால் Quevedo அவர்கள் கூறினார்.

ஆதாரம் : NCR

5. ஹெயிட்டி கத்தோலிக்கர்களை, உலகக் கத்தோலிக்க வரைப்படத்தில் தெளிவான ஓர் அங்கமாக மாற்றிய திருத்தந்தைக்கு நன்றி புதியக் கர்தினால் Chibly Langlois

பிப்.26,2014. ஹெயிட்டி நாட்டில் வாழும் கத்தோலிக்கர்களை, அகில உலகக் கத்தோலிக்க வரைப்படத்தில் தெளிவாகத் தெரியும் ஓர் அங்கமாக மாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு ஹெயிட்டி நாட்டுக் கர்தினால் Chibly Langlois அவர்கள் நன்றி தெரிவித்தார்.
பிப்ரவரி 22ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கிய 19 கர்தினால்களில் வயதில் குறைந்தவர் என்று கருதப்படும் 55 வயது நிறைந்த கர்தினால் Langlois அவர்கள், தனக்குக் கொடுக்கப்பட்டுள்ள இப்பொறுப்பு, ஹெயிட்டி மக்களுக்குத் தரப்பட்டுள்ள ஓர் அங்கீகாரம் என்று எடுத்துரைத்தார்.
மேலும் புதிய கர்தினால்களில் ஒருவரான, ஐவரி கோஸ்ட் நாட்டின் பேராயர் Jean-Pierre Kutwa அவர்கள், தன் நாட்டில் அமைதியைக் கொணர்வதே தன் தலையாயப் பணி என்று குறிப்பிட்டார்.
2002ம் ஆண்டு முதல், இரு உள்நாட்டுப் போர்களைச் சந்தித்துள்ள ஐவரி கோஸ்ட் மக்கள், வன்முறை கலந்த மொழியைக் கைவிட்டு, அன்புப் பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கு தன் உழைப்பை அர்ப்பணம் செய்வதாக கர்தினால் Kutwa அவர்கள் கூறினார்.
ஆப்ரிக்காவின் ஐவரி கோஸ்ட் மற்றும் புர்கினா பாசோ ஆகிய இரு நாடுகளில் பணியாற்றும் பேராயர்கள் இருவரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அண்மையில் கர்தினால்களாக உயர்த்தியிருப்பது சிறப்பிற்குரியது.

ஆதாரம் : Fides / CNA/EWTN

6. இன்றைய தகவல் தொழில்நுட்பம் முன்வைக்கும் சவால்களுக்குப் பதிலளிப்பதற்குக் கத்தோலிக்க ஊடகத்துறையினர் அழைப்பு

பிப்.26,2014. உரோமையில் நடைபெற்றுவரும் SIGNIS உலக மாநாடு, இன்றைய தகவல் தொழில்நுட்பம் முன்வைக்கும் சவால்களுக்குப் பதிலளிப்பதற்குக் கத்தோலிக்க ஊடகத்துறையினருக்கு உதவியாக அமையும் என்ற தனது நம்பிக்கையை வெளியிட்டார் வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர்.
"அமைதிக் கலாச்சாரத்துக்கு ஊடகம் : புதிய தலைமுறையோடு உருவங்களைப் படைத்தல்" என்ற தலைப்பில் உரோமையில் இச்செவ்வாயன்று தொடங்கிய உலக மாநாட்டில் உரையாற்றிய, திருப்பீட சமூகத்தொடர்பு அவைத் தலைவர் பேராயர் Claudio Maria Celli இவ்வாறு கூறினார்.
தாராளமயமாக்கப்பட்ட உலகில் புதிய கலாச்சாரங்கள், புதிய மொழிகள், புதிய உருவங்கள், புதிய கற்பனைகள் ஆகியவை தொடர்ந்து உருவெடுத்துவரும்வேளை, எண்ணற்ற மக்களைத் தொடும் திறன்கொண்ட மொழியில் நற்செய்தியின் ஞானமும், உண்மையும், அழகும் அறிவிக்கப்படுவதற்கு, கத்தோலிக்க ஊடகத்துறையினர் அழைக்கப்படுகின்றனர் என்றும் கூறினார் பேராயர் Celli.
மேலும், இம்மாநாடு பற்றிப் பேசிய, SIGNIS அமைப்பின் தலைவர் அகுஸ்தின் லூர்துசாமி, நம் சிந்தனைகளைப் புதுப்பிப்பதற்கு இம்மாநாடு பல வழிகளில் வாய்ப்புக்களை வழங்குகிறது எனத் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்பவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இப்புதன் பொது மறைபோதகத்திலும் கலந்துகொண்டனர்.
இந்த SIGNIS மாநாடு, வருகிற சனிக்கிழமையன்று நிறைவடையும்.

ஆதாரம் : Zenit

7. இந்தியாவில், குறிப்பாக, குஜராத் மாநிலத்தில் மத விடுதலையை உறுதி செய்யும் நடவடிக்கைகளை ஐ.நா. மேற்கொள்ளும்

பிப்.26,2014. மனித உரிமைகள் குறித்த அகில உலக ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கும் மத விடுதலை எனும் மனித உரிமையை இந்தியாவிலும், குறிப்பாக, குஜராத் மாநிலத்திலும் உறுதி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள விருப்பதாக, ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் இம்மாதம் 23, 24 ஆகிய இரு நாட்கள் கண்காணிப்புப் பயணம் ஒன்றை மேற்கொண்ட ஐ.நா.வின் சிறப்பு அதிகாரி, Heiner Bielefeldt அவர்கள், இவ்வாறு கூறியுள்ளார்.
கண்காணிப்புக் குழுவின் அதிகாரி Bielefeldt அவர்கள், இவ்விதம் கூறியுள்ளது, குஜராத்தில் நிகழ்ந்துள்ள கடந்த காலப் படுகொலைகளை மூடியிருந்த மௌனத் திரையை விளக்குவதாக உள்ளது என்று, அம்மாநிலத்தில் செயலாற்றும் Prashant என்ற மனித உரிமைகள் மையத்தின் இயக்குனர், இயேசு சபை அருள்பணியாளர் Cedric Prakash அவர்கள் கூறினார்.
குஜராத் மாநிலத்தில், 1998ம் ஆண்டு முதல், கிறிஸ்தவர்கள் மீது இடம்பெற்றுவரும் தாக்குதல்கள் குறித்தும், 2002ம் ஆண்டு, இஸ்லாமியர்கள் மீது நடந்த படுகொலைகள் குறித்தும் ஐ.நா. அதிகாரி Bielefeldt அவர்கள், குஜராத் மக்களின் பல தரப்பினரை சந்தித்து விசாரித்தார் என்பதையும் அருள்பணியாளர் Cedric Prakash அவர்கள் எடுத்துரைத்தார்.
குஜராத் மாநிலத்தில், சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள், இந்து மதத்திற்கு மீண்டும் மதம் மாறுவதற்கு, அடிப்படை வாதக் குழுக்கள் செயல்படுத்திவரும் திட்டங்களும், முயற்சிகளும் மாநில அரசின் ஆதரவைப் பெற்றுள்ளது என்றும், சிறுபான்மை மதங்களுக்கு எதிரான குஜராத் அரசின் நடவடிக்கைகளுக்கு இது ஓர் எடுத்துக்காட்டு என்றும் கூறினார் இயேசு சபை அருள்பணியாளர் Cedric Prakash.

ஆதாரம் : Fides

8. போர் ஆயுதமாக பாலியல் வன்செயல் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க உச்சி மாநாடு

பிப்.26,2014. பாலியல் வன்செயல் போர் ஆயுதமாகப் பயன்படுத்துவதை தடுப்பது குறித்து விவாதிக்க உலகத் தலைவர்களின் உச்சி மாநாடு ஒன்று இலண்டனில் வரும் ஜூன் மாதத்தில் கூட்டப்படும் என்று பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் William Hague அறிவித்துள்ளார்.
இந்த மாநாட்டில் 140 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், இராணுவ, காவல்துறை மற்றும் சட்ட வல்லுனர்கள் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்படும் என்று Hague கூறியுள்ளார்.
மோதல்கள் நடக்கும் பகுதிகளில் பாலியல் வன்முறை குறித்து கவனம் செலுத்தும் மிகப்பெரும் மாநாடாக இது அமையும் என்றும் Hague கூறியுள்ளார்.
பாலியல் வன்செயலுக்கு எதிராக வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது இந்த மாநாட்டின் நோக்கம் என்றும், இந்த நெறிமுறைகள் அனைத்துலக அமைதி நடவடிக்கைகள் உட்பட, இராணுவத்தினருக்கு வழங்கப்படும் பயிற்சி மற்றும் யுக்திகள் பயிற்றுவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
பாலியல் வன்செயல்கள் நடப்பதை ஒழிக்கும் முயற்சிகளை உலக நாடுகள் நீண்ட காலமாகவே தவிர்த்து வந்திருக்கின்றன என்றும் Hague வாஷிங்டனில் கூறினார்.

ஆதாரம் : பிபிசி

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...