Wednesday, 28 November 2012

Catholic News in Tamil - 27/11/12

1. காங்கோ வன்முறைகள் குறித்து ஆப்ரிக்க ஆயர்கள் கண்டனம்
2. ஐ.நா.விற்கான அரசியல் விவகார அதிகாரிகள் குழு - யாழ். ஆயர் சந்திப்பு

3. நைஜீரியாவின் கிறிஸ்தவக் கோவில் மீது மீண்டும் வெடிகுண்டுத் தாக்குதல்

4. கிறிஸ்தவக் கோவில் தாக்கப்பட்டுள்ளது குறித்து நைஜீரியக் கர்தினால் கண்டனம்

5. லெபனன் காரித்தாஸ் : லெபனனில் ஏழைகள் மேலும் ஏழைகளாகிக் கொண்டிருக்கின்றனர்

6. இந்த ஆண்டில் மட்டும் கர்நாடகாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 39 திட்டமிட்ட தாக்குதல்கள்

7. உலக தட்ப வெப்ப நிலை குறித்த தீர்மானங்களில் ஏழை நாடுகள் சார்பாக CAFOD

------------------------------------------------------------------------------------------------------

1. காங்கோ வன்முறைகள் குறித்து ஆப்ரிக்க ஆயர்கள் கண்டனம்
நவ.27,2012காங்கோ ஜனநாயகக் குடியரசில் இடம்பெற்றுவரும் வன்முறைகள் குறித்து ஆப்ரிக்க நாடுகளின் ஆயர் பேரவைத் தலைவர்களும் அப்பகுதியின் காரித்தாஸ் அமைப்புகளின் தலைவர்களும் இணைந்து தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.
வடபகுதியில் கனிம வளம் நிறைந்த கிவு மாநிலத்தைக் கைப்பற்ற புரட்சிக்குழு ஒன்று அரசுத் துருப்புகளுக்கு எதிராகப் போர் நடத்திவருவது குறித்து கவலையை வெளியிட்ட ஆப்ரிக்க ஆயர்கள், பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் இப்போரினால் உயிரிழந்தும் தங்கள் உடமைகளை இழந்து அனாதைகளாகியும் வருவதாக தெரிவித்தனர்.
மோதல்களால் குடிபெயரும்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மக்கள், தட்ப வெப்ப நிலை சீர்கேடு, பசி, பாலியல் வன்செயல், சிறார்கள் ஆயுதம் தாங்க கட்டாயப்படுத்தப்படல் போன்ற உரிமை மீறல்களுக்கு உட்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கும் ஆப்ரிக்க ஆயர்கள், மனித மாண்பு காக்கப்பட உதவுவதில் அனைத்துலக சமுதாயத்தின் உதவியையும் வேண்டியுள்ளனர்.
2. ஐ.நா.விற்கான அரசியல் விவகார அதிகாரிகள் குழு - யாழ். ஆயர் சந்திப்பு

நவ.27,2012ஐநாவிற்கான அரசியல் விவகார அதிகாரிகள் குழு ஒன்று, யாழ்ப்பாண ஆயர் தாமஸ் சௌந்தரநாயகம் அவர்களை இச்செவ்வாயன்று காலை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியது.
செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரம் காலை 11 மணிக்கு இடம்பெற்ற இச்சந்திப்பின்போது யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மீள்குடியேற்றங்கள், மக்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் அரசியல் தீர்வு என, பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக யாழ். ஆயர் சௌந்தரநாயகம் தெரிவித்தார்.
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் நிறுவனம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்  எனவும் யாழ். ஆயர் ஐநா பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

3. நைஜீரியாவின் கிறிஸ்தவக் கோவில் மீது மீண்டும் வெடிகுண்டுத் தாக்குதல்

நவ.27,2012நைஜீரியாவின் வட பகுதியில் இராணுவ முகாம் ஒன்றிலிருந்த கிறிஸ்தவக் கோவில் மீது இரு தீவிரவாதிகள் மனித வெடிகுண்டாக மாறித் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து 11 பேர் உயிரிழந்துள்ளனர், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
Jaji நகரில் இஞ்ஞாயிறன்று இடம்பெற்ற இத்தாக்குதலை Boko Haram என்ற இஸ்லாமிய தீவிரவாதக் குழு நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மனித வெடிகுண்டாக ஒருவர் கோவிலைத் தாக்கி சேதம் விளைவித்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் உதவச் சென்றவர்கள் மீது அடுத்த பத்து நிமிடங்களில் மீண்டும் ஒரு மனித வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு உயிர்ச்சேதங்கள் இடம்பெற்றதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
பேருந்தை ஓட்டியும் பின்னர் சிறு வாகனம் ஒன்றின் மூலமும் இந்தத் தாக்குதல்கள் புனித ஆன்ட்ரூ இராணுவ கிறிஸ்தவக் கோவில் மீது நடத்தப்பட்டுள்ளன.

4. கிறிஸ்தவக் கோவில் தாக்கப்பட்டுள்ளது குறித்து நைஜீரியக் கர்தினால் கண்டனம்

நவ.27,2012நைஜீரியாவின் இராணுவ முகாமிலுள்ள கிறிஸ்தவக்கோவில் ஒன்று தாக்கப்பட்டுள்ளது குறித்து கண்டனத்தை வெளியிட்டுள்ள அந்நாட்டு கர்தினால் John Onaiyekan,  நாட்டில் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவது குறித்த கவலையையும் தெரிவித்துள்ளார்.
ஞாயிறன்று இடம்பெற்ற மனித வெடிகுண்டுத் தாக்குதல் குறித்து Aid to the Church in Need என்ற கத்தோலிக்க உதவி அமைப்புக்குப் பேட்டியளித்த கர்தினால், மிகவும் பாதுகாப்பானது என கருதப்படும் இராணுவ முகாமுக்குள்ளேயே வெடிகுண்டுத் தாக்குதல் இடம்பெற்றிருப்பது, நாட்டில் எந்த இடத்திலும் இத்தகைய தாக்குதல் இடம்பெறலாம் என்ற அச்சத்தைத் தந்துள்ளது என்றார்.
இத்தாக்குதல் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது என்ற கர்தினால், வன்முறைகளுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

5. லெபனன் காரித்தாஸ் : லெபனனில் ஏழைகள் மேலும் ஏழைகளாகிக் கொண்டிருக்கின்றனர்

நவ.27,2012. அரசியலில் ஆழமான பிளவுகளும் வன்முறைகளும் இடம்பெற்றுவரும் லெபனன் நாட்டில், 22 விழுக்காட்டுக்கு மேற்பட்ட மக்கள் வேலையின்றி உள்ளனர், ஏழைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது என அந்நாட்டுக் கத்தோலிக்க காரித்தாஸ் நிறுவனம் கூறியது.
அதிகரித்து வரும் ஏழைகளின் எண்ணிக்கையால் திணறிக் கொண்டிருக்கும் லெபனன் நாட்டுக்கு உதவிக்காக விண்ணப்பித்துள்ள அந்நாட்டுக் கத்தோலிக்க காரித்தாஸ் நிறுவனத் தலைவர் அருள்திரு Simon Faddoul, லெபனன் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழ்கின்றனர், இது உண்மையான எண்ணிக்கை என்று தெரிவித்தார்.
1975ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டுவரை லெபனனில் இடம்பெற்ற உள்நாட்டுச் சண்டையினால் அந்நாட்டின் பொருளாதாரம் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானப் பகுதிகளில் கடந்த இருபது ஆண்டுகளில் உள்கட்டமைப்பு மீண்டும் சீரமைக்கப்பட்டது, ஆனால் இந்தப் பணிகள் அரசைக் கடனாளியாக்கியுள்ளன மற்றும் வளர்ச்சியையும் மந்தமாக்கியுள்ளன.
லெபனனின் நிலைமை குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த அருள்திரு Simon, காரித்தாசின் மனிதாபிமானப் பணிகளுக்கு உதவிகளுக்கும் விண்ணப்பித்தார்.    
முதியோர்களுக்கு அதிகம் உதவி தேவைப்படுகின்றது என்றும் அக்குரு கூறினார்.

6. இந்த ஆண்டில் மட்டும் கர்நாடகாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 39 திட்டமிட்ட தாக்குதல்கள்

நவ.27,2012இந்த ஆண்டில் மட்டும் இதுவரை இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 39 திட்டமிட்ட தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக இந்தியக் கிறிஸ்தவர்களின் உலக அவை அறிவித்துள்ளது.
கடந்த வெள்ளியன்று பெல்லாரி மாவட்டத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் குழு ஒன்று ஆங்கிலிக்கன் கிறிஸ்தவக் குரு மற்றும் கோவில் மீது தாக்குதல் நடத்தியதையும், அதே நாளில் இந்து அமைப்பு ஒன்று பெந்தகோஸ்தே கோவில் திறப்பு விழாவில் பிரச்சனை ஏற்படுத்தியதையும் குறித்து கருத்து வெளியிட்ட இந்த இந்திய கிறிஸ்தவ உலக அவையின் தலைவர் சாஜன் ஜார்ஜ், கர்நாடக கிறிஸ்தவர்களின் மனதில் மீண்டும் பயம் தலைதூக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
இத்தகைய தாக்குதல்கள் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி புரியும் மாநிலங்களில் தொடர்ந்து இடம்பெற்று வரும் ஒன்று எனவும் கவலையை வெளியிட்டார் சாஜன் ஜார்ஜ்.

7. உலக தட்ப வெப்ப நிலை குறித்த தீர்மானங்களில் ஏழை நாடுகள் சார்பாக CAFOD

நவ.27,2012. உலக தட்ப வெப்ப நிலை குறித்த தீர்மானங்கள், சுற்றுச்சூழல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் நலனை மனதில் கொண்டதாக இருக்கவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது கத்தோலிக்க உதவி அமைப்பான CAFOD.
உலக தட்பவெப்ப நிலை மாற்றம் குறித்த ஐ.நா.வின் அனைத்துலக கருத்தரங்கு கத்தார் நாட்டுத் தலைநகரில் இடம்பெற்று வருவது குறித்து கருத்து வெளியிட்ட CAFOD அமைப்பு, தீய விளைவுகளை உருவாக்கும் வேதியல் வாயு வெளியேற்றம் குறைப்பு, தட்பவெப்ப நிலை மாற்றங்களால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவி, தட்பவெப்ப நிலை மாற்றம் குறித்த தீர்மானத்தில் தெளிவான முன்னேற்றம் போன்றவைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
தட்பவெப்ப மாற்றங்களால் உருவாகும் வறட்சி, வெள்ளப்பெருக்கு, புயல் போன்றவைகளால் 1980ம் ஆண்டுகளிலிருந்து இதுவரை பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் எனக்கூறும் CAFOD கத்தோலிக்க உதவி அமைப்பு, இவ்வாறு உயிரிழந்தவர்களுள் பெரும்பான்மையினர் ஏழை நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...