இந்திய சட்ட நாள்
இந்தியாவின் சட்ட நாள் The Constitution Day of India, ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. அம்பேத்கர், ஜவகர்லால் நேரு, இராஜகோபாலாச்சாரி, இராஜேந்திரபிரசாத், சர்தார் வல்லபாய் படேல் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய சட்டவரைவுக் கூட்டம், 1946ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி முதல் முறை கூடியது. இக்குழுவின் தலைவராக இராஜேந்திரபிரசாத் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், இந்தியச் சட்டங்களின் தந்தை என்று போற்றப்படுபவர் அம்பேத்கர் அவர்களே!
தமிழ்நாட்டின் சார்பில் இக்குழுவில் பங்கேற்றவர்கள் 50 பேர். காமராஜ், டி.டி. கிருஷ்ணமாச்சாரி, சி. சுப்புரமணியம், இயேசு சபை அருள் பணியாளர் ஜெரோம் டி சூசா ஆகியோர் இக்குழுவில் பணியாற்றியவர்களில் ஒரு சிலர்.
உலகின் பல்வேறு நாடுகளில் எழுதப்பட்டுள்ள சட்டங்களில், இந்தியச் சட்ட அமைப்பே மிக நீளமானது. 444 சட்டங்களை உள்ளடக்கிய இச்சட்ட அமைப்பு, 80000க்கும் அதிகமான வார்த்தைகளைக் கொண்டது. இதனை உருவாக்க, 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் எடுத்தன.
1949ம் ஆண்டு, நவம்பர் மாதம் 26ம் தேதியன்று சட்ட அமைப்புக் குழுவினரால் முழுமையாக ஒப்புதல் அளிக்கப்பட்டு, வெளியிடப்பட்ட சட்ட அமைப்பு, 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி முதல் இந்திய நாடெங்கும் நடைமுறைக்கு வந்தது. 2013ம் ஆண்டு ஜூலை மாத நிலவரப்படி, இந்தியச் சட்ட அமைப்பில் இதுவரை 118 மாற்றங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment