Tuesday 28 January 2014

செய்திகள் - 27.01.14

செய்திகள் - 27.01.14
 ------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : ஆயர்கள் குருக்களின் திருநிலைப்பாடே திருஅவையை வேறுபடுத்திக் காட்டுகின்றது

2. புனிதர் பட்ட நிலைக்கான படிகளுக்கென எட்டுபேரின் பெயர்கள் திருத்தந்தையிடம் சமர்ப்பிப்பு

3. திருத்தந்தையின் திங்கள் டுவிட்டர் செய்தி

4. திருத்தந்தையின் மூவேளை செப உரை.

5. உக்ரைன் நாட்டு அமைதிக்காகவும், தொழுநோயாளர் நலனுக்காகவும் செபிக்குமாறு திருத்தந்தை வேண்டுகோள்

6. திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்தவ ஒன்றிப்புப் பயணம் திருத்தந்தையின் பணி பற்றிய புரிதலை ஆழப்படுத்த உதவியுள்ளது

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : ஆயர்கள் குருக்களின் திருநிலைப்பாடே திருஅவையை வேறுபடுத்திக் காட்டுகின்றது

சன.27,2014. திருஅவை என்பது ஒரு மனித நிறுவனமல்ல, இங்கு மக்களுக்குப் பணியாற்றும் ஆயர்களும் அருள்பணியாளர்களும் தூய ஆவியைப் பெறும்வண்ணம் திருநிலைப்படுத்தப்படுகிறார்கள் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இத்திங்கள் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருநிலைப்படுத்தப்பட்டவர்கள் திருஅவைக்குள் உள்ளதே, அதற்கும் ஏனைய நிறுவனங்களுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்றார்.
ஆயர்களும் அருள்பணியாளர்களும் ஒவ்வொரு நாளும் இந்த திருநிலைப்பாட்டிற்கு விசுவாசமாக இருந்து புனிதத்தில் வளரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்தத் திருநிலைப்பாடு என்பது, ஆயர்களும், அருள்பணியாளர்களும் மக்களுக்கு பணிபுரிவதற்கான பலத்தையும் மகிழ்வையும் வழங்குகிறது என உரைத்த திருத்தந்தை, இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம், அவரால் பராமரிக்கப்படுகின்றோம், அவரால் அன்புகூரப்படுகின்றோம் என்பதே திருநிலைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரவல்லதாக உள்ளது என்றார்.
பங்குதளப் பணிகளில் தங்கள் வாழ்வையே தியாகம் செய்து வெளி உலகிற்கு தெரியாமலேயே மறைந்துள்ள அருள்பணியாளர்களையும் நாம் நினைவுகூர்வோம்  எனவும் தன் மறையுரையின்போது அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருநிலைப்படுத்தப்பட்டோருள் சிலர் செய்துள்ள சில குற்றங்களைப் பெரிதுபடுத்த முனைவோர், அமைதியாகத் தியாகப்பணிகளை ஆற்றிவரும் பல ஆயிரக்கணக்கான அருள்பணியாளர்களின் பணிகள் குறித்து பேசுவதில்லை என்று கூறியத் திருத்தந்தை, ஒரு மரம் விழும்போது எழுப்பும் சப்தம், காட்டில் நன்முறையில் பல மரங்கள் வளர்வதால் உருவாகும் சப்தத்தைவிடப் பெரிது எனவும் எடுத்தியம்பினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. புனிதர் பட்ட நிலைக்கான படிகளுக்கென எட்டுபேரின் பெயர்கள் திருத்தந்தையிடம் சமர்ப்பிப்பு

சன.27,2014. இஸ்பெயினில் பிறந்து, இந்தியாவின் தமிழகத்தில் உயிரிழந்த, கார்மல் துறவு சபையின் புனித தெரேசாவின் சக்கரியா என்ற அருட்பணியாளர் உட்பட, ஏழு இறைடியார்களின் பெயர்கள், அவர்களின் வீரத்துவ பண்புகளுக்காகவும், மறைசாட்சியாக உயிரிழந்த இஸ்பானிய அருட்பணியாளர் ஒருவரின் பெயரும்,  புனிதர்பட்டநிலைக்கான  படிகளுக்கென இத்திங்களன்று திருத்தந்தையின் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டன.
தற்போது வீரத்துவ பண்புகளுக்காக புனிதர்பட்ட நிலைகளுக்கென சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஏழு இறையடியார்களுள், கார்மல் துறவுசபையின் அருட்திரு சக்கரியா அவர்கள், 1887ம் ஆண்டு இஸ்பெயினில் பிறந்து, 1957ம் ஆண்டு, மேமாதம் 23ம் தேதி தமிழகத்தின் வேலூரில் காலமானார்.
இவர் பெயருடன் இணைந்து, இத்தாலியின் வெரோனாவில் பிறந்த மறைமாவட்ட குரு. ஜூசப்பே ஜிரல்லி, கானடாவின் இறையடியார், அருட்சகோதரி Marcella Mallet, அர்ஜென்டினாவின் இறையடியார் அருட்சகோதரி Maria Benedetta Arias, மால்ட்டாவின் இறைடியார், அருட்சகோதரி இயேசுவின் திரு இதயத்தின் மார்கரித்தா, பிரசிலின் இறையடியார், அருட்சகோதரி செரஃபீனா, இத்தாலியின் இறையடியார், பொதுநிலையினரான Elisabetta Sanna ஆகியோரின் பெயர்களும் திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்டன.
மேலும், மறைசாட்சியாக உயிரிழந்த இஸ்பெயினின் அருட்திரு Pietro Asúa Mendíaவின் பெயரும், புனிதர்பட்ட நிலைக்கான படிகளுக்கென திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தையின் திங்கள் டுவிட்டர் செய்தி

சன.27,2014. 'இளையோரே! தரம் குறைந்த வாழ்வில் நிறைவுகாணாதீர்கள். உண்மையானதும், அழகு நிரம்பியதும், கடவுளுக்குரியதுமான வாழ்வுகுறித்து வியப்புகொள்ளுங்கள்' என இத்திங்களன்று தன் டுவிட்டர் பக்கத்தில் இளைஞர்களுக்கு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அங்குமில்லாமல், இங்குமில்லாமல், இடைப்பட்ட, தரம் குறைந்த வாழ்வில் திருப்தி அடையாமல், இறைவனின் வழிகாட்டுதலை நோக்கிச் செல்வோம் என தன் டுவிட்டர் பக்கத்தில் இளையோருக்கு அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தையின் மூவேளை செப உரை.

சன.27,2014. இயேசுவின் காலத்தில் பல கலாச்சாரங்கள், இனங்கள், மதங்கள் சந்திக்கும் இடமாக இருந்த கலிலேயாப் பகுதியிலிருந்து தன் பொதுவாழ்வை இயேசு துவக்கியது போல், நம்முன் விரிந்திருக்கும் இன்றைய உலகில் துணிவுடன் பணிகளை நாம் ஆற்றவேண்டும் என கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அன்றைய கலிலேயா போல் இன்றையை உலகம் பல கலாச்சாரஙகள் மற்றும் கருத்து மோதல்களின் இடமாக உள்ளது என தன் ஞாயிறு மூவேளை செப உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மோதல்களுக்குப் பயந்து, நாம் தடுப்புச்சுவர்களை எழுப்பி நம்மைப் பாதுகாக்கும் சோதனைக்கு உட்படக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.
இயேசுவின் நற்செய்தி என்பது மனித சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுமே உரியதல்ல என்பதை தெளிவாக மனதில் கொண்டு அதனை அனைவருக்கும் அறிவிக்க வேண்டிய கிறிஸ்தவர்களின் கடமையையும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அதிகம் படித்தவர்களையோ சட்டவல்லுனர்களையோ இயேசு தன் பணிக்கெனத் தேர்ந்தெடுக்கவில்லை, மாறாக சாதாரண மக்களையேத் தேர்ந்தெடுத்து, நற்செய்தியை எடுத்துரைக்க அனுப்பினார் என்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றும் நம் வாழ்வின் பாதைகளில் நடைபோடும் இயேசு, நம்மையும் அழைக்கிறார், அவரின் குரலுக்குச் செவிமடுத்து, துணிவுடன் பின்தொடர்வோம் என்றார்.
உலகில் ஒளியின்றி எப்பகுதியும் இருக்கக்கூடாது என்பதை மனதிற்கொண்டு, இயேசுவின் நற்செய்தி தரும் மகிழ்ச்சியை உலகம் முழுமைக்கும் எடுத்துச் செல்வோம் என்ற அழைப்பும் திருத்தந்தையால் விடப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. உக்ரைன் நாட்டு அமைதிக்காகவும், தொழுநோயாளர் நலனுக்காகவும் செபிக்குமாறு திருத்தந்தை வேண்டுகோள்

சன.27,2014. இஞ்ஞாயிறு மூவேளை செபஉரையில் இயேசுவின் கலிலிலேயப்பணி துவக்கம் குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்வுரையின் இறுதியில், உக்ரைன் நாட்டில் அமைதி நிலவவேண்டும் என அனைவரும் செபிக்குமாறும் அழைப்புவிடுத்தார்.
அண்மை நாட்களில் உக்ரைன் நாட்டில் இடம்பெறும் போராட்டங்களில் உயிரிழந்துள்ள மக்களையும், அவர்களின் குடும்பங்களையும் சிறப்பான விதத்தில் நினைவுகூர்ந்து அவர்களுக்காக செபிப்பதாகக் கூறியத் திருத்தந்தை, அந்நாட்டில் பொதுமக்கள் சமூகத்திற்கும், நிறுவனங்களுக்கும் இடையே பலன்தரும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று அதன்வழி வன்முறைகள் நிறுத்தப்படும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.
இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட உலக தொழுநோயாளர் நாள் குறித்தும் தன் மூவேளைசெப உரையின் இறுதியில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நோயாளிகளின் எண்ணிக்கை உலகில் குறைந்துவருகின்றபோதிலும், ஏழ்மை நிலையில் வாழ்வோர் இந்நோயால் இன்னும் பாதிக்கப்பட்டுவருவது குறித்தும் கவலையை வெளியிட்டு, இச்சகோதர சகோதரிகளோடு ஒருமைப்பாட்டை அறிவிக்கவேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.
சீனா, கொரியா, வியட்நாம் என தூர கிழக்கு நாடுகளில் வாழும் பல கோடி மக்கள், வரும் நாட்களில் தங்கள் புத்தாண்டை சிறப்பிக்கவுள்ளதை குறித்தும் எடுத்துரைத்து, அவர்களுக்குத் தன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்தவ ஒன்றிப்புப் பயணம் திருத்தந்தையின் பணி பற்றிய புரிதலை ஆழப்படுத்த உதவியுள்ளது

சன.27,2014. கிறிஸ்துவை நம்பும் அனைத்து விசுவாசிகளுடனும் உரையாடல் நடத்துவதற்குத் திறந்த உள்ளம் கொண்டிருப்பதைத் தவிர்த்து சிந்தித்தால், திருத்தந்தையின் பணியை இன்று முழுமையாகப் புரிந்துகொள்ள இயலாது என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
புனித பேதுருவின் வழிவந்தவரின் பணியை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கும் கிறிஸ்தவ ஒன்றிப்புப் பயணம் நமக்கு உதவியுள்ளது என்றும் நாம் சொல்லலாம் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தை நிறைவு செய்த மாலை திருவழிபாட்டை உரோம் புனித பவுல் பசிலிக்காவில் இச்சனிக்கிழமை மாலை நிகழ்த்தி மறையுரையாற்றிய  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்வருங்காலத்திலும் கிறிஸ்தவ ஒன்றிப்புப்பணியை நாம் தொடர்ந்து செய்வோம் என நம்புவோம் எனக் கூறினார்.
திருஅவையிலுள்ள பிரிவினைகள் இயல்பானவை, மற்றும் தவிர்க்க இயலாதவை என்று நாம் கருதமுடியாது என்றும், கிறிஸ்து பிளவுபடமுடியாது என்ற உறுதிப்பாட்டுடன், கிறிஸ்தவ விசுவாசிகள் அனைவர் மத்தியிலும் முழு ஒன்றிப்பு ஏற்படுவதற்கு நாம் தாழ்ச்சியுடன் உழைப்போம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்து பிளவுபட்டுள்ளாரா (1 கொரி. 1:13)  என்ற தலைப்பில் 47வது கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் இம்மாதம் 18 முதல் 25 வரை சிறப்பிக்கப்பட்டது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...