Thursday, 22 November 2012

Catholic News in Tamil - 20/11/12

1. இயேசுவின் குழந்தைப் பருவம் குறித்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் புத்தகம்

2. மியான்மார் ஆயர்கள் : ஒபாமாவின் பயணம் மக்களாட்சிக்கு நம்பிக்கையூட்டுகின்றது

3. எருசலேம் துணை ஆயர் : இஸ்ரேலும் ஹமாஸூம் துணிச்சலுடன் தீர்மானங்களை எடுக்கவேண்டும்

4. பொலிவிய ஆயர்கள் : தேசியக் கணக்கெடுப்பில் அனைவரும் பங்கு கொள்ள அழைப்பு

5. Rimsha Masih மீதான வழக்குத் தள்ளுபடி, பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள்  மகிழ்ச்சி

6. குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அனைத்து நாடுகளும் முன்னுரிமை கொடுக்க வேண்டும்

7. அரபு ஐக்கிய குடியரசில் இந்தியர்களுக்கென பல்சமய கல்லறைத் தோட்டம்

8. மெக்சிகோவில் ஒரு கோடிக்கு மேற்பட்ட மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ்

------------------------------------------------------------------------------------------------------

1. இயேசுவின் குழந்தைப் பருவம் குறித்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் புத்தகம்

நவ.20,2012. இயேசுவின் குழந்தைப் பருவம் குறித்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் புத்தகம் இப்புதன் முதல் விற்பனைக்கு வருகின்றது.
இயேசுவின் குழந்தைப் பருவ விளக்கங்கள் : நாசரேத்தூர் இயேசு(The Infancy Narratives: Jesus of Nazareth) என்ற தலைப்பில் Rizzoli  மற்றும் வத்திக்கான் புத்தக வெளியீட்டு நிறுவனத்தால் இத்தாலிய மொழியில் அச்சிடப்பட்டுள்ள இப்புத்தகம், ஆங்கிலம், ஜெர்மானியம், பிரெஞ்ச், குரோவேஷியம், போலந்து, போர்த்துக்கீசியம், இஸ்பானியம் எனப் பல மொழிகளில் ஐம்பது நாடுகளில் வெளியாகின்றது.
வத்திக்கான் பத்தாம் பத்திநாதர் அறையில் இச்செவ்வாயன்று இடம்பெற்ற இப்புத்தக வெளியீட்டு நிகழ்வில் திருப்பீட கலாச்சார அவையின் தலைவர் கர்தினால் Gianfranco Ravasi, ரியோ டி ஜெனிரோ பாப்பிறைப் பல்கலைக்கழகத்தின் இறையியல் பேராசிரியர் Maria Clara Bingemer, திருப்பீட பத்திரிகை அலுவலக இயக்குனர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி உட்பட சில பிரமுகர்கள் உரையாற்றினர்.
நாசரேத்தூர் இயேசு என்ற தலைப்பில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் எழுதிய மூன்றாவது புத்தகமாக, இயேசுவின் குழந்தைப் பருவ விளக்கங்கள்  குறித்த புத்தகம் அமைந்துள்ளது.
இதன் முதல் பதிப்பில் 10 இலட்சத்துக்கு மேற்பட்ட பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன. இப்புத்தகம் 72 நாடுகளில் பிரசுரிப்பதற்கு உதவியாக, வருகிற மாதங்களில் 20 மொழிகளில் மொழி பெயர்க்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


2. மியான்மார் ஆயர்கள் : ஒபாமாவின் பயணம் மக்களாட்சிக்கு நம்பிக்கையூட்டுகின்றது

நவ.20,2012. அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் பாரக் ஒபாமா  மியான்மாரில் மேற்கொண்ட சுற்றுப்பயணம், அந்நாட்டுக்கு நம்பிக்கையூட்டும் அடையாளத்தைக் கொண்டிருப்பதாக மியான்மார் ஆயர் பேரவையின் பொதுச் செயலர் பேராயர் Charles Bo தெரிவித்தார்.
இத்திங்களன்று அரசுத்தலைவர் ஒபாமா மியான்மாருக்கு மேற்கொண்ட சுற்றுப்பயணம் குறித்து ஆசியச் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த யாங்கூன் பேராயர் Charles Bo, இந்த வரலாற்று சிறப்புமிக்கச் சுற்றுப்பயணம், மக்களாட்சி மற்றும் சமயச் சுதந்திரத்தை நோக்கிய சீர்திருத்தப் பாதையில் மியான்மார் தொடர்ந்து செல்வதற்கு ஊக்கமூட்டுவதாய் இருக்கின்றது என்று கூறினார்.
சமயச் சுதந்திரத்தைப் பொருத்தவரையில், இந்தப் பயணம், மியான்மார் ஆயர்களுக்கும் அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் மிகுந்த நம்பிக்கையைக் கொடுத்திருப்பதாகவும் பேராயர் Bo தெரிவித்தார்.
அரசுத்தலைவர் ஒபாமாவின் இந்தப் பயணத்தையொட்டி மியான்மார் அரசு 518 கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கியிருக்கின்றது.
அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் ஒருவர் மியான்மாருக்கு மேற்கொண்ட முதல் பயணமாக, ஒபாமாவின் இந்தப் பயணம் அமைந்துள்ளது.


3. எருசலேம் துணை ஆயர் : இஸ்ரேலும் ஹமாஸூம் துணிச்சலுடன் தீர்மானங்களை எடுக்கவேண்டும்

நவ.20,2012. காசாவில் இடம்பெற்றுவரும் வன்முறை முடிவுக்குக் கொண்டுவரப்படுவதற்கு இஸ்ரேல் அரசும் ஹமாஸ் அமைப்பின் தலைவர்களும் துணிச்சல் நிறைந்த தீர்மானங்களை எடுக்கவேண்டுமென எருசலேம் துணை ஆயர் William Shomali கூறினார்.
காசாவில், இஸ்ரேல் இராணுவம் இச்செவ்வாயன்று ஏழாவது நாளாகத் தொடர்ந்து நடத்திவரும் விமானத் தாக்குதல்களால் தென் இஸ்ரேலிலும் காசாவிலும் வாழும் குடிமக்கள் கட்டாயமாகப் புலம் பெயர்ந்து வருகின்றனர் என்றுரைத்த ஆயர் Shomali, பதிலுக்குப்பதில் தாக்குதல்களை நடத்துவதால் வன்முறை அதிகரிக்குமேயொழிய அமைதி ஏற்படாது என்று கூறினார்.
இவ்வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு எகிப்தும், அமெரிக்க ஐக்கிய நாடும் ஒரேநேரத்தில் தலையிட வேண்டுமென்றும் கூறிய ஆயர் Shomali, இஸ்ரேலும் ஹமாஸூம் தனித்து விடப்பட்டால் அவை, தொடர்ந்து பதிலடித் தாக்குதல்களையே நடத்திக்கொண்டிருக்கும் என்றும் கருத்து தெரிவித்தார்.
மேலும், இஸ்ரேலும் ஹமாஸும் மோதல்களை உடனடியாக நிறுத்துமாறு ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கிடையே, ஹமாஸூம் காசாவிலிருந்து இஸ்ரேலுக்குள் தொடர்ந்து குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருப்பதாக இஸ்ரேல் கூறி வருகிறது.
இதற்கிடையே, இத்தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்வது கடினமாக இருப்பதாக எருசலேம் காரித்தாஸ் கூறியுள்ளது. 


4. பொலிவிய ஆயர்கள் : தேசியக் கணக்கெடுப்பில் அனைவரும் பங்கு கொள்ள அழைப்பு

நவ.20,2012. பொலிவியாவில் இப்புதனன்று எடுக்கப்படும் தேசியக் கணக்கெடுப்பில் பங்கெடுப்பது குடிமக்களின் கடமை என்பதால் இதில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அந்நாட்டுக் கத்தோலிக்கத் திருஅவை கேட்டுள்ளது.
இந்த முக்கியமான நிகழ்வில் அனைவரும் பங்கு கொண்டு தங்களைப் பற்றிய உண்மையான விபரங்களை அளிக்குமாறும் கேட்டுள்ள அந்நாட்டு ஆயர்களின் அறிக்கை, இக்கணக்கெடுப்பு சமுதாய முன்னேற்றத்துக்கு முக்கியமான கருவி என்றும் கூறியுள்ளது.
11 ஆண்டுகளுக்குப் பின்னர் எடுக்கப்படும் இக்கணக்கெடுப்பு, அந்நாட்டின் மாநிலங்கள், நகரங்கள், கிராமங்கள் போன்றவற்றின் உண்மையான நிலவரங்களைப் புரிந்து கொள்வதற்கு உதவும் என்று கூறும் அவ்வறிக்கை, இதனை ஒளிவுமறைவின்றி எடுக்குமாறு அரசுத் தலைவர்களைக் கேட்டுள்ளது.


5. Rimsha Masih மீதான வழக்குத் தள்ளுபடி, பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள்  மகிழ்ச்சி

நவ.20,2012. பாகிஸ்தானில் தேவநிந்தனை குற்றம் சாட்டப்பட்டிருந்த மாற்றுத்திறனாளிச் சிறுமி Rimsha Masih மீதான வழக்கு, தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது இரட்டிப்பு திருப்தியைக் கொடுத்திருப்பதாக அந்நாட்டு கத்தோலிக்க அமைச்சர் Paul Bhatti கூறினார்.
குரானிலிருந்து வசனங்கள் கொண்டிருந்த தாள்களை எரித்தார் என்று இசுலாமிய குரு Khalid Jadoon Chisti மற்றும் மூன்று பேர் அளித்த சாட்சியங்களின்பேரில் கடந்த ஆகஸ்டில் கைது செய்யப்பட்ட Rimsha Masih மீதான குற்றச்சாட்டை Islamabad நீதிமன்றம் இச்செவ்வாயன்று தள்ளுபடி செய்துள்ளது.
நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை குறித்து ஆசிய செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்த Paul Bhatti, தெய்வநிந்தனைச் சட்டம் சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட முடியாது என்பதற்கு இந்தத் தீர்ப்பு ஒரு முன்னோடியாக இருக்கின்றது என்று கூறினார்.
மேலும், அடுத்தவரை அநியாயமாய்க் குற்றம் சாட்டும் எவரும் பாகிஸ்தான் குற்றவியல் விதிமுறையின்படி, குற்றம் சாட்டுபவரே நீதி விசாரணைக்கும் தண்டனைகளுக்கும் உள்ளாக நேரிடும் என்பதையும்  நீதிமன்றத்தின் இந்தச் செயல் சுட்டிக்காட்டுகிறது என்றும் Paul Bhatti கூறினார்.
அநியாயமாய்க் குற்றம் சாட்டப்பட்டிருந்த Rimsha Masihக்கு ஆதரவாக, Islamabad ஆயர் Rufin Anthony, அமைச்சர் Paul Bhatti, இன்னும் பல முஸ்லீம் பிரமுகர்களும் போராட்டங்களை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


6. குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அனைத்து நாடுகளும் முன்னுரிமை கொடுக்க வேண்டும்

நவ.20,2012. குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அனைத்து நாடுகளும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளது ஐ.நா. நிறுவனம்.
நவம்பர் 20, இச்செவ்வாயன்று அனைத்துலக குழந்தைகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி இவ்வாறு கேட்டுள்ள ஐ.நா. நிறுவனம், ஒவ்வொரு நாளும் இலட்சக்கணக்கான குழந்தைகளின் உரிமைகள் மீறப்படுகின்றன என்றும் கூறியுள்ளது.
இன்று உலகில் 6 கோடியே 70 இலட்சம் சிறார் பள்ளிக்குச் செல்லவில்லை, ஏறக்குறைய 20 கோடிச் சிறார் வாழ்வதற்காக வேலை செய்கின்றனர், 10 கோடிக்கு மேற்பட்ட சிறார் கொத்தடிமைகளாக முதலாளிகளால் பயன்படுத்தப்படுகின்றனர், 15க்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட ஏறக்குறைய 70 ஆயிரம் விடலைப் பருவத்தினர் கட்டாயமாகத் திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர், தடுத்து நிறுத்தக்கூடிய நோய்களால் தினமும் 19 ஆயிரம் சிறார் இறக்கின்றனர் என ஐ.நா. புள்ளி விபரங்கள் கூறுகின்றன.  


7. அரபு ஐக்கிய குடியரசில் இந்தியர்களுக்கென பல்சமய கல்லறைத் தோட்டம்

நவ.20,2012. அரபு ஐக்கிய குடியரசில் வாழும் இந்தியர்களுக்கென பல்சமய கல்லறைத் தோட்டம் ஒன்று விரைவில் திறக்கப்படும் என வெளிநாடுவாழ் இந்தியர்கள் விவகாரங்களுக்கான அமைச்சர் Vayalar Ravi அறிவித்தார்.
16 இலட்சத்து 50 ஆயிரம் டாலர் செலவில் 2013ம் ஆண்டு சனவரியில் புதிய பல்சமய கல்லறைத் தோட்டம் ஒன்று விரைவில் திறக்கப்படும் என அமைச்சர் Vayalar Ravi மேலும் கூறினார்.
இந்தத் திட்டத்துக்கு இந்தியாவின் சார்பாக ஒரு இலட்சத்து 36 ஆயிரம் டாலர் கொண்ட காசோலையையும் அவர் வழங்கினார்.
துபாயிலுள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்ட புள்ளி விபரங்களின்படி, அரபு ஐக்கிய குடியரசில் ஆண்டுக்கு ஏறக்குறைய 1,300 இந்தியர்கள் வீதம் இறக்கின்றனர் என்று தெரிய வருகின்றது.


8. மெக்சிகோவில் ஒரு கோடிக்கு மேற்பட்ட மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ்

நவ.20,2012. ஏறக்குறைய 11 கோடியே 10 இலட்சம் மக்கள் வாழும் மெக்சிகோவில் ஒரு கோடிக்கு மேற்பட்ட மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர் என்று அந்நாட்டில் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று கூறுகிறது.
மெக்சிகோவின் சமூக முன்னேற்றத்தை மதிப்பீடு செய்யும் தேசிய அவையின் பொதுச் செயலர் வெளியிட்ட அறிக்கையில் அந்நாடு எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சனைகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
குடிமக்களின் வாழ்வை முன்னேற்றுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றபோதிலும், குறைந்த வருவாய், ஊட்டச்சத்துப் பற்றாக்குறை, உணவுப்பொருள்களின் விலை உயர்வு ஆகியவற்றால் மக்கள் துன்புறுவதாக அவ்வறிக்கை மேலும் கூறுகிறது.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...