Saturday, 21 December 2013

செய்திகள் - 20.12.13

செய்திகள் - 20.12.13
 ------------------------------------------------------------------------------------------------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் :  ஒருவர் கடவுளோடு கொள்ளும் நல்லுறவை அமைதி பாதுகாக்கிறது

2. திருத்தந்தை பிரான்சிஸ் : வீணாக்கப்படும் உணவு, உலகின் பசியைப் போக்கப் போதுமானது

3. திருத்தந்தை பிரான்சிஸ் : தூதரகப்பணி, கலாச்சாரச் சந்திப்புக்கு ஆதரவளிக்கும் முக்கியமான பணி

4. திருத்தந்தை இளையோரிடம் : கிறிஸ்மஸ் காலம் பகைவர்களுக்காகச் செபிக்கும் காலம்

5. திருத்தந்தை பிரான்சிஸ் : இந்தக் கிறிஸ்மஸ், நற்செய்தியை வாழ்வாக்குவதோடு ஒத்திணங்கிச் செல்ல வேண்டும்

6. தென் சூடானில் இடம்பெற்று வரும் வன்முறை அரசியல் சார்ந்தது, ஆயர்கள்

7. அனைத்துலக மனித ஒருமைப்பாட்டுத் தினம், டிசம்பர் 20

8. கஸ்தூரிரங்கன் அறிக்கை அமலாகிறது

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் :  ஒருவர் கடவுளோடு கொள்ளும் நல்லுறவை அமைதி பாதுகாக்கிறது

டிச.20,2013. ஒருவர் கடவுளோடு நடந்துவரும் பயணத்தின் புதிரான வாழ்வைக் காத்து நடத்துவது அமைதியே என்றும், அனைத்து விளம்பரங்களிலிருந்தும் நம்மைப் பாதுகாப்பதற்குத் தேவையான அமைதியை அன்பு செய்வதற்கு நம் ஆண்டவரிடம் வரம் கேட்போம் என்றும் இவ்வெள்ளிக்கிழமை காலையில் வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வானதூதர் நாசரேத்தூர் மரியாவுக்கு இயேசுவின் பிறப்பை அறிவிக்கும் நற்செய்தியை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை, மீட்பு வரலாற்றில் கடவுள் தம்மை மனித சமுதாயத்துக்கு வெளிப்படுத்துவதற்கு ஆரவாரங்கள் மற்றும் கூச்சல்நிறைந்த இடங்களை அல்ல, மாறாக, நிழல்களும் அமைதியும் நிறைந்த இடங்களையே தேர்ந்தெடுத்தார் என்று கூறினார்.
நம் இதயங்களிலும், நம் ஆன்மாக்களிலும் நம் ஆண்டவர் வியக்கத்தக்கமுறையில் எப்படி வேலை செய்கிறார் என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிந்துள்ளோம் என்றுரைத்த திருத்தந்தை, அந்த வியப்பை மூடியுள்ள மேகம், சக்தி, தூய ஆவியின் வழி எது என்ற கேள்வியை எழுப்பி, நம்மிலுள்ள இந்த மேகமே அமைதி என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசுவின் தாய் அமைதியின் மொத்த உருவம் எனவும், இயேசுவின் பிறப்பு அறிவிக்கப்பட்ட நேரம் முதல் கல்வாரிவரை அவர் எத்தனைமுறை அமைதியாக இருந்தார் எனவும் கூறினார் திருத்தந்தை.
நாம் ஆண்டவரைத் தேடவும், அமைதி என்ற மேகத்தால் சூழப்பட்ட இதயத்தைக் கொண்டிருக்கவும், அமைதியை அன்புசெய்யும் வரத்தை நம் அனைவருக்கும் ஆண்டவர் அருள்வாராக என்று சொல்லி தனது மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ் : வீணாக்கப்படும் உணவு, உலகின் பசியைப் போக்கப் போதுமானது

டிச.20,2013. இன்றைய உலகில் வீணாக்கப்படும் உணவு, உலகில் பசியால் வாடும் எல்லாருக்கும் உணவளிக்கப் போதுமானது என்று, குப்பைகளில் பொருள்களைச் சேகரிக்கும் ஏழைகளுக்கென வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உலகின் பல நகரங்களில் குப்பைமேடுகளில் பொருள்களைப் பொறுக்கி அவற்றிலிருந்து வாழ்க்கை நடத்தும் மக்களை நினைத்து அனுப்பியுள்ள செய்தியில் இந்த ஏழை மக்களின் நலனுக்காக உழைக்கும் பணியாளர்கள், உலகில் வீணாக்கப்படும் உணவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தென் அமெரிக்க நாடான அர்ஜென்டீனாவை மையமாகக் கொண்டு செயல்படும், ஒதுக்கப்பட்ட பணியாளர் இயக்கம் என்ற அமைப்பினர் நடத்திய கருத்தரங்கிற்கென அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பொருள்களை மட்டுமல்ல, மனிதரையும் எளிதாகத் தூக்கி எறியும் ஒரு கலாச்சாரத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம், இவ்வுலகில் வீணாக்கப்படும் உணவு, உலகில் பசியால் வாடும் அனைவரின் பசியை அகற்றுவதற்குப் போதுமானது எனக் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை பிரான்சிஸ் : தூதரகப்பணி, கலாச்சாரச் சந்திப்புக்கு ஆதரவளிக்கும் முக்கியமான பணி

டிச.20,2013. ஒருவர் ஒருவரைப் புரிந்துகொள்தல், மதித்தல், உலகின் வளர்ச்சிக்கும் அமைதிக்குமான வழிகளை ஒன்றிணைந்து தேடுதல் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து நாடுகளுக்கிடையே இடம்பெறும் நல்உறவுகளில் தூதரக அதிகாரிகள் ஆற்றும் பணி குறிப்பிடும்படியானது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பீடத்துக்கான இத்தாலிய தூதரகத்தின் பணியாளர்கள், இத்தாலிய வெளியுறவு அமைச்சகத்தில், பிறநாடுகளின் அதிகாரிகளை வரவேற்கும் பிரிவில் பணியாற்றவோர் என 200 பேரை, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், கலாச்சாரங்கள் சந்திப்பதற்கு இப்பணியாளர்கள் ஆற்றிவரும் பணியைப் பாராட்டினார்.
கலை, கலாச்சார உலகில் இத்தாலி எப்பொழுதும் மேன்மையோடு நோக்கப்படும்வேளை, கலாச்சாரங்களின் சந்திப்பால் இதனை மேலும் வளமடையச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை. 
கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே நிகழும் சந்திப்பே கிறிஸ்மஸ் பெருவிழா என்றும், கிறிஸ்தவ மறையைப் பின்பற்றாதவர்களும் இயேசுவின் பிறப்பு செய்தி முன்வைக்கும் சவாலை எதிர்கொள்கின்றனர் என்றும் கூறிய திருத்தந்தை, கிறிஸ்மஸ் செய்தியை ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் ஆழமாய் வாழுமாறு கேட்டுக்கொண்டார்.
இப்பணியாளர்கள் திருப்பீடச் செயலகத்துக்கும், பாப்பிறை இல்லத்துக்கும் ஆற்றிவரும் பணிகளுக்கும், குறிப்பாக, கடந்த மார்ச் 19ம் தேதி நடைபெற்ற பாப்பிறைப் பணியேற்பு நிகழ்வில் இப்பணியாளர்கள் ஆற்றிய சேவைக்கும் நன்றி தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தை இளையோரிடம் : கிறிஸ்மஸ் காலம் பகைவர்களுக்காகச் செபிக்கும் காலம்

டிச.20,2013. இவ்வெள்ளியன்று இத்தாலிய கத்தோலிக்க கழகத்தின் 65 இளையோரை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ், இளையோர் இயேசுவுடன் கொண்டுள்ள நட்புறவின் மகிழ்வை, வீடுகளிலும், ஆலயங்களிலும், பள்ளிகளிலும் என எல்லா இடங்களிலும், நண்பர்களோடும், பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
கிறிஸ்மஸ் பெருவிழாவின் முக்கியத்துவம் குறித்து இளையோரிடம் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ், குழந்தை இயேசுவின் முகத்தில் கடவுளின் முகத்தைத் தியானிக்கிறோம் எனவும், கடவுள் நம் ஒவ்வொருவர்மீதும் கொண்டுள்ள எல்லையற்ற பிரமாணிக்கத்தையும் கனிவையும் குழந்தை இயேசு நமக்கு வெளிப்படுத்துகிறார் எனவும் கூறினார்.
பிறரைத் தீர்ப்பிடாமல், புறணி பேசாமல், தேவையில் இருப்போர்க்கு உதவிக்கரம் நீட்டி உண்மையான கிறிஸ்தவ வாழ்வுக்குச் சாட்சிகளாக வாழுமாறும், பகைவர்களுக்காகச் செபிக்குமாறும் இளையோரை கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், பிறரைப் பற்றித் தவறாகப் பேசுதல் கிறிஸ்தவத்துக்குப் புறம்பானது எனவும் கூறினார். 
எத்தனையோ பெற்றோர் தங்களின் நோயாளிக் குழந்தைகளோடும், ஏழ்மை நிலையிலும்  கிறிஸ்மஸைச் சிறப்பிக்கவுள்ளனர், அவர்களையும் இக்கிறிஸ்மஸ் காலத்தில் நினைத்துப் பார்ப்போம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
எல்லா வயதினரையும் உள்ளடக்கிய இந்தக் கத்தோலிக்க கழகம், இத்தாலிய கத்தோலிக்கத் திருஅவையில் இயங்கிவரும் மிகப் பழமையான பொதுநிலையினர் அமைப்புக்களில் ஒன்றாகும். 2012ம் ஆண்டில் இவ்வமைப்பில் ஏறக்குறைய 4 இலட்சம் பேர் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்கள், உடன்வாழ்வோரைக் கத்தோலிக்க விசுவாசத்தில் ஆழப்படுத்துவது உட்பட பங்குத்தளங்களில் பல நற்பணிகளைச் செய்து வருகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. திருத்தந்தை பிரான்சிஸ் : இந்தக் கிறிஸ்மஸ், நற்செய்தியை வாழ்வாக்குவதோடு ஒத்திணங்கிச் செல்ல வேண்டும்

டிச.20,2013. இயேசுவை நம் வாழ்வின் மையத்தில் வரவேற்று, நற்செய்தியை வாழ்வாக்குவதோடு ஒத்திணங்கிச் செல்வதாய் இந்தக் கிறிஸ்மஸ் அமைய வேண்டும் என, தனது டுவிட்டரில் இவ்வெள்ளிக்கிழமையன்று செய்தி வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தினமும் ஒன்பது மொழிகளில் குறுஞ்செய்திகளை எழுதிவரும் திருத்தந்தை பிரான்சிஸ், இந்தக் கிறிஸ்மஸ் காலத்தில் நற்செய்தியை வாழ்வில் நடைமுறைப்படுத்துமாறு கேட்டுள்ளார்.
மேலும், இந்தியா மற்றும் நேபாளத்துக்கான திருப்பீடத் தூதர் பேராயர் Salvatore Pennacchio அவர்களை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. தென் சூடானில் இடம்பெற்று வரும் வன்முறை அரசியல் சார்ந்தது, ஆயர்கள்

டிச.20,2013. தென் சூடானில் இடம்பெற்று வரும் வன்முறைக்கு இனம் சார்ந்த பிரச்சனை அல்ல, ஆனால் அரசியல் சார்ந்த பிரச்சனையே காரணம் என, அந்நாட்டின் திருஅவைத் தலைவர்கள் கூறினர்.
தென் சூடான் ஆயர்கள் தொடர்ந்து வெளியிட்டுவரும் அறிக்கையில், அந்நாட்டு அரசும், அரசியல் தலைவர்களும் வன்முறையைத் தூண்டும் செயல்களைக் கைவிட்டு குடிமக்களைப் பாதுகாப்பதில் அக்கறை காட்டுமாறும், நாட்டை அமைதியில் நடத்திச் செல்லுமாறும் வலியுறுத்தி வருகின்றனர்.
தென் சூடானின் மக்கள் விடுதலைக் கட்சிக்கும், அந்நாட்டின் அரசியல் தலைவர்களுக்கும் இடையே அரசியல்ரீதியான முரண்பாடுகள் இடம்பெறுவதாக ஆயர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கிடையே, தென் சூடானில் கடந்தவார இறுதியில் மோதல்கள் தொடங்கியதிலிருந்து குறைந்தது 500 பேர் இறந்துள்ளனர் மற்றும் 34 ஆயிரம் பேர் ஐ.நா. வளாகத்தில் அடைக்கலம் தேசியுள்ளனர்.
சூடானில் இடம்பெற்ற 22 வருட உள்நாட்டுச் சண்டைக்குப் பின்னர் 2011ம் ஆண்டில் தென் சூடான் விடுதலை அடைந்தது.

ஆதாரம் : CNS

7. அனைத்துலக மனித ஒருமைப்பாட்டுத் தினம், டிசம்பர் 20

டிச.20,2013. உலக அமைதி, பாதுகாப்பு, மனித உரிமைகள், திறமையான நிர்வாகம் ஆகியவற்றுக்கு உலகத் தலைவர்கள் தங்களை அர்ப்பணிக்குமாறு கேட்டுள்ளார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன்.
இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்ட அனைத்துலக மனித ஒருமைப்பாட்டுத் தினத்திற்கென செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன், மில்லென்ய வளர்ச்சித் திட்ட இலக்குகள் 2015ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படுவதற்கு உலகத் தலைவர்கள் உறுதி கொடுத்திருப்பதை நினைவுபடுத்தியுள்ளார்.
மில்லென்ய வளர்ச்சித் திட்ட இலக்குகள் எட்டப்படுவதற்கு இடைவெளிகளை அகற்றுவோம் என்ற தலைப்பில் 2013ம் ஆண்டின் அனைத்துலக மனித ஒருமைப்பாட்டுத் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 20ம் தேதி அனைத்துலக மனித ஒருமைப்பாட்டுத் தினம் கடைப்பிடிக்கப்பட வேண்டுமென்ற தீர்மானத்தை 2005ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி நிறைவேற்றியது ஐ.நா. பொது அவை.

ஆதாரம் : UN

8. கஸ்தூரிரங்கன் அறிக்கை அமலாகிறது

டிச.20,2013. மேற்குத் தொடர்ச்சி மலையை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க பரிந்துரை செய்துள்ள கஸ்தூரிரங்கன் அறிக்கையை, அமல்படுத்தும் நடவடிக்கைகளை, இந்திய மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் இவ்வெள்ளியன்று துவக்கியுள்ளது.
இந்நடவடிக்கைகளை கண்காணிக்க, உயர்மட்டக் குழு ஒன்று, விரைவில் ஏற்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொழிற்சாலை, சுரங்கம், குவாரி, நீர்மின்சக்தி திட்டம் கட்டுமான பணிகளுக்கு, குறிப்பிட்ட அளவு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கேரளாவின் இடுக்கி மாவட்டத்திலுள்ள மலைகளில் பசுமை முயற்சிகளை மேற்கொள்ளும் ஒரு திட்டத்தின் மூலம் 123 கிராமங்களில் உள்ள மக்கள் பாதிக்கப்படுவர் என்று கேரள கத்தோலிக்கத் தலைவர்கள், காங்கிரஸ் கட்சித் தலைவர், சோனியா காந்தி அவர்களை இச்செவ்வாயன்று சந்தித்து தங்கள் கவலையை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : PTI

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...