Sunday, 1 December 2013

13வது சட்டத் திருத்தத்தையும், இலங்கைத் தமிழர்களையும் மத்திய அரசு கைவிடாது :சென்னையில் ப.சிதம்பரம் பேச்சு

13வது சட்டத் திருத்தத்தையும், இலங்கைத் தமிழர்களையும் மத்திய அரசு கைவிடாது :சென்னையில் ப.சிதம்பரம் பேச்சு

Source: Tamil CNN
இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமையும், இந்திய அரசின் நிலையும் என்ற தலைப்பில் சென்னை இராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள நியூ உட்லண்ட்ஸில் 30.11.2013 சனிக்கிழமை மாலை கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில்,
இலங்கையிலே நடைபெற்ற இனப்படுகொலையைப் பற்றி ஒரு விரிவான, உண்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அந்த விசாரணை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய அளவுக்கு உண்மையான விசாரணையாக இருக்க வேண்டும். அந்த இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் அடையாளம் காட்டப்பட வேண்டும். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதுதான் நம்முடைய கோரிக்கை. தொடர்ந்து நாம் அந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம்.
நம்முடைய குரல் தொடர்ந்து ஒலிப்பதன் காரணமாகத்தான் பலநாடுகளும் இன்று அந்த குரலை ஒலிக்க தொடங்கியிருக்கிறது. இதுவரை இதைப்பற்றி பேசாத பிரட்டீஷ் பிரதமர் டேவிட் கேமரூன், இப்போது பேசுகிறார் என்றால் அது நம்முடைய ராஜதந்திரத்துக்கு கிடைத்த வெற்றி.
டேவிட் கேமரூன் செய்திருக்க வேண்டியதை இந்திய பிரதமர் செய்திருக்க வேண்டும் என்று சிலர் பேசியதை நான் பார்த்தேன். டேவிட் கேமரூன் செய்ததை இந்திய பிரதமர் செய்ய வேண்டும் என்றால் இந்திய பிரதமர் இலங்கைக்கு போகக்கூடாது என்று சொன்னவர்கள் அவர்கள்தானே.
இந்திய அரசில் இரண்டு கருத்துக்கள் இருந்தன. நான் இல்லையென்று சொல்லவில்லை. இலங்கைக்கு இந்திய பிரதமர் போக வேண்டும். போகும் வழியிலே ஜாப்னாவுக்கு போக வேண்டும். பிறகு கொழும்புக்கு போக வேண்டும். மாநாட்டிலே கலந்துகொள்ள வேண்டும். அங்கே இந்தியாவின் நிலைமையை பிரதமர் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்பது ஒரு கருத்து. இன்னும் சொல்லப்போனால் எல்லாருக்கும் தெரிந்த ரகசியம்தான். வெளியுறத்துறையின் கருத்து அதுதான்.
விக்னேஷ்வரன் எழுதிய கடிதத்தில் கூட ஜாப்னாவுக்கு வாருங்கள், யாழ்ப்பாணத்திற்கு வாருங்கள் என்று அழைத்தார். கொழும்புக்கு போங்க என்று சொல்லவில்லை. போக வேண்டாம் என்று சொல்லவில்லை. கடிதத்தை படித்து பாருங்கள். ஆனால் மாற்று கருத்து. தமிழ்நாட்டு சட்டமன்றத்திலே தீர்மானம் நிறைவேறியது. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுடைய கருத்து. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகளின் கருத்து, இவைகளை கருத்திலே கொண்டு இலங்கைக்கு பிரதமர் போகக் கூடாது. ஆனால் அதற்காக காமன்வெல்த் மாநாட்டை முழுமையாக புறக்கணிக்க கூடாது. இந்தியா ஒரு குழுவை அனுப்ப வேண்டும். அதில் வெளியுறவுத்துறை அமைச்சர் அந்தக் குழுவுக்கு தலைவராக செல்ல வேண்டும் என்பது இன்னொரு கருத்து.
நாடாளுமன்றத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற பாஜக ஆதரவு தரவில்லை. இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 13வது அரசியல் சட்டத் திருத்தத்தில் உள்ள ஷரத்துக்களை சீர்குலைக்க இலங்கை அரசு முயற்சி. 13வது அரசியல் சட்டத் திருத்தத்தை அமல்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. 13வது சட்டத் திருத்தத்தையும், இலங்கைத் தமிழர்களையும் மத்திய அரசு கைவிடாது. இவ்வாறு பேசினார்.

No comments:

Post a Comment