Tuesday, 26 November 2013

செய்திகள் - 26.11.13

செய்திகள் - 26.11.13
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் மறைத்தூது அறிவுரை Evangelii Gaudium

2. நிகழ்காலத்தில் வாழத் தெரிந்தவரே கிறிஸ்தவர் : திருத்தந்தை பிரான்சிஸ்

3. திருஅவை ஒரு மறைபோதகர், திருத்தந்தை பிரான்சிஸ்

4. சிரியாவில் தொடர்ந்து இடம்பெறும் சண்டை குறித்து இரஷ்ய அரசுத்தலைவரிடம் திருத்தந்தை பிரான்சிஸ் கலந்துரையாடல்

5. பெண்களுக்கு எதிரான வன்முறை, ஒரு சமூகச் சவால், மெக்சிகோ ஆயர்

6. கர்நாடக ஆயர்: கத்தோலிக்கர், நம்பிக்கை ஆண்டின் சாட்சிகளாக வாழ்கின்றனர்

7. உலகின் வெப்பநிலை மாற்றம் குறித்த ஐ.நா. உலக மாநாடு கத்தோலிக்கப் பிரதிநிதிகளுக்கு அதிருப்தி

8. இந்தியாவில் 278 பல்கலைக்கழகங்களைத் திறப்பதற்கு மத்திய அரசு முடிவு

9. உணவுப் பாதுகாப்பு வழங்கும் கிராமம்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் மறைத்தூது அறிவுரை Evangelii Gaudium

நவ.26,2013. "Evangelii Gaudium" அதாவது நற்செய்தியின் மகிழ்ச்சி என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் "மறைத்தூது அறிவுரை" ஏட்டை இச்செவ்வாயன்று நிருபர் கூட்டத்தில் வெளியிட்டது திருப்பீடம்.
கடந்த எட்டு மாதங்களில் தான் வழங்கிய மறையுரைகள், உரைகள், நேர்காணல்கள் ஆகியவற்றில் முன்னுரிமை கொடுத்த அனைத்தையும் பரந்த அளவில் இந்த மறைத்தூது அறிவுரை ஏட்டில் ஒன்றிணைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புறக்கணிப்பு, உலகமயம், வருவாயில் மாபெரும் இடைவெளிகள் ஆகியவை நிறைந்த உலகில் திருஅவையின் நற்செய்தி அறிவிப்பு ஆர்வத்தை எவ்வாறு மீண்டும் உயிர்த்துடிப்புள்ளதாக்குவது என்பது குறித்து விளக்கியுள்ள திருத்தந்தை, கிறிஸ்தவர்கள் இறைவனின் மாறுபடா அன்புக்கும் மன்னிப்புக்கும் ஒவ்வொரு நாளும் தங்கள் இதயத்தைத் திறக்குமாறும் கேட்டுள்ளார்.
பரவலான இலஞ்ச ஊழல், செல்வந்தரின் வரிஏய்ப்பு, நிதி ஆதாயம் என அடிப்படையிலேயே அநீதியைக் கொண்டிருக்கும் தற்போதைய பொருளாதார அமைப்பைக் குறைகூறியுள்ள திருத்தந்தை, மத சுதந்திரம் வழங்கப்படாமை, கிறிஸ்தவர்க்கெதிரான அடக்குமுறைகள் ஆகியவற்றையும் இந்த 84 பக்க ஏட்டில் கண்டித்துள்ளார்.
அனைத்து மதத்தினருடனும், மத நம்பிக்கை இல்லாதவர்களுடனும் பொறுமையும் மதிப்பும் கலந்த உரையாடல் வழியாக, அமைதி, நீதி மற்றும் சகோதரத்துவம் காக்கப்படுமாறும் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், கிறிஸ்தவர்கள் இசுலாம் குறித்த விரோத முற்சார்பு எண்ணங்களைத் தவிர்க்குமாறு கேட்டுள்ள அதேவேளை, இசுலாமிய நாடுகள் கிறிஸ்தவர்களுக்கு முழு சுதந்திரத்துக்கு உறுதியளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுள்ளார்.
திருஅவை மேலும் மறைபோதகத்தன்மையைக் கொண்டிருப்பதற்கும், ஏழைகள்மீது சிறப்பான கவனம் செலுத்தும் கருணைநிறைந்த திருஅவையாக அது மாறுவதற்கும் கத்தோலிக்கத் திருஅவையிலும், திருத்தந்தையின் ஆட்சிமுறையிலும் சீர்திருத்தம் தேவை எனவும் இந்த மறைத்தூது அறிவுரையில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருஅவையின் மறைப்பணிக்கு தடங்கலாக இருக்கும் அதன் மையப்படுத்தப்பட்ட அமைப்பு குறித்து குறை கூறியுள்ள திருத்தந்தை, கத்தோலிக்கத் திருஅவையின் புதுப்பித்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தயாரிப்பு இல்லாத மறையுரைகள் போதிப்பவருக்கும், விசுவாசிகளுக்கும் துன்பமாக இருக்கின்றன என்றுரைத்துள்ள திருத்தந்தை, திருஅவையில் ஆண்கள் மட்டுமே குருக்களாக இருக்கலாம் என்பதை உறுதிப்படுத்தியுள்ள அதேவேளை, அவர்களின் திருவருள்சாதன திருப்பொழிவு, பொதுவாக ஆதிக்கம் என்பதோடு நின்றுவிடக் கூடாது, திருஅவை வாழ்வின் பல்வேறு துறைகளில் தீர்மானம் எடுப்பதில் மகளிருக்கும் பங்களிக்க வேண்டுமெனவும் கேட்டுள்ளார்.
கடந்த 1300 ஆண்டுகளில், ஐரோப்பியரல்லாத திருத்தந்தையாக பணியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சொந்த ஏடாகும் நற்செய்தியின் மகிழ்ச்சி மறைத்தூது அறிவுரை.
இந்த நம்பிக்கை ஆண்டு நிறைவுத் திருப்பலியின் இறுதியில், நற்செய்தியின் மகிழ்ச்சி என்ற தலைப்பிலான இவ்வேட்டைபார்வையிழந்த ஒருவர் உட்பட 5 கண்டங்களின் 18 நாடுகளைச் சார்ந்த 36 பேருக்கு அடையாளப்பூர்வமாக வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. நிகழ்காலத்தில் வாழத் தெரிந்தவரே கிறிஸ்தவர் : திருத்தந்தை பிரான்சிஸ்

நவ.26,2013. கிறிஸ்தவர் என்பவர் நிகழ்காலத்தில் வாழத் தெரிந்தவர் மற்றும் தனது காலத்தை எப்படி வாழவேண்டுமென்பதை அறிந்தவர்; நம் கையில் இப்பொழுது இருக்கும் காலம் கடந்துவிடும் என்றும் இவ்வெள்ளிக்கிழமை காலையில் வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த நேரத்துக்கு முதலாளி என்று நாம் நினைக்கலாம், ஆனால் இவ்வாறு நினைப்பது நம்மை ஏமாற்றிவிடும் என்றும் மறையுரையில் உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், நமது கையில் உள்ள இந்தக் காலம் நம்முடையது அல்ல, ஆனால் அது இறைவனுடையது என்றும் கூறினார்.
காலம் கடந்துபோகும் என்பதை ஏற்று புரிந்துகொள்ளவும், அதன் முடிவுக்குத் தயாரிக்கவும் செபமும் நம்பிக்கையும் உதவுகின்றன என்றும் கூறிய திருத்தந்தை, தேர்ந்துதெளிதலுடன்கூடிய செபம், நம் வாழ்வின் ஒவ்வொரு நேரத்தையும் கண்டுணர்ந்து இறைவனை நோக்கிச் செல்ல உதவும் என்றும் கூறினார்.
காலத்தின் முதலாளியாக இயேசு கிறிஸ்து மட்டுமே இருக்கிறார், அத்தகைய காலத்தை அவர்மீதான நம்பிக்கையுடன் நோக்க வேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.
எல்லாக் காலங்களிலும் எப்படிக் காத்திருக்க வேண்டுமென்பது கிறிஸ்தவருக்குத் தெரியும், நாம் மெய்ஞானத்தோடு நடப்பதற்கு ஆண்டவர் நமக்கு அருளை வழங்குகிறார், இந்த மெய்ஞானத்தை செபத்திலும், தேர்ந்து தெளிவதிலும் பெறுவோம் என மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருஅவை ஒரு மறைபோதகர், திருத்தந்தை பிரான்சிஸ்

நவ.26,2013. திருஅவை ஒரு மறைபோதகர். நற்செய்தியின் மகிழ்ச்சியை உலகெங்கும் எடுத்துச் செல்வதற்கு கிறிஸ்து நம்மை அனுப்புகிறார் என, இச்செவ்வாய் தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், திருவருகை காலத்தின் தொடக்கமாக, வருகிற சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு, உரோம் பல்கலைக்கழக மாணவ, மாணவிகளோடு மாலை திருப்புகழ்மாலை செபிப்பார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்னும், வருகிற டிசம்பர், சனவரி மாதங்களுக்கான திருத்தந்தையின் திருவழிபாட்டு நிகழ்ச்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன. டிசம்பர் 8ம் தேதி மாலை 4 மணிக்கு இஸ்பானிய வளாகம் சென்று அன்னைக்கு அஞ்சலி செலுத்துதல், 24ம் தேதி இரவு 9.30 மணிக்கு கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலி, 25ம் தேதி பகல் 12 மணிக்கு ஊர்பி எத் ஓர்பி செய்தி, 31ம் தேதி மாலை 5 மணிக்கு வத்திக்கான் பசிலிக்காவில் தேதேயும் நன்றி வழிபாடு, 47வது கத்தோலிக்க உலக அமைதி நாளான சனவரி முதல் தேதி காலை 10 மணிக்குத் திருப்பலி, திருக்காட்சி பெருவிழாவான 6ம் தேதி காலை 10 மணிக்குத் திருப்பலி, 12ம் தேதி ஞாயிறு சிஸ்டீன் சிற்றாலயத்தில் திருப்பலி மற்றும் குழந்தைகளுக்குத் திருமுழுக்கு ஆகியவை திருத்தந்தையின் திருவழிபாட்டு நிகழ்ச்சிகளாக வெளியிடப்பட்டுள்ளன.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி


4. சிரியாவில் தொடர்ந்து இடம்பெறும் சண்டை குறித்து இரஷ்ய அரசுத்தலைவரிடம் திருத்தந்தை பிரான்சிஸ் கலந்துரையாடல்

நவ.26,2013. மத்திய கிழக்கிலும், உலகின் சில பகுதிகளிலும் கிறிஸ்தவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், இரஷ்யாவில் கத்தோலிக்கரின் வாழ்வு போன்ற விவகாரங்கள் குறித்து இரஷ்ய அரசுத்தலைவர் Vladimir Putin அவர்களும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் திருப்பீடத்தில் இத்திங்கள் மாலை கலந்து பேசினர் என,  திருப்பீடம் அறிவித்தது.
இரஷ்ய அரசுத்தலைவர் புடின் இத்திங்கள் மாலை திருப்பீடத்தில் ஏறக்குறைய 35 நிமிடங்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்துப் பேசியபோது சிரியாவில் தொடர்ந்து இடம்பெறும் சண்டை குறித்த விவகாரமும் இடம்பெற்றதாக, திருப்பீடம் மேலும் கூறியது.
திருத்தந்தையைச் சந்தித்த பின்னர், திருப்பீடச் செயலர் பேராயர் பியத்ரோ பரோலின், திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் இரஷ்ய அரசுத்தலைவர் புடின்.
இச்சந்திப்பு குறித்து பத்திரிகையாளர்களுக்கு அறிவித்த திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்பணியாளர் பெதரிக்கோ லொம்பார்தி, இக்கலந்துரையாடல்கள் மிகவும் இனியமுறையில் நடந்ததாகவும், இரஷ்யாவுக்கும் திருப்பீடத்துக்கும் இடையே நல்ல உறவுகள் நிலவுவது குறித்து இருதரப்பும் தங்களது திருப்தியை வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
மத்திய கிழக்கிலும், உலகின் சில பகுதிகளிலும் கிறிஸ்தவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், இரஷ்யாவில் கத்தோலிக்கரின் வாழ்வு, சிரியாவில் தொடர்ந்து இடம்பெறும் சண்டை போன்ற விவகாரங்கள் இச்சந்திப்பில் பேசப்பட்டதாகவும் அருள்பணியாளர் லொம்பார்தி கூறினார்.
இச்சந்திப்புகளுக்குப் பின்னர், அரசுத்தலைவர் புடின், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையில் மிகவும் போற்றப்படும் Vladimir அன்னை மரியா மொசேய்க் வேலைப்பாடு நிறைந்த படத்தை திருத்தந்தைக்குப் பரிசாக அளித்தார். திருத்தந்தையும், மொசேய்க் வேலைப்பாடு நிறைந்த வத்திக்கான் தோட்டப் படத்தை இரஷ்ய அரசுத்தலைவர்க்குப் பரிசாக அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. பெண்களுக்கு எதிரான வன்முறை, ஒரு சமூகச் சவால், மெக்சிகோ ஆயர்

நவ.26,2013. பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் சமூகத்துக்கு ஒரு பெரும் சவாலாக இருக்கும்வேளை, இந்தக் கடும் பிரச்சனை குறித்த விழிப்புணர்வு சமுதாயத்தில் ஏற்படுத்தவேண்டியது மிகவும் இன்றியமையாதது என்று, மெக்சிகோ நாட்டு ஆயர் ஒருவர் கூறினார்.
இத்திங்களன்று உலகில் கடைப்பிடிக்கப்பட்ட பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தையொட்டி இவ்வாறு தெரிவித்த, துரான்கோ மறைமாவட்ட துணை ஆயர் Enrique Sánchez Martínez, பெண்களுக்கு எதிரான வன்முறைகள், சமூகரீதியாக சகித்துக்கொள்ளப்படும் ஒரு செயலாக மாறி வருவதால், இவை ஒரு சமூக மற்றும் கலாச்சாரச் சவாலாக உள்ளன என்று கூறினார்.
இந்த வன்முறைகளுக்கு, பொருளாதார நிலை, குடிபோதை, போதைப்பொருள் பயன்பாடு ஆகியவை நேரடிக் காரணங்களாக இல்லாவிட்டாலும், குடும்பத்திலும், சமூக வாழ்விலும் பாலியல் சமத்துவமின்மை நிலவுவதே இப்பிரச்சனைக்கு அடிப்படைக் காரணம் எனக் கூறினார் ஆயர் Sánchez.
மெக்சிகோவில் ஒவ்வோர் ஆண்டும் 1,20,000 பாலியல் வன்செயல்கள் நடக்கின்றன, இவற்றில் 1,06,000 புகார்கள், கண்டுகொள்ளாமல் விடப்படுகின்றன என்ற தேசிய மகளிர் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளதையும் ஆயர் Sánchez சுட்டிக்காட்டினார்.
இன்று உலகில் 70 விழுக்காட்டுக்கு மேற்பட்ட பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு தடவையாவது வன்முறைக்கு உள்ளாகின்றனர் என, ஐ.நா. அறிவித்துள்ளது.

ஆதாரம் : Fides

6. கர்நாடக ஆயர்: கத்தோலிக்கர், நம்பிக்கை ஆண்டின் சாட்சிகளாக வாழ்கின்றனர்

நவ.26,2013. விசுவாசத்தின் சாட்சிகளாய் வாழ்தல், இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்செல்லுதல், அன்றாட வாழ்வில் நற்செய்தி அறிவித்தல் ஆகிய மூன்று பாடங்களை, இந்த நம்பிக்கை ஆண்டில் தனது மறைமாவட்ட விசுவாசிகள் கற்றுக்கொண்டுள்ளனர் என்று இந்திய ஆயர் ஒருவர் கூறினார்.
மங்களூரில் மூன்று நாள்கள் நடைபெற்ற நம்பிக்கை ஆண்டு நிறைவு விழா குறித்து ஆசியச்செய்தி நிறுவனத்திடம் பேசிய கர்நாடக மாநிலத்தின் மங்களூர் ஆயர் அலாய்சியஸ் பால் டி சூசா, இவ்விழாவில் இம்மறைமாவட்டத்தின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் அனைத்து வயது விசுவாசிகளும் கலந்து கொண்டனர் எனத் தெரிவித்தார்.
கத்தோலிக்கர் தங்கள் விசுவாசத்தை அன்றாட வாழ்வில் நடைமுறைப்படுத்தவிருப்பதை அறிவித்த விதம், திருஅவையின் மறைக்கல்வியையும் போதனைகளையும் கற்றுக்கொள்வதற்கு அவர்கள் காட்டிய ஆர்வம் ஆகிய அனைத்தும் நம்பிக்கை ஆண்டின் கொடையாக இருந்ததாகவும் மங்களூர் ஆயர் கூறினார்.
2008ம் ஆண்டு செப்டம்பரில் கர்நாடகாவில் 24 ஆலயங்கள் தாக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை மங்களூர் மறைமாவட்டத்துக்குச் சொந்தமானவை.      

ஆதாரம் : AsiaNews

7. உலகின் வெப்பநிலை மாற்றம் குறித்த ஐ.நா. உலக மாநாடு கத்தோலிக்கப் பிரதிநிதிகளுக்கு அதிருப்தி

நவ.26,2013. உலகின் வெப்பநிலை மாற்றம் குறித்து ஐ.நா. உலக மாநாட்டின் முடிவுகள் அதிருப்தியளித்திருக்கும்வேளை, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்குத் திருஅவைத் தலைவர்கள் பொது மக்களை மேலும் ஊக்குவிக்குமாறு கத்தோலிக்க நிறுவனங்களின் பிரதிநிதிகள் கேட்டுள்ளனர்.
போலந்து நாட்டுத் தலைநகர் வார்சாவில் கடந்த சனிக்கிழமை நிறைவடைந்த உலக மாநாட்டில் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கையில் ஐ.நா. உறுப்பு நாடுகள் காட்டிய மந்தநிலையைச் சுட்டிக்காட்டியுள்ளனர் இப்பிரதிநிதிகள்.
தற்போது நிலவும் கடும் சுற்றுச்சூழல் பிரச்சனை குறித்து அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டவேளை, இந்த உச்சி மாநாடு இந்த எதிர்பார்ப்புக்கு வெகு தூரத்தில் உள்ளது என, CIDSE என்ற Brusselsஐ மையமாகக் கொண்ட 17 கத்தோலிக்க நிறுவனங்களின் கூட்டமைப்பு கூறியது.
195 உறுப்பு நாடுகள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில், ஐ.நா. ஆதரவுடன் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கும், நாடுகளின் தேசியக் கொள்கைகளுக்கும் இடையே தொடர்பில்லாமல் இருந்த்தென இக்கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கூறினர்.
2014ம் ஆண்டு டிசம்பரில் பெரு நாட்டு லீமாவில் நடைபெறும் வெப்பநிலை மாற்றம் குறித்த அடுத்த மாநாடு தொடங்கும்வரை ஒவ்வொரு மாதமும் ஒருநாள் உண்ணா நோன்பு இருப்பதற்கு CIDSE கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

ஆதாரம் : CNS

8. இந்தியாவில் 278 பல்கலைக்கழகங்களைத் திறப்பதற்கு மத்திய அரசு முடிவு

நவ.26,2013. இந்தியாவில் மேலும், 278 பல்கலைக்கழகங்கள், 388 கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உயரதிகாரி தெரிவித்தார்.
பெங்களூருவில் இஞ்ஞாயிறன்று நடைபெற்ற அகில இந்திய உயர்கல்வி துறை அமைச்சர்கள் மாநாட்டில் இவ்வாறு தெரிவித்த  மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உயரதிகாரி அஷோக் தாகூர், மத்திய அரசின் முதன்மைத் திட்டத்தின் மூலம், நாடு முழுவதும், 278 புதிய பல்கலைக்கழகங்கள் மற்றும் 388 கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன என்றார்.
இவை, 22 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் திறக்கப்படவுள்ளன. மேலும், தனியார் கல்லூரிகளை ஊக்குவிக்கும் வகையில், சிறந்த கல்லூரிகளைத் தேர்ந்தெடுத்து, பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆதாரம் : PTI

9. உணவுப் பாதுகாப்பு வழங்கும் கிராமம்

நவ.26,2013. அசாம் மாநிலத்தில், இலட்சுமிபூர் மாவட்டத்தின், சராய்டோலினி கிராமத்தில் யாரும் பசியால் வெறும் வயிற்றுடன் தூங்கக்கூடாது என்ற கொள்கையில், ஏழைகளின் பசியைப் போக்குவதற்கு என்றே, தனியாக உணவுத் தானியங்கள் பயிரிடுவதை, கடந்த, 50 ஆண்டுகளாக பின்பற்றி வருகிறது அக்கிராமம்.
ஆயிரம் பேர் வாழ்கின்ற இந்தக் கிராமத்தில் நிலம் வைத்திருக்கும் மக்கள், தானமாக அளித்த நிலம் சில ஏக்கர் உள்ளது. வறுமையில் உள்ள ஏழை மக்களின் பசியைப் போக்கும் வகையில், இந்த நிலத்தில் பயிரிடப்படும், உணவு தானியங்கள் முழுக்க முழுக்க, ஏழைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. 1961ம் ஆண்டு முதல் சமூக பொறுப்புடனும், மனித நேயத்துடன் இதனைச் செய்து வருகிறது இக்கிராமம்.
இந்தியாவில் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழும் மக்கள் உட்பட, அனைத்து தரப்பு மக்களுக்கும், உணவு வழங்குவதை உறுதிசெய்யும் வகையில், மத்திய அரசு உணவு பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தி உள்ளது.
அனைத்து மக்களுக்கும், நியாயமான விலையில், உணவுப் பொருட்கள் கிடைக்க வழி செய்வதுதான், இந்தச் சட்டத்தின் நோக்கம். ஆனால், இந்த சட்டம் வருவதற்கு, முன்பே, இந்த சராய்டோலினி கிராமம்  ஏழை மக்களுக்காக, தனியாக நிலம் ஒதுக்கி, உணவு தானியங்களைப் பயிரிட்டு வருகிறது.
பயிர் விளைந்ததும், இவற்றை அறுவடை செய்து, பொதுவான இடத்திற்கு கொண்டு வருகின்றனர். பொது நிகழ்ச்சி ஒன்றை நடத்தி, ஏழை மக்களுக்கு அந்த விளைச்சலை பங்கிட்டு வழங்குகின்றனர்.
சுதந்திரப் போராட்ட வீரரும், பூமி தான இயக்கத்தைத் தோற்றுவித்தவருமான, வினோபா பாவே இந்தக் கிராமத்திற்கு வந்திருந்தார். அவரின், பூமி தான இயக்கம் பற்றி கேட்ட, இவ்வூர் மக்கள், அதன்பின் உருவாக்கியதுதான் இத்திட்டம்.

ஆதாரம் : தினமலர்
 

No comments:

Post a Comment

Pope prays for global peace and for all victims of religious persecution

  Pope prays for global peace and for all victims of religious persecution Pope Francis calls for peace in conflict zones, solidarity with t...