Friday, 1 November 2013

க‌ல்லறைத் திருநாள்

க‌ல்லறைத் திருநாள்
நம்மோடு வாழ்ந்து, நம்மைவிட்டுப் பிரிந்து மேலுலகம் சென்றுள்ள உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் நாம் செய்யவேண்டிய செப உதவியை நினைவுறுத்தி நிற்பதே, கல்லறைத் திருநாள் என பரவலாக அறியப்படும் நவம்பர் 2ன் அனைத்து ஆன்மாக்கள் விழா. மேலும், இறப்பு என்பது வாழ்வின் முடிவல்ல, வேறொரு வாழ்வின் ஆரம்பம் என்பதையும், இறந்த நம் உறவினர்களும் நண்பர்களும் இன்னும் மேலுலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதையும் குறித்து நிற்கிறது இந்நாள். இறந்த ஆன்மாக்களுக்காகச் செபிப்பது என்பது பழைய ஏற்பாட்டின் மக்கபே ஆகமம் 2ம் புத்தகம் 42 முதல் 46 வரையுள்ள வசனங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. கிறிஸ்தவ மறையின் துவக்கக்காலத்தில் இறந்தவர்களுக்கான செப நாள் என்பது இயேசுவின் உயிர்ப்புக்காலத்தில், அதாவது, பெந்தகோஸ்தே ஞாயிறையொட்டிய நாட்களில் சிறப்பிக்கப்பட்டது. பத்தாம் நூற்றாண்டில் இந்நாள், அக்டோபர் மாதத்திற்கென மாற்றப்பட்டது. 998ல் இதனை நவம்பர் 2ம் தேதிக்கு மாற்றிய குளினியின் புனித Odilo, இந்நாளை பெனடிக்டன் துறவுசபையினர் அனைவரும் பின்பற்றவேண்டும் எனப் பணித்தார். அடுத்த இருநூறு ஆண்டுகளில் இப்பழக்கம் பல்வேறு துறவுசபைகளிலும் பின்பற்றப்பட்டது. பிரான்சின் அனைத்து மறைமாவட்டங்களும் இதனை ஏற்றுக்கொண்டன. நவமபர் 2ம் தேதியை அனைத்து ஆன்மாக்களுக்கான செபநாளாகக் கொண்டாடும் பழக்கம் 14ம் நூற்றாண்டில் உரோமைய மறைமாவட்டங்களில் அமலுக்கு வந்தது. 1914ம் ஆண்டு முதல் 22ம் ஆண்டு வரை திருத்தந்தையாகப் பதவி வகித்த 15ம் பெனடிக்ட், அனைத்து ஆன்மாக்களின் விழாவுக்கு மிக முக்கியத்துவம் வழங்கினார். இந்நாளில் குருக்கள் மூன்று திருப்பலிகள் நிறைவேற்றுமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை. இறந்த ஆன்மாக்களுக்காகவும், குருவின் கருத்துக்களுக்காகவும், திருத்தந்தையின் கருத்துக்களுக்காகவும் என மூன்று திருப்பலிகள். நவம்பர் 2ம் தேதி அனைத்து ஆன்மாக்களின் திருவிழா எனினும், இம்மாதம் முழுவதும், இறந்தவர்களுக்கென செபிக்குமாறு அழைப்புவிடுக்கிறது கத்தோலிக்கத் திருஅவை.

ஆதாரம்  : Catholic directory

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...