Sunday, 26 January 2014

திருக்கேதீஸ்வரம் மனிதப் புதை குழியை முன்வைத்துச் சில கேள்விகள்: நிலாந்தன்

திருக்கேதீஸ்வரம் மனிதப் புதை குழியை முன்வைத்துச் சில கேள்விகள்: நிலாந்தன்

Source: Tamil CNN
 manar
திருக்கேதிச்சரத்தில் மனிதப் புதை குழி ஒன்று கடந்த 26ஆம் திகதி திறக்கப்பட்டுள்ளது. பதிகச் சிறப்பு மிக்க ஆலயத்திலிருந்து சுமாராக முன்னூறு மீற்றர் தொலைவில் ஆலயத்தின் புனிதப் பிரதேசத்தில் அது காணப்படுகின்றது. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர் தமிழ்ப் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஆகப் பெரிய மனிதப் புதைகுழி அது. கண்டுபிடிக்கப்பட்ட காலம், இடம் என்பவற்றின் காரணமாக அது அதிகரித்த முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது.
அது கண்டுபிடிக்கப்பட்ட காலம் எனப்படுவது ஜெனிவாவை நோக்கிச் செல்லும் ஒரு காலம். இக்காலப் பகுதியில் இப்படியொரு புதை குழி கிண்டப்படுவது அரசாங்கத்திற்கு மேலும் நெருக்கடிகளைக் கொடுக்கும். அதோடு இது தொடர்பில் ஆகக் கூடியபட்சம் வெளிப்படைத் தன்மையையும், நன்பகத் தன்மையையும் பேண வேண்டியிருக்கும்.
அதேசமயம், அது கண்டுபிடிக்கப்பட்ட இடம் மன்னார் மாவட்டம். இப்பொழுது இலங்கைத்தீவில் அதிகம் துணிச்சலான அரசியற் கருத்துக்களை கூறிவரும் மதப் பெரியராக மன்னார் மறை மாவட்ட ஆயர் காணப்படுகிறார். எனவே, அவருடைய மறை மாவட்டத்துக்குள் இப்படியொரு புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் அவர் இதில் கூடுதல் கரிசனை காட்டுவார். இது காரணமாகவும் இப்புதை குழி கூடுதல் கவனிப்பைப் பெறும். ஏற்கனவே, அது ஊடகங்களில் தொடர்ச்சியாகத் தலைப்புச் செய்தியாக வரத் தொடங்கிவிட்டது. இந்நிலையில் ஜெனிவாவை நெருங்க நெருங்க அது ஒரு விவகாரமாக மாறுமா? இல்லையா? என்பது அப்புதை குழயின் விஸ்தீரணத்தையும், அது தொடர்பில் வெளிப் படுத்தப்படும் உண்மைகளிலுமே தங்கியிருக்கிறது.
ஆனால், இந்த இடத்தில் ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டும். இன்று இக்கட்டுரையின் குவிமையமும் அதுதான்.
இப்புதை குழி கிண்டப்படத் தொடங்கி இன்று வரை சரியாக ஒரு மாதமாகிவிட்டது. ஆனால், அங்கே புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் தமது உறவினர்களின் எச்சங்களை அடையாளக் காண்பதற்காக எத்தனை பொதுமக்கள் அங்கே போயிருக்கிறார்கள்? இது விசயத்தில் சம்பந்தப்பட்ட பொதுசனங்களை ஒன்று திரட்டி அங்கு அழைத்துச் சென்று கிடைக்கக் கூடிய எச்சங்களை அடையாளம் காண்பதற்குரிய நடவடிக்கைகளில் தமிழ்க் கட்சிகளோ, தமிழ் அமைப்புக்களோ, மத நிறுவனங்களோ அல்லது மனித உரிமைக் குழுக்களோ இதுவரையில் இறங்காதது ஏன்? ஆலயத்திலிருந்து சுமார் 300 மீற்றர் தொலைவிலுள்ள ஒரு மனிதப் புதைகுழி தொடர்பில் ஆலய நிர்வாகம் இதுவரையிலும் கருத்து எதையும் தெரிவிக்காதது ஏன்? ஊடகங்கள் அதை ஒரு விவகாரம் ஆக்கிய அளவிற்கு பாதிக்கப்பட்ட பொதுமக்களோ அல்லது அரசியல் கட்சிகளோ அல்லது சிவில் அமைப்புகளோ அதை ஒரு விவகாரம் ஆக்காதது ஏன்?
இது போன்ற கேள்விகளைத்தான் கடந்த ஆண்டு இறந்த மூத்த மனித உரிமைச் செயற்பாட்டாளரான சுனிலா அபசேகரவும் கேட்டிருந்தார். கடந்த ஆண்டு தென்னிலங்கையில் மாத்தளையில் இப்படியொரு புதைகுழி தோண்டப்பட்டபோது அவர் உயிருடன் இருந்தார். அதையொட்டிய காலப் பகுதியில் கிறவுண்ட் வியூஸ் இணையத் தளத்திற்கு அவர் வழங்கிய ஒரு செவ்வியில் மேற்கண்டவாறு கேட்டிருந்தார்.
லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளில் இப்படிப் புதை குழிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அங்கெல்லாம் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திரண்டு சென்று எச்சங்களை அடையாளம் காட்ட முன்வருவார்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய சுனிலா அப்படியொரு நிலைமை இப்பொழுது தென்னிலங்கையில் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
இப்படிப் பார்த்தால், ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான இலங்கைத் தீவில் மோதலில் ஈடுபட்ட இரண்டு பெரிய இனங்களுமே இது விசயத்தில் அதாவது, மனிதப் புதை குழிகளின் விசயத்தில் ஏறக்குறைய ஒரே விதமாக எதிர்வினையாற்றிருப்பதாக எடுத்துக்கொள்ள முடியுமா? ஆயின் இதற்குப் பின்னாலிருக்கக் கூடிய சமூக உளவியல் எத்தகையது?
அதை ஒரு வித நம்பிக்கையிழந்த நிலை அல்லது சலிப்புற்ற நிலை அல்லது கையறு நிலை அல்லது மரத்துப்போன நிலை என்று சொல்லலமா? குறிப்பாக, தமிழ் மக்களைப் பொறுத்த வரை காணாமற் போனவரை அடையாளங் காட்டுவதன் மூலம் ஆதாவது சாட்சியாக முன்வருவதன் மூலம் ஏற்படக் கூடிய பாதுகாப்பின்மைகள் தொடர்பிலான அச்சமும் ஒரு காரணம் என்பதை இங்கு மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
கடந்த ஆண்டு மனித உரிமைகள் தினத்தன்று கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு பொதுக்கூட்டத்தில் காணாமற்போனவர்கள் சார்பாக ஒருவர் இக்கேள்வியைக் கேட்டிருந்தார். அதாவது சாட்சிகளிற்குப் பாதுகாப்பு உண்டா என்று? இக்கேள்வியானது மேற்படி கூட்டத்திற்கு நிதி அனுசரணை செய்த சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை நிதியத்தைச் சேர்ந்த ஒரு சட்டவாளரிடமே கேட்கப்பட்டது. மேற்படி நிதியம் நீலன் திருச்செல்வத்தால் ஸ்தாபிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கேள்விக்கு பதிலளித்த மேற்படி சட்டவாளர், ”முன்பு இதுபோன்ற நிலைமைகளில் சாட்சிகளுக்குரிய பாதுகாப்பை எமது நிதியம் ஓரளவுக்கு உத்தரவாதப்படுத்தக்கூடிய நிலைமைகள் இருந்தன. ஆனால் இன்று எங்களுக்கே பாதுகாப்பு இல்லை…’ என்ற தொனிப்படக் கருத்துத் தெரிவித்திருந்தார்.
இது ஒரு முக்கியமான பிரச்சினைதான். காணாமற்போனவர்களுடைய எச்சங்களை அடையாளம் காட்டும் எவரும் அதனால் வரக்கூடிய ஆபத்துக்களையிட்டு அஞ்சுவது என்பது. காணாமற்போனவர் போனது போகட்டும் இப்பொழுது மிச்சமிருப்பவார்களாவது பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பதற்காகவும் தமிழர்கள் புதைகுழிகளை நோக்கி வரத் தயாரற்று இருக்கலாம். இதை இன்னும் கூராகக் சொன்னால், இல்லாமல் போனவர்களுக்காக இருப்பவர்கள் ஆபத்தை விலைக்கு வாங்கக் கூடாது என்ற ஒரு முன்னெச்சரியையுணர்வுதான் இது எனலாம்.
ஆனால், இது போன்ற பல காரணங்களிற்காகவும் மக்கள் முன்வரத் தயங்குமொரு சமூக உளவியல் எனப்படுவது பங்கேற்பு ஜனநாயகத்திற்கோ அல்லது சமூகச் செயற்பாட்டு இயங்கங்களிற்கோ எந்த விதத்திலும் வாய்ப்பானது அல்ல. மாறாக, அது வாக்கு வேட்டை அரசியலுக்கே அதிகம் வாய்ப்பானது.
இலங்கைத் தீவில் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான சுமார் ஐந்தாண்டு காலப்பகுதியில் நிலைமை அப்படித்தான் காணப்படுகிறது. மக்கள் பங்கேற்கும் ஜனநாயகததுக்கான சிவில் வெளி இப்பொழுதும் சுருங்கியே காணப்படுகின்றது. சுனிலா அபயசேகர இதைத் தனது பேட்டியில் சுட்டிக்காட்டியிருந்தார். நந்திக் கடற்கரையில் தோற்கடிக்கப்பட்டது ஒரு ஆயுதமேந்திய இயக்கம் மட்டுமல்ல, இலஙகைத்தீவு முழுவதிலுமுள்ள சமூக செயற்பாட்டு அமைப்புக்களும்தான்.
எங்கே பொதுமக்கள் நுண்ணுணர்வு குன்றி, சுரத்தின்றி, சலிப்பும் விரக்தியும் மேலோங்க ஒருவித முன்னெச்சரிக்கையுணர்வுடன் நத்தைகளைப் போல தலையை உள்ளிளுத்துக்கொண்டு வாழப் பழகி விடுகிறார்களோ அங்கேதான் கேள்விக்கிடமற்ற ஏதேச்சாதிகாரம் வெல்லக் கடினமான ஒரு வளர்ச்சியைப் பெறுகின்றது.
அது மட்டுமல்ல, மக்கள் பங்கேற்கும் ஜனநாயகத்துக்கும், சிவில் செயற்பாட்டியக்கங்களுக்குமான வெளி சுருங்கச் சுருங்க அது வாக்கு வேட்டை அரசியலுக்கே வாய்ப்பாக அமைகின்றது. கடந்த சுமார் ஐந்தாண்டுகளாக தமிழ் மக்களின் அரசியல் அரங்கு அப்படித்தான் மாறி வருகின்றது.
ஒரு இனத்தின் வரலாற்றில் ஐந்தாண்டுகள் எனப்படுவது மிகச்சிறிய ஒரு காலப்பகுதிதான். ஆனால், முல்லைத்தீவு மாவட்டத்தில் குடித்தொகை அடர்த்தியை திட்டமிட்டு மாற்றும் முயற்சிகளின் வேகத்தோடும், வடக்கு-கிழக்கில் நிதிமுலதனப் படர்ச்சியின் வழிகளை இலகுவாக்கிக் கொடுக்கும் செயற்பாடுகளின் வேகத்தோடும் ஒப்பீகையில் தமிழ் மக்கள் மத்தியில் பங்கேற்பு ஜனநாயகத்துக்கும், சிவில் செயற்பாட்டுக்குமான பரப்பைப் பலப்படுத்தி பெருப்பிக்கும் முயற்சிகளின் வேகம் போதாது என்றே கூறவேண்டும்.
சிவில் வெளியை செயற்பாட்டியக்கங்கள் தான் கருத்தரிக்க வேண்டும். அடைகாக்க வேண்டும். பிரசவிக்கவும் வேண்டும். அதை வெளியிலிருந்து யாரும் ஒரு வரமாக அல்லது அரசியல் பக்கேச் ஆக தர முடியாது. ஆங்கில மரபில் ஒரு முதுமொழி உண்டு. ”முட்டை வெளிச்சக்தியால் உடைக்கப்படும்போது உயிர் இறக்கிறது. முட்டை உட்சக்தியால் உடைக்கப்படும் போது உயிர் பிறக்கின்றது…. மகத்தான விடயங்கள் உள்ளேயிருந்துதான் தொடங்குகின்றன’ என்று. இது சிவில் இயக்கங்களுக்கும் பொருந்தும்.
ஜெனிவாவை நோக்கிச் செல்லும் இந்நாட்களில் ஒப்பீட்டளவில் சிவில் பரப்பு அதிகரித்துக் காணப்படுகிறது. குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் புதிய தளபதியின் வருகைக்குப் பின் வீதிகளிற் காணப்பட்ட காவலரண்கள் கணிசமான அளவுக்குக் குறைக்கப்பட்டிருகின்றன. ஆனால், ரோந்து அதிகரித்திருக்கின்றது. முழுமையான இராணுவ மய நீக்கம் நிகழாத ஒரு பின்னணிக்குள்ளும் கடந்த சுமார் ஐந்தாண்டுகளாக வடக்கு-கிழக்கில் சிவில் பரப்பெனப்படுவது ஒப்பீட்டளவில் முன்னரைவிட அதிகரித்து வருகின்றது.
அரசாங்கத்தை முறிக்காமல் வளைக்கும் ராஜீய முன்னெடுப்புக்களில் மேற்கும் இந்தியாவும் தோல்வியுறும் பட்சத்தில் அதாவது, அரசாங்கமானது திரும்பி வரவியலாத ஒரு புள்ளி வரை நெகிழ்ந்து கொடுக்க மறுத்து யூ ரேண் எடுக்குமாயிருந்தால் கடந்த 5 ஆண்டுகளாக படிப்படியாக அதிகரித்துவரும் சிவில் பரப்பு திடீரென்று சுருங்கக் கூடும் என்ற அச்சங்களும் உண்டு.
ஆனாலும், இப்பொழுது கிடைத்திருக்கின்ற பலவீனமான, நிச்சயமற்ற தமிழ்ச் சிவில் வெளியை வெற்றிகரமாகக் கையாண்டு அதை மேலும் பலப்படுத்தி பெருப்பிக்கும் முயற்சிகளை அநேகமாகக் காணமுடியவில்லை. வெளியாருக்காகக் காத்திருக்கும் ஒரு அரசியலில் வெளிநாட்டுப் பிரமுகர்கள் வருகை தரும்போதெல்லாம் முன்னெடுக்கப்படும் குறியீட்டு வகைப்பட்ட தெட்டம் தெட்டமான கவன ஈர்ப்புப் போராட்டங்களுக்குமப்பால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எந்த ஒரு போராட்டத்தையும் அரங்கில் காண முடியவில்லை. கடந்த ஐந்தாண்டுகளில் ஜனவசியம் மிக்க எந்தவொரு சமூக செயற்பாட்டு ஆளுமையும் மேலெழவில்லை. ஈழத்தமிழர்களின் செயற்பாட்டு இயக்கப் பாரம்பரியம் எனப்படுவது இப்பிராந்தியத்தில் உள்ள ஏனைய மக்கள் கூட்டங்களோடு ஒப்பிடுகையில் பலவீனமானதுதான்.
சில மாதங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் இரண்டு பெண்களின் மரணத்தையடுத்து பெண்ணியச் செயற்பாட்டியக்கங்கள் சில வீதியில் இறங்கிப் போராடின. இப்போராட்டங்களில் குறைந்தளவு எண்ணிக்கை யானவர்களே பங்குபற்றினர். இது தொடர்பாக இக்கட்டுரையாளருடன் உரையாடிய மட்டக்களப்பில் வசிக்கும் ஒரு செயற்பாட்டாளர் கேட்டார் ”ஏன் இப்படிப்பட்ட போராட்டங்களில் பாதிக்கப்பட்ட நபரின் உறவினர்களே பெரும்பாலும் பங்குபற்றுகிறார்கள்? கல்விமான்கள், புத்திஜிவிகள், படைப்பாளிகள், வழக்கறிஞர்கள், மீடியாக்காரர்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் போன்றவார்கள் ஏன் பங்குபற்றுவதில்லை’ என்று உண்மைதான். தமிழர்கள் மத்தியில் பிரபல்யமடையும் எவரும் அந்தப் பிரபல்யத்தை அரசியலில் கொண்டுபோய் முதலீடு செய்யவே ஆர்வங்காட்டுகிறார்கள். ஓய்வு பெற்றவர்களும், வாழ்க்கையில் செற்றில்ட் ஆனவர்களும்கூட அரசியலைத்தான் தெரிவு செய்கிறார்கள். தொழில் சார் அரசியல் வாதிகளாக மாறி அதில் கிடைக்கும் புகழ், பணம், ராஜபோகம் போன்றவற்றை அனுபவிப்பதில் நாட்டமுடைய எவரும் செயற்பாட்டியக்கங்களை நோக்கி வருவதில்லை. செயற்பாட்டியக்கம் வேறு;, தொழில் சார் அரசியல் வேறு. இரண்டும் இருவேறு தடங்கள். ஆனால், பங்கேற்பு ஜனநாயகமும், செயற்பாட்டியக்கமும் சமாந்திரமானவை அல்லது ஒன்று மற்றதை இட்டு நிரப்புபவை.
ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து சுமார் ஐந்து ஆண்டுகளாயிருக்கும் ஒரு காலச் சூழலில் ஈழத்தமிழர்கள் மத்தியில் தொழில்சார் அரசியல்வாதிகள் பெருகிச் செல்லும் அளவுக்கு செயற்பாட்டாளுமைகள் பெருகவில்லை. மிகச் சிறிய மக்கள் கூட்டமாகிய ஈழத்தமிழர்கள் தமது வல்லமைக்கு மீறி ரத்தம் சிந்தியிருக்கிறார்கள். காயப்பட்டிருக்கிறார்கள். இழக்கக் கொடுத்திருக்கிறார்கள். இதனால் எல்லாவற்றையும் அரசியலில் கொண்டுபோய் மையப்படுத்திச் சிந்திக்கும் ஒரு போக்கே மேலொங்கிக் காணப்படுகிறது. பதிலாக அவரவர் அவரவர் துறை சார்ந்து அர்ப்பணிப்பும் முன்னுதாரணமும் படைப்புத்திறனும் மிக்க செயற்பாட்டுத் தளங்களை திறக்குமிடத்து அதுவே ஆகப்பெரிய தேசியப் பணியாக இருக்கும். ஏனெனில், இலட்சியப் பற்றும் அர்ப்பணிப்பும் மிக்க எந்தவொரு செயற்பாட்டு இயக்கமும் தேசிய தன்மை மிக்கதுதான்.

No comments:

Post a Comment