Tuesday, 25 February 2014

செய்திகள் - 24.02.14

செய்திகள் - 24.02.14
 ------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : இயேசு நம்மைத் தெருவில் தனியாக விட்டுச் செல்வதில்லை

2. திருத்தந்தையுடன் ஹெயிட்டி அரசுத்தலைவர் சந்திப்பு

3. திருத்தந்தை பிரான்சிஸ் - புனிதப் பாதையில் வழிநடக்குமாறு திருஅவைத் தலைவர்களுக்கு அழைப்பு

4. திருத்தந்தை பிரான்சிஸ் - தலைமைத்துவப் பணிகளைக் கொண்டிருப்பவர்கள், அதிகாரங்களின் உரிமையாளர்கள் அல்ல

5. கத்தோலிக்க சமூகத்தொடர்பு சாதனங்களின் பணி குறித்து திருத்தந்தை

6. திருத்தந்தையின் டுவிட்டர்: 'அன்னைமரி என்றும் நம்மருகே உள்ளார்'

7. இந்தியாவில் திருப்பயணம் மேற்கொள்ள திருத்தந்தைக்கு ஆயர் பேரவை அழைப்பு

8. இலங்கையில் வறட்சி காரணமாக நெல் விளைச்சல் வீழ்ச்சி

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : இயேசு நம்மைத் தெருவில் தனியாக விட்டுச் செல்வதில்லை

பிப்.24,2014. இயேசு நம்மைத் தெருவில் தனியாக விட்டுச் செல்லவில்லை, நமக்கென திருஅவை எனும் வீட்டைக் கொடுத்துள்ளார் என இத்திங்கள் காலை திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தான் தங்கியிருக்கும் புனித மார்த்தா இல்ல சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை, இந்நாள் திருப்பலி வாசகமான, பேய்பிடித்த சிறுவனைக் குணப்படுத்தல் நிகழ்ச்சி குறித்து தன் கருத்துக்களை வழங்கினார்.
அச்சிறுவனின் தந்தை விடுத்த விசுவாச விண்ணப்பத்தால் தூண்டப்பட்டு, சிறுவனைக் குணப்படுத்திய இயேசு, அச்சிறுவனை, தெருவில் விட்டுவிட்டு சென்றுவிடவில்லை, மாறாக, குனிந்து, தொட்டுத்தூக்கி தந்தையிடம் ஒப்படைத்தார் என்ற திருத்தந்தை, இயேசு, ஒரு மந்திர தந்திரத்தில் ஈடுபடுபவராக காட்டப்படவில்லை, மாறாக நம்மை நம் சொந்த வீட்டுக்கு அழைத்து வருபவராக, அதாவது திருஅவைக்குள் மீண்டும் கொண்டுவருபவராகவே அவரின் செயல்பாடுகள் உள்ளன என்றார்.
இதற்கு உதாரணமாக, இலாசரை உயிர்ப்பித்தல், யாயீரின் மகளையும், விதவையின் மகனையும் உயிர்ப்பித்தல், காணாமல்போன ஆடு என்பனவற்றை எடுத்துக்காட்டுகளாகச் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
எல்லா குணப்படுத்தல்களும், மன்னிப்புகளும் நம் மக்களிடமே அதாவது திருஅவையிடமே நம்மை திரும்பக் கொண்டுவருபவை என்பதை இயேசுவின் செயல்பாடுகள் காட்டுகின்றன என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தையுடன் ஹெயிட்டி அரசுத்தலைவர் சந்திப்பு

பிப்.24,2014. இத்திங்கள் காலை திருப்பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சந்தித்து உரையாடினார் ஹெய்ட்டி நாட்டு அரசுத்தலைவர் மிசேல் ஜோசப் மார்டெல்லி.
அரசுத்தலைவர் மார்டெல்லி அவர்கள், திருத்தந்தையுடன் மேற்கொண்ட சந்திப்பிற்குப்பின் திருப்பீடச்செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், வெளிநாட்டு உறவுகளுக்கான துறையின் செயலர் பேராயர் தொமினிக் மம்பெர்த்தி ஆகியோரையும் சந்தித்து உரையாடினார்.
ஹெய்ட்டி நாட்டிற்கும் திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் நல்லுறவு, நாட்டிற்கு திருஅவை ஆற்றிவரும் தொண்டு, குறிப்பாக கல்வி, நலம் மற்றும் பிறரன்புத் துறைகளில் ஆற்றிவரும் பணி, நாட்டிற்குள் ஒப்புரவுக்கென உண்மையான பேச்சுவார்த்தைகள் இடம்பெற வேண்டியதன் தேவை போன்றவை, ஹெய்ட்டி அரசுத்தலைவருக்கும் திருப்பீட அதிகாரிகளுக்கும் இடையே நிகழ்ந்த கலந்துரையாடலில் முக்கிய இடம் வகித்தன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை பிரான்சிஸ் - புனிதப் பாதையில் வழிநடக்குமாறு திருஅவைத் தலைவர்களுக்கு அழைப்பு

பிப்.24,2014. அரசவைக்குள் அல்ல, மாறாக, திருஅவைக்குள் நுழைந்துள்ள புதிய கர்தினால்கள், நற்செய்தியின் வழியில் பேறுபெற்றோரின் செயல்பாட்டுடனும், புனிதத்துவப் பாதையிலும் நடைபோடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருஅவையின் புதிய கர்தினால்களுடன் இஞ்ஞாயிறன்று காலை வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றி, மறையுரை வழங்கியத் திருத்தந்தை, சமூக அவைக்குள் இடம்பெறும் புறம்பேசுதல், பாகுபாடு பார்த்தல், வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் உதவுதல் போன்ற தவறானச் செயல்பாடுகளைக் கைவிட்டு, திருஅவைக்கு உரிய புனிதப் பாதையில் வழிநடக்குமாறு திருஅவைத் தலைவர்களுக்கு அழைப்புவிடுத்தார்.
தம்மையே முற்றிலுமாக கையளிப்பவர்களாக, பகைவர்களையும் அன்புகூர்பவர்களாக, நம்மைத் தூற்றுபவர்களையும் ஆசீர்வதிப்பவர்களாக, தம்மையே முன்னிலைப் படுத்தாதவர்களாக, எளிமையானவர்களாக, நாம் அனுபவித்த அவமானங்களை மறக்கும் சக்தி கொண்டவர்களாக, தன்னையே பலியாக்கிய இயேசுவின் உணர்வுடன் வழிநடத்தப்படுவோமாக என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கர்தினால்களிடம் கேட்டுக்கொண்டார்.
புனிதத்துவம் என்பது, உலகின் மீட்புக்கு இன்றியமையாத ஒன்று என்பதையும் எடுத்துரைத்தத் திருத்தந்தை, இறைவனின் திருக்கோவில் புனிதமானது, அந்தத் திருக்கோவிலே நீங்கள் என்று புனித பவுல் அடியார் கூறிய வார்த்தைகளையும் மேற்கோள் காட்டி, ஒவ்வொருவரும் புனிதராக வாழவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
திருக்கோவிலாக இருக்கும் நாம், அன்பெனும் வழிபாட்டை நிறைவேற்றவேண்டும், அது, அயலாருக்கு நாம் ஆற்றும் பணிகளையும் உள்ளடக்கியது என்று மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தை பிரான்சிஸ் - தலைமைத்துவப் பணிகளைக் கொண்டிருப்பவர்கள், அதிகாரங்களின் உரிமையாளர்கள் அல்ல

பிப்.24,2014. திருஅவையில் போதித்தல், அருள் அடையாளங்களை நிறைவேற்றுதல் என பல்வேறு தலைமைத்துவப் பணிகளைக் கொண்டிருப்பவர்கள், தாங்கள் சிறப்பு அதிகாரங்களின் உரிமையாளர்கள் என்ற பாணியில் செயல்படாமல், சமுதாயத்திற்குப் பணியாற்றுபவர்களாகச் செயல்படவேண்டும் என்று அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
சனிக்கிழமையன்று திருஅவையில் புதிதாக உருவாக்கப்பட்ட கர்தினால்களுடன் இணைந்து, இஞ்ஞாயிறன்று புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய பின்னர், புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மூவேளை செப உரை வழங்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையில் அதிகாரம் என்பது பணிபுரிவதற்கு வழங்கப்பட்ட ஒரு வாய்ப்பு என்பதை வலியுறுத்திக் கூறினார்.
சேவை உணர்வுடன் செயல்படவேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனிதத்துவத்தின் பாதையில் மகிழ்வுடன் நடைபயில விசுவாசிகளுக்கு உதவவேண்டியது தலைமைத்துவ பணி ஏற்றுள்ளோரின் கடமை என்றார்.
ஒன்றிப்பைக் கட்டி எழுப்புவதை நோக்கமாகக் கொண்டு, ஒவ்வொரு கிறிஸ்தவரும், ஒருவர் மற்றவருக்குக் கைகொடுக்கவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்த திருத்தந்தை, தங்கள் மேய்ப்பர்களுக்காக செபிக்கவேண்டிய விசுவாசிகளின் கடமையையும் வலியுறுத்தினார்.
நல்ல தலைவர்கள் என்பதைவிட, நல்ல பணியாளர்கள் என்ற வகையில் திருஅவையின் தலைவர்கள் செயல்பட உதவுமாறு செபிப்போம் எனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. கத்தோலிக்க சமூகத்தொடர்பு சாதனங்களின் பணி குறித்து திருத்தந்தை

பிப்.24,2014. 'அமைதி கலாச்சாரத்திற்காக சமூகத்தொடர்புச் சாதனங்கள்' என்ற தலைப்பில் இச்செவ்வாய்க்கிழமை  முதல் சனிக்கிழமை வரை இடம்பெறும்  உலகக் கருத்தரங்கிற்கு தன் சிறப்புச் செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சமூகத்தொடர்புக்கான உலகக் கத்தோலிக்க அமைப்பான SIGNISன் கருத்தரங்கு உரோம் நகரில் இடம்பெறுவதற்கு தன் வாழ்த்துக்களையும் ஊக்கத்தையும் உள்ளடக்கிய செய்தியை அனுப்பியுள்ள திருத்தந்தை, வருங்கால சமுதாயத்தின் அக்கறை, நம்பிக்கை, மற்றும் அனுபவங்களை நன்முறையில் வடிவமைப்பது குறித்து இக்கருத்தரங்கு விவாதிக்க உள்ளது பற்றி தன் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார்.
சமூகத்தின் அங்கத்தினர்கள் என்ற முறையிலும், தனிப்பட்ட முறையிலும் தங்கள் வாழ்வின் நோக்கத்தையும் அர்த்தத்தையும் தேடும் மக்களின் இதயத்தையும் மனதையும் தொடும் வகையில், நற்செய்தியின் அழகையும் உண்மையையும் எடுத்துரைக்க, கத்தோலிக்க சமூகத்தொடர்புச் சாதனக்கள் எடுத்துவரும் முயற்சிகளையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் செய்தியில் பாராட்டியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. திருத்தந்தையின் டுவிட்டர்: 'அன்னைமரி என்றும் நம்மருகே உள்ளார்'

பிப்.24,2014. 'நம் அன்னைமரி எப்போதும் நம்மருகே உள்ளார், குறிப்பாக, வாழ்வின் பிரச்சனைகளை நாம் சுமையாக உணரும்போது' என தன் டுவிட்டர் பக்கத்தில் இத்திங்களன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
துன்ப துயரங்கள் நம்மை அழுத்தும்போது, அன்னையை நாடுவோம், அவரின் அருகாமையை உணர்வோம் என்பதை மையமாக வைத்து தன் கருத்தை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7. இந்தியாவில் திருப்பயணம் மேற்கொள்ள திருத்தந்தைக்கு ஆயர் பேரவை அழைப்பு

பிப்.24,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இந்தியாவில் திருப்பயணம் மேற்கொள்ள அழைக்கவேண்டும் என இந்திய ஆயர் பேரவை விடுத்த விண்ணப்பத்தை இந்தியப் பிரதமர் ஏற்றுள்ளதாக, இந்திய ஆயர் பேரவை வெளியிட்ட செய்திக்குறிப்பு கூறுகிறது.
இந்திய கர்தினால்கள் நான்குபேரும் ஏற்கனவே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சந்தித்து இந்தியாவில் திருப்பயணம் மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளபோதிலும், அரசு அதிகாரப்பூர்வ அழைப்புவிடுக்கவேண்டுமென இந்திய ஆயர்பேரவையின் துணைப் பொதுச்செயலர் அருட்திரு. ஜோசப் சின்னையனும், மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் ஆஸ்கர் ஃபெர்னாண்டசும் இணைந்து பாரதப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துக் கேட்டுக்கொண்டனர்.
இந்திய ஆயர்கள் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்திற்கு பதிலளித்த பாரதப் பிரதமர், தகுந்த நேரத்தில் அழைப்பு விடப்படும் எனவும், அதற்கான முயற்சிகளை தன் அரசு மேற்கொள்ள உள்ளதாகவும் உறுதியளித்தார்.
இந்திய ஆயர்களின் அழைப்பைத் தொடர்ந்து இந்தியாவில் திருப்பயணம் மேற்கொள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆர்வம் கொண்டுள்ளதாகவும், இந்திய அரசின் அதிகாரப்பூர்வ அழைப்பு அதற்கு அவசியம் என்பதால் பிரதமரை ஆயர் பேரவை பிரதிநிதி சந்தித்து விண்ணப்பத்தை முன்வைத்ததாகவும் ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.

ஆதாரம் : UCAN

8. இலங்கையில் வறட்சி காரணமாக நெல் விளைச்சல் வீழ்ச்சி

பிப்.24,2014. இலங்கையில் நிலவும் வறட்சியினால் இம்முறை நெல் விளைச்சலில் 35 விழுக்காடு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மதிப்பீடுகள் மூலம் தெரியவருகின்றது.
தேசிய நெல் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சி காரணமாக அரிசி விலையும் அதிகரிக்கக்கூடும் என்று வேளாண் அமைச்சகம் கூறியுள்ளது.
அதிக நெல் விளைச்சலை தரும் மாவட்டங்களான அம்பாறை, அனுராதபுரம், குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும், தற்போது நிலவும் வறட்சி நிலை காரணமாக, எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழைநீரை முழுமையாக நம்பியிருக்கும் மேட்டுநில வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்ட விவசாயிகளுக்கே வறட்சியினால் இழப்புகள் அதிகம் என்று உள்ளுர் விவசாய அமைப்பொன்றின் தலைவரான எம்.ஐ.எம் அபுபக்கர் தெரிவித்தார்.

ஆதாரம் : BBC

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...