செய்திகள் - 01.11.13
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : புனிதராக வாழ்வது நம் ஒவ்வொருவருக்கும் விடுக்கப்படும் அழைப்பு
2. கிறிஸ்தவர்க்கெதிரான அடக்குமுறைகளில் பலியானவர்களைச் சிறப்பாக நினைவுகூர்வோம், திருத்தந்தை பிரான்சிஸ்
3. கிறிஸ்தவர்கள் துன்பங்களையும் சோதனைகளையும் எப்படி எதிர்கொள்வதென அறிந்திருக்கின்றனர் : திருத்தந்தை பிரான்சிஸ்
4. 2014ம் ஆண்டு பிப்ரவரியில் புதிய கர்தினால்கள் அவை
5. டென்வர் பேராயர் : கடவுளைப் புறக்கணிப்பது மக்களாட்சிக்கு அச்சுறுத்தல்
6. இந்தியாவில் சிறாரின் நலவாழ்வையும், கண்தானங்களையும் ஊக்குவிப்பதற்கு கத்தோலிக்க அதிகாரிகள் முயற்சி
7. பாத்திமாவின் மூன்றாவது இரகசியத்தின் கையெழுத்துப் பிரதி விரைவில் அருங்காட்சியத்தில்....
8. வெளிநாடுகளில் 16 இலட்சம் மலையாளிகள்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : புனிதராக வாழ்வது நம் ஒவ்வொருவருக்கும் விடுக்கப்படும் அழைப்பு
நவ.01,2013. புனிதர்கள் தெய்வ மனிதர்களோ அல்லது நிறைவான மனிதர்களோ அல்ல, மாறாக, அவர்கள் நம்மைப்போன்று, நம் ஒவ்வொருவரைப்போன்று இருந்தவர்கள் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அனைத்துப்
புனிதர்களின் பெருவிழாவாகிய இவ்வெள்ளிக்கிழமையன்று வத்திக்கான் தூய பேதுரு
வளாகத்தில் கூடியிருந்த ஏறத்தாழ ஒரு இலட்சம் திருப்பயணிகளுக்கு நண்பகல்
மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், புனிதர்கள் இறைவனின் நண்பர்கள், இறைவனின் வாக்குறுதி பொய்க்காது என்று அவர்கள் நமக்கு உறுதியளிக்கின்றனர் என்று கூறினார்.
புனிதர்கள் விண்ணக மகிமையை அடைவதற்கு முன்னர், இவ்வுலகின் இன்பங்கள், துன்பங்கள், போராட்டங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றோடு சாதாரண வாழ்வு வாழ்ந்தவர்கள், ஆயினும் அவர்களது வாழ்வை இறைவனின் அன்பு பற்றிய அறிவே மாற்றியது என்றும் உரைத்தார் திருத்தந்தை.
புனிதர்கள், தங்கள் வாழ்வில் துன்பங்களைத் தாங்கி, பகைவர்களை வெறுக்காமல், தீமையை நன்மையால் வென்று, மகிழ்ச்சியையும் அமைதியையும் பரப்பியவர்கள் என்றும் உரைத்த திருத்தந்தை, புனிதராக மாறுவது சிலருக்குக் கிடைத்த சலுகை அல்ல, மாறாக, அது ஒவ்வொருவருக்குமான அழைப்பு என்றும் கூறினார்.
எனவே நாம் தூய்மையான பாதையில் நடப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளோம், இந்தப் பாதைக்குப் பெயரும் முகமும் உண்டு, அது இயேசு கிறிஸ்து என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், நமது வாழ்க்கையின் இருப்பு மரணம் அல்ல, மாறாக விண்ணகம் என்றும் மூவேளை செப உரையில் கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. கிறிஸ்தவர்க்கெதிரான அடக்குமுறைகளில் பலியானவர்களைச் சிறப்பாக நினைவுகூர்வோம், திருத்தந்தை பிரான்சிஸ்
நவ.01,2013. வன்முறைகளில், குறிப்பாக, கிறிஸ்தவர்க்கெதிரான அடக்குமுறைகளில் பலியானவர்களையும்,
தரமான வாழ்வுதேடிவரும் வழியில் தங்கள் உயிரை இழந்த நம் சகோதரர்களையும்
இந்நாளில் நினைவுகூர்ந்து செபிப்போம் என இம்மூவேளை செப உரைக்குப் பின்னர்
கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்நாள்களில் கல்லறைகளைச் சந்திப்பவர்களோடு தான் ஆன்மீகரீதியில் ஒன்றித்திருப்பதாகவும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், கல்லறைகளில் உறங்கும் அவர்கள் விசுவாசத்தின் அடையாளமாகவும், உயிர்ப்பின் நாளுக்காகக் காத்திருப்பவர்களாகவும் உள்ளனர் என்றும் கூறினார்.
மேலும்,
ஆப்ரிக்காவின் நைஜரில் சஹாரா பாலைவனத்தைக் கடக்க முயன்றபோது உயிரிழந்த
சகோதர சகோதரிகளை நினைத்து அமைதியில் செபிப்போம் என்று வத்திக்கான் புனித
பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஒரு இலட்சம் திருப்பயணிகளிடம் சொல்லி
அவர்களோடு சேர்ந்து சிறிதுநேரம் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அனைத்துப்
புனிதர்களின் பெருவிழாவாகிய இவ்வெள்ளிக்கிழமை உரோம் நேரம் மாலை 4 மணிக்கு
உரோம் வெரானோ கல்லறைத் தோட்டத்தில் தான் திருப்பலி நிகழ்த்துவது குறித்து
குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ், இறந்த அனைவருக்காகவும், சிறப்பாக, கிறிஸ்தவர்க்கெதிரான அடக்குமுறைகளில் பலியானவர்களை இத்திருப்பலியில் சிறப்பாக நினைத்துச் செபிப்பதாகத் தெரிவித்தார்.
நைஜரிலிருந்து அல்ஜீரியா செல்லும் வழியில் சஹாரா பாலைவனத்தைக் கடக்க முயன்றபோது, இடைநடுவில்
வாகனம் பழுதடைந்ததால் குடிக்க நீரின்றி தாகத்தால் இவ்வியாழனன்று உயிரிழந்த
87 பேரின் சடலங்களை மீட்டுள்ளதாக நைஜரிலுள்ள மீட்புப் பணியாளர்கள்
கூறுகின்றனர்.
சஹாரா
பாலைவனத்துக்குக் கீழேயுள்ள ஆப்ரிக்க நாடுகளுக்கும் ஐரோப்பாவுக்கும்
இடையில் குடிபெயரும் மக்களின் முக்கிய பாதையில் நைஜர் நாடு உள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. கிறிஸ்தவர்கள் துன்பங்களையும் சோதனைகளையும் எப்படி எதிர்கொள்வதென அறிந்திருக்கின்றனர் : திருத்தந்தை பிரான்சிஸ்
நவ.01,2013. ஆண்டவரில் நம்பிக்கை மற்றும் அமைதியில், துன்பங்களையும் சோதனைகளையும், தோல்விகளையும்
எப்படி எதிர்கொள்வதென கிறிஸ்தவர்கள் அறிந்திருக்கின்றனர் என்று தன்
டுவிட்டர் பக்கத்தில் இவ்வெள்ளியன்று எழுதியுள்ளார் திருத்தந்தை
பிரான்சிஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தி ஏறத்தாழ தினமும் ஒன்பது மொழிகளில் வெளியிடப்படுகின்றது.
மேலும், ருமேனியாவில் கம்யூனிச ஆட்சியின்போது 1951ம் ஆண்டில் கொல்லப்பட்ட ஆயர் Anton Durcovici அவர்களின் மறைசாட்சி வாழ்வையும், அமெரிக்க ஐக்கிய நாடு, அயர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளில் பிறந்த மூன்று அருள்சகோதரிகளின் வீரத்துவமான புனித வாழ்வையும் இவ்வியாழனன்று அங்கீகரித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இதன்மூலம் இந்த நால்வரையும் வணக்கத்துக்குரியவர்கள் என அறிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்த அறிவிப்பு, இவர்களை முத்திப்பேறுபெற்ற நிலைக்கு உயர்த்துவதற்கு உதவும்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் Ohio மாநிலத்தில் Glendaleல் 1895ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி பிறந்த அருள்சகோதரி Celestine Bottego, மரியின் சவேரியன் மறைப்போதக சகோதரிகள் சபையை நிறுவியவர்.
1718ம் ஆண்டில் அயர்லாந்தில் பிறந்த அருள்சகோதரி Honora "Nano" Nagle, புனித காணிக்கை அன்னை சகோதரிகள் சபையை ஆரம்பித்தவர்.
1910ம் ஆண்டு இத்தாலியின் Vicenzaவில் பிறந்த அருள்சகோதரி Olga Gugelmo, திருஅவையின் புதல்வியர் சபையை நிறுவியவர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. 2014ம் ஆண்டு பிப்ரவரியில் புதிய கர்தினால்கள் அவை
நவ.01,2013. புதிய கர்தினால்களை உருவாக்கும் Consistory என்ற கர்தினால்கள் அவை 2014ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி, புனித பேதுருவின் தலைமைப்பீட விழாவன்று இடம்பெறும் என்று திருப்பீடம் அறிவித்துள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இது குறித்து கர்தினால்கள் ஆலோசனை அவைக்கும், ஆயர்கள் மாமன்ற அவைக்கும் ஏற்கனவே அறிவித்துள்ளார் எனத் தெரிவித்த திருப்பீட பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி, இப்படி ஏற்கனவே அறிவித்திருப்பது, உலகெங்கும் இருக்கின்ற கர்தினால்களை ஈடுபடுத்தும் மற்ற கூட்டங்களைத் திட்டமிட உதவும் என்று கூறினார்.
அதேநேரம்,
திருஅவையின் நிர்வாகம் மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகள் குறித்து ஆய்வு
செய்யும் 15 பேர் கொண்ட கர்தினால்கள் அவைக் கூட்டம் வழக்கம்போல்
பிப்ரவரியில் நடைபெறும் எனவும் அருள்தந்தை லொம்பார்தி தெரிவித்தார்.
தற்போது கத்தோலிக்கத் திருஅவையிலுள்ள மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 201(அக்.19, 2013).
இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்குட்பட்ட
கர்தினால்களின் எண்ணிக்கை 109. திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும்
கான்கிளேவ் அவைக்கு அதிகபட்சம் 120 கர்தினால்கள் தேவை என திருஅவை சட்டம்
கூறுகிறது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. டென்வர் பேராயர் : கடவுளைப் புறக்கணிப்பது மக்களாட்சிக்கு அச்சுறுத்தல்
நவ.01,2013. கடவுளைப் புறக்கணிப்பது அதிகரித்து வருவது, மக்களாட்சியின்
அடித்தளங்களுக்கு அச்சுறுத்தலை முன்வைக்கின்றது என்று அமெரிக்க ஐக்கிய
நாட்டின் டென்வர் பேராயர் சாமுவேல் அக்குய்லா கூறினார்.
கத்தோலிக்கர் நற்செய்தியின் உண்மையை, தனிப்பட்ட மற்றும் பொது வாழ்வில் வாழுமாறு வலியுறுத்திய பேராயர் அக்குய்லா, ஒருவர் அறிந்தோ அறியாமலோ கடவுளை ஒதுக்கி வாழும்போது, பொய்களின் மற்றும் தீயவனின் தந்தையை அணைத்துக்கொள்கிறார் என்றும் எச்சரித்தார்.
வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மற்றும் அரசு அதிகாரிகளைத் தூயஆவியானவர் நிறைக்கவேண்டுமெனச் செபித்த திருப்பலியில் இவ்வாறு உரைத்த பேராயர் அக்குய்லா, இன்றைய நவீன சமுதாயத்தின் கடவுள் புறக்கணிப்பு, ஒரு தனிப்பட்ட சவாலாக இருக்கின்றது என்றும் கூறினார்.
டென்வரில் வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்காகத் தூயஆவியானவரின் வரம்வேண்டிச் செபிக்கும் திருப்பலி 700 ஆண்டுகால மரபைக் கொண்டுள்ளது.
ஆதாரம் : CNA
6. இந்தியாவில் சிறாரின் நலவாழ்வையும், கண்தானங்களையும் ஊக்குவிப்பதற்கு கத்தோலிக்க அதிகாரிகள் முயற்சி
நவ.01,2013. இந்தியாவில் சிறாரின் நலவாழ்வையும், கண்தானங்களையும் ஊக்குவிப்பதற்கு கத்தோலிக்க அதிகாரிகள் முயற்சிகள் எடுத்து வருகின்றனர் என்று CHAI எனப்படும் இந்திய கத்தோலிக்க நலவாழ்வு கழக இயக்குனர் அருள்பணி டோமி தாமஸ் கூறினார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் CNS கத்தோலிக்க செய்தி நிறுவனத்திடம் இவ்வாறு தெரிவித்த அருள்பணி தாமஸ், சிறார் சத்துணவு உண்பதையும், உடல்பயிற்சி செய்வதையும் CHAI கழக உறுப்பினர்கள் ஊக்குவிப்பார்கள் என்று கூறினார்.
இறந்த உடல்கள் சிதைவைக்கப்படும்போது, கண்கள் எரிக்கப்படவோ அல்லது புதைக்கப்படவோ தகுதியுடையவை அல்ல, ஏனெனில் கண்கள் விலையேறப்பெற்றவை என்று சொல்லி, தங்களது கழகம் கண்தானங்களையும் ஊக்குவிப்பதாகப் பகிர்ந்து கொண்டார் அருள்பணி தாமஸ்.
கடந்த அக்டோபரில் CHAI கழகம் நடத்திய 70வது மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 800க்கும் அதிகமானோர் கண்தானங்கள் செய்வதற்கு உறுதியளித்ததாகவும் அருள்பணி தாமஸ் கூறினார்.
மேலும், இக்காலத்தில் சிறார் அதிகமாக விளையாடுவதில்லை, உண்மையான விளையாட்டுக்களை விளையாடுவதில்லை, பதப்படுத்தப்பட்ட மற்றும் கொழுப்பு மிகுந்த உணவுகளைச் சாப்பிடுகின்றனர், வேதியப்பொருள்கள் கலந்த குளிர்பானங்களைக் குடிக்கின்றனர், இவை
கடும் நலவாழ்வுச் சீர்கேடுகளுக்கு இட்டுச்செல்கின்றன என்று இந்திய ஆயர்
பேரவையின் கல்வி மற்றும் கலாச்சாரப் பணிக்குழுச் செயலர் அருள்பணி Joseph Manipadam கூறினார்.
இந்திய ஆயர் பேரவையின் கல்வி மற்றும் கலாச்சாரப் பணிக்குழுவில் 20 ஆயிரம் கத்தோலிக்கப் பள்ளிகளும், 600க்கும் மேற்பட்ட கல்லூரிகளும் பிற கத்தோலிக்க நிறுவனங்களும் உள்ளடங்கும்.
1943ம் ஆண்டில் நிறுவப்பட்ட CHAI கழகத்தில் 3,400க்கு மேற்பட்ட நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ளன. இதில் ஆயிரத்துக்கு மேற்பட்ட கத்தோலிக்க மருத்துவ அருள்சகோதரிகளும், 25 ஆயிரம் தாதியர் அருள்சகோதரிகளும், 10,000த்துக்கு அதிகமான மருத்துவப் பணியாளர்களும் உள்ளனர்.
ஆதாரம் : CNS
7. பாத்திமாவின் மூன்றாவது இரகசியத்தின் கையெழுத்துப் பிரதி விரைவில் அருங்காட்சியத்தில்....
நவ.01,2013.
போர்த்துக்கல் நாட்டு பாத்திமாவின் மூன்றாவது இரகசியத்தின் கையெழுத்துப்
பிரதி விரைவில் அருங்காட்சியத்தில் வைக்கப்படும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
1917ம் ஆண்டு ஜூனில், ஜசிந்தா, லூசியா, பிரான்சிஸ்
ஆகிய மூன்று சிறாருக்கு பாத்திமாவில் அன்னைமரியா அறிவித்த மூன்றாவது
இரகசியத்தை விளக்கும் அருள்சகோதரி லூசியாவின் கையெழுத்துப் பிரதி இம்மாதம்
30ம் தேதியன்று பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது.
1957ம்
ஆண்டுமுதல் இந்தப் பிரதி வத்திக்கானின் விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத்தின்
சுவடிக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இப்பிரதி இதுவரை இரண்டு தடவைகள்
இப்பேராயத்தைவிட்டு வெளியே கொண்டுவரப்பட்டுள்ளது.
1981ம்
ஆண்டில் முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள்
துப்பாக்கியால் சுடப்பட்ட பின்னர் அத்திருத்தந்தையின் வேண்டுகோளின்பேரில்
இது முதலில் வெளியே கொண்டுவரப்பட்டது.
அதன்பின்னர், கர்தினால் ஜோசப் இராட்சிங்கர்(முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்) அவர்கள், 2000மாம் ஆண்டில் போர்த்துக்கல் நாட்டு கொயம்ப்ராவில் அருள்சகோதரி லூசியாவைச் சந்தித்தபோது, இது உண்மையிலேயே அச்சகோதரியின் கையெழுத்துப் பிரதி தானா என்பதை உறுதி செய்வதற்காக அவர் இதனை எடுத்துச்சென்றார்.
ஆதாரம் : Romereports
8. வெளிநாடுகளில் 16 இலட்சம் மலையாளிகள்
நவ.01,2013. வெளிநாடுகளில், 16.25 இலட்சம் மலையாளிகள் வேலை செய்கின்றனர் என கேரள அரசு நடத்திய புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாகக் கூறிய கேரள மாநில திட்ட அமைச்சர் கே.சி.ஜோசப், வெளிநாடுகளில் வாழும் கேரள மாநிலத்தவரின் எண்ணிக்கை குறித்து, ஆய்வு நடத்தப்பட்டது. இதில், 16.25 இலட்சம் கேரளத்தவர்கள், வெளிநாடுகளில் வாழ்வது தெரிய வந்துள்ளது எனத் தெரிவித்தார்.
இவர்களில், 14.27 இலட்சம் பேர், தொழில் காரணமாக, வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள். இவர்களில், பெரும்பாலானோர், அரபு நாடுகளில் வாழ்கின்றனர். அதிலும், குறிப்பாக, சவுதி அரேபியாவில் மட்டும், 4.50 இலட்சம் மலையாளிகள் பணிபுரிகின்றனர் என்றும் அவர் கூறினார்.
அமெரிக்காவில், 78 ஆயிரம் பேரும், பிரிட்டனில், 45 ஆயிரம் பேரும் உள்ளனர். தொழில் விடயமாக குடிபெயர்ந்தவர்களில், 93 விழுக்காட்டினர், இளைஞர்கள். வெளிநாடுகளில் வேலை செய்யும், மலையாளப் பெண்களில், 59 ஆயிரம் பேர் தாதியர்கள். 10 ஆண்டுகளுக்கும் மேலாக, வெளிநாடுகளில் வாழும் கேரளத்தவர்கள், 3 இலட்சம் பேர். வெளி நாடுகளில் வேலை செய்வோரை நம்பி, கேரளாவில், 50 இலட்சம் பேர் வாழ்கின்றனர் என்றும் அமைச்சர் ஜோசப் கூறினார்.
No comments:
Post a Comment