1. இந்தியாவில் கிறிஸ்தவம் தளைக்க இந்துக்களின் நல்மனதே காரணம் : சீரோ மலங்கரா ரீதி தலைவர்
2. சாந்தோ தொமிங்கோவில் பெண்களுக்கு எதிரான வன்செயல்கள் நிறுத்தப்படுவதற்கு கர்தினால் லோப்பெஸ் ரொட்ரிக்கெஸ் அழைப்பு
3. நைஜீரியாவில் ஆலயத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு காட்டுமிராண்டித்தனமானது, கடுனா பேராயர் கண்டனம்
4. திருகோணமலையில் அன்னைமரி திருவுருவம் சேதம்
5. இந்தோனேசியாவில் சிறுபான்மை மதத்தவரின் உரிமைகள் மதிக்கப்ப்ட அழைப்பு
6. பள்ளிக் குழந்தைகளுக்கு எதிரான அத்துமீறல்கள் மிசோரமில் அதிகரிப்பு : ஆய்வில் அதிர்ச்சி தகவல்
7. வரலாற்றில் இல்லாத அளவுக்கு நீதித்துறைக்கும், அரசுக்கும் இடையில் முரண்பாடுகள் நிலவுகின்றன : மனித உரிமைகள் கண்காணிப்பகம்
8. ஜெர்மனியில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. இந்தியாவில் கிறிஸ்தவம் தளைக்க இந்துக்களின் நல்மனதே காரணம் : சீரோ மலங்கரா ரீதி தலைவர்
அக்.30, 2012. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவில் அறிவிக்கப்பட்ட கிறிஸ்தவம் இன்றும் உயிரூட்டமுடையதாக இருக்கின்றது என்றால், அதற்கு
இந்திய இந்து சகோதரர்கள் வழங்கிய ஆதரவும் பாதுகாப்புமே காரணம் என்றார்
சீரோ மலங்கரா ரீதி பேராயர் பசிலியோஸ் கிளீமிஸ் தொட்டுங்கல்.
இந்துக்களின் நல்மனதாலேயே இந்தியாவில் கிறிஸ்தவம் இவ்வளவு காலமும் நன்முறையில் வாழ முடிந்தது என்ற பேராயர், மதத் தீவிரவாதம் என்பது ஒரு மதத்திற்கு மட்டுமே உரியது என நாம் குறை கூறக்கூடாது, ஏனெனில் இது எல்லா மதங்களிலும் காணக்கிடக்கிறது என்றார்.
உரிமை மீறல்கள் இடம்பெறும் சூழல்களிலும், நாம்
அனைவரும் பேச்சுவார்த்தைகள் மற்றும் செபம் மூலம் அமைதி வழிகளைக்
கண்டுகொண்டு அனைத்து மதத்தினருடன் ஒன்றிணைந்து வாழ முடியும் என்றார், கர்தினாலாக திருத்தந்தையால் அறிவிக்கப்பட்டுள்ள சீரோ மலங்கரா பேராயர் பசிலியோஸ்.
ஒரு மத நம்பிக்கையாளரின் மத உரிமைகள் மதிக்கப்படாதபோது அவரின் மனித மாண்பு மீறப்படுகிறது என்பதையும் எடுத்துரைத்தார் அவர்.
புதிய கர்தினாலாகத் திருத்தந்தையால் அறிவிக்கப்பட்டுள்ள பேராயர் கிளீமிஸ், நவம்பர் மாதம் 24ம் தேதி அந்நிலைக்கு உயர்த்தப்படவுள்ளார்.
2. சாந்தோ தொமிங்கோவில் பெண்களுக்கு எதிரான வன்செயல்கள் நிறுத்தப்படுவதற்கு கர்தினால் லோப்பெஸ் ரொட்ரிக்கெஸ் அழைப்பு
அக்.30,2012.
கரீபியன் பகுதி நாடான சாந்தோ தொமிங்கோவில் பெண்களுக்கு எதிராக ஆண்கள்
செய்யும் வன்செயல்கள் நிறுத்தப்படுவதற்கு அழைப்பு விடுத்தார் சாந்தோ
தொமிங்கோ பேராயர் கர்தினால் நிக்கொலாஸ் தெ ஹேசுஸ் லோப்பெஸ் ரொட்ரிக்கெஸ்.
கடந்த ஞாயிறன்று நம்பிக்கை ஆண்டை தொடங்கி வைத்த திருப்பலி மறையுரையில் இவ்வாறு கேட்டுக் கொண்ட கர்தினால் லோப்பெஸ் ரொட்ரிக்கெஸ், அந்நாடு தற்போது எதிர்கொள்ளும் நெருக்கடியான சூழலிலிருந்து வெளிவருவதற்கு அனைவரும் செபிக்குமாறு கூறினார்.
கரீபியன்
பகுதியை அதிகம் தாக்கிய சாண்டிப் புயலால் பாதிக்கப்பட்டுள்ள
நூற்றுக்கணக்கானக் குடும்பங்களுக்கு உதவிகள் செய்யப்படுமாறு அரசை
வலியுறுத்தினார் கர்தினால் லோப்பெஸ் ரொட்ரிக்கெஸ்.
500 ஆண்டு கிறிஸ்தவ விசுவாசத்தின் மரபைக் கொண்டுள்ள சாந்தோ தொமிங்கோவில், இன்று அவ்விசுவாசம் வாழப்படவில்லை என்றும் கூறினார் கர்தினால் லோப்பெஸ் ரொட்ரிக்கெஸ்.
3. நைஜீரியாவில் ஆலயத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு காட்டுமிராண்டித்தனமானது, கடுனா பேராயர் கண்டனம்
அக்.30,2012. நைஜீரியாவில் ஞாயிறு திருப்பலி நடந்து கொண்டிருந்த போது சக்தி மிக்க வெடிகுண்டை வெடிக்கச் செய்த செயல், கோழைத்தனமான, காட்டுமிராண்டித்தனமான மற்றும் பயங்கரவாதச் செயல் என்று சொல்லி, அதற்குத் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் கடுனா பேராயர் Matthew M. Ndagoso.
நைஜீரியாவின் வடபகுதியிலுள்ள கடுனா நகரின் கத்தோலிக்க ஆலயத்தில் இஞ்ஞாயிறு காலை 9 மணியளவில் திருப்பலி நடந்து கொண்டிருந்தபோது, குண்டு
நிரப்பிய வாகனத்தை ஓட்டி வந்தவர் நேரடியாக ஆலயச் சுவரில் மோதியதில்
குறைந்தது 7 பேர் இறந்துள்ளனர் மற்றும் நூற்றுக்கும் அதிகமானோர்
காயமடைந்துள்ளனர்.
இது குறித்து பிதெஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய பேராயர் Ndagoso, யாராவது இத்தகைய செயலைச் செய்வார்களா என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை, ஆயினும் செய்துள்ளார்கள் என்று கூறினார்.
மேலும், உள்ளூர் கிறிஸ்தவர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட வேண்டாமென அரசும் திருஅவையும் கேட்டுக் கொண்டன என்று ஊடகங்கள் கூறுகின்றன.
Boko Haram என்ற இசுலாமியத் தீவிரவாதக் குழு, இத்தாக்குதலை நடத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
2009ம் ஆண்டில் Boko Haram குழு வன்முறையில் இறங்கியதிலிருந்து இதுவரை குறைந்தது 2,800 பேர் இறந்துள்ளனர் என மனித உரிமை குழுக்கள் கூறுகின்றன.
நைஜீரியாவின் வடபகுதியில் பெரும்பாலும் முஸ்லீம்களும், தென்பகுதியில்
பெரும்பாலும் கிறிஸ்தவர்கள் மற்றும் பூர்வீக மதத்தை வழிபடுகிறவர்களும்
உள்ளனர். கடுனா உயர்மறைமாவட்டத்தில் 2011ம் ஆண்டில் 9.2 விழுக்காட்டினர்
கத்தோலிக்கராக இருந்தனர்.
4. திருகோணமலையில் அன்னைமரி திருவுருவம் சேதம்
அக்.30, 2012.
இலங்கையின் திருகோணமலை பாலையூற்று பூங்கா சந்தியில் இருந்த லூர்து
அன்னைமரி திருவுருவம் ஒன்று அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு
சேதமாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
பல
ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த அன்னைமரி திருவுருவம் சனிக்கிழமை காலையில்
சேதமாக்கப்பட்டிருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக திருகோணமலை காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
மூன்று
தினங்களுக்கு முன்னதாக ஹஜ் பெருநாள் தினத்தன்று அநுராதபுர மாவட்டத்தில்
உள்ள ஒரு முஸ்லிம் வழிபாட்டிடம் தீ வைத்து எரிக்கப்பட்டதும் இங்கு
குறிப்பிடத்தக்கது.
5. இந்தோனேசியாவில் சிறுபான்மை மதத்தவரின் உரிமைகள் மதிக்கப்ப்ட அழைப்பு
அக்.30, 2012.
இந்தோனேசியாவில் சிறுபான்மை மதத்தவரின் உரிமைகள் மதிக்கப்பட்டு
நிலைநாட்டப்பட அந்நாட்டு அரசுத்தலைவரை வலியுறுத்துமாறு இங்கிலாந்து
பிரதமருக்கும் வெளியுறவு அமைச்சருக்கும் கடிதங்களை அனுப்பியுள்ளது
அனைத்துலக கிறிஸ்தவ ஒருமைப்பாடு என்ற உரிமைகள் அமைப்பு.
மேற்கு
பாப்புவா பகுதியில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களும் மத சகிப்பற்ற
தன்மைகளும் இந்தோனேசியாவின் மக்களாட்சி வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக உள்ளன
என, கடிதங்களில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
தீவிரவாதிகளின்
அச்சுறுத்தலைத் தொடர்ந்து இந்தோனேசிய அரசு அதிகாரிகளால் கோவில்கள்
வலுக்கட்டாயமாக மூடப்பட்டுவருவது குறித்தும் அனைத்துலக கிறிஸ்தவ
ஒருமைப்பாட்டு அமைப்பு தன் கவலையை வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்திற்கான இந்தோனேசிய அரசுத்தலைவர் Susilo Bambang Yudhoyonoவின்
அரசுப்பயணத்தின்போது அந்நாட்டின் மத உரிமைகள் குறித்து பிரித்தானியப்
பிரதமரும் வெளியுறவு அமைச்சரும் வலியுறுத்த வேண்டும் என இந்த உரிமை அமைப்பு
விண்ணப்பித்துள்ளது.
6. பள்ளிக் குழந்தைகளுக்கு எதிரான அத்துமீறல்கள் மிசோரமில் அதிகரிப்பு : ஆய்வில் அதிர்ச்சி தகவல்
அக்.30, 2012. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்து மீறல்கள் அதிகரித்து வருவதாக, அதாவது, பள்ளிகளிலும், வீடுகளிலும், குழந்தைகள், பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
வடகிழக்கு இந்திய மாநிலங்களில் ஒன்றான, மிசோரமில், பள்ளிக் குழந்தைகளுக்கு எதிரான, " பாலியல் ' கொடுமைகள், அதிகரித்து வருவதாக, புகார்கள் வந்ததைத்தொடர்ந்து, மிசோரம் மாநில சமூக நலத்துறை, தன்னார்வ நிறுவனம் மற்றும் மனித உரிமை சட்ட அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில் இவ்வுண்மைகள் வெளிவந்துள்ளன.
இதில் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன. குழந்தைகளுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் அனைத்தும், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலமே நடந்துள்ளன எனவும், 2003 முதல் 2009ம் ஆண்டு வரையில், மிசோரமில், குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் குறித்த வழக்குகள், 630 பதிவாகிஉள்ளன எனவும் தெரியவந்துள்ளது.
மிசோரம் மாநில அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த ஆய்வு முடிவுகள், செக்ஸ் தொல்லை கொடுப்பவர்களிடம் இருந்து, தங்களைக் காத்துக் கொள்வது குறித்து, குழந்தைகளுக்கு பாலியல் கல்வி அவசியம் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளது.
7. வரலாற்றில் இல்லாத அளவுக்கு நீதித்துறைக்கும், அரசுக்கும் இடையில் முரண்பாடுகள் நிலவுகின்றன : மனித உரிமைகள் கண்காணிப்பகம்
அக்.30, 2012.
இலங்கையின் வரலாற்றில் எந்த ஓர் அரசும் மேற்கொள்ளாத அளவில் நீதித்துறைக்கு
எதிரான வன்முறைகளைத் தற்போதைய அரசு மேற்கொண்டு வருவதாக, ஆசிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.
நீதித்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக நேரடியான மற்றும் மறைமுகமான தாக்குதல்களை நடத்தி, தொடர்ந்தும் நீதித்துறையை தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள அரசு முயற்சிக்கிறது எனக்கூறும் ஆசிய மனித உரிமைகள் கண்காணிப்பகம், இவ்வாறான வன்முறைகள் விரைவில் நீக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளது.
அரசின் தொலைக்காட்சிகளைப் பயன்படுத்தி, நீதித்துறைக்கு எதிரான அவதூறுகளையும் அரசு தொடர்ச்சியாக முன்வைத்து வருவதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
8. ஜெர்மனியில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
அக்.30, 2012. ஜெர்மனியில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதாக தற்போதைய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
ஜெர்மனியில் உள்ள முதியவர்கள் குறித்து மத்திய கூட்டுப் புள்ளியியல் துறை ஆய்வு நடத்தியதில், ஜெர்மனியில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதாகவும், இந்நிலை தொடர்ந்தால் வருகிற 2050ஆம் ஆண்டில் தற்போதைய நிலையைவிட இரண்டு மடங்காகி விடும் எனவும் தெரிய வந்துள்ளது.
2050ஆம் ஆண்டில் ஜெர்மனியில் 15 பேரில் ஒருவர் முதியவராக இருப்பர், அதாவது 47 இலட்சம் முதியவர்கள் இருப்பார்கள் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜெர்மனியில் முதியவர்கள் நல மையங்களில் கட்டணங்கள் அதிகம் என்பதால், இவர்கள் இஸ்பெயின், தாய்லாந்து மற்றும் அண்மை ஐரோப்பிய நாடுகளுக்கு இடம்பெயர்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment