செய்திகள் - 02.12.13
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ்: செபம் மற்றும் பிறரன்பு நடவடிக்கைகளுடன் கிறிஸ்து பிறப்பு விழாவுக்காகத் தயாரிப்போம்
2. இஸ்ரேல் பிரதமர், திருத்தந்தை பிரான்சிஸ் சந்திப்பு
3. பாவநிலையிலிருந்து ஆண்டவரிடம் உதவி கேட்போம், திருத்தந்தை பிரான்சிஸ்
4. குடும்பம், திருமணம், வாழ்வின் முடிவு ஆகியவை குறித்த விவாதங்களில் கத்தோலிக்கர் முக்கிய பங்காற்றுமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பு
5. திருத்தந்தை : போர் ஆயுதங்களைக் கைவிட்டு, அவைகளை உழைப்பின் கருவிகளாக மாற்றுவோம்
6. செபத்திலும் நற்செயல்களிலும் இயேசுவை நாம் சந்திக்கிறோம்
7. திருத்தந்தை : பார்வையாளர்களாக அல்லாமல், நல்செயல்களின் காரணகர்த்தாக்களாக இருங்கள்
8. வடமாகாண முதல்வர் - மன்னார் ஆயர் சந்திப்பு
9. மெக்சிகோவில் இருகுருக்கள் கொலைசெய்யப்பட்டுள்ளனர்
10. ஓராண்டில் 2,500 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ்: செபம் மற்றும் பிறரன்பு நடவடிக்கைகளுடன் கிறிஸ்து பிறப்பு விழாவுக்காகத் தயாரிப்போம்
டிச.02,2013. 'கிறிஸ்து பிறப்பு விழா என்பது நாம் நினைப்பதைவிட மேலானது, ஏனெனில், இது கிறிஸ்துவை நோக்கிய பாதை; அவரைச் சந்திக்கச்செல்லும் பாதை,' என
இத்திங்கள் காலை வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில்
நிறைவேற்றியத் திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நம் முழு இதயத்தோடும், வாழ்வோடும், விசுவாசத்தோடும் இக்காலங்களில் இறைவனைச் சந்திப்போம் என எடுத்துரைத்த திருத்தந்தை, இத்திங்களின் திருப்பலி வாசகத்தில், நூற்றுவர் படைத்தலைவன் இயேசுவைச் சந்தித்து தன் விசுவாசத்தை வெளிப்படுத்திய நிகழ்வைச் சுட்டிக்காட்டி, இத்தகைய விசுவாசத்துடன் நாமும் இறைவனைச் சந்திக்கும்போது முழுமையான மகிழ்வு நமக்குக் கிட்டுகிறது என்றார்.
இறைவன் வரவுள்ளார் என திருவருகைக் காலத்தில் கூறுவது, அவர் நம் இதயத்தில், ஆன்மாவில், வாழ்வில், நம்பிக்கையில், பயணத்தில் மீண்டும் நுழைய வருகிறார் என்பதையே குறிப்பிடுகின்றது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடவுள் நம் ஒவ்வொருவரையும் தனித்தனியாகச் சந்தித்து, நம்மை உற்றுநோக்குகிறார் என்பதை உணர்ந்து, அவர்
நம்மை அன்புகூர்வதுபோல் நாமும் நம் இதயத்தை அவருக்கென திறந்து
அன்புகூரவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ், கிறிஸ்து பிறப்பு விழாவுக்காக, செபம் மற்றும் பிறரன்பு நடவடிக்கைகள் மூலம் நம்மைத் தயாரிப்போம் எனவும் கேட்டுக்கொண்டார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. இஸ்ரேல் பிரதமர், திருத்தந்தை பிரான்சிஸ் சந்திப்பு
டிச.02,2013. இஸ்ரேல் பிரதமர் Binyamin Netanyahu அவர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இத்திங்களன்று திருப்பீடத்தில் ஏறக்குறைய 25 நிமிடங்கள் சந்தித்துப் பேசினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் முதன்முறையாக இடம்பெற்ற, வரலாற்றுச் சிறப்புமிக்க இச்சந்திப்புக்குப் பின்னர், திருப்பீடச் செயலர் பேராயர் பியத்ரோ பரோலின் அவர்களையும் சந்தித்துப் பேசினார் இஸ்ரேல் பிரதமர் Netanyahu.
இஸ்ரேல், பாலஸ்தீனிய அமைதிப் பேச்சுவார்த்தைகள், சர்ச்சைக்குரிய ஈரானின் அணுத் திட்டங்கள், இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்குப் பகுதியிலுள்ள கிறிஸ்தவர்களின் நிலை போன்ற விடயங்கள் இச்சந்திப்பில் இடம்பெற்றதாக, திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியரின் உரிமைகள் மதிக்கப்படும் சூழலில், நீதியும் நிலைத்ததுமான ஒரு தீர்வு விரைவில் காணப்படுமாறு இச்சந்திப்பில் இஸ்ரேல் பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டதாக, திருப்பீட பத்திரிகை அலுவலகம் மேலும் அறிவித்தது.
அதேசமயம், மத்திய கிழக்குப் பகுதியில், குறிப்பாக, இஸ்ரேல்-பாலஸ்தீனிய பேச்சுவார்த்தைகளில் எதிர்கொள்ளப்படும் அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனைகளை எடுத்துக் கூறினார் Netanyahu.
ஆறு அமைச்சர் குழுவுடன் சென்ற இஸ்ரேல் பிரதமர், ஏழு திரிகள் கொண்ட இஸ்ரேலின் எண்ணெய் விளக்கையும், திருஅவை முறைமன்றம் பற்றி இஸ்பானியத்தில் தனது தந்தை எழுதிய நூலையும் திருத்தந்தைக்குப் பரிசாக அளித்தார்.
இஸ்ரேலுக்கும்
திருப்பீடத்துக்கும் இடையே அரசியல் உறவுகள் 1993ம் ஆண்டில்
உருவாக்கப்பட்டன. இந்நாள்வரை மூன்று திருத்தந்தையர்கள் இஸ்ரேலுக்குத்
திருப்பயணம் மேற்கொண்டுள்ளனர். முதலில், திருத்தந்தை 6ம் பவுல் 1964 ஆண்டில் எருசலேமுக்கு திருப்பயணம் மேற்கொண்டார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. பாவநிலையிலிருந்து ஆண்டவரிடம் உதவி கேட்போம், திருத்தந்தை பிரான்சிஸ்
டிச.02,2013. உனது பாவங்கள் பெரியனவா? ஆண்டவரே, என்னை மன்னித்தருளும், நான் எனது பாவங்களிலிருந்து மீண்டும் எழுந்துவர உதவி செய்யும், எனது இதயத்தை மாற்றும் என அவரிடம் கேட்போம் என்று இத்திங்களன்று தனது டுவிட்டரில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், போர் நடவடிக்கைகளை இயந்திரத்தனமாக்குவது மிகுந்த கவனமுடன் கையாளப்பட வேண்டிய ஒன்று, மனிதர்மட்டுமே ஒழுக்கநெறி சார்ந்த தீர்மானங்களை எடுக்க முடியும் என்ற, பேராயர் சில்வியோ தொமாசியின் கூற்றை தனது @terzaloggia டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளது திருப்பீடச் செயலகம்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. குடும்பம், திருமணம், வாழ்வின் முடிவு ஆகியவை குறித்த விவாதங்களில் கத்தோலிக்கர் முக்கிய பங்காற்றுமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பு
டிச.02,2013. சமயச்சார்பற்றநிலை அதிகமாக காணப்படும் ஹாலந்து நாட்டுச் சமுதாயத்தில், குடும்பம், திருமணம், வாழ்வின்
முடிவு ஆகியவை குறித்த சமூகத்தின் பெரும் கேள்விகளுக்குப் பதில் சொல்வதில்
அந்நாட்டுக் கத்தோலிக்கர் முக்கிய பங்காற்றுமாறு கேட்டுக்கொண்டார்
திருத்தந்தை பிரான்சிஸ்.
ஹாலந்தில் குருக்களின் பாலியல் நடவடிக்கையில் பாதிக்கப்பட்டவர்கள்மீது பரிவு கொண்டிருப்பதாகவும், அவர்களுக்காகத் தான் செபிப்பதாகவும் கூறினார் திருத்தந்தை.
சமயச்சார்பற்றநிலை மிகுந்து காணப்படும் ஒரு சமூகத்தில் நம்பிக்கையுடன் இருப்பது எளிதல்ல என்றும்,
இச்சமூகத்தில் மனித நலனுக்கும் சமூக முன்னேற்றத்துக்கும் உழைக்கவேண்டியது
திருஅவையின் கடமை என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மனச்சான்றை உருவாக்குவதற்கு ஹாலந்து கிறிஸ்தவர்கள் முன்னுரிமை அளிக்குமாறும் வலியுறுத்திய திருத்தந்தை, மனிதர் குறித்த பொதுப்படையான விவாதங்களில், மனிதர்மீதும்,
அனைத்துப் படைப்புகள் மீதும் இறைவன் கொண்டுள்ள கருணை வெளிப்படையாய்த்
தெரியுமாறு கிறிஸ்தவர்கள் செயல்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பல முக்கிய விவகாரங்களில், எடுத்துக்காட்டாக, குடும்பம், திருமணம்,
வாழ்வின் இறுதி முடிவு போன்றவை குறித்த பொது விவதாங்களில் கத்தோலிக்கர்
முழுஈடுபாட்டுடன் செயல்படுமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பலவழிகளில் பணக்கார நாடாக விளங்கும் ஹாலந்தில் பலரை ஏழ்மை பாதித்துள்ளது, இந்த ஏழைகளிடம் கிறிஸ்தவர்கள் தங்களின் மனத்தாராளத்தைக் காட்டுமாறும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. திருத்தந்தை : போர் ஆயுதங்களைக் கைவிட்டு, அவைகளை உழைப்பின் கருவிகளாக மாற்றுவோம்
டிச.02,2013. போர் ஆயுதங்களைக் கைவிட்டு, அவைகளை
உழைப்பின் கருவிகளாக மாற்றும் காலத்திற்காக இறைவனை நோக்கி வேண்டுவோம் என
இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது அழைப்புவிடுத்தார் திருத்தந்தை
பிரான்சிஸ்.
வாள்கள் கலப்பைக்கொழுக்களாகவும், ஈட்டிகள் அரிவாள்களாகவும் மாற்றப்படும், இனிப் போரோ போர்ப்பயிற்சியோ இருக்காது என்ற எசாயா இறைவாக்கினரின் வரிகளை எடுத்தியம்பிய திருத்தந்தை பிரான்சிஸ், இத்தகைய ஒருநாள் என்று இடம்பெறும் என்ற கேள்வியையும், தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களிடையே முன்வைத்தார்.
நம்பிக்கையின் விடியலை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நாம், நல்மேய்ப்பராம்
இயேசுவோடு இணைந்து இறையரசின் நிறைவை நோக்கி வரலாற்றில் பயணம்செய்வோம்
என்றும் விண்ணப்பித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வார்த்தை மனுவானார், அவரே நம் இறுதிக் குறிக்கோள், அவரின் ஒளியிலேயே அனைத்து நாடுகளும் நீதி மற்றும் அமைதியின் அரசை நோக்கி நடைபோடுகின்றன என மேலும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், இப்பாதையில் அன்னைமரி நம் எடுத்துக்காட்டாக உள்ளார் எனவும் கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. செபத்திலும் நற்செயல்களிலும் இயேசுவை நாம் சந்திக்கிறோம்
டிச.02,2013. உரோம் மறைமாவட்ட ஆயர் என்ற முறையில் இஞ்ஞாயிறன்று மாலை அந்நகரின் புனித அலக்சாந்திரியாவின் சிரில் பங்குதளத்தை சந்தித்து, திருப்பலி நிறைவேற்றி ஏழு சிறார்க்கு உறுதிபூசுதல் என்ற திருவருட்சாதனத்தை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உலக முடிவில் அல்ல, மாறாக, ஒவ்வொரு நாளும் செபத்தில் நாம் இயேசுவைச் சந்திக்கிறோம் என இப்பங்குத்தள மறையுரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், செபத்திலும், ஒவ்வொரு நல்ல காரியங்களை நிறைவேற்றும்போதும், ஏழைகளுக்கு உதவும்போதும், நோயாளிகளைச் சந்திக்கும்போதும் நாம் இயேசுவைச் சந்திக்கின்றோம் என எடுத்துரைத்தார்.
இன்றையை திருப்பலியிலும் நாம் இயேசுவைச் சந்தித்து, ஒன்றிணைந்து பயணம் செய்கின்றோம், நாம் பாவிகள் என அஞ்சத் தேவையில்லை, ஏனெனில் பாவிகளைத் தேடியே இயேசு வந்தார் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்தவ
வாழ்வு எனும் பயணத்தில் சகோதரர்களாக ஒன்றிணைந்து ஒருவரையொருவர்
அன்புகூர்ந்து நடைபோடுவோம் எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் அப்பங்குத்தள
மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
7. திருத்தந்தை : பார்வையாளர்களாக அல்லாமல், நல்செயல்களின் காரணகர்த்தாக்களாக இருங்கள்
டிச.02,2013.
கிறிஸ்தவத்தின் ஒழுக்கரீதி மற்றும் மத மதிப்பீடுகளுக்கு விசுவாசமாக
இருப்பதன்மூலம் இன்றைய தவறான காலப்போக்குகளுக்கு எதிராகச் செல்லும்
பலத்தைக் கண்டுகொள்ளமுடியும் என, உரோம் பல்கலைக்கழக மாணவர்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடந்த
சனிக்கிழமையன்று மாலை உரோம் பல்கலைகழக மாணவர்களுடன் இணைந்து
திருவருகைக்காலத்தின் முதல் நிகழழ்ச்சியை மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், இன்றைய உலகின் நல்நிகழ்வுகளின் பார்வையாளர்களாக இல்லாமல், அவைகளின் காரணகர்த்தாக்களாக மாணவர்கள் திகழவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மதிப்பீடுகளின் சார்பாக, ஏழ்மைக்கு எதிராக, மனிதமாண்புகளுக்கான போராட்டத்தில் சவால்களை எதிர்கொள்ள மாணவர்கள் முன்வரவேண்டும் எனவும் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இளமையின் ஆர்வங்களை, ஆற்றல்களை மற்றவர்கள் திருடவோ, பலவீனமான
சிந்தனைகளால் தங்களையே சிறைப்படுத்தவோ ஒருநாளும் அனுமதியாதீர்கள் என்ற
வேண்டுகோளையும் உரோம் பல்கழக்கலைக்கழக மாணவர்களிடம் முன்வைத்தார்
திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
8. வடமாகாண முதல்வர் - மன்னார் ஆயர் சந்திப்பு
டிச.02,2013. இலங்கையில் வடமாகாண சபை பதவியேற்றபின் முதல்முறையாக முதல்வர் விக்னேஸ்வரனுக்கும், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்புக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று ஞாயிறன்று இடம்பெற்றது.
இச்சந்திப்பில் மன்னார் மாவட்டத்தின் நிலப்பிரச்சனைகள் தொடர்பாக முக்கியமாக ஆராயப்பட்டிருப்பதாகவும், பொதுமக்களின் நிலம் பெருமளவில் இராணுவ தேவைக்காகக் கையகப்படுத்தப்படுவதனால், இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற முடியாமல் இடர்களைச் சந்திப்பதாக இச்சந்திப்பின்போது, முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பி.பி.சி. இணையப்பக்கம் தெரிவிக்கிறது.
ஆதாரம் : BBC
9. மெக்சிகோவில் இருகுருக்கள் கொலைசெய்யப்பட்டுள்ளனர்
டிச.02,2013.
மெக்சிகோவின் வேராகுரூஸ் மாநிலத்தில் இரு குருக்கள்
கொலைசெய்யப்பட்டுள்ளதையொட்டி நான்குபேரைக் கைதுச்செய்துள்ளது அந்நாட்டு
காவல்துறை.
Tuxpan மறைமாவட்டத்தின் San Cristobal பங்குத்தளத்தின் குருக்கள் Hipolito Villalobos Lima, Nicolas de la Cruz Martinez ஆகிய இருவரின் கொலையுண்ட உடல்களும் வெள்ளியன்று கண்டெடுக்கப்பட்டதாக மறைமாவட்டம் அறிவித்தது.
அவர்கள் எவ்வாறு கொலைச்செய்யப்பட்டார்கள், கொலைகளின் நோக்கம் என்ன என்பது குறித்து எதுவும் அறியப்படாத நிலையில், கொலைத்தொடர்பாக நான்குபேரை கைதுசெய்துள்ளது மெக்சிகோ காவல்துறை.
ஆதாரம் : IANS
10. ஓராண்டில் 2,500 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு
டிச.02,2013. தமிழகத்தில் 2015ம் ஆண்டுக்குமுன், எச்.ஐ.வி. நோய்க் கிருமிகள் தாக்காத, பூஜ்ய நிலையை எட்ட, தமிழக அரசு எடுத்துவரும் பலகட்ட முயற்சிகளுக்கு, அனைத்துத் தரப்பினரின் முழு ஒத்துழைப்பு அவசியம் என, தமிழக நலவாழ்வுத் துறை செயலர் இராதாகிருஷ்ணன் விண்ணப்பித்துள்ளார்.
தமிழகத்தில் 1 இலட்சத்து 32 ஆயிரம்பேர், எச்.ஐ.வி.,யுடன் வாழ்ந்து வருகின்றனர் எனவும், 1 இலட்சத்து 4 ஆயிரம் பேருக்கு, இலவச கூட்டு மருந்து சிகிச்சை நடந்து வருவதாகவும், 2007ம் ஆண்டில், 0.38 விழுக்காடாக இருந்த தொற்று, தற்போது, 0.28 விழுக்காடாகக் குறைந்துள்ள நிலையில், கடந்த ஆண்டில், 2,500 பேருக்கு இந்நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதற்கிடையே, இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில், எய்ட்ஸ் நோயின் தாக்கங்களும் அதிகரித்து வருவதாக நலவாழ்வுச் சேவைகள் துறையின் பணிப்பாளர் எஸ்.சதுர்முகம் தெரிவித்துள்ளார்.
ஆதாரம் : தினமலர்
No comments:
Post a Comment