Friday, 1 November 2013

செய்திகள் - 31.10.13

செய்திகள் - 31.10.13
 ------------------------------------------------------------------------------------------------------

1திருத்தந்தை பிரான்சிஸ்: இயசுவின்மீது நாம் கொண்டுள்ள அன்பு எத்தகையது?

2. வறியோருக்கு உதவுதல் என்பது, கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் விடுக்கப்பட்டுள்ள அடிப்படையான ஓர் அழைப்பு - திருத்தந்தை பிரான்சிஸ்

3. 'உலகில் அமைதி' என்ற சுற்றுமடலின் பொன்விழாவை புனித பூமியில் கொண்டாடுவது மிகவும் பொருத்தமானது - கர்தினால் டர்க்சன்

4. கர்தினால் Filoni அவர்கள் பாகிஸ்தானில் மேய்ப்புப் பணி பயணம்

5.அலெப்போவிலிருந்து கடத்தப்பட்ட இரு ஆயர்கள் வைக்கப்பட்டுள்ள இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது - லெபனன் பாதுகாப்பு அமைச்சகம்

6. உலகத்தலைவர்களின் தரவரிசைப்பட்டியலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 4ம் நிலை

7. குளிர்காலத்தில் கண்ணாடிகள் மூலம் முதல் தடவையாக ஒளிபெறும் நகரம்

------------------------------------------------------------------------------------------------------

1திருத்தந்தை பிரான்சிஸ்: இயசுவின்மீது நாம் கொண்டுள்ள அன்பு எத்தகையது?

அக்.31,2013. இயசுவின்மீது நாம் கொண்டுள்ள அன்பு, திருத்தூதர் பவுல் அடியார் கொண்டிருந்த அன்பைப்போல் உள்ளதா அல்லது எருசலேம் நகர், இயேசுமீது காட்டிய அன்பைப்போல் உள்ளதா என்ற கேள்வியை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் எழுப்பினார்.
வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் புனித செபஸ்தியார் சிற்றாலயத்தில் முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் கல்லறையுள்ள பீடத்தில் ஒவ்வொரு வியாழனன்றும் போலந்து நாட்டு மக்கள் கூடிவந்து திருப்பலி நிறைவேற்றி வருகின்றனர்.
அக்டோபர் 31, இவ்வியாழனன்று இச்சிற்றாலயத்தில் கூடியிருந்த மக்களுக்கு காலை திருப்பலி நிகழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பவுல் அடியார் உரோமையருக்கு எழுதிய திருமுகம், லூக்கா நற்செய்தி ஆகிய நூல்களின் வாசகங்களை தன் மறையுரையின் மையமாக்கினார்.
கிறிஸ்துவின்மீது பற்றுகொண்ட பவுல் அடியார் தன் சொந்த பாதுகாப்பு அனைத்தையும் துறப்பதற்குத் துணிந்ததை எடுத்துக்கூறி, அத்தகைய அன்பு நம்மிடம் விளங்குகிறதா என்ற கேள்வியையும் எழுப்பினார் திருத்தந்தை.
இதற்கு மாறாக, கிறிஸ்துவின் உள்ளத்தை வேதனைப்படுத்திய எருசலேம் நகரின் மக்களைப்போல, நாமும் கிறிஸ்துவின்மீது கொண்டுள்ள அன்பை வசதிக்கேற்ப மாற்றிக்கொள்கிறோமா என்பதையும் கேள்வியாக முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களின் பரிந்துரையால் நாம் அனைவரும் புனித பவுல் அடியாரைப் போன்று உறுதியான அன்பில் வளர வேண்டுவோமாக என்று சொல்லி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது மறையுரையை நிறைவு செய்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. வறியோருக்கு உதவுதல் என்பது, கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் விடுக்கப்பட்டுள்ள அடிப்படையான ஓர் அழைப்பு - திருத்தந்தை பிரான்சிஸ்

அக்.31,2013. மனித சமுதாயத்தில் தீராமல் தொடர்கின்ற வறுமையின் பல்வேறு வடிவங்களுக்குப் பதில் அளிப்பதில் தீவிரமாகத் தன்னையே அர்ப்பணம் செய்பவரே ஆண்டவரின் உண்மையான சீடர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
'புனித பேதுருவின் நண்பர் வட்டம்' என்ற பெயரில் இயங்கிவரும் ஒரு பிறரன்பு அமைப்பின் உறுப்பினர்களை இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வமைப்பினர் திருப்பீடத்திற்கு உறுதுணையாக ஆற்றிவரும் பிறரன்புப் பணிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
வறியோருக்கு உதவுதல் என்பது, தனிப்பட்ட, குறிக்கப்பட்ட அழைப்பு என்று எண்ணாமல், கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் விடுக்கப்பட்டுள்ள பொதுவான, அடிப்படையான ஓர் அழைப்பு என்பதை அனைவரும் உணரவேண்டும் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
உரோம் நகரில் உள்ள அனைத்து ஆலயங்களையும் பராமரிக்கும் பணிக்கென 'பேதுருவின் காசு' என்ற பெயரில், நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டிருக்கும் 'புனித பேதுருவின் நண்பர் வட்டத்தைச் சார்ந்தவர்கள், ஆலயப் பராமரிப்புடன், மக்க்களைக் கட்டியெழுப்பும் பணியிலும் ஈடுபட்டிருப்பது, நிறைவைத் தருகிறதென திருத்தந்தை சிறப்பாகக் குறிப்பிட்டார்.
நிதியுதவி என்ற அளவில் மட்டும் நின்றுவிடாமல், இவ்வமைப்பினர் தங்கள் செபங்களால் ஆன்மீக உறுதுணையும் வழங்கி வருவதற்காகவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மகிழ்வையும், நன்றியையும் வெளிப்படுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. 'உலகில் அமைதி' என்ற சுற்றுமடலின் பொன்விழாவை புனித பூமியில் கொண்டாடுவது மிகவும் பொருத்தமானது - கர்தினால் டர்க்சன்

அக்.31,2013. போரற்ற சூழல் மட்டும் அமைதியைக் கொணராது, மாறாக, மனிதர்களுக்குரிய அடிப்படை மாண்பு உறுதி செய்யப்படும்போதுதான் இவ்வுலகில் அமைதி நிரந்தரமாகக் குடிகொள்ளும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
'உலகில் அமைதி' என்ற தலைப்பில், முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் வெளியிட்ட சுற்றுமடலின் 50ம் ஆண்டு நிறைவையொட்டி, எருசலேமில் இயங்கும் சலேசிய பாப்பிறைப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த விழாவில், இவ்வியாழனன்று உரையாற்றிய, திருப்பீடத்தின் நீதி, அமைதி அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் இவ்வாறு கூறினார்.
1977ம் ஆண்டு, எருசலேம் விவிலிய மையத்தில் தான் பயின்ற அனுபவத்தை மகிழ்வுடன் நினைவுகூர்ந்த கர்தினால் டர்க்சன் அவர்கள், 'உலகில் அமைதி' சுற்றுமடலின் பல்வேறு உயர்ந்த அம்சங்களை விளக்கிக் கூறினார்.
'நல்மனம் கொண்ட அனைவருக்கும் அமைதி' என்று வானதூதர்கள் முதன் முதல் அறிவித்த புனித பூமியில், 'உலகில் அமைதி' என்ற சுற்றுமடலின் பொன்விழாவைக் கொண்டாடுவது, மிகவும் பொருத்தமானது என்றும் கர்தினால் டர்க்சன் அவர்கள் சுட்டிக்காட்டினார்.
'பனிப்போர்' என்று அழைக்கப்பட்ட 1963ம் ஆண்டின் நிலையம், 2013ம் ஆண்டின் நிலையம், ஆயுதக் குவிப்பைப் பொருத்தவரை அதிகமாக மாறவில்லை என்பதைக் குறித்து, கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் கவலையை வெளியிட்டார்.
ஆயுதங்களின் எண்ணிக்கையை உலக அரசுகள் குறைத்து வருவதாகக் கூறினாலும், ஆயுதங்களின் சக்தியைக் கூட்டிவருவது, அழிவுக்கு இட்டுச் செல்லும் உறுதியான வழி என்று, திருஅவை கூறிவரும் கருத்துக்களை கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் உரையில் சிறப்பாகச் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. கர்தினால் Filoni அவர்கள் பாகிஸ்தானில் மேய்ப்புப் பணி பயணம்

அக்.31,2013. நற்செய்தி அறிவிப்புப்பணி திருபீடப்பேராயத்தின் தலைவரான கர்தினால் Fernando Filoni அவர்கள், அக்டோபர் 31, இவ்வியாழன் முதல் பாகிஸ்தானில் மேய்ப்புப் பணி பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
பைசலாபாத் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமிக்கப்பட்டுள்ள அருள்பணியாளர் Joseph Arshad அவர்களை, நவமபர் 1, இவ்வெள்ளியன்று கொண்டாடப்படும் அனைத்துப்புனிதர்களின் பெருவிழாவன்று, கர்தினால் Filoni அவர்கள், ஆயராகத் திருநிலைப்படுத்தவுள்ளார்.
இந்தத் திருநிலைத் திருப்பலியில் 10,000க்கும் அதிகமான மக்கள் கலந்துகொள்வர் என்றும்பாகிஸ்தானில் பணியாற்றும் ஆயர்கள்குருக்கள், இருபால் துறவியர் ஆயிரக்கணக்கில் கலந்துகொள்வர் என்றும் பைசலாபாத் முதன்மை அருள்பணியாளரான Khalid Rashid Asi அவர்கள் Fides செய்தியிடம் கூறினார்.
ஆயர் Arshad அவர்கள் அருட்பொழிவு செய்யப்படும் திருச்சடங்கின்போது, காவல்துறையினரின் பலத்த காவலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அருள்பணியாளர் Rashid Asi தெரிவித்தார்.
கர்தினால் Filoni அவர்களின் மேய்ப்புப்பணி பயணத்தின்போது, பாகிஸ்தான் ஆயர்கள் அனைவரையும், இவ்வியாழனன்று சந்தித்து உரையாடினார்.

ஆதாரம் : Fides

5.அலெப்போவிலிருந்து கடத்தப்பட்ட இரு ஆயர்கள் வைக்கப்பட்டுள்ள இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது - லெபனன் பாதுகாப்பு அமைச்சகம்

அக்.31,2013. சிரியாவில் அலெப்போ நகரிலிருந்து கடத்தப்பட்ட இரு ஆயர்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தைக் கண்டறிந்துள்ளதாகவும், அவர்களுடன் தொடர்பு கொள்ளும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் லெபனன் அரசின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் அலெப்போ நகரிலிருந்து Boulos al-Yazigi மற்றும் Yohanna Ibrahim என்ற இரு ஆயர்கள் அடையாளம் தெரியாத குழுவினரால் கடத்தப்பட்டனர்.
இவ்விருவரும் அடைத்து வைக்கப்பட்டுள்ள இடத்தைக் கண்டறிந்துள்ளதாக லெபனன் பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரியான தளபதி Abbas Ibrahim அவர்கள் இச்செவ்வாயன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
ஆயர்களைக் கடத்தியவர்களுடன் லெபனன் பாதுகாப்பு அமைச்சகம் தொடர்புகள் மேற்கொள்ள முயற்சிகள் செய்து வருவதாகவும், இந்த முயற்சிகள் நல்ல பலனளிக்கும் என்று நம்புவதாகவும் தளபதி Ibrahim அவர்கள் விடுத்த அறிக்கையை ஃபீதெஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மாரனைட் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை கர்தினால் Bechara Boutros Rai அவர்கள், கடந்த வாரம் கத்தார் இளவரசர் Tamim bin Hamad al-Thani அவர்களைச் சந்தித்தபோது இவ்விரு ஆயர்களை விடுவிக்கும் முயற்சிகளில் அவர் தலையிட வேண்டும் என்ற வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : ICN/ Fides

6. உலகத்தலைவர்களின் தரவரிசைப்பட்டியலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 4ம் நிலை

அக்.31,2013. மக்களின் சிந்தனைகளில் பாதிப்புகளை உருவாக்கும் உலகத்தலைவர்களின் தரவரிசைப்பட்டியலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 4ம் நிலையில் உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வெளியாகும் Forbes என்ற வர்த்தக இதழ், மக்களின் எண்ணங்களில் மாற்றங்களை உருவாக்கும் சக்தி பெற்ற உலகத்தலைவர் யார் என்ற கேள்வியின் அடிப்படையில் மேற்கொண்ட ஓர் ஆய்வின் முடிவுகள் அண்மையில் வெளியாயின. மக்களின் எண்ணங்களில் மற்றங்களை உருவாக்கும் உலகத்தலைவர்களின் வரிசையில், இரஷ்ய அரசுத்தலைவர் Vladimir Putin முதல் இடத்திலும், அமெரிக்க மற்றும் சீன அரசுத்தலைவர்கள் இரண்டாவது, மூன்றாவது இடங்களிலும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர்.
உலக அரசு என்ற அளவில், அதிகாரம் எதுவும் பெறாத திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்த வரிசையில் நான்காவது இடம்பெற்றிருப்பது, ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதிகாரம் என்பது ஆளுமை செய்வதற்கல்ல், மாறாக, பணி செய்வதற்கே என்பதை வலியுறுத்திவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் எளிமை, பரிவு, ஆகிய பண்புகளால் இந்தத் தரவரிசையில் உயர்ந்து நிற்கிறார் என்பதை Forbes இதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆதாரம் : Vatican Insider

7. குளிர்காலத்தில் கண்ணாடிகள் மூலம் முதல் தடவையாக ஒளிபெறும் நகரம்

அக்.31,2013. நார்வே நாட்டில் வழக்கமாக, குளிர் காலத்தில் சூரிய ஒளி இன்றி இருண்டு கிடக்கும் Rjukan என்ற நகருக்கு மூன்று இராட்சத கண்ணாடிகள் மூலம் முதற்தடவையாக இந்த ஆண்டு ஒளி கிடைத்துள்ளது.
ர் ஆழமான பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் இந்த நகருக்கு, அதனைச் சூழ்ந்துள்ள மூன்று மலைகளால் குளிர் காலத்தில் 6 மாதங்களுக்கு சூரிய ஒளி கிடைக்காது. அந்த மலைகள் சூரிய ஒளியை அந்நகருக்குக் கிடைக்காமல் மறைத்துவிடும்.
ஆகவே இந்த நகரைச்சுற்றி அமைந்துள்ள மலைகளில் இராட்சத கண்ணாடிகளைப் பயன்படுத்தி, குளிர் காலத்தில் 6 மாதங்களுக்கு ஒளி வழங்க வேண்டும் என்ற திட்டம், 100 ஆண்டுகளுக்கு முன்னரே அரசிடம் முன்வைக்கப்பட்டது.
ஆனால், அதற்கான தொழில்நுட்பம் 2003ம் ஆண்டில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. குளிர்காலத்தில் முதல் தடவையாக சூரிய ஓளியை வரவேற்க இந்நகரம் தற்போது பெரும் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.
எதிர்பாராத ஒளி, கண்பார்வையைக் கெடுத்துவிடலாம் என்பதை மனதில் கொண்டு, அந்த நகரத்தில் உள்ள பள்ளிச் சிறார்கள் அணிந்து கொள்வதற்காக, குளிர்விக்கும் மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆதாரம் : BBC

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...