Friday, 20 December 2013

செய்திகள் - 19.12.13

செய்திகள் - 19.12.13
 ------------------------------------------------------------------------------------------------------

1. கிறிஸ்து பிறப்பு விழா நெருங்கிவரும் வேளையில், தாழ்ச்சி நிறைந்த மனதிற்காக வேண்டுவோம் - திருத்தந்தை  பிரான்சிஸ்

2. சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரில் உள்ள குழந்தை இயேசு மருத்துவமனைக்குச் செல்கிறார்

3. San Lorenzo de Almagro அர்ஜென்டீனா கால்பந்தாட்டக் குழுவினருடன் திருத்தந்தை சந்திப்பு

4. ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ்

5. திருத்தந்தை அனைத்து மக்கள் மத்தியிலும் பெருமளவான எதிர்பார்ப்புக்களை உருவாக்கி வருகிறார் - முதுபெரும் தந்தை Kirill

6. கிறிஸ்மஸ் விழாவையொட்டி, மெக்சிகோ ஆயர்கள் சிறைகளில் உள்ளவர்களுக்கு, திருப்பலியாற்ற திட்டம்

7. நேபாள நாட்டில் அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் திருத்தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

8. புலம்பெயர்ந்து செல்லும் மக்களின் கடின உழைப்பால் உலக நாடுகள் வளமடைந்து வருகின்றன - ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன்

------------------------------------------------------------------------------------------------------

1. கிறிஸ்து பிறப்பு விழா நெருங்கிவரும் வேளையில், தாழ்ச்சி நிறைந்த மனதிற்காக வேண்டுவோம் - திருத்தந்தை  பிரான்சிஸ்

டிச.19,2013. தாழ்ச்சியே வளம்நிறைந்த வாழ்வுக்கு அவசியம் என்பதை திருத்தந்தை  பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழன் காலை புனித மார்த்தா இல்லத்தில் ஆற்றிய திருப்பலியில் வழங்கிய மறையுரையின் மையக் கருத்தாகப் பகிர்ந்தார்.
பிள்ளைப்பேறு அற்ற இரு பெண்களைக் குறித்து இவ்வியாழன் வழங்கப்பட்ட திருப்பலி வாசங்களை தன் மறையுரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, வாழ்வற்றச் சூழல்களிலும் இறைவன் வாழ்வு வழங்கும் வலிமை பெற்றவர் என்பதை வலியுறுத்தினார்.
இறைவன், பாலை நிலத்தையும் சோலையாக்குவார் என்று இறைவாக்கினர்கள் உறுதியாகக் கூறியதற்கு இறைவனின் வல்லமையே காரணம் என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை.
இறைவனின் வல்லமையை உணர்வதற்கு நாம் தாழ்ச்சி உடையவர்களாக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியத் திருத்தந்தை, தான் என்ற அகந்தை கொண்டோர் வாழ்வில் இறைவன் வளமையை உருவாக்க இயலாது என்று கூறினார்.
கிறிஸ்து பிறப்பு விழா நெருங்கிவரும் இவ்வேளையில், தன்னால் ஆவது ஒன்றுமில்லை, ஆனால், இறைவனால் எல்லாம் ஆகும் என்று நம்பும் தாழ்ச்சி நிறைந்த மனதிற்காக வேண்டுவோம் என்று திருத்தந்தை தன் மறையுரையில் தெளிவுபடுத்தினார்.
மேலும், "பசியால் இறப்போர் ஒருவருமில்லை என்ற அளவு உயர்ந்திருக்கும் ஓர் உலகைக் காண்பதற்கு இறைவன் நமக்கு வரமருளவேண்டும் என்று மன்றாடுவோம்" என்ற செய்தியை தன் Twitter பக்கத்தில் இவ்வியாழனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒன்பது மொழிகளில் வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரில் உள்ள குழந்தை இயேசு மருத்துவமனைக்குச் செல்கிறார்

டிச.19,2013. டிசம்பர் 21, வருகிற சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரில் உள்ள குழந்தை இயேசு மருத்துவமனைக்குச் சென்று, அங்கு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளைச் சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கென நிறுவப்பட்டுள்ள தலைசிறந்த மருத்துவமனை என்று ஐரோப்பாவில் புகழ்பெற்று விளங்கும் குழந்தை இயேசு மருத்துவமனையில், 2600 பேர் மருத்துவர்களாகவும், மருத்துவப் பணியாளர்களாகவும் பணியாற்றுகின்றனர்.
ஓராண்டில் சராசரியாக 10 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்கு மருத்துவ உதவிகள் செய்துவரும் இம்மருத்துவமனை, 1869ம் ஆண்டு நிறுவப்பட்டு, 1924ம் ஆண்டு திருப்பீடத்தின் கண்காணிப்பில் ஒப்படைக்கப்பட்டது.
வருகிற சனிக்கிழமையன்று இம்மருத்துவமனைக்குச் செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்குள்ள சிற்றாலயத்திற்கு முதலில் செல்வார் என்றும், பின்னர், அங்கு தங்கி சிகிச்சைபெற்றுவரும் குழந்தைகளையும், அவர்களின் குடும்பத்தினரையும் சந்திப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தை இயேசு மருத்துவமனையை, திருத்தந்தை அவர்கள் பார்வையிடும் நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்று திருப்பீட அலுவலகம் அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. San Lorenzo de Almagro அர்ஜென்டீனா கால்பந்தாட்டக் குழுவினருடன் திருத்தந்தை சந்திப்பு

டிச.19,2013. டிசம்பர் 18, இப்புதனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் புதன் பொது மறைபோதகத்தை வழங்கியபின்னர், அர்ஜென்டீனா நாட்டிலிருந்து வந்திருந்த “San Lorenzo de Almagro” கால்பந்தாட்டக் குழுவின் பிரதிநிதிகளைச் சந்தித்தார்.
தன் இளவயது முதல் திருத்தந்தை அவர்கள் ஆர்வம் கொண்டிருந்த இந்தக் கால்பந்தாட்டக் குழுவினர், அண்மையில் அர்ஜென்டினாவின் முதன்மை அணி என்ற கோப்பையை முதன்முறையாக வென்றுள்ளனர்.
தாங்கள் வேற கோப்பையின் ஒரு நகலை இக்குழுவினர் இப்புதனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, பிறந்தநாள் பரிசாக வழங்கினர்.
டிசம்பர் 15, கடந்த ஞாயிறன்று San Lorenzo குழுவினர் இக்கோப்பையைக் கைப்பற்றியதும், அதனை, திருத்தந்தைக்குப் பிறந்தநாள் பரிசாக அர்ப்பணிக்கப் போவதாகத் தெரிவித்திருந்தனர்.

ஆதாரம் : VIS

4. ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ்

டிச.19,2013. டிசம்பர் 11, கடந்த புதனன்று Times வார இதழ், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை 2013ம் ஆண்டின் தலைசிறந்த மனிதர் என்று அறிவித்து, அவரது உருவத்தை தன் முன்பக்க அட்டையில் வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து, கடந்த ஒரு வாரத்தில், 'The New Yorker', 'The Advocate' ஆகிய இதழ்களும் தங்கள் அட்டைப்படத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருவத்தைப் பதித்து, அவரைப் பற்றிய கட்டுரைகளை வெளியிட்டிருந்தது ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
உலகில் உள்ள யாரையும் வெறுத்து ஒதுக்காமல், அவர்களுடன் உரையாடலை மேற்கொள்ளவேண்டும் என்று திருத்தந்தை அவர்கள் அடிக்கடி வலியுறுத்தி வருவதனால், அவர் அனைத்து ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் பேரவையின் ஊடகத் தொடர்பாளர் அருள் சகோதரி Mary Ann Walsh அவர்கள் கூறியுள்ளார்.
திருஅவையிலும், இவ்வுலகிலும் மாற்றங்கள் உருவாக வேண்டுமெனில், முதலில் ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையில் மனமாற்றம் ஏற்படவேண்டும் என்று திருத்தந்தை அவர்கள் கூறிவருவதும் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பது அருள் சகோதரி Walsh அவர்களின் கணிப்பு.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. திருத்தந்தை அனைத்து மக்கள் மத்தியிலும் பெருமளவான எதிர்பார்ப்புக்களை உருவாக்கி வருகிறார் - முதுபெரும் தந்தை Kirill

டிச.19,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைத்து மக்கள் மத்தியிலும் பெருமளவான எதிர்பார்ப்புக்களை உருவாக்கி வருகிறார் என்றும், கத்தோலிக்கத் திருஅவையும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையும் பல விடயங்களில் பொதுவான புரிதலை உருவாக்க முடியும் என்றும் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தந்தை Kirill அவர்கள் கூறியுள்ளார்.
கிறிஸ்தவ ஒன்றிப்பிற்காக பணியாற்றும் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Kurt Koch அவர்கள், டிசம்பர் 14, கடந்த சனிக்கிழமை முதல், டிசம்பர் 19, இவ்வியாழன் முடிய மாஸ்கோவில் பயணம் மேற்கொண்டார்.
இப்பயணத்தின் ஓர் உச்ச கட்டமாக, டிசம்பர் 18, இப்புதனன்று அவர் மாஸ்கோவின் முதுபெரும் தந்தை Kirill அவர்களைச் சந்தித்தபோது, கத்தோலிக்கத் திருஅவைக்கும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபைக்கும் இடையே நல்லுறவுகள் வளரும் வாய்ப்புக்கள் குறித்து இருவரும் நம்பிக்கை தெரிவித்தனர்.
இச்சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தந்தை Kirill அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உலக மக்கள் மத்தியில் நலமிக்க எதிர்பார்ப்புக்களை உருவாக்கி வருகிறார் என்றும், அவர் கொண்டிருக்கும் கண்ணோட்டங்கள், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையின் கண்ணோட்டங்களுடன் ஒன்றித்துச் செல்வது மகிழ்வளிக்கிறது என்று கூறினார்.
கர்தினால் Koch அவர்கள், தன் மாஸ்கோ பயணத்தின்போது, இரஷ்ய அரசு அதிகாரிகள் சிலரையும் சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : AsiaNews

6. கிறிஸ்மஸ் விழாவையொட்டி, மெக்சிகோ ஆயர்கள் சிறைகளில் உள்ளவர்களுக்கு, திருப்பலியாற்ற திட்டம்

டிச.19,2013. மெக்சிகோ நாட்டின் கர்தினால் Norberto Rivera Carrera அவர்கள், டிசம்பர் 18, இப்புதனன்று மெக்சிகோ நகரில் அமைந்துள்ள வளர் இளம் பருவத்தினர் சிறையில் கிறிஸ்மஸ் சிறப்புத் திருப்பலியை நிகழ்த்தினார்.
கடந்த 18 ஆண்டுகளாக கிறிஸ்மஸ் விழா காலத்தில் சிறைகளுக்குச் சென்று திருப்பலியாற்றும் கர்தினால் Carrera அவர்களைப் போலவே மெக்சிகோவின் பல ஆயர்கள் சிறைகளில் உள்ளவர்களுக்கு, கிறிஸ்மஸ் விழாவையொட்டி, திருப்பலியாற்ற திட்டமிட்டுள்ளனர் என்று CNA செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
மெக்சிகோ நாட்டில் திருப்பீடத் தூதராகப் பணியாற்றும் பேராயர் Christophe Pierre அவர்கள், Femenil Tepepan என்ற சிறையில் உள்ள இளம் கைதிகளுக்கு டிசம்பர் 20, இவ்வெள்ளியன்று திருப்பலியாற்றி, அவர்களுக்குக் கம்பளிப் போர்வைகளைக் கிறிஸ்மஸ் பரிசாக அளிப்பார் என்றும் CNA செய்தி கூறுகிறது.

ஆதாரம் : CNA

7. நேபாள நாட்டில் அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் திருத்தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

டிச.19,2013. திருத்தந்தையின் பிறந்தநாளையொட்டி, நேபாள நாட்டில் உள்ள மாவோயிச மற்றும் கம்யூனிச கட்சிகளைச் சார்ந்தவர்கள் திருத்தந்தைக்கு வாழ்த்துக்களை அனுப்பியுள்ளனர்.
நேபாள நாட்டில் பல ஆண்டுகளாக வளர்ந்துவரும் வெறுப்பைக் களைந்து, அனைவரும் ஒப்புரவில் வளரும் முயற்சிகளை மேற்கொள்வோம் என்ற உறுதியை இக்கட்சிகள் தங்கள் வாழ்த்துக்களுடன் திருத்தந்தைக்கு அனுப்பியுள்ளனர்.
மதம், அரசியல், கொள்கைப் பற்று என்ற பல பிரிவுகளையும் தாண்டி, ஒப்புரவை வளர்க்கவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடி கூறிவருவது தங்களைக் கவர்ந்துள்ளது என்றும், கிறிஸ்மஸ் விழாவுக்கு முன்னர் நேபாள நாட்டில் ஒப்புரவு முயற்சிகள் வெற்றிபெற உழைப்போம் என்றும், நேபாள காங்கிரஸ் கட்சித் தலைவர் Ram Chandra Poudel அவர்கள் கூறியுள்ளார்.
பல்வேறு கொள்கைகளால் கருத்து வேறுபாடு கொண்டுள்ள கட்சிகள் அனைத்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து அனுப்பும் முயற்சியில் இணைந்த வந்தது ஒரு நல்ல அடையாளம் என்று நேபாள கம்யூனிசக் கட்சித் தலைவர் Bam Dev Gautam அவர்கள் கூறினார்.

ஆதாரம் : AsiaNews

8. புலம்பெயர்ந்து செல்லும் மக்களின் கடின உழைப்பால் உலக நாடுகள் வளமடைந்து வருகின்றன - ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன்

டிச.19,2013. புலம்பெயர்ந்து செல்லும் பல கோடி மக்களின் துணிவு, விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகியவற்றால உலக நாடுகள் வளமடைந்து வருகின்றன என்பதை நாம் மறுக்கமுடியாது என்று ஐ.நா. அவையின் பொதுச்செயலர் பான் கி மூன் அவர்கள் கூறியுள்ளார்.
டிசம்பர் 18, இப்புதனன்று சிறப்பிக்கப்பட்ட அனைத்துலக புலம்பெயர்ந்தோர் நாளையொட்டி செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன் அவர்கள், புலம்பெயர்தல் என்பது 21ம் நூற்றாண்டின் இன்றியமையாத வரலாறாக மாறிவருகிறது என்று கூறினார்.
புலம்பெயரும் நிலைக்குத் தள்ளப்படும் மக்களில் 40 விழுக்காட்டினர் வளரும் நாடுகளிலிருந்து வருபவர்கள் என்றும், இவர்களில், 10ல் ஒருவர் 15 வயதுக்கும் உட்பட்ட இளம் வயதினர் என்றும் ஐ.நா. பொதுச் செயலர் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தங்கள் மாண்பையும், உடல் நலத்தையும் காப்பாற்ற முடியாத நிலைக்கு புலம் பெயர்ந்தோரை உள்ளாக்குவது குற்றம் என்பதை அனைத்து நாடுகளும் விரைவில் உணரவேண்டும் என்று பான் கி மூன் அவர்கள் தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

ஆதாரம் : UN

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...