Thursday, 22 November 2012

Catholic News in Tamil - 21/11/12


1. சென்னை மயிலை உயர் மறைமாவட்டத்தின் புதிய பேராயர் ஜார்ஜ் அன்டனிசாமி

2. தாய் மற்றும் கருவில் வளரும் குழந்தை இருவரும் வாழ்வதற்கு உள்ள உரிமையை பற்றி அயர்லாந்து ஆயர்கள்

3. காசா எல்லைப்பகுதியின் இருபுறங்களிலும் வாழும் கத்தோலிக்கர்கள் செபங்களை எழுப்பிவருகின்றனர்

4. ஆப்ரிக்க நாட்டைக் குறித்து திருத்தந்தை கொண்டிருக்கும் நம்பிக்கை உயர்ந்ததாக உள்ளது - பெனின் நாட்டு அரசுத் தலைவர்

5. Rimsha Masih வழக்குத் தொடர்பான நிகழ்வுகள், பாகிஸ்தானில் சமய ஒற்றுமையை வளர்ப்பதற்கு விடுக்கப்பட்டுள்ள ஓர் அழைப்பு

6. தேவதாசி இனத்தைச் சேர்ந்தவர்களின் நல்வாழ்வுக்கென உழைக்கும் அருள்சகோதரிகள்

7. கம்போடியா நாட்டில் Manos Unidas ஆரம்பித்துள்ள குழந்தைகள்நலத் திட்டம்

8. HIV தொடர்பான விழிப்புணர்வு முயற்சிகளுக்கு ஐ.நா.வின் உலகத் தூதராக Aung San Suu Kyi

------------------------------------------------------------------------------------------------------

1. சென்னை மயிலை உயர் மறைமாவட்டத்தின் புதிய பேராயர் ஜார்ஜ் அன்டனிசாமி

நவ.21,2012 சென்னை மயிலை உயர் மறைமாவட்டத்தின் பேராயராக கடந்த ஏழு ஆண்டுகள் பணிபுரிந்த பேராயர் Malayappan Chinappa அவர்கள் பணிஓய்வு பெறுவதை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அப்பொறுப்பிற்கு, பேராயர் George Antonysamy அவர்களை இப்புதனன்று நியமித்தார்.
1937ம் ஆண்டு முகையூரில் பிறந்த பேராயர் சின்னப்பா, 1972ம் ஆண்டு சலேசிய சபை குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். இவர் 1993ம் ஆண்டு வேலூர் மறைமாவட்டத்தின் ஆயராகவும், பின்னர் 2005ம் ஆண்டு சென்னை மயிலை பேராயராகவும் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்களால் நியமிக்கப்பட்டார்.
புதிதாக நியமனம் பெற்றுள்ள பேராயர் ஜார்ஜ் அன்டனிசாமி அவர்கள் 1952ம் ஆண்டு திருச்சியில் பிறந்தவர். இவர் 1980ம் ஆண்டு திருச்சி மறைமாவட்டத்தின் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
2005ம் ஆண்டு பேராயராகத் திருநிலைப்படுத்தப்பட்ட இவர், Guinea நாட்டின் திருப்பீடத் தூதராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2008ம் ஆண்டு, இவர் Liberia, Gambia, Sierra Leone ஆகிய மூன்று நாடுகளின் திருப்பீடத் தூதராக, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் நியமிக்கப்பட்டார்.
60 வயது நிரம்பிய பேராயர் ஜார்ஜ் அன்டனிசாமி அவர்கள், உரோம் நகரில், மேய்ப்புப்பணி இறையியல், மற்றும் திருஅவை  சட்டங்கள் ஆகிய இருதுறைகளிலும் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும், விசுவாசப்பரப்புப்பணி பேராயத்தின் முக்கிய அலுவலகர்களில் ஒருவராக, பேரருள் தந்தை Camillus Nimalan Johnpillai அவர்களை, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இப்புதனன்று நியமித்துள்ளார்.


2. தாய் மற்றும் கருவில் வளரும் குழந்தை இருவரும் வாழ்வதற்கு உள்ள உரிமையை பற்றி அயர்லாந்து ஆயர்கள்

நவ.21,2012 தாய் மற்றும் அவர் கருவில் வளரும் குழந்தை என்ற இரு உயிர்களும் வாழ்வதற்கு உள்ள உரிமையை உலகின் பல்வேறு மதங்களும், நன்னெறிகளும் வலியுறுத்திச் சொல்கின்றன என்று அயர்லாந்து ஆயர்கள் கூறியுள்ளனர்.
அயர்லாந்தில் வாழ்ந்த Savita Halappanavar என்ற இளம்பெண் கருவுற்றிருந்தபோது ஏற்பட்ட பிரச்சனைகளால் அக்டோபர் 28ம் தேதி அயர்லாந்தின் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, அவருக்குக் கருக்கலைப்புச் செய்வதற்கு மருத்துவர்கள் மறுத்துவிட்டனர் என்று சொல்லப்பட்டுள்ளது. இதனால், Savita இறந்தார் என்றும் கூறப்படுகிறது.
கருக்கலைப்புக்கு எதிராக அயர்லாந்து சட்டங்களை பின்பற்றியதால், Savita மரணம் அடைந்தார் என்று கிளம்பிய ஒரு விவாதம், உலகின் பல நாடுகளில், முக்கியமாக, இந்தியாவில் கடந்த மூன்று வாரங்களாக ஊடகங்களால் பெரிதும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த விவாதங்களின் அடிப்படையில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான உணர்வுகளும் தூண்டிவிடப்படுகிறதென்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இத்திங்களன்று விடுத்துள்ள ஓர் அறிக்கையில், Savitaவின் மரணம் குறித்து ஆழ்ந்த வருத்தத்தையும் அவரை இழந்துள்ள குடும்பத்திற்கு தங்கள் அனுதாபங்களையும் அயர்லாந்து ஆயர்கள் வெளியிட்டுள்ளனர்.
Savitaவின் மரணத்திற்கான காரணங்கள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.


3. காசா எல்லைப்பகுதியின் இருபுறங்களிலும் வாழும் கத்தோலிக்கர்கள் செபங்களை எழுப்பிவருகின்றனர்

நவ.21,2012 இஸ்ரேல், பாலஸ்தீனம் என்ற இரு பகுதிகளிலும் வாழ்வோர் துன்பங்களைச் சந்திக்கின்றனர் என்பதால், எங்கள் செபங்கள் இருவருக்காகவும் எழுப்பப்படுகின்றன; ஏனெனில், நாடுகள் வகுக்கும் எல்லைகள் செபங்களுக்குக் கிடையாது என்று அருள்தந்தை Yoel Salvaterra கூறினார்.
காசா எல்லைப்பகுதியின் இருபுறங்களிலும் வாழும் கத்தோலிக்கர்கள், கடந்த பத்து நாட்களாக அப்பகுதியில் நிலவிவரும் தாக்குதல்களில் இன்னல்களைச் சந்தித்துவரும் அனைவருக்காகவும் செபங்களை எழுப்பிவருகின்றனர் என்று இஸ்ரேல் பகுதியில் வாழும் அருள்தந்தை Salvaterra கூறினார்.
இதற்கிடையே, காசாப் பகுதியில் வாழும் மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கு, ATS எனப்படும் கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு, உலகெங்கும் வாழ்வோர் அனைவரிடமும் உதவிகள் வேண்டி விண்ணப்பித்துள்ளது.
காசாப் பகுதியில் நடைபெறும் இத்தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று, அமெரிக்க ஐக்கிய நாடு, எகிப்து உட்பட பல நாடுகளின் பிரதிநிதிகளும், ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அவர்களும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர் என்று ஊடகங்கள் கூறியுள்ளன.


4. ஆப்ரிக்க நாட்டைக் குறித்து திருத்தந்தை கொண்டிருக்கும் நம்பிக்கை உயர்ந்ததாக உள்ளது - பெனின் நாட்டு அரசுத் தலைவர்

நவ.21,2012 ஆப்ரிக்கக் கண்டத்தில் உள்ள பெனின் என்ற நாடு சிறிய நாடுதான், ஆனால், சென்ற ஆண்டு திருத்தந்தை அங்கு பயணம் மேற்கொண்டபின்னர், எங்கள் நாடு பெரியதொரு நாடாக மாறிவிட்டது என்று பெனின் நாட்டு அரசுத் தலைவர் கூறினார்.
பெனின் அரசுத் தலைவர் Thomas Boni Yayi இத்திங்களன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்தார்.
அதன்பின், இச்செவ்வாயன்று அரசுத் தலைவர் Boni Yayi செய்தியாளர்களிடம் பேசியபோது, ஆப்ரிக்க நாட்டைக் குறித்து திருத்தந்தை கொண்டிருக்கும் நம்பிக்கை உயர்ந்ததாக உள்ளது என்றும், திருத்தந்தையின் கணிப்பு சரியானதே என்றும் கூறினார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆப்ரிக்காவின் பெனின் நாட்டுக்குத் திருத்தந்தை பயணம் மேற்கொண்டபோது, வருங்காலத் திருஅவைக்கு ஆப்ரிக்கக் கண்டம் நம்பிக்கை தரும் ஒரு கண்டமாக அமைந்துள்ளது என்று அடிக்கடி குறிப்பிட்டார்.


5. Rimsha Masih வழக்குத் தொடர்பான நிகழ்வுகள், பாகிஸ்தானில் சமய ஒற்றுமையை வளர்ப்பதற்கு விடுக்கப்பட்டுள்ள ஓர் அழைப்பு

நவ.21,2012 தேவநிந்தனை வழக்கில் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு, விடுவிக்கப்பட்ட Rimsha Masih வழக்குத் தொடர்பான நிகழ்வுகள், பாகிஸ்தானில் அமைதி, நீதி, மற்றும் சமய ஒற்றுமை இவற்றை வளர்ப்பதற்கு விடுக்கப்பட்டுள்ள ஓர் அழைப்பு என்று பாகிஸ்தான் ஆயர் பேரவை கூறியுள்ளது.
திருக்குர்ரான் விளக்க நூலின்  பக்கங்களை எரித்தார் என்று பொய்க்குற்றம் சுமத்தப்பட்ட மாற்றுத்திறனாளியான Rimsha Masih என்ற சிறுமியை இஸ்லாமாபாத் உயர் நீதி மன்றம் இச்செவ்வாயன்று விடுதலை செய்ததையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் ஆயர் பேரவையின் நீதி அமைதிப் பணிக்குழுவின் இயக்குனர் அருள்தந்தை Yousaf Emmanuel, இவ்வாறு கூறினார்.
இச்சிறுமிக்கு அளிக்கப்பட்டுள்ள விடுதலை கிறிஸ்தவர்களுக்கு மட்டும் மகிழ்வைத் தரவில்லை, மாறாக, கிறிஸ்தவர்களுடன் இணைந்து நீதிக்காகப் போராடிய அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் இந்த முடிவு மகிழ்வை அளித்துள்ளது என்று அருள்தந்தை Emmanuel, Fides செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
தேவநிந்தனை என்ற சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர்கள் அனைவரின் வழக்குகளை, பாகிஸ்தான் ஆயர் பேரவையின் நீதி, அமைதி பணிக்குழு கவனமாகப் பின்பற்றி வருகிறது என்று கூறிய அருள்தந்தை Emmanuel, 2011ம் ஆண்டில் மட்டும் இச்சட்டத்தின் கீழ் 161 பேர் குற்றம் சாட்டப்பட்டனர் என்றும், இவர்களில் 9 பேர் அடிப்படை வாதக் குழுக்களால் எவ்வித விசாரணையுமின்றி கொல்லப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.


6. தேவதாசி இனத்தைச் சேர்ந்தவர்களின் நல்வாழ்வுக்கென உழைக்கும் அருள்சகோதரிகள்

நவ.21,2012 இந்தியாவில் நிலவும் சாதிய பாகுபாடுகளின் ஓர் அவலமான அடையாளமாக, பாலியல் தொழிலுக்கென ஒதுக்கப்பட்டுள்ள தேவதாசி இனத்தைச் சேர்ந்தவர்களுக்கென அருள்சகோதரிகள் சிலர் கர்நாடக மாநிலத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
Chavanod புனித சிலுவை சகோதரிகள் என்றழைக்கப்படும் துறவு சபையைச் சேர்ந்த இச்சகோதரிகள், தேவதாசி முறையால் மதிப்பை இழந்து வாழும் பத்து கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் மத்தியில் உழைத்து வருகின்றனர்.
இப்பெண்களுக்கு வேறு சில தொழில்களில் பயிற்சிகள் அளிப்பதும், இப்பெண்களின் குழந்தைகளுக்குக் கல்வி புகட்டுவதும் இச்சகோதரிகள் மேகொண்டுள்ள முக்கிய பணி  என்று அருள்சகோதரி T.Jose ஆசிய செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
இந்தியாவில் தேவதாசி முறை 1998ம் ஆண்டு சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்டிருந்தாலும், கர்நாடகாவின் பெண்கள் குழந்தைகள் நல அமைப்பு ஒன்று மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி, Raichur என்ற மாவட்டத்தில் மட்டும் 2008ம்  ஆண்டு 5051 பெண்கள் தேவதாசிகள் என்ற முத்திரையுடன் வாழ்ந்தனர் என்று தெரிகிறது.


7. கம்போடியா நாட்டில் Manos Unidas ஆரம்பித்துள்ள குழந்தைகள்நலத் திட்டம்

நவ.21,2012 நவம்பர் 20, இச்செவ்வாயன்று கொண்டாடப்பட்ட அகில உலகக் குழந்தைகள் நாளையொட்டி, கம்போடியா நாட்டின் Russey Keo எனும் கிராமத்தில் Manos Unidas என்ற ஒரு கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனம் குழந்தைகள் நலனை மையப்படுத்திய திட்டம் ஒன்றைத் துவக்கியுள்ளது.
கம்போடியாவின் தலைநகரான Phnom Penhக்கு அருகே அமைந்துள்ள இக்கிராமத்தில் வாழ்பவர்கள் அருகில் உள்ள தலைநகருக்குச் சென்று குப்பைப் பொறுக்குதல், தெருக்களைச் சுத்தம் செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு, மிகக் குறைவான ஊதியம் பெறுபவர்கள் என்பதால், அவர்களின் குழந்தைகளும் உழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர் என்று Fides செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.
கல்வியறிவும், நலவாழ்வுமின்றி வாழும் இக்குழந்தைகளுக்கு பல அடிப்படைக் கல்வி மையங்களை அமைப்பதற்கு Manos Unidas அமைப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இச்செவ்வாயன்று துவக்கப்பட்ட புதிய திட்டத்தின் வழியாக Russey Keo கிராமத்தைச் சேர்ந்த 500 குழந்தைகள் பயன்பெறுவர் என்று Fides செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.


8. HIV தொடர்பான விழிப்புணர்வு முயற்சிகளுக்கு ஐ.நா.வின் உலகத் தூதராக Aung San Suu Kyi

நவ.21,2012 HIV என்ற முத்திரை குத்தப்பட்டு, சமுதாயத்தின் விளும்புகளுக்குத் தள்ளப்பட்டுள்ள மக்களுக்காக உழைக்க ஐ.நா. என்னைத் தெரிவு செய்ததை நான் பெருமையுடன் கருதுகிறேன் என்று மியான்மார் எதிர்கட்சித் தலைவரான Aung San Suu Kyi கூறினார்.
HIV நோயினால் ஒருவரும் புறக்கணிக்கப்படக் கூடாது என்ற கருத்துடன் ஐ.நா.அவை அண்மையில் ஆரம்பித்துள்ள Zero Discrimination என்ற விழிப்புணர்வு முயற்சிகளுக்கு ஓர் உலகத் தூதராக Suu Kyi யை அண்மையில் ஐ.நா. நியமித்துள்ளது.
UNAIDS எனப்படும் ஓர் ஐ.நா. நிறுவனத்தின் இயக்குனரான Michel Sidibé, இந்த நியமனத்தை Suu Kyi இடம் அண்மையில் அளித்தார்.
இந்த நியமனம் தனக்குக் கிடைத்த ஒரு பெரும் மதிப்பு என்று கூறிய Suu Kyi, மியான்மாரில் மட்டும் 40,000க்கும் அதிகமானோர் HIV என்ற முத்திரையைத் தாங்கி வாழ்கின்றனர் என்றும், இவர்கள் சமுதாயத்தால் ஒதுக்கப்படுவதைக் காணும் மற்றவர்கள், தங்களுக்கு இந்நோயின் அடையாளங்கள் இருந்தாலும் அதனை வெளிக்காட்டத் தயங்குகின்றனர் என்றும் கூறினார்.
அண்மைக் காலங்களில் HIV தொடர்பான நோய் கண்டவர்களின் எண்ணிக்கை வளரும் நாடுகளில் குறைந்து வந்துள்ளது என்றாலும், இந்நோயை முற்றிலும் ஒழிக்க இளையோர் முன்னின்று செயல்படவேண்டும் என்று ஐ.நா. அதிகாரி Michel Sidibé வலியுறுத்தினார்.


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...