Tuesday, 27 November 2012

Catholic News in Tamil - 26/11/12

1. புதியக் கர்தினால்களின் குடும்பத்தினரோடு திருத்தந்தை சந்திப்பு

2. திருத்தந்தை : திருஅவை கிறிஸ்துவின் இறையாட்சியைப் பரப்பும் கடமையைக் கொண்டுள்ளது

3. திருத்தந்தை : இவ்வுலகின் கவர்ச்சிகளுக்கும் அதிகாரங்களுக்கும் எதிராக இறையாட்சிக்குச் சான்று பகரப் புதிய கர்தினால்களுக்கு அழைப்பு

4. கேரள புதிய கர்தினாலுக்கு இந்திய மத்தத்தலைவர்களின் பாராட்டு

5. மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகளுக்கென அனைத்துலக மையம்

6. இன்றையை இந்தியாவின் முதுகெலும்பாக மதம் உள்ளது

7. இஸ்லாமிய மதபோதனைக்கூட்டம் ஒன்றில் கல்ந்துகொள்ள மறுப்புத்தெரிவித்த மூன்று கத்தோலிக்கர்களுக்கு சிறை

8. மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது இந்தியா : தலாய்லாமா

------------------------------------------------------------------------------------------------------

1. புதியக் கர்தினால்களின் குடும்பத்தினரோடு திருத்தந்தை சந்திப்பு

நவ.26,2012. கடந்த சனிக்கிழமையன்று தன்னால் கர்தினால்களாக உயர்த்தப்பட்ட 6 பேரையும் அவர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரோடு இத்திங்கள் காலை திருப்பீடத்தில் சந்தித்து உரைவழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
புதியத் திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதில் பங்குபெறுவதுடன், முக்கிய விடயங்களில் திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்குவதும் கர்தினால்களின் பணி என்பதை சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இரத்தம் சிந்தும் அளவுக்கும் சென்று கிறிஸ்துவின் மந்தையைக் காக்கவேண்டிய அர்ப்பணத்தைச் சுட்டிக்காட்டுவதாகவே கர்தினால்களின் இடுப்புக் கச்சையின் நிறம் உள்ளது என்றார்.
திருஅவையின் புனிதம், ஒன்றிப்பு மற்றும் அமைதியை உலகம் முழுவதும் ஊக்குவிப்பதில் திருத்தந்தையுடன் இணைந்து பணிபுரிவதில் கர்தினால்களுக்கு அனைவரின் செபங்களும் தேவை என்பதையும் எடுத்துரைத்தார் பாப்பிறை.


2. திருத்தந்தை : திருஅவை கிறிஸ்துவின் இறையாட்சியைப் பரப்பும் கடமையைக் கொண்டுள்ளது

நவ.26,2012. இயேசுவின் முழுப்பணியும், அவரது செய்தியின் சாரமும் இறையாட்சியை அறிவிப்பதையும், அதன் அடையாளங்கள் மற்றும் வியப்புக்களுடன்  மனிதர் மத்தியில் அதனை நடைமுறைப்படுத்துவதையும் கொண்டுள்ளன என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
ஆறு புதிய கர்தினால்களுடன் கிறிஸ்து அரசர் பெருவிழாத் திருப்பலியை நிகழ்த்திய பின்னர் வத்திக்கான் தூய பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய  திருத்தந்தை, இறையாட்சி பற்றியும், அது இவ்வுலகில் பிரசன்னமாய் இருக்கச் செய்வதில் திருஅவையின் பங்கு பற்றியும் விளக்கினார்.     
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் கூறுவது போல, தமது சிலுவை மரணம் மற்றும் உயிர்ப்பினால் கிறிஸ்து நிறுவிய இறையாட்சி முதலில் அந்தக் கிறிஸ்து என்ற மனிதரில் வெளியானது என்ற திருத்தந்தை, கிறிஸ்துவின் இந்த இறையாட்சித் திருஅவையிடம் கொடுக்கப்பட்டுள்ளது, அதற்குத் தொடக்கமும் விதையுமாக இருக்கும் இத்திருஅவை, தூய ஆவியின் வல்லமையால்   அனைத்து நாடுகளிலும் அதனை அறிவித்து பரப்பும் பணியைக் கொண்டுள்ளது என்று கூறினார்.
குறித்த காலத்தின் முடிவில் நமது ஆண்டவர் இறையாட்சியைத் தந்தையாம் இறைவனிடம் வழங்குவார் மற்றும் அன்புக்கட்டளைக்கு இயைந்த வகையில் வாழ்ந்த அனைவரையும் அவரிடம் கையளிப்பார் என்றும் மூவேளை செப உரையைக் கேட்டுக் கொண்டிருந்த திருப்பயணிகளிடம் கூறினார் திருத்தந்தை.
நான் உண்மைக்குச் சாட்சியம் பகரவே வந்தேன், உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர் என்று இயேசு பிலாத்துவிடம் கூறிய இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் பற்றியும் விளக்கிய திருத்தந்தை, அனைத்துக் கிறிஸ்தவர்களும் நற்செய்தியைத் தங்களது வாழ்வாக்குவதன் மூலம் இறைவனின் மீட்பளிக்கும் பணியைத் தொடர்ந்து செய்வதற்கு அழைக்கப்படுகிறார்கள் என்றும் கூறினார்.
இந்த ஓர் உணர்வில், இச்சனிக்கிழமையன்று புதிய கர்தினால்களாக உயர்த்தப்பட்ட ஆறு பேருக்காகச் செபிக்குமாறும் கேட்டுக் கொண்ட  திருத்தந்தை, இவர்கள் தூய ஆவியால் நம்பிக்கையிலும் பிறரன்பிலும் உறுதிப்படுத்தப்பட்டு அவரின் அனைத்துக் கொடைகளாலும் அவரால் நிரப்பப்படுவார்களாக என்றும் தெரிவித்தார்.
நம்பிக்கை ஆண்டைக் கொண்டாடுவதற்காக உரோம் பல்கலைக்கழக மாணவர்கள் வருகிற டிசம்பர் முதல் தேதி தூய பேதுருவின் கல்லறைக்குதே திருப்பயணம் மேற்கொள்வார்கள், அப்போது திருவருகைக் கால முதல் ஞாயிறு முதல் திருப்புகழ்மாலையை அவர்களோடு சேர்ந்து திருத்தந்தை செபிப்பார் என்றும் மூவேளை செப உரையின் இறுதியில் அவர் அறிவித்தார்.


3. திருத்தந்தை : இவ்வுலகின் கவர்ச்சிகளுக்கும் அதிகாரங்களுக்கும் எதிராக இறையாட்சிக்குச் சான்று பகரப் புதிய கர்தினால்களுக்கு அழைப்பு

நவ.26,2012. இறையாட்சிக்குச் சான்று பகரும், உண்மைக்குச் சான்று பகரும் சவால்நிறைந்த பொறுப்பு, என் அன்புச் சகோதரக் கர்தினால்களே, குறிப்பாக, இச்சனிக்கிழமையன்று உயர்த்தப்பட்ட புதிய கர்தினால்களே உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
அதாவது, இவ்வுலகின் கவர்ச்சிகள் மற்றும் அதிகாரங்களுக்கு எதிராக, இறைவனுக்கும் அவரது திட்டத்திற்கும் முன்னுரிமை கொடுப்பதை மிகத் தெளிவாகக் காட்டுவதற்குப் பணி செய்யுமாறு கர்தினால்களைக் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.
இஞ்ஞாயிறன்று வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில் ஆறு புதிய கர்தினால்களுடன் கிறிஸ்து அரசர் பெருவிழாத் திருப்பலியை நிகழ்த்திய போது மறையுரையாற்றிய திருத்தந்தை, இறையாட்சி, முற்றிலும் வித்தியாசமானது, இயேசுவின் சீடர்கள் இவ்வுலகின் மாயைகளுக்குத் தங்களை உட்படுத்தக் கூடாது, ஆனால் அவர்கள் இவ்வுலகில் உண்மையின் ஒளியையும் இறைவனின் அன்பையும் கொண்டு வர வேண்டுமென்று கூறினார்.
இயேசுவுக்கு எந்தவிதமான அரசியல் நோக்கங்களும் இருக்கவில்லை என்றுரைத்த திருத்தந்தை, இறையாட்சிக்கும், இவ்வுலக அரசுகளுக்கும் இடையே இருக்கும் வேறுபாட்டை தெளிவுபடுத்தினார்.
ஆயுதங்கள், வன்முறை, அதிகாரம் ஆகியவற்றால் அல்ல, ஆனால் அன்பில் அடித்தளத்தைக் கொண்டு, உண்மைக்குச் சான்று பகர்வதே இறையாட்சி என்றும் மறையுரையில் கூறிய திருத்தந்தை, இறையாட்சியில் கிறிஸ்துவின் சீடராக இருப்பது, தங்களது வாழ்வை மாற்றி அன்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதாகும் என்று கூறினார்.


4. கேரள புதிய கர்தினாலுக்கு இந்திய மத்தத்தலைவர்களின் பாராட்டு

நவ.26,2012. மலங்கரா ரீதி கத்தோலிக்கத் திருஅவைத் தலைவர் கடந்த சனியன்று திருத்தந்தையால் கர்தினாலாக உயர்த்தப்பட்டது, இந்திய நாட்டிற்கு ஒரு பெருமை தரும் மற்றும் வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த நேரம் என வத்திக்கான் வானொலிக்கு வழங்கிய பேட்டியில் கூறினார் இந்துசமயக்குரு சுவாமி குருஇரத்தினம் ஞான தபசி.
அமைதி, இணக்க வாழ்வு மற்றும் ஆன்மீகத்தைத் தேடும் ஒவ்வொருவருக்கும் இந்த நிகழ்வு ஒரு சிறப்பான நேரம் எனவும் குறிப்பிட்டார் கேரளாவின் சாந்திகிரி ஆசிரமத்தின் சுவாமி குருஇரத்தினம்.
இந்த இந்து குருவுடன் வத்திக்கான் வைபவத்தில் கலந்துகொண்ட கேரளாவின் பாளையம் இஸ்லாமிய மதக்குரு Jamaluddin Maulavi Mankada பேசுகையில், கடந்த நான்கு ஆண்டுகளாக மதங்களிடையே ஒற்றுமையை உருவாக்க உழைத்துவரும் மலங்கரா ரீதித் தலைவர் கர்தினாலாக உயர்த்தப்பட்டதன் மூலம் மத இணக்கத்திற்கான பணி மேலும் பலம்பெறும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.
மலங்கரா ரீதி கத்தோலிக்கத் திருஅவையின் தலைவர் மார் பசிலியோஸ் கிளீமிஸ் கர்தினாலாக உயர்த்தப்பட்ட வத்திக்கான் திருப்பலியில் கலந்துகொண்ட  திருவனந்தபுர மேயர் சந்திரிகா மற்றும் கேரள சட்டமன்றப் பிரதிநிதி பாலோடு இரவி ஆகியோரும் புதிய கர்தினாலின் பெருமைகள் குறித்து வத்திக்கான் வானொலியுடன் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.


5. மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகளுக்கென அனைத்துலக மையம்

நவ.26,2012. மதங்கள் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையே உரையாடலை உருவாக்க அனைத்துலக மையம் ஒன்றை மூன்று நாடுகள் இணைந்து ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் இத்திங்களன்று துவக்கியுள்ளன.
மன்னர் Abdullah Bin Abdulaziz பெயரில் சவுதி அரேபியா, இஸ்பெயின் மற்றும் ஆஸ்திரியா இணைந்து உருவாக்கியுள்ள இம்மையம் பல்வேறு கலாச்சாரம் மற்றும் மதப் பின்னணிகளைக்கொண்ட மக்களிடையே பேச்சுவார்த்தைகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கும்.
இந்த அனைத்துலக மையத்தினை உருவாக்குவதில் ஒத்துழைத்து, தற்போது பார்வையாளர் என்ற முறையில் செயலாற்றி வருகிறது திருப்பீடம்.
உலகின் முக்கிய மதங்களின் பிரதிநிதிகளை அங்கத்தினர்களாகக் கொண்டிருக்கும் இம்மையத்தின் நிர்வாகக் குழுவில் திருப்பீடத்தின் சார்பில், மதங்களிடையேயான திருப்பீட அவையின் செயலர் குரு Miguel Ayuso Guixot  இடம்பெறுகிறார்.


6. இன்றையை இந்தியாவின் முதுகெலும்பாக மதம் உள்ளது
நவ.26,2012. இன்றைய இந்தியாவின் முதுகெலும்பாக மதமே இருப்பதாக மங்களூர் மறைமாவட்ட ஆயர் அலோசியஸ் பால் டி சூசா தெரிவித்தார்.
'இந்திய மதங்கள் குறித்த மறுசிந்தனை' என்ற தலைப்பில் இடம்பெற்ற நான்காவது அனைத்துலகக் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆயர், வாழ்வின் இரகசியங்களையும் அர்த்தங்களையும் புரிந்துகொள்ள முயல்வதே மதங்களின் இறுதிநோக்கம் என்பதை வலியுறுத்தினார்.
பெரும்பான்மை இந்தியர்கள் இன்னும் ஆழமான மத நம்பிக்கையாளர்களாகவே உள்ளார்கள் என்பதையும் எடுத்துரைத்தார் ஆயர் டி சூசா.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த மகிழ்ச்சியை வெளியிட்ட அதே வேளை, பொருளாதார வளர்ச்சியின் காரணமாக ஏழை பணக்காரர் இடையேயான இடைவெளி அதிகரித்துள்ளது குறித்த கவலையையும் வெளியிட்டார் மங்களூர் ஆயர்.


7. இஸ்லாமிய மதபோதனைக்கூட்டம் ஒன்றில் கல்ந்துகொள்ள மறுப்புத்தெரிவித்த மூன்று கத்தோலிக்கர்களுக்கு சிறை

நவ.26,2012. இஸ்லாமிய மதபோதனைக்கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ள மறுப்புத் தெரிவித்ததற்காக மாலி நாட்டில் மூன்று காங்கோ நாட்டு கத்தோலிக்கர்கள் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.
இஸ்லாமிய மதபோதனைக்கு செல்ல மறுத்த ஒரே காரணத்திற்காக Timbuktu நகரில் இவர்கள் சிறைவைக்கப்பட்டுள்ளது குறித்து, கிறிஸ்தவத்தலைவர்கள் தங்கள் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளனர்.
வட மாலியின் Timbuktu நகரை இவ்வாண்டு துவக்கத்தில் கைப்பற்றிய இஸ்லாமிய தீவிரவாதக் குழு ஒன்று, வன்முறைகளின் வழி ஷாரியா சட்டத்தை அங்கு அமுல்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இச்சட்டத்தின் துணைகொண்டு ஆட்சி செய்ய விரும்பும் இக்குழு, திருடர்களின் கைகளை வெட்டியும், புகைப்பிடிப்பவர்கள் மற்றும் மது அருந்துபவர்களை சாட்டையால் அடித்தும் தண்டனைகளை நிறைவேற்றி வருகிறது.


8. மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது இந்தியா : தலாய்லாமா

நவ.26,2012. மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இந்தியா விளங்குவதாக புத்த மதத்தலைவர் தலாய்லாமா தெரிவித்தார்.
கேரள மாநிலம் கொச்சியில் மிகத்தொன்மை வாய்ந்த மலங்கரா ஆர்த்தடாக்ஸ் சிரியன் சபையின் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றிய புத்தமதத் தலைவர் தலாய் லாமாம‌த நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்தியாவில் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் அமைதியுடனும், நல்லிணக்கத்துடனும் வாழ்கிறார்கள் எனப் பாராட்டினார்.
இந்தப் பாரம்பரியத்தை இந்தியா தொடர்ந்து காப்பாற்றவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார் புத்தமதத்தலைவர்.
இதேக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பாரத முன்னாள் குடிய‌ரசுத் தலைவர் அப்துல் கலாம், பொருளாதார‌ வ‌ள‌த்தையும் ஆன்மீக வாழ்வுமுறையையும் ஒன்றிணைத்துச் செல்வதை மக்கள் கைக்கொள்ளவேண்டும் என்றார்.
இதற்கிடையே, 52ம் ஆண்டிலிருந்து கடந்த 1960 ஆண்டுகளாக கிறிஸ்தவ வாழ்வைத் தொடர்ந்துவரும் இச்சபையின் கொண்டாட்டங்களையொட்டி, சமூக நலத்திட்டங்களுக்கென 100 கோடி ரூபாயை ஒதுக்குவதாக மலங்கரா ஆர்த்தடாக்ஸ் சிரியன் சபை அறிவித்துள்ளது.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...