Friday, 2 November 2012

Catholic News in Tamil 31/10/12

1. ஜான்சி மறைமாவட்டத்தின் புதிய ஆயர் நியமனம்

2. திருத்தந்தை முதலாம் ஜான்பால் அவர்கள் பிறந்த நாளின் நூற்றாண்டு விழா

3. பிரச்சனைகள் தீர்வதற்கு உரையாடல் ஒரு முக்கிய கருவியாக உள்ளது - கர்தினால் John Tong

4. சிறைகளில் வாழும் மனிதர்களையும் சேர்த்து ஒவ்வொரு மனிதரும் மதிப்பிற்குரியவர்கள் - கர்தினால் Murphy-O’Connor

5. தசரா விழா, நம் தனிப்பட்ட வாழ்வில் காணப்படும் தீமைகளையும் களைந்திட ஒரு வாய்ப்பாக அமைகிறது - டில்லி பேராயர்

6. மும்பைச் சேரிகளில் 'புட்டி விளக்குகள்' என்ற புதிய திட்டம்

7. கணணி வழியில் நீத்தார் நினைவு நாள்: பிலிப்பின்ஸ் ஆயர் பேரவை முயற்சி
சுற்றுச்சூழல் குழு எதிர்ப்பு

8. குடிநீரைத் தனியார்மயமாக்குவதற்கு முயற்சிக்கும் இலங்கை அரசின் திட்டத்திற்குச் சுற்றுச்சூழல் குழு எதிர்ப்பு

------------------------------------------------------------------------------------------------------

1. ஜான்சி மறைமாவட்டத்தின் புதிய ஆயர் நியமனம்

அக்.31,2012. இந்தியாவின் ஜான்சி மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருள்தந்தை Peter Parapullil அவர்களைத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இப்புதனன்று நியமனம் செய்தார்.
இம்மறைமாவட்டத்தின் ஆயராக 1977ம் ஆண்டு முதல் பணியாற்றிய ஆயர் Frederick D'Souza அவர்களின் பதவி விலகலை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை, இதுவரை அம்மறைமாவட்டத்தின் குருகுல முதல்வராக 2005ம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் அருள்தந்தை Peter Parapullil அவர்களை ஆயராக நியமனம் செய்துள்ளார்.
1949ம் ஆண்டு கேரளாவின் Perumanoorல் பிறந்த Peter, 1976ம் ஆண்டு ஜான்சி மறைமாவட்டத்தின் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
உரோமையில் உள்ள கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக் கழகத்தில் தன் உயர்கல்வியை முடித்த அருள்தந்தை Peter, ஜான்சி மறைமாவட்டத்தின் பல முக்கிய பொறுப்புக்களில் பணியாற்றியவர்.
1954ம் ஆண்டு மறைமாவட்டமாக உருவாக்கப்பட்ட ஜான்சியில், ஏறத்தாழ நாலாயிரம் கத்தோலிக்கர்கள் வாழ்கின்றனர். 22 பங்குத்தளங்களைக் கொண்ட இம்மறைமாவட்டத்தில், 54 குருக்களும், 236 இருபால் துறவியரும் பணி புரிகின்றனர்.


2. திருத்தந்தை முதலாம் ஜான்பால் அவர்கள் பிறந்த நாளின் நூற்றாண்டு விழா

அக்.31,2012. அக்டோபர் 30 இச்செவ்வாய் மாலை, இத்தாலியின் வெனிஸ் நகரில் திருத்தந்தை முதலாம் ஜான்பால் அவர்கள் பிறந்த நாளின் நூற்றாண்டு விழா ஓர் ஆடம்பரத் திருப்பலியுடன் கொண்டாடப்பட்டது.
திருத்தந்தை முதலாம் ஜான்பால் 1912ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி வட இத்தாலியின் Veneto எனும் பகுதியில் பிறந்தார். 1978ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி இவர் திருத்தந்தையாகப் பொறுப்பேற்று, 33 நாட்களுக்குப் பின், செப்டம்பர் மாதம் 28ம் தேதி இறையடி சேர்ந்தார்.
'புன்னகைத் தவழும் திருத்தந்தை' என்ற அடைமொழிக்கு உரிய இத்திருத்தந்தை 1969ம் ஆண்டு முதல் 1978ம் ஆண்டு வரை வெனிஸ் நகரின் பேராயராகப் பணியாற்றினார்.
Albino Luciani என்ற இயற்பெயர் கொண்ட இத்திருத்தந்தை பிறந்த நூற்றாண்டு விழாவின் நினைவாக, வெனிஸ் பேராயர் Francesco Moraglia தலைமையில் ஆடம்பரத் திருப்பலி இச்செவ்வாய் மாலை நிகழ்ந்தது. இத்திருப்பலியைத் தொடர்ந்து இன்னிசை நிகழ்ச்சியொன்றும் நடைபெற்றது.
திருத்தந்தை முதலாம் ஜான்பால் அவர்களை அருளாளராக உயர்த்தும் முயற்சிகள் 2003ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


3. பிரச்சனைகள் தீர்வதற்கு உரையாடல் ஒரு முக்கிய கருவியாக உள்ளது - கர்தினால் John Tong

அக்.31,2012. பல தவறான எண்ணங்களும், முற்சார்பு எண்ணங்களும் சீரமைக்கப்பட்டு, பிரச்சனைகள் தீர்வதற்கு உரையாடல் ஒரு முக்கிய கருவியாக உள்ளது என்று ஹாங்காங் பேராயர் கர்தினால் John Tong கூறினார்.
திருப்பீடத்திற்கும், சீன நாட்டுக்கும் இடையே உரையாடல்களை உருவாக்க ஒரு திருப்பீட அவை நிறுவப்படுவது நலம் என்று திருப்பீட விசுவாசப்பரப்புப் பேராயத்தின் தலைவரான கர்தினால் Fernando Filoni, அண்மையில் ஒரு பரிந்துரையைக் கூறியுள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் தலைவராகப் பணியாற்றிய கர்தினால் John Tong, இப்பரிந்துரைக்குத் தன் முழு ஆதரவு உண்டு என்று Fides செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார்.
கர்தினால் Filoniயின் பரிந்துரை அடங்கிய கட்டுரையில், எந்த ஒரு கலாச்சாரத்திலும் மதச் சுதந்திரம் ஒரு முக்கிய பங்கு வகிக்கவேண்டும் என்று கூறியிருப்பதையும் சுட்டிக் காட்டிப் பேசிய கர்தினால் John Tong, சீனாவில் வாழும் கிறிஸ்தவர்கள் நாட்டுக்கும் திருஅவைக்கும் உகந்த குடிமக்களாக வாழ உரையாடல் வழிவகுக்கும் என்பதை வலியுறுத்திக் கூறினார்.


4. சிறைகளில் வாழும் மனிதர்களையும் சேர்த்து ஒவ்வொரு மனிதரும் மதிப்பிற்குரியவர்கள் - கர்தினால் Murphy-O’Connor

அக்.31,2012. படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதரும் இறைசாயலில் படைக்கப்பட்டுள்ளதால், அவர்கள் அனைவருமே மதிப்பிற்குரியவர்கள், இங்கிலாந்திலும், Walesஇலும் உள்ள சிறைகளில் வாழும் 87,000 பேரையும் சேர்த்து ஒவ்வொரு மனிதரும் மதிப்பிற்குரியவர்கள் என்று கர்தினால் Cormac Murphy-O’Connor கூறினார்.
'நம்பிக்கையும் குற்றங்களுக்கு நீதி வழங்கும் முறையும்' என்ற தலைப்பில் இச்செவ்வாயன்று இலண்டன் மாநகரில் உள்ள Allen Hall குருத்துவப் பயிற்சி இல்லத்தில் உரையாற்றிய கர்தினால் O’Connor இவ்வாறு கூறினார்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் ஏடுகள், பல்வேறு திருத்தந்தையர்களின் மடல்கள் ஆகியவற்றிலிருந்து மேற்கோள்கள் காட்டி, தன் உரையை வழங்கினார் கர்தினால் O’Connor.
சிறையில் கைதிகளாய் இருப்பவர்கள் நம்பிக்கையின் உதவியுடன் தங்கள் வாழ்வை மீண்டும் சீரமைக்க விழைகின்றனர் என்று அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் ஜுபிலி ஆண்டான 2000ம் ஆண்டில் எழுதிய 'சிறைகளில் ஜுபிலி' என்ற மடலைக் குறித்தும், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் Rebibbia சிறையில் உள்ளவர்களைச் சந்தித்தபோது வழங்கிய உரையைக் குறித்தும் கர்தினால் O’Connor தன் உரையில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.


5. தசரா விழா, நம் தனிப்பட்ட வாழ்வில் காணப்படும் தீமைகளையும் களைந்திட ஒரு வாய்ப்பாக அமைகிறது - டில்லி பேராயர்

அக்.31,2012. தீமைக்கு எதிராக நன்மையே வெல்லும் என்ற கருத்துடன் அண்மையில் இந்தியாவில் கொண்டாடப்பட்ட தசரா விழா, நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்வில் காணப்படும் தீமைகளையும் களைந்திட ஒரு வாய்ப்பாக அமைகிறது என்று டில்லி பேராயர் Vincent Concessao கூறினார்.
இந்தியாவின் அரசியலில் காணப்படும் ஊழலை எதிர்த்து குரலெழுப்பி வரும் ஒன்றுபட்ட கிறிஸ்தவர்கள் தேசிய அமைப்பின் தலைவரான பேராயர் Concessao, அண்மைக் காலங்களில் இந்திய அரசியல் தலைவர்களின் ஊழல்கள் அம்பலமாகி வருவது நாட்டை இருளான பாதையில் தள்ளியுள்ளது என்று கூறினார்.
நேர்மையையும், உண்மையையும் உலகிற்குச் சொன்ன பல முக்கிய மதங்களின் ஊற்றாக விளங்கும் இந்தியா, தற்போது இந்த நன்னெறி விழுமியங்களிலிருந்து மிகவும் விலகியிருப்பது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது என்று பேராயர் தன் கவலையை வெளியிட்டார்.
இலஞ்சம் என்ற பெரும் நோயிலிருந்து இந்தியா மீள்வதற்கு, அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், முக்கியமாக, மக்கள் கடினமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இந்நோயை நாட்டிலிருந்து களைய இந்தியாவில் வாழும் அனைத்து கிறிஸ்தவர்களும் இணைந்து செபிக்கவேண்டும் என்றும் டில்லி பேராயர் Concessao அழைப்பு விடுத்தார்.


6. மும்பைச் சேரிகளில் 'புட்டி விளக்குகள்' என்ற புதிய திட்டம்

அக்.31,2012. மும்பையில் உள்ள ஒரு கல்லூரியின் மாணவர்களும், சுவிட்சர்லாந்திலிருந்து வந்துள்ள பல்கலைக் கழக மாணவர்களும் இணைந்து, மும்பையில் உள்ள சேரிகளில் 'புட்டி விளக்குகள்' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
மும்பையில் உள்ள புகழ்பெற்ற புனித சேவியர் கல்லூரி மாணவர்களும், சுவிட்சர்லாந்தின் புனித Gallen பல்கலைக் கழக மாணவர்களும் இணைந்து எளிமையான பிளாஸ்டிக் புட்டிகளைக் கொண்டு சேரிகளின் இருளடைந்த வீடுகளில் ஒளியேற்றும் புதிய வழியை மக்களுக்கு அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
இந்த முறையில் எளிய ஒரு லிட்டர் பிளாஸ்டிக் புட்டியில் நீர் நிரப்பி, அதன் மேல் பாதி கூரையில் செய்யப்பட்டுள்ள ஓட்டையின் வழியே, சூரிய ஒளியில் வைக்கப்பட்டால், கீழ் பாதி புட்டி மூலம் 55 வாட் மின் விளக்கு உருவாக்கும் அளவு ஒளி அறைக்குள் பரவும் என்று சொல்லப்படுகிறது.
2002ம் ஆண்டு பிரேசில் நாட்டின் Alfredo Moser என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட இம்முறை, பிலிப்பின்ஸ் நாட்டின் சேரிகளில் Illac Diaz என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது இம்முறையால் மும்பை சேரிகளில் வாழ்வோர் மத்தியில் ஒளி உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இந்த முறையை உலகெங்கும் வாழும் பல கோடி ஏழைகள் இல்லங்களில் பரப்புவதே சுவிட்சர்லாந்து புனித Gallen பல்கலைக் கழகத்தின் நோக்கம் என்றும் Geraldine Ludi என்ற மாணவர் கூறினார்.


7. கணணி வழியில் நீத்தார் நினைவு நாள்: பிலிப்பின்ஸ் ஆயர் பேரவை முயற்சி

அக்.31,2012. நீத்தார் நினைவைக் கொண்டாடும் நவம்பர் 2ம் தேதியன்று கணணி வழியில் கல்லறைகளைக் கண்டு, அங்கு நிகழும் வழிபாடுகளில் பங்கேற்கும் வழிமுறையை பிலிப்பின்ஸ் ஆயர் பேரவையின் ஊடகத்துறை அலுவலகம் உருவாக்கியுள்ளது.
நீத்தார் நினைவு பிலிப்பின்ஸ் நாட்டில் ஒரு பெரும் விழாவாகக் கொண்டாடப்படுவது மரபு. பிலிப்பின்ஸ் நாட்டிலிருந்து வெளிநாடுகளில் பணி செய்து வரும் கத்தோலிக்கர்கள் இந்த மரபுவழி விழாவில் நேரடியாகக் கலந்துகொள்ள முடியாததால், அவர்கள் வசதிக்காக, இத்தொழிநுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது என்று பேரவையின் ஊடகத் துறை இயக்குனர் அருள்தந்தை Pedro Quitorio, Fides செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார்.
80 இலட்சத்திற்கும் மேற்பட்ட பிலிப்பின்ஸ் நாட்டு மக்கள் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வருகின்றனர் என்றும், இவர்கள் அனைவருமே நீத்தார் நினைவு எனும் நாளை சிறப்பாகக் கொண்டாட விழையும் கத்தோலிக்கர்கள் என்றும் அருள்தந்தை Quitorio விளக்கினார்.


8. குடிநீரைத் தனியார்மயமாக்குவதற்கு முயற்சிக்கும் இலங்கை அரசின் திட்டத்திற்குச் சுற்றுச்சூழல் குழு எதிர்ப்பு

அக்.31,2012. இலங்கை அரசு குடிநீர் விநியோகத்தைத் தனியார்மயமாக்குவதற்கு முயற்சித்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
இலங்கை அரசு குடிநீர் விநியோகத்தைத் தனியார்மயமாக்குவதற்கு விரும்புகிறது என்று, தண்ணீருக்கான மக்கள் உரிமை இயக்கம் என்ற சுற்றுச்சூழல் குழு குற்றம் சாட்டுவதற்கு அரசு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து வந்தாலும், குடிநீருக்கு வரி வசூலிப்பதற்கு அரசு முயற்சித்து வருவதாக அக்குழு கூறுகிறது.
தூய்மையான பொருள்கள்மீது வரி வசூலிப்பதைப் புகுத்துவதன் மூலம், 1964ம் ஆண்டின் நீர்வள அமைப்புச் சட்ட எண்ணில் மாற்றம் கொண்டுவருவதற்கு அரசு திட்டமிட்டு வருகின்றது என்று இந்தச்  சுற்றுச்சூழல் குழு கூறியுள்ளது. 
இதற்கிடையே, குடிநீருக்கும் வேளாண்மைக்குமென கிணறு அல்லது குழாய்க் கிணறு தோண்டும்போது 7,500 ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கும் திட்டத்தை நீர்வள அமைப்பு அண்மையில் பரிந்துரைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Pope prays for global peace and for all victims of religious persecution

  Pope prays for global peace and for all victims of religious persecution Pope Francis calls for peace in conflict zones, solidarity with t...