Tuesday, 26 November 2013

செய்திகள் - 25.11.13

செய்திகள் - 25.11.13
------------------------------------------------------------------------------------------------------

1. வாழ்வின் மிகக் கடினமான சூழல்களிலும் ஆண்டவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும், திருத்தந்தை பிரான்சிஸ்

2. பரகுவாய் அரசுத்தலைவர், திருத்தந்தை சந்திப்பு

3. நம்பிக்கை ஆண்டுக்கென உழைத்த அனைத்துத் தன்னார்வப் பணியாளர்க்குத் திருத்தந்தை நன்றி

4. திருத்தந்தையின் திங்கள் டுவிட்டர் செய்தி

5. யுக்ரேய்ன் நாட்டுத் திருப்பயணிகளுடன் திருத்தந்தை சந்திப்பு

6. இறைவனுக்கான தாகம் உலகின் அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கிறது, திருத்தந்தை பிரான்சிஸ்

7. தமிழ்நாட்டில் பாலியல் கொடுமையில் 3 ல் 1 பெண் குழந்தை

------------------------------------------------------------------------------------------------------

1. வாழ்வின் மிகக் கடினமான சூழல்களிலும் ஆண்டவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும், திருத்தந்தை பிரான்சிஸ்

நவ.25,2013. வாழ்வின் மிகக் கடினமான சூழல்களிலும் ஆண்டவரிடம் நம்பிக்கை வைப்பதற்கு கிறிஸ்தவர்கள் அழைக்கப்படுகின்றனர் என இத்திங்கள் காலையில் வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நெபுகத்னேசர் அரசவையில் அடிமைகளாக இருந்த மூன்று இளம் யூதர்கள் பற்றியும், ஆலயத்துக்கு வழிபடச் சென்ற ஏழைக் கைம்பெண் பற்றியும் விவரிக்கும் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டுப் பகுதிகளை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை, ஆண்டவரில் நம்பிக்கை வைப்பதற்கு  இவர்கள் எடுத்துக்காட்டுகளாய் உள்ளனர் என்று கூறினார்.
ஏழைக் கைம்பெண், தன்னிடமிருந்த அனைத்தையும் ஆலயத்தின் காணிக்கைப் பெட்டியில் போட்டார், தங்கள் உயிருக்கு ஆபத்து என்ற நிலையிலும் மூன்று யூத இளைஞர்கள் ஆண்டவருக்கு விசுவாசமாக இருந்தனர், இவர்களுக்கு ஏதோ ஒன்று ஆபத்தாக இருந்தது, ஆனால் இவர்கள் தங்களின் சுய ஆதாயத்தைப் பார்க்காமல், அதை ஆண்டவருக்குச் சாதகமாகத் தேர்ந்தெடுக்கத் துணிந்தார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆண்டவர் பிரமாணிக்கமுள்ளவர் என்பதை அறிந்திருந்த அவர்கள், ஆண்டவரில் நம்பிக்கை வைத்து இவ்வாறு செய்தனர், திருஅவையிலும், திருஅவை வரலாற்றிலும் இவ்வாறு ஆண்களும் பெண்களும் வாழ்ந்து வருகின்றனர், மறைசாட்சிகள் வாழ்வு பற்றி நாம் கேட்குபோதும், அடக்குமுறைகளுக்கு உள்ளாகும் கிறிஸ்தவர்கள் பற்றி தினத்தாள்களில் இன்றும் வாசிக்கும்போதும், மிக கடினமான சூழல்களிலும் ஆண்டவருக்கு விசுவாசமாக இருந்த நம் சகோதர சகோதரிகள் பற்றி நினைக்கிறோம் எனவும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை.
வரலாறு முழுவதும், இன்றும் தொடர்ந்து துணிச்சலான தீர்மானம் எடுத்த மற்றும் எடுக்கும் நம் சகோதர சகோதரிகளை நினைத்துப் பார்ப்போம் எனவும் மறையுரையில் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், நமது கிறிஸ்தவ வாழ்வை மிக கடினமான சூழல்களிலும் தினமும் வாழ்வதற்கு ஆண்டவரிடம் துணிச்சலைக் கேட்போம் எனக் கேட்டுக்கொண்டார்.
இவர்கள் போன்று, நாம் ஆண்டவருக்கென உறுதியான தீர்மானம் எடுக்கவும், மிக கடினமான சூழல்களிலும் ஆண்டவரிடம் நம்பிக்கை வைத்தவர்கள் போன்று நாம் வாழவும் அழைக்கப்படுகிறோம் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. பரகுவாய் அரசுத்தலைவர், திருத்தந்தை சந்திப்பு

நவ.25,2013. இத்திஙகள் காலை பரகுவாய் அரசுத்தலைவர் Horacio Manuel Cartes Jara அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.
திருத்தந்தையுடனான சந்திப்பிற்குப்பின்னர், திருப்பீடச்செயலர் பேராயர் பியேத்ரோ பரோலின், நாடுகளுக்கிடையேயான உறவுகளுக்கான திருப்பீடத்துறையின் செயலர் பேராயர் தொமினிக் மம்பெர்த்தி ஆகியோரையும் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தினார் பரகுவாய் அரசுத்தலைவர்.
இச்சந்திப்பின்போது, இருநாடுகளுக்கிடையேயான உறவு, பரகுவாய் நாட்டின் தலத்திருஅவையின் சமூகப்பணி, மனிதகுலமேம்பாடு, மனித உரிமைகளை மதித்தல் போன்றவற்றில் பங்களிப்பு போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டதாக திருப்பீடப் பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.

ஆதாரம் வத்திக்கான் வானொலி

3. நம்பிக்கை ஆண்டுக்கென உழைத்த அனைத்துத் தன்னார்வப் பணியாளர்க்குத் திருத்தந்தை நன்றி

நவ.25,2013. விசுவாசிகளாகிய நமக்கு, திருமுழுக்கு நாளில் கொடுக்கப்பட்ட விசுவாசச் சுடரை மீண்டும் ஒளிர்விக்கச் செய்வதற்கு நம்பிக்கை ஆண்டு, இறைவனால் வழங்கப்பட்ட ஒரு வாய்ப்பு என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இஞ்ஞாயிறன்று நிறைவடைந்த நம்பிக்கை ஆண்டின் பல்வேறு நிகழ்வுகளுக்கென உழைத்த தன்னார்வப் பணியாளர்களை இத்திங்களன்று வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை, இந்த அருளின் காலத்தில், கிறிஸ்தவத்தின் சாரமாகிய, பிறரன்போடு நிறைந்த விசுவாசத்தை மீண்டும் நம்மால் கண்டுணர முடிந்தது என்றும் தெரிவித்தார்.
நம் அன்றாட வாழ்வில் நாம் தெரிவு செய்பவைகளையும், நம் செயல்களையும் விசுவாசம் தூண்டுவதால் இது உண்மையிலேயே கிறிஸ்தவ அனுபவத்தின் மூலைக்கல்லாய் இருக்கின்றது எனவும் திருத்தந்தை கூறினார்.
இந்த நம்பிக்கை ஆண்டில் இந்தத் தன்னார்வப் பணியாளர்கள் பெற்றுள்ள அனுபவம், முதலில் அவர்கள் தங்களையே திறந்த மனம் கொண்டவர்களாய் அமைக்கவும், பிறரை, குறிப்பாக, தங்கள் வாழ்வில் விசுவாசத்திலும், நம்பிக்கையிலும் தளர்ச்சி கண்டுள்ளவர்களைச் சந்திக்கவும் உதவுவதாய் உள்ளது எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தையின் திங்கள் டுவிட்டர் செய்தி

நவ.,25,2013. பிறரன்புடன் வாழ்வது என்பது, நம் சுயநலன்களுக்காக வாழ்வதாகாது, மாறாக நம்மிடையே காணப்படும் ஏழைகள் மீதான மற்றும் பலவீனமானோரின் சுமைகளைச் சுமப்பதாகும் என இத்திங்களன்று தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் ஒன்பது மொழிகளில் குறுஞ்செய்திகளை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் வத்திக்கான் வானொலி

5. யுக்ரேய்ன் நாட்டுத் திருப்பயணிகளுடன் திருத்தந்தை சந்திப்பு

நவ.,25,2013. யுக்ரேய்ன் நாட்டின் புனிதர் ஜோசப்பாத்தின் புனிதப்பொருள்கள், வத்திக்கான்  தூய பேதுரு பசிலிக்காவிற்கு மாற்றப்பட்டதன் 50ம் ஆண்டு நினைவைச் சிறப்பிக்கும்விதமாக வந்திருந்த உக்ரைன் திருப்பயணிகளை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ், கிறிஸ்தவ ஒன்றிப்பின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
புனித ஜோசப்பாத் குறித்த நம் நினைவுகள், புனிதர்களின் ஒன்றிப்பையும், கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் அனைவரிடையேயும் நிலவவேண்டிய ஒன்றிப்பையும் நமக்கு எடுத்துரைப்பதாக உள்ளன என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், புனிதர்களின் மகிழ்ச்சிநிறை சகோதரத்துவத்தை உள்ளடக்கியதாக இருக்கும் மறுவுலக வாழ்வை முன்னோட்டமாகத் தருவதாக கிறிஸ்தவர்களிடையேயான இவ்வுலக ஒன்றிப்பு உள்ளது என்றார்.
திருஅவையின் ஒன்றிப்பின் வழியாக, ஒத்துழைப்பிற்கான ஆவல், ஒருவர் மற்றவரிடமிருந்து கற்றுக்கொள்ளல், விசுவாசத்தின் ஒன்றிணைந்த சாட்சியாக விளங்குதல் போன்றவைகளின் மூலம் கிறிஸ்தவ வாழ்வின் ஒவ்வொரு கூறையும் வழிநடத்தமுடியும் என்றார் திருத்தந்தை.
ஒன்றிப்பிற்கான ஆவல், ஒருவர் மற்றவரைப் புரிந்துகொள்ளவும், மதிக்கவும், ஏற்றுக்கொள்ளவும், சகோதரத்துவத் திருத்தங்களை வழங்கவும் நம்மை அழைத்துச்செல்கிறது என உக்ரைனிலிருந்து வந்திருந்த கிரேக்க-கத்தோலிக்க வழிபாட்டுமுறை திருப்பயணிகளிடம் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் வத்திக்கான் வானொலி

6. இறைவனுக்கான தாகம் உலகின் அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கிறது, திருத்தந்தை பிரான்சிஸ்

நவ.25,2013. இறைவனுக்கான தாகம், ஆண்டவர் மீதான ஆன்மாவின் தாகம் உலகின் அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கிறது என இச்சனிக்கிழமை மாலையில் திருஅவையில் புதிதாக இணையவிருப்பவர்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருஅவையில் புதிதாக இணையவிருக்கும் 47 நாடுகளின் 500 பேரை, இச்சனிக்கிழமை மாலை வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலய முகப்பில் வரவேற்ற திருத்தந்தை பிரான்சிஸ், திருஅவையிடமிருந்து அவர்கள் எதிர்பார்ப்பது என்ன என்ற கேள்வியை எழுப்பி  அவர்களைப் பசிலிக்காவுக்குள் அழைத்துவந்தார்.
விசுவாசத்தை எதிர்பார்க்கிறோம் என்று பதில் சொன்ன இவர்களில் 36 பேரின் நெற்றியில் சிலுவை அடையாளம் இட்டு, அவர்கள் அனைவருடனும் மாலை திருவழிபாட்டை நிகழ்த்தி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், பல்வேறு கலாச்சாரங்கள், பல்வேறு அனுபவங்களைக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும்  பொதுவாக ஒன்று உள்ளது, அதுவே இறைவனுக்கான தாகம் என்று கூறினார்.
இறைவனும் நமக்காகத் தாகம் கொண்டுள்ளார், அவர் நம்மோடு இருக்க விரும்புகிறார், இந்தத் தாகமின்றி விசுவாச வளர்ச்சி மக்கிப்போய்விடும் என்றும் உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், இயேசு உங்களை அன்புசெய்கிறார், அவர் ஒருபோதும் உங்களை மறுதலிக்கமாட்டார், அவர் ஒருபோதும் தவறிழைக்கமாட்டார் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருங்கள் எனவும் அந்த 500 பேரிடம் கூறினார்.
திருத்தூதர் பேதுருவின் புனிதப்பொருள்கள் இருக்கும் இந்த பசிலிக்காவில் உங்களனைவரையும் வரவேற்பதில் தான் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்த திருத்தந்தை, மனுஉரு எடுத்த இறைவார்த்தையால் தொடப்பட்டுள்ள நீங்கள் அவரின் இரக்கத்தையும் பெறுவதற்குத் தயார்ப்படுத்தியுள்ளீர்கள், நீங்கள் அவரோடு முழு ஒன்றிப்பை அடையுமாறு திருஅவை உங்களிடம் கேட்கிறது என்றும் கூறினார்.
நம்பிக்கை ஆண்டு நிறைவடைவதற்குமுன் இறுதி நிகழ்வாக இடம்பெற்ற இம்மாலை திருவழிபாட்டில், இந்த 500 பேரைத் தயாரித்த வேதியர்கள், குடும்பத்தினர் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7. தமிழ்நாட்டில் பாலியல் கொடுமையில் 3 ல் 1 பெண் குழந்தை

நவ.,25,2013. தமிழ்நாட்டில் மூன்றில் ஒரு பெண் குழந்தையும், ஐந்தில் ஒரு ஆண்குழந்தையும், பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன என எடுத்துரைத்தார் உளவியல் ஆலோசகர் இரத்னா ராபின்சன்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புப் பணியில், சமுதாயத்தின் பங்கு குறித்து தூத்துக்குடி நாசரேத் கிறிஸ்தவ சபை ஆயர் ஜெபசந்திரன் கன்னியாகுமரியில் துவக்கி வைத்த தேசிய அளவிலான கருத்தரங்கில் பேசிய உளவியல் ஆலோசகர் இரத்னா ராபின்சன், இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன என்ற கவலையை வெளியிட்டார்.
இது போன்ற செயல்கள் பள்ளிகள், வீடுகளில் அதிகம் நடக்கின்றன என்ற அவர், குழந்தைகளுக்கு மிக நெருக்கமானவர்களே இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர் எனவும் கூறினார்.

ஆதாரம் : Dinamalar 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...