Sunday 24 November 2013

செய்திகள் - 23.11.13
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : முதியோர் நலனில் அக்கறை காட்டுவதில் திருஅவை எடுத்துக்காட்டாய்த் திகழ வேண்டும்

2. திருத்தந்தை பிரான்சிஸ் : விளையாட்டு அமைப்புகள், மனித மற்றும் ஆன்மீக விழுமியங்களை ஊக்கவிக்க வேண்டும்

3. திருத்தந்தை பிரான்சிஸ் : ஒப்புரவு, திருநற்கருணை திருவருள்சாதனங்கள் நம் வாழ்வுக்கு மிகவும் முக்கியமானவை

4. ஏறக்குறைய கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் புனித பேதுருவின் புனிதப் பொருள்கள் பொதுவில் வைக்கப்படவுள்ளன

5. நம்பிக்கை ஆண்டு நிறைவு திருப்பலி

6. மியான்மாரின் ரோகின்யா விவகாரத்துக்குத் தீர்வு காண்பதற்கு பல்சமய உரையாடலே சிறந்த வழி, யாங்கூன் பேராயர்

7. இந்திய உணவு பாதுகாப்பு உரிமை சட்டத்துக்கு ஐ.நா. அதிகாரி பாராட்டு

8. குட்மார்னிங் வணக்கத்துக்குப் பதில் ஜெய் ஹிந்த்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : முதியோர் நலனில் அக்கறை காட்டுவதில் திருஅவை எடுத்துக்காட்டாய்த் திகழ வேண்டும்

நவ.23,2013. இக்காலத்தில் திருஅவையில் முதியோர் இன்றியமையாதவர்களாக இருக்கும்வேளை, அவர்கள் நலனில் அக்கறை காட்டுவதில் ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் திருஅவை எடுத்துக்காட்டாய்த் திகழ வேண்டும் எனக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பீட நலவாழ்வுப்பணி அவை நடத்திய மூன்று நாள்கள் அனைத்துலக கருத்தரங்கில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் மற்றும் நோயாளர்களை இச்சனிக்கிழமை நண்பகலில் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், முதியோர் சிலநேரங்களில் கடும் நோயின் பாதிப்பால் இருந்தாலும்கூட அவர்கள் எப்பொழுதும் முக்கியமானவர்கள் என்பதை வலியுறுத்தினார்.
இருபதாம் நூற்றாண்டில் மனிதரின் ஆயுள்காலம் அதிகரித்துள்ளது, அதேசமயம், நினைவாற்றல் இழப்பு, நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசிய திருத்தந்தை, இவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ உதவிகளுடன், இவர்களின் மாண்பும், சுதந்திரமும் மதிக்கப்படுவதில் கவனம் செலுத்தப்படுமாறும் கேட்டுக்கொண்டார்.
இந்த நோயாளிகளின் புலணுணர்வு சக்திகள் குறைந்தோ அல்லது எதுவுமே இல்லாமல் இருக்கும்போதுகூட இவர்களுக்கு சமய மற்றும் ஆன்மீக உதவிகள் வழங்கப்படுமாறும் 
திருத்தந்தை வலியுறுத்தினார்.
முதியோர், நற்செய்தியைப் பெறுபவர்களாக மட்டும் இல்லாமல், அவர்கள் பெற்றுள்ள திருமுழுக்கால் நற்செய்தியை அறிவிப்பவர்களாகவும் உள்ளார்கள் என்றும், இவர்கள் தங்கள் குடும்பங்கள், பங்குகள், இன்னும், தாங்கள் வாழும் சூழல்களில், குறிப்பாக இளையோர் மத்தியில் தினமும் நற்செய்தியை அறிவித்து இயேசுவுக்குச் சாட்சிகளாக வாழுமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அல்செய்மர் என்ற நினைவாற்றல் இழப்பு நோயால் மட்டும் இன்று உலகில் 3 கோடியே 50 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், ஒவ்வொரு நாளும் 77 இலட்சம் பேர் புதிதாகப் பாதிக்கப்படுகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ் : விளையாட்டு அமைப்புகள், மனித மற்றும் ஆன்மீக விழுமியங்களை ஊக்கவிக்க வேண்டும்

நவ.23,2013. நல்ல முறையில் நடத்தப்படும் விளையாட்டுகள், மனித உறவுகள், நட்புறவுகள், விதிமுறைகளை மதித்தல் ஆகியவற்றை ஊக்குவிப்பதால், பல்வேறு விளையாட்டு அமைப்புகள், மனித மற்றும் ஆன்மீக விழுமியங்களை ஊக்குவிக்க வேண்டும் என ஊக்கப்படுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
எல்லைகள், நாடுகள், மொழிகள், மதங்கள், இனங்கள், கருத்துக் கோட்பாடுகள் என அனைத்தையும் கடந்து ஓர் உலகளாவிய மொழியாக விளையாட்டு இருப்பதால், இது மக்களை ஒன்றிணைத்து உரையாடலை ஊக்குவிக்க முடியும் என, ஐரோப்பிய ஒலிம்பிக் குழுவின் பிரதிநிதிகளை இச்சனிக்கிழமை முற்பகலில் திருப்பீடத்தில் சந்தித்தபோது கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இளைய தலைமுறைகளுக்குப் பயிற்சிகள் அளிக்கும் இந்த ஒலிம்பிக் குழு போன்ற அமைப்புகளும் நிறுவனங்களும், அமைதி, பகிர்வு, மக்கள் மத்தியில் நல்லிணக்கம் ஆகியவற்றுக்கான பாதையில் பயிற்சிகளை அளிக்குமாறும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
விளையாட்டு குறித்த திருஅவையின் கண்மோட்டம் பற்றியும் பேசிய திருத்தந்தை, மனிதரின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு உதவும் விலைமதிப்பில்லாத கருவியாக, விளையாட்டுக்களைத் திருஅவை பார்க்கின்றது எனவும், இதனால் திருஅவைக்கும், விளையாட்டுக்கும், இடையேயுள்ள பிணைப்பு அழகானதாக இருக்கின்றது என்றும்  கூறினார்.
விளையாட்டு, வெற்றியை அல்லது பொருளாதார ஆதாயத்தை மட்டுமே வைத்து நிர்ணயிக்கப்படும்போது அது விளையாட்டுவீரர்களை வெறும் விற்பனைப் பொருள்களாக மாற்றிவிடும் எனவும் எச்சரித்த திருத்தந்தை பிரான்சிஸ், விளையாட்டின் உண்மையான பண்புகளைக் வெளிக்கொணர ஐரோப்பிய ஒலிம்பிக் குழுவினர் உழைக்குமாறும் உற்சாகப்படுத்தினார்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை பிரான்சிஸ் : ஒப்புரவு, திருநற்கருணை திருவருள்சாதனங்கள் நம் வாழ்வுக்கு மிகவும் முக்கியமானவை

நவ.23,2013. திருவருள்சாதனங்கள், நம்மில் இயேசு கிறிஸ்துவின் பிரசன்னமாக விளங்குகின்றன; எனவே, நாம் ஒப்புரவு திருவருள்சாதனத்தைப் பெறுவதற்குச்  செல்வதும், திருநற்கருணை வாங்குவதும் முக்கியம் என, இச்சனிக்கிழமை தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், திரிதெந்தின் பொதுச்சங்கம் நிறைவடைந்ததன் 450ம் ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்கென தனது பிரதிநிதியாக, கர்தினால் Walter BRANDMÜLLERஐ நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த 450ம் ஆண்டு நிறைவு விழா, இத்தாலியின் Trento பேராலயத்தில் வருகிற டிசம்பர் முதல் தேதியன்று நடைபெறும்.
மேலும், கத்தோலிக்கத் திருஅவையில் திருமுழுக்குப் பெற்று புதிதாக இணையவிருக்கும் ஏறக்குறைய 500 பேரை இச்சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் சந்திப்பது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இந்நாளைய நிகழ்வுகளில் ஒன்றாகும்.
இவர்கள் 20க்கும் 40 வயதுக்கும் உட்பட்டவர்கள். இரஷ்யா, மோல்தேவியா, எகிப்து, அல்ஜீரியா, போஸ்னிய-எர்செகொவினா, மொராக்கோ, சீனா, மங்கோலியா என 47 நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. ஏறக்குறைய கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் புனித பேதுருவின் புனிதப் பொருள்கள் பொதுவில் வைக்கப்படவுள்ளன

நவ.23,2013. கத்தோலிக்கத் திருஅவையின் முதல் திருத்தந்தையாகிய புனித பேதுருவின் எலும்புகள் அடங்கிய பேழை ஏறக்குறைய கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் முதல்தடவையாக இஞ்ஞாயிறன்று பொதுவில் வைக்கப்படவுள்ளது.
கி.பி.64ம் ஆண்டில் தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்ட புனித பேதுருவின் கல்லறைமீது வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயம் கட்டப்பட்டுள்ளது.
1940களில் இக்கல்லறைப் பகுதியில் நடத்தப்பட்ட அகழ்வராய்ச்சியின்போது புனித பேதுருவின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. புனித பேதுருவின் இப்புனிதப்பொருள்கள், 30 செ.மீ. நீளம், 10 செ.மீ. அகலம் கொண்ட வெண்கலப் பேழையில் வைக்கப்பட்டுள்ளன. இப்பேழை, வத்திக்கானில் திருத்தந்தையரின் உறைவிடத்தில்   வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொர் ஆண்டும் ஜூன் 29ம் தேதியன்று வத்திக்கானில் திருத்தந்தையரின் சிற்றாலயத்தில் வைக்கப்பட்டு பின் அங்கிருந்து எடுக்கப்பட்டுவிடும்.
இஞ்ஞாயிறன்று நம்பிக்கை ஆண்டு நிறைவடைவதையொட்டி இப்புனிதப் பேழை முதல்தடவையாக பொதுவில் வைக்கப்படவுள்ளது. ஞாயிறு காலை 9.45 மணிக்குப் பவனியாக இது எடுத்துவரப்பட்டு வத்திக்கான் பேதுரு வளாகத்தில் திருப்பலி மேடைப் பகுதியில் வைக்கப்படும். திருப்பலிக்குப் பின்னர் அது மீண்டும் திருத்தந்தையரின் உறைவிடத்துக்குக் கொண்டு செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.     

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. நம்பிக்கை ஆண்டு நிறைவு திருப்பலி

நவ.23,2013. 2012ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், தொடங்கிய நம்பிக்கை ஆண்டை, 2013ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி கிறிஸ்து அரசர் பெருவிழாவான இஞ்ஞாயிறன்று நிறைவுக்குக் கொண்டு வருகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்நம்பிக்கை ஆண்டின் நிறைவுத் திருப்பலியை, ஞாயிறு காலை 10.30 மணிக்கு வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்திருப்பலியின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது முதல் "மறைத்தூது அறிவுரை" ஏட்டை வெளியிடுவார்.
"Evangelii Gaudium" அதாவது "நற்செய்தியின் மகிழ்ச்சி" என்ற தலைப்பிலான இவ்வேட்டை அடையாளப்பூர்வமாக 36 பேருக்கு வழங்குவார் திருத்தந்தை பிரான்சிஸ்.
லாத்விய நாட்டு ஓர் ஆயர், டான்சானிய நாட்டு ஓர் அருள்பணியாளர், ஆஸ்திரேலிய நாட்டு ஒரு தியாக்கோன், இன்னும், ஒரு குடும்பத்தினர், இருபால் துறவியர், வேதியர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர் இளையோர், முதியோர், நோயாளிகள் என 5 கண்டங்களின் 18 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இவர்கள். 
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் மறைத்தூது அறிவுரை இம்மாதம் 26ம் தேதி செவ்வாயன்று திருப்பீட நிருபர் கூட்டத்தில் வெளியிடப்படும்.
மேலும், இத்திருப்பலியில் எடுக்கப்படும் நிதி, பிலிப்பீன்சில் ஹையான் புயலில் பாதிக்கப்பட்டவர்க்கென அனுப்பப்படும் என திருப்பீடம் அறிவித்துள்ளது.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி

6. மியான்மாரின் ரோகின்யா விவகாரத்துக்குத் தீர்வு காண்பதற்கு பல்சமய உரையாடலே சிறந்த வழி, யாங்கூன் பேராயர்

நவ.23,2013. மியான்மாரின் ரோகின்யா விவகாரத்துக்குத் தீர்வு காண்பதற்கு பல்சமய உரையாடலே சிறந்த வழி எனவும், அரசியல்ரீதியான தீர்மானங்களைவிட சமயத்தலைவர்கள் மத்தியில் இடம்பெறும் உண்மையான உரையாடலே சிறந்தது எனவும் யாங்கூன் பேராயர் சார்லஸ் போ கூறியுள்ளார்.
மியான்மாரில் இராணுவ சர்வாதிகார ஆட்சிக்குப் பின்னர் அந்நாடு தற்போது எதிர்கொள்ளும் ரோகின்யா இன மக்கள் பிரச்சனைகள் குறித்துப் பேசிய யாங்கூன் பேராயர் போ, இப்பிரச்சனைக்குப் பல்சமய உரையாடலே சிறந்த வழி எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
ரோகின்யா சிறுபான்மை இன முஸ்லீம் மக்களுக்கு குடியுரிமை வழங்குமாறு ஐ.நா. கூறியதை, மியான்மார் அரசு அதிகாரிகள் உடனடியாக நிராகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய பேராயர் போ, ரோகின்யா முஸ்லீம்கள், பங்களாதேஷிலிருந்து வந்து மியான்மாருக்குள் சட்டத்துப் புறம்பே குடியேறியுள்ளவர்கள் என மியான்மார் அதிகாரிகள் கூறுவதையும் குறிப்பிட்டுள்ளார்.
2012ம் ஆண்டில் ஓர் இளம் புத்தமதப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டதையடுத்து ராக்கின் மாநிலத்தில் புத்தமதத் தீவிரவாதிகளுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே கடும் வன்முறை தொடங்கியது. இதில் நூற்றுக்கணக்கானோர் இறந்தனர், பல வீடுகள் அழிக்கப்பட்டன மற்றும் குறைந்தது ஒரு இலட்சத்து 60 ஆயிரம் பேர் புலம் பெயர்ந்தனர். 

ஆதாரம்: AsiaNews

7. இந்திய உணவு பாதுகாப்பு உரிமை சட்டத்துக்கு ஐ.நா. அதிகாரி பாராட்டு

நவ.23,2013.  உலகில் ஊட்டச்சத்துப் பற்றாக்குறை உள்ளவர்களில் ஏறக்குறைய நான்கில் ஒரு பகுதியினர் வாழும் இந்தியாவில், ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு அரசு எடுத்துவரும் முயற்சிகளைப் பாராட்டியுள்ளார் ஐ.நா. அதிகாரி ஒருவர்.
WFP என்ற ஐ.நா.வின் உலக உணவுத் திட்ட அமைப்பின் இயக்குனர் Ertharin Cousin இந்தியாவுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டபின்னர் நிருபர்களிடம் பேசியபோது, இந்தியாவில் உணவு பாதுகாப்பு உரிமை சட்டம் அமலில் இருப்பதை பாராட்டியுள்ளார்.
கடந்த செப்டம்பரில் கையெழுத்திடப்பட்ட தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்மூலம், நாட்டின் 80 கோடிக்கு மேற்பட்ட மக்களுக்கு குறைந்த விலையில் உணவு கிடைக்க வழிசெய்யப்பட்டுள்ளது.
WFPஅமைப்பின் உலகளாவிய உணவு உதவிக்கு இந்திய அரசு ஆதரவாக இருப்பதற்கு நன்றி தெரிவித்த Cousin, இந்தியாவிலிருந்து கிடைக்கும் 18 இலட்சம் டாலரைக் கொண்டு ஏமனிலுள்ள 1,21,300 பேருக்கு அடுத்த ஆறு மாதங்களுக்கு உணவளிக்க முடியும் என்று தெரிவித்தார்.
உலகில் ஏழ்மையை ஒழிப்பதற்கு முயற்சித்துவரும் பெரிய பன்னாட்டு WFPஅமைப்பு, கடந்த ஆண்டில் 80 நாடுகளில் 9 கோடியே 70 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு உணவளித்துள்ளது. 

ஆதாரம்: UN

8. குட்மார்னிங் வணக்கத்துக்குப் பதில் ஜெய் ஹிந்த்

நவ.23,2013. ஆங்கிலேயர்கள் சொல்லிக்கொடுத்த 'குட்மார்னிங்' என்ற காலை வணக்கத்தைச் சொல்வதற்குப் பதிலாக, ஜெய்ஹிந்த் சொல்ல வேண்டும் என இராணுவத்தினர் அனைவருக்கும், இராணுவத் தளபதி பைக்ராம்சிங் கட்டாய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இராணுவத்தில் படைவீரர்கள் முதல் தளபதிகள் உள்பட அனைத்து ஊழியர்களும் குட்மார்னிங் சொல்வதற்குப் பதிலாக, ஜெய்ஹிந்த் எனச் சொல்லி ஒருவரை ஒருவர் மரியாதை செலுத்தத் தொடங்கியுள்ளனர்.
சுதந்திரப் போராட்டக் கால முழக்கத்தின்போது இந்தியர்களை உணர்ச்சி பொங்க வைத்த வாசகம்தான் 'ஜெய் ஹிந்த்'. உள்ளத்தின் ஆழ்மனதில் இருந்து வெள்ளையர்கள் எதிர்ப்புக் குரலாக எழுந்த இந்தக் கோஷம் அனைவருக்கும் ஓர் உற்சாகம் தந்தது. அதேநேரத்தில் ஆங்கிலேயரை அச்சமடையவும் செய்தது.
எந்தவொரு பணி துவங்கும்போதும் 'ஜெய் ஹிந்த்' என்று சொல்லிக் கொள்ள வேண்டும், இதேபோல் எந்தவொரு பணி முடியும்போதும் பாரத் மாதாக்கி ஜெ என்று சொல்லிக்கொள்ள வேண்டும். இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது போன்று நாம் உச்சரிக்கும்போது ஒருவருக்கொருவர் இடையேயுள்ள கருத்து வேறுபாடுகள் மறைந்து மதச்சார்பின்மை உருவாகும் மற்றும் நாட்டுப்பற்றையும் வளர்க்கும் என தளபதி தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : தினமலர்
 

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...