திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் மறைத்தூது அறிவுரை Evangelii Gaudium
"Evangelii Gaudium" அதாவது
நற்செய்தியின் மகிழ்ச்சி என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல்
"மறைத்தூது அறிவுரை" ஏட்டை இச்செவ்வாயன்று நிருபர் கூட்டத்தில் வெளியிட்டது
திருப்பீடம்.
கடந்த எட்டு மாதங்களில் தான் வழங்கிய மறையுரைகள், உரைகள், நேர்காணல்கள்
ஆகியவற்றில் முன்னுரிமை கொடுத்த அனைத்தையும் பரந்த அளவில் இந்த மறைத்தூது
அறிவுரை ஏட்டில் ஒன்றிணைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புறக்கணிப்பு, உலகமயம், வருவாயில்
மாபெரும் இடைவெளிகள் ஆகியவை நிறைந்த உலகில் திருஅவையின் நற்செய்தி
அறிவிப்பு ஆர்வத்தை எவ்வாறு மீண்டும் உயிர்த்துடிப்புள்ளதாக்குவது என்பது
குறித்து விளக்கியுள்ள திருத்தந்தை, கிறிஸ்தவர்கள் இறைவனின் மாறுபடா அன்புக்கும் மன்னிப்புக்கும் ஒவ்வொரு நாளும் தங்கள் இதயத்தைத் திறக்குமாறும் கேட்டுள்ளார்.
பரவலான இலஞ்ச ஊழல், செல்வந்தரின் வரிஏய்ப்பு, நிதி ஆதாயம் என அடிப்படையிலேயே அநீதியைக் கொண்டிருக்கும் தற்போதைய பொருளாதார அமைப்பைக் குறைகூறியுள்ள திருத்தந்தை, மத சுதந்திரம் வழங்கப்படாமை, கிறிஸ்தவர்க்கெதிரான அடக்குமுறைகள் ஆகியவற்றையும் இந்த 84 பக்க ஏட்டில் கண்டித்துள்ளார்.
அனைத்து மதத்தினருடனும், மத நம்பிக்கை இல்லாதவர்களுடனும் பொறுமையும் மதிப்பும் கலந்த உரையாடல் வழியாக, அமைதி, நீதி மற்றும் சகோதரத்துவம் காக்கப்படுமாறும் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், கிறிஸ்தவர்கள் இசுலாம் குறித்த விரோத முற்சார்பு எண்ணங்களைத் தவிர்க்குமாறு கேட்டுள்ள அதேவேளை, இசுலாமிய நாடுகள் கிறிஸ்தவர்களுக்கு முழு சுதந்திரத்துக்கு உறுதியளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுள்ளார்.
திருஅவை மேலும் மறைபோதகத்தன்மையைக் கொண்டிருப்பதற்கும், ஏழைகள்மீது சிறப்பான கவனம் செலுத்தும் கருணைநிறைந்த திருஅவையாக அது மாறுவதற்கும் கத்தோலிக்கத் திருஅவையிலும், திருத்தந்தையின் ஆட்சிமுறையிலும் சீர்திருத்தம் தேவை எனவும் இந்த மறைத்தூது அறிவுரையில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருஅவையின் மறைப்பணிக்கு தடங்கலாக இருக்கும் அதன் மையப்படுத்தப்பட்ட அமைப்பு குறித்து குறை கூறியுள்ள திருத்தந்தை, கத்தோலிக்கத் திருஅவையின் புதுப்பித்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தயாரிப்பு இல்லாத மறையுரைகள் போதிப்பவருக்கும், விசுவாசிகளுக்கும் துன்பமாக இருக்கின்றன என்றுரைத்துள்ள திருத்தந்தை, திருஅவையில் ஆண்கள் மட்டுமே குருக்களாக இருக்கலாம் என்பதை உறுதிப்படுத்தியுள்ள அதேவேளை, அவர்களின் திருவருள்சாதன திருப்பொழிவு, பொதுவாக ஆதிக்கம் என்பதோடு நின்றுவிடக் கூடாது, திருஅவை வாழ்வின் பல்வேறு துறைகளில் தீர்மானம் எடுப்பதில் மகளிருக்கும் பங்களிக்க வேண்டுமெனவும் கேட்டுள்ளார்.
கடந்த 1300 ஆண்டுகளில், ஐரோப்பியரல்லாத திருத்தந்தையாக பணியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சொந்த ஏடாகும் நற்செய்தியின் மகிழ்ச்சி மறைத்தூது அறிவுரை.
இந்த நம்பிக்கை ஆண்டு நிறைவுத் திருப்பலியின் இறுதியில், நற்செய்தியின் மகிழ்ச்சி என்ற தலைப்பிலான இவ்வேட்டை, பார்வையிழந்த ஒருவர் உட்பட 5 கண்டங்களின் 18 நாடுகளைச் சார்ந்த 36 பேருக்கு அடையாளப்பூர்வமாக வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
No comments:
Post a Comment