Thursday, 22 November 2012

Catholic News in Tamil - 19/11/12

1. இறைவனை நமது நம்பிக்கைக்கு அடித்தளமாகக் கொண்டு வாழ நாம் அழைக்கப்பட்டுள்ளோம் - திருத்தந்தை

2. காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் திருத்தந்தைக்கு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வாழ்த்து

3. கடல்வழி பயணிப்போர் பணியின் அனைத்துலக மாநாட்டில் கர்தினால் Vegliòவின் துவக்க உரை

4. பள்ளிகளில் சமயக்கல்வி ஒரு முக்கிய பங்கு வகிக்கவேண்டும் - இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள்

5. அகில உலக இளையோர் நாளில் கலந்துகொள்ளச் செல்லும் அனைவருக்கும் அனுமதி சீட்டு (visa) இலவசம்

6. தனிப்பட்ட அடையாளம் ஏதுமின்றி வாழும் 5 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் மட்டில் நமது கவனம் திரும்ப வேண்டும் - சலேசிய சபையின் தலைவர்

7. ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவான சட்டத்தை எதிர்த்து பிரான்சில் கண்டனப் பேரணி

8. காகிதம் போன்ற மிக மெல்லியதான குண்டு துளைக்காதப் பொருள் கண்டுபிடிப்பு

------------------------------------------------------------------------------------------------------

1. இறைவனை நமது நம்பிக்கைக்கு அடித்தளமாகக் கொண்டு வாழ நாம் அழைக்கப்பட்டுள்ளோம் - திருத்தந்தை

நவ.19,2012. நம்மைச்சுற்றி முரண்பட்டப் பல நிகழ்ச்சிகள் நடந்தாலும், நமது செயல்பாடுகளுக்கு நாமே பொறுப்பு என்றும், இறுதிநாளில் இச்செயல்பாடுகளின் அடிப்படையிலேயே நாம் தீர்வு பெறுவோம் என்றும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இந்த ஞாயிறு வழங்கப்பட்டுள்ள மாற்கு நற்செய்திப் பகுதியை மையப்படுத்தி, புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்குத் தன் மூவேளை செப உரையை வழங்கியத் திருத்தந்தை, விவிலிய வார்த்தைகளைப் பயன்படுத்தி, இறுதிக்காலத்தைக் குறித்து கூறப்படும் தவறான அர்த்தங்களை ஒதுக்கிவைத்து, இயேசுவின் கூற்றில் உண்மையான அர்த்தத்தைக் காணவேண்டும் என்று கூறினார்.
இறுதிக்காலத்தைப் பற்றிய தேவையற்ற கணிப்புகளிலிருந்து விலகி, இன்றும், நாளையும், எப்போதும் நல்வழியைத் தேடவேண்டும் என்ற அறிவுரையை இயேசு இன்றைய நற்செய்தியில் வழங்குகிறார் என்பதை திருத்தந்தை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
பழைய ஏற்பாட்டிலிருந்து இயேசு பல்வேறு உருவகங்களைப் பயன்படுத்தினாலும், சாவிலிருந்து உயிர்ப்புக்குச் செல்வதற்கு, தன்னை ஒரு வழியாகக் காட்டினார் என்று திருத்தந்தை வலியுறுத்திக் கூறினார்.
இன்றைய உலகில் நம்மைச் சுற்றி நிகழும் இயற்கைப் பேரிடர்கள், போர்கள் ஆகிய துயர நிகழ்வுகள் நம்மை வருத்தத்தில் ஆழ்த்தினாலும், இறைவனை நமது நம்பிக்கைக்கு அடித்தளமாகக் கொண்டு வாழ நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று திருத்தந்தை தன் மூவேளை செப உரையின் இறுதியில் கூறி, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.


2. காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் திருத்தந்தைக்கு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வாழ்த்து

நவ.19,2012. காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் திருத்தந்தையாக இஞ்ஞாயிறன்று பொறுப்பேற்ற இரண்டாம் Tawadros அவர்களை, தூயஆவியார் வழி நடத்தவேண்டுமென்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வாழ்த்தினார்.
இஞ்ஞாயிறன்று கெய்ரோ நகரில் அமைந்துள்ள புனித மார்க் பேராலயத்தில் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் 118வது தலைவராக, இரண்டாம் Tawadros அரியணை ஏற்றப்பெற்றார். இவ்விழாவையொட்டி, திருத்தந்தை அவருக்கு தன் வாழ்த்துக்களை, கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Kurt Koch வழியாக அனுப்பிவைத்தார்.
காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையும், கத்தோலிக்கத் திருஅவையும் வருங்காலத்தில் இன்னும் நெருக்கமாக இணைந்து வருவதையும், சகோதரப் பரிவுடன் ஒத்துழைப்பதையும் தான் விரும்புவதாக திருத்தந்தை தன்  செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாண்டு மார்ச் மாதம் இறையடி சேர்ந்த மூன்றாம் Shenouda அவர்களின் மறைவுக்குப் பின், காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையின் தலைவராக நவம்பர் 4ம் தேதி இரண்டாம் Tawadros தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இப்பொறுப்பை வகிப்பவர்கள் அலேக்சாந்திரியாவின் திருத்தந்தை என்றும், அனைத்து ஆப்ரிக்க சபைகளின் முதுபெரும் தலைவர் என்றும் அழைக்கப்படுவர்.


3. கடல்வழி பயணிப்போர் பணியின் அனைத்துலக மாநாட்டில் கர்தினால் Vegliòவின் துவக்க உரை

நவ.19,2012. கடல் பயணங்களில் நாம் அடைந்துள்ள தொழில் நுட்பங்கள், இப்பயணங்களில் பணிபுரிவோர் சந்திக்கும் பிரச்சனைகள் போன்றவை நமது நற்செய்திப் பணியை இன்னும் பொருளுள்ளதாக மாற்றுகின்றன என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
நவம்பர் 19, இத்திங்கள் முதல் வருகிற வெள்ளிக்கிழமை முடிய உரோம் நகரில் நடைபெறும் 23வது கடல்வழி பயணிப்போர் பணியின் அனைத்துலக மாநாட்டில், பயணிகள் மற்றும் புலம்பெர்யர்ந்தோர் பணிக்கானத் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Antonio Maria Vegliò  துவக்க உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.
90 ஆண்டுகளுக்கு முன்னர் திருத்தந்தை 11ம் பத்திநாதர் அவர்களால் உருவாக்கப்பட்ட இப்பணியைப் பற்றி எடுத்துரைத்த கர்தினால் Vegliò, இவ்வாண்டு நடைபெறும் மாநாட்டில் 70நாடுகளிலிருந்து வந்திருக்கும் 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொள்வது ஒரு வரலாற்று நிகழ்வு என்று கூறினார்.
நாடுவிட்டு நாடு செல்லும் கடல் பயணிகள் கரையிறங்கும் வேளையில் அவர்களை வரவேற்று, அவர்களுக்கு நற்செய்தியினை வழங்குவது, அவர்களை மீண்டும் வேரூன்றும் ஓர் அனுபவம் என்று கர்தினால் இப்பணியை விவரித்தார்.
கடலின் விண்மீன் (Stella Maris) என்று அழைக்கப்படும் இறையன்னை மரியாவை நோக்கி, அருளாளர் இரண்டாம் ஜான்பால் எழுதியிருந்த அழகியதொரு செபத்துடன் கர்தினால் Vegliò தன் துவக்க உரையை நிறைவு செய்தார்.


4. பள்ளிகளில் சமயக்கல்வி ஒரு முக்கிய பங்கு வகிக்கவேண்டும் - இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள்

நவ.19,2012. இளையோரின் முழு மனித வளர்ச்சி முக்கியம் என்பதால், பள்ளிகளில் சமயக்கல்வி ஒரு முக்கிய பங்கு வகிக்கவேண்டும் என்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள் கூறியுள்ளனர்.
அண்மையில் நடந்து முடிந்துள்ள இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டத்தின் இறுதியில் ஐந்து அம்சக் கொள்கை ஒன்று அனைத்து ஆயர்களாலும் உறுதிசெய்யப்பட்டு, வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளிகளில் சமயக் கல்வி, மனித வர்த்தகம், ஒரே பாலினத் திருமணம், மத்தியக் கிழக்கு பகுதியில் அமைதி நிலவ செபங்கள், மதிப்புடன் வாழ்வதை உறுதி செய்யும் ஊதியம் என்ற ஐந்து அம்சங்கள் கொண்ட இவ்வறிக்கையை ஆயர்கள் வெளியிட்டுள்ளனர்.
ஒரே பாலினத் திருமணம் குறித்து பிரித்தானிய பாராளுமன்றம் விவாதித்து வரும் வேளையில், ஆண், பெண் திருமணம் என்ற இயற்கை நியதிக்கு எதிராகச் செல்லும் எந்த முயற்சிக்கும் ஆயர்களின் எதிர்ப்பு உண்டு என்று இவ்வறிக்கை கூறுகிறது.
சிரியா, புனித பூமி ஆகிய பகுதிகளில் நடைபெற்றுவரும் மோதல்களை விரைவில் தீர்த்து, மத்தியக் கிழக்குப் பகுதியில் அமைதி நிலவ அனைத்து மக்களும் செபத்தில் இணைய வேண்டும் என்று ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். வருகிற டிசம்பர் 4ம் தேதி, புனித John Damascene அவர்களின் திருநாளன்று இந்த செப முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் இவ்வறிக்கை கூறுகிறது.


5. அகில உலக இளையோர் நாளில் கலந்துகொள்ளச் செல்லும் அனைவருக்கும் அனுமதி சீட்டு (visa) இலவசம்

நவ.19,2012. வருகிற 2013ம் ஆண்டு பிரேசில் நாட்டில் நடைபெறவிருக்கும் அகில உலக இளையோர் நாளில் கலந்துகொள்ளச் செல்லும் அனைவருக்கும் அந்நாட்டுக்குள் நுழைவதற்கான அனுமதி சீட்டு (visa) இலவசமாக வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
2013ம் ஆண்டு, ஜூலை மாதம் 23ம் தேதி முதல் 28ம் தேதி முடிய பிரேசில் நாட்டின் ரியோடிஜெனீரோ நகரில், திருத்தந்தையின் தலைமையில் நடைபெறும் இளையோர் நாளில் கலந்து கொள்வோர், தங்கள் முன்பதிவு அத்தாட்சியைக் காட்டினால், அவர்களுக்கு இலவசமாக அனுமதிச் சீட்டு அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அனுமதிச் சீட்டு 90 நாட்களுக்குச் செல்லுபடியாகும் என்றும், விருப்பமுள்ளோர் இதனை ஓராண்டுக்கு நீட்டிக்கவும் முடியும் என்றும் பிரேசில் நாட்டு பன்னாட்டு உறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.


6. தனிப்பட்ட அடையாளம் ஏதுமின்றி வாழும் 5 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் மட்டில் நமது கவனம் திரும்ப வேண்டும் - சலேசிய சபையின் தலைவர்

நவ.19,2012. உலகில் 20 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் தேவையான உணவின்றி வாடுகின்றனர் என்று ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரு சமுதாய அமைப்பு கூறியுள்ளது.
பசிக்கெதிரான முயற்சிகள்(Acción contra el Hambre) என்ற அரசு சாரா ஸ்பானிய அமைப்பு வெளியிட்டுள்ள இவ்வறிக்கையில், உணவு ஏதுமின்றி உலகில்வாடும் குழந்தைகள் 5 கோடியே 50 இலட்சம் என்றும், சரியான உணவின்றி 16 கோடியே, 50 இலட்சம் குழந்தைகள் வாடுகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
'காணமல்போகும் குழந்தைப் பருவம்' என்ற தலைப்பில் இவ்வமைப்பினர் நடத்திவரும் விழிப்புணர்வு விளம்பரங்கள் மூலம் இக்குழந்தைகளின் வருங்காலம் பல வழிகளில் பாதிக்கப்படுவது விவரிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 20, இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்படும் அகில உலகக் குழந்தைகள் நாளையொட்டி, சலேசிய சபையின் தலைவர் அருள்தந்தை Pascual Chávez செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.
இச்செய்தியில், எவ்வித தனிப்பட்ட அடையாளமும் இன்றி உலகெங்கும் வாழும் 5 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் மட்டில் நமது கவனம் திரும்ப வேண்டும் என்ற சிறப்பான அழைப்பை விடுத்துள்ளார்.


7. ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவான சட்டத்தை எதிர்த்து பிரான்சில் கண்டனப் பேரணி

நவ.19,2012. பிரான்ஸ் நாட்டில், ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்வதை ஆதரிக்கும் வகையிலும், ஓரினச் சேர்க்கையாளர்கள் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கவும் அனுமதி வழங்கப்பட்டு சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கத்தோலிக்கத் திருஅவையினரும், வலதுசாரி அமைப்பினரும் இணைந்து, இச்சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிரான்ஸ் நாட்டின் பல நகரங்களில் போராட்டம் நடத்தினர்.
இவர்கள் "ஒரு குழந்தைக்கு ஒரு தாயும், தந்தையும் தான்" என்று முழக்கமிட்டனர். தலைநகர் பாரிஸில் மட்டும் 15,000க்கும் மேற்பட்ட மக்கள் கூடி போராட்டம் நடத்தினர்.
இப்போராட்டத்தில் அதிகளவில் பங்கேற்ற இளையோர், இப்புதிய சட்டம் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதி என்று கூறினர்.


8. காகிதம் போன்ற மிக மெல்லியதான குண்டு துளைக்காதப் பொருள் கண்டுபிடிப்பு

நவ.19,2012. காகிதம் போன்ற மெல்லிய அளவு கொண்ட குண்டு துளைக்காதப் பொருளை அமெரிக்க அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதுவரைப் பயன்படுத்தப்பட்டுவரும் குண்டு துளைக்காத உடைகளைத் தயாரிக்க, தடினமான உலோகங்கள் பயன்படுத்தப்படுவதால், இவ்வுடைகளை அணிவது சிரமமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வல்லுனர்கள் Edwin Thomas, Jae-Hwang Lee, என்ற இருவரும் தற்போது "நானோ" தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, காகிதம் போன்ற மெல்லிய,  குண்டு துளைக்காதப் பொருளைக் கண்டுபிடித்துள்ளனர்.
கண்ணாடி போன்று பளபளப்பாகவும், ரப்பரைப் போன்று வளையும் தன்மையும் கொண்ட இப்பொருள், துப்பாக்கி குண்டுகளைத் துளைக்கவிடாமல் தடுப்பதை வெற்றிகரமாக ஆய்வு செய்துள்ளனர்.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...