Friday, 16 November 2012

Catholic News in Tamil - 16/11/12

1. 2013ம் ஆண்டு நடைபெறவிருக்கும் அகில உலக இளையோர் நாளுக்கென திருத்தந்தை வழங்கியுள்ள செய்தி

2. உலகின் துயரங்களுக்கு அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புக்கள் மட்டுமே தீர்வாக முடியாது - பேராயர் Zimowski

3. Ozone மண்டலம் படைப்பனைத்திற்கும் தேவைப்படும் ஒரு கோடை - பேராயர் தொமாசி

4. உலக அளவில் நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு குடும்பம் உருவாகும் - பேராயர் Fisichella நம்பிக்கை

5. பாலஸ்தீன நாடு ஐ.நா.பொது அவையின் ஓர் உறுப்பினராக மாறுவதற்கு ஐரோப்பிய  நாடுகள் ஆதரவு தரவேண்டும் - கிறிஸ்தவத் தலைவர்கள் விண்ணப்பம்

6. இயற்கைப் பேரிடர்களில் ஆசிய நாடுகள் 25 மடங்கு அதிகம் துன்பங்களைச் சந்திக்கும் ஆபத்து

7. ஆப்ரிக்கா மற்றும் கிழக்காசிய நாடுகள் பசியின் கொடூரப் பிடியில் சிக்கியுள்ளன - FAO இயக்குனர்

8. கொள்கை பிடிப்பற்ற இளைஞர்கள் அரசியலில் ஈடுபட வேண்டாம்: ஆங் சாங் சூச்சி

------------------------------------------------------------------------------------------------------

1. 2013ம் ஆண்டு நடைபெறவிருக்கும் அகில உலக இளையோர் நாளுக்கென திருத்தந்தை வழங்கியுள்ள செய்தி

நவ.16,2012. பிரேசில் நாட்டின் ரியோடிஜெனீரோ நகரில் விரிந்த கரங்களுடன் நிற்கும் உலக மீட்பர் கிறிஸ்துவின் உருவம் நம் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
2013ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் அகில உலக இளையோர் நாளுக்கென திருத்தந்தை வழங்கியுள்ள செய்தியில், புதிய நற்செய்திப் பணிக்கென இளையோர் தங்களை இன்னும் ஆர்வமாய் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டுமென்ற சிறப்பான அழைப்பை விடுத்துள்ளார்.
கிறிஸ்துவின் சீடர்களாதல், அனைத்து நாடுகளையும் ஒன்று சேர்த்தல், நம்பிக்கையில் ஊன்றியிருத்தல், ஆகிய எண்ணங்கள் உட்பட, இச்செய்தியை எட்டு பகுதிகளாக திருத்தந்தை விடுத்துள்ளார்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் ஆரம்பமானதன் 50ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் அகில உலகத் திருஅவை நம்பிக்கை ஆண்டையும், புதிய நற்செய்திப் பணி என்ற கருத்தையும் சிறப்பித்து வரும் இவ்வேளையில், பிரேசில் நாட்டில் நடைபெறவிருக்கும் இளையோர் நாள் சிறப்பு வாய்ந்த ஒரு தருணம் என்று திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
"நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்" என்ற மையக் கருத்துடன் நடைபெறவிருக்கும் இந்த உலக நிகழ்ச்சியில் அனைத்துலக இளையோரும் ஆர்வமாகக் கலந்துகொள்ள வாருங்கள் என்று திருத்தந்தை சிறப்பானதோர் அழைப்பைத் தன் செய்தியின் மூலம் விடுத்துள்ளார்.


2. உலகின் துயரங்களுக்கு அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புக்கள் மட்டுமே தீர்வாக முடியாது - பேராயர் Zimowski

நவ.16,2012. நலம் மற்றும் மேய்ப்புப்பணி திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Zygmunt Zimowski, உரோம் நகரில் இவ்வியாழன், வெள்ளி, மற்றும் சனிக்கிழமை ஆகிய 3 நாட்கள் நடைபெறும் 27வது அனைத்துலகக் கருத்தரங்கில், இயேசு தன் சீடர்களிடம் கூறிய "செல்லுங்கள், பறைசாற்றுங்கள், குணமாக்குங்கள்" என்ற வார்த்தைகளுடன் தன் துவக்க உரையை வழங்கினார்.
உலகின் ஐந்து கண்டங்களைச் சேர்ந்த 65 நாடுகளிலிருந்து வந்திருக்கும் 650க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை வரவேற்றுப் பேசிய பேராயர் Zimowski, கலாச்சாரமும், மதங்களும் சந்திக்கும் ஒரு முக்கிய தலமாக மருத்துவமனைகள் மாறிவருவதைத் தன்  உரையில் சுட்டிக்காட்டினார்.
உடல்நலம் குறைவதால் மனிதர்கள் அனுபவிக்கும் துயரங்கள் குறித்து ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னதாகவே இரண்டாம் வத்திக்கான் சங்கத் தந்தையர்கள் தங்கள் கருத்தைக் கூறியுள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசிய பேராயர் Zimowski, உலகின் துயரங்களுக்கு அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புக்கள் மட்டுமே தீர்வாக முடியாது, நம்பிக்கையுடன் கூடிய கண்ணோட்டமும் தேவை என்று எடுத்துரைத்தார்.
மேற்கத்திய நாடுகளில் மருத்துவப்பணி அதிகமான அளவு தொழில் மயமாக்கப்பட்டுள்ளது என்பதையும், மருத்துவச் செலவுகள் கூடிவருகிறது என்பதையும் எடுத்துரைத்த பேராயர் Zimowski, இத்தகையப் போக்குகள் சீரமைக்கப்பட வேண்டும் என்ற அழைப்பையும் விடுத்தார்.
"மருத்துவமனை: நற்செய்தி அறிவிப்புப் பணியின் தளம்" என்ற தலைப்பில் நடைபெறும் இக்கருத்தரங்கு இச்சனிக்கிழமை நிறைவுபெறும்.


3. Ozone மண்டலம் படைப்பனைத்திற்கும் தேவைப்படும் ஒரு கோடை - பேராயர் தொமாசி

நவ.16,2012. இயற்கையின் ஒரு முக்கிய அங்கமாக படைக்கப்பட்டுள்ள Ozone மண்டலம் படைப்பனைத்திற்கும் தேவைப்படும் ஒரு கோடை என்று கூறினார் வத்திக்கான் அதிகாரி பேராயர் சில்வானோ தொமாசி.
Ozone மண்டலத்தைக் காப்பாற்றும் நோக்கில், கனடாவின் Montreal நகரில் நடைபெற்ற ஒரு பன்னாட்டுக் கூட்டத்தின் 25ம் ஆண்டு நிறைவையொட்டி, ஜெனீவாவில் இவ்வியாழனன்று நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் ஜெனீவா ஐ.நா.அவையில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் தொமாசி இவ்வாறு கூறினார்.
உலகம் இன்று சந்திக்கும் பொருளாதார, சமுதாய, சுற்றுச்சூழல் பிரச்சனைகள் அனைத்தும் ஒன்றோடொன்று தொடபுடையவை என்று சுட்டிக்காட்டிய பேராயர் தொமாசி, இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதிலும் ஒரு முழுமையான கண்ணோட்டம் தேவை என்று கூறினார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற கருத்தை, கத்தோலிக்கத் திருஅவை ஒரு முக்கியக் கருத்தாகக் கொண்டு, கத்தோலிக்கப் பள்ளிகளில் இதனை ஒரு கட்டாயப் பாடமாக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று பேராயர் எடுத்துரைத்தார்.
இயற்கையை மதித்து நடத்துவதற்கு ஓர் அடிப்படையாக, மனித உயிர்கள் மதிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை அடுத்த தலைமுறையினருக்கு வழங்குவது நமது முக்கிய கடமை என்பதையும் பேராயர் தொமாசி தன் உரையில் வலியுறுத்தினார்.


4. உலக அளவில் நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு குடும்பம் உருவாகும் - பேராயர் Fisichella நம்பிக்கை

நவ.16,2012. நம்பிக்கை ஆண்டையொட்டி உரோம் நகருக்கு வரும் திருப்பயணிகள் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் உலக அளவில் நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு குடும்பம் உருவாகும் என்ற தன் நம்பிக்கையை வெளியிட்டார் புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Rino Fisichella.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அறிவித்திருக்கும் நம்பிக்கை ஆண்டைச் சிறப்பிக்கும் வகையில் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் உள்ள வத்திக்கான் திருப்பயண அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு சுருள் மடலில் திருப்பயணிகள் தங்கள் எண்ணங்களை எழுதும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இச்சுருள் மடலில் பதிவாகும் நம்பிக்கை எண்ணங்களை இணையதளத்தில் வெளியிட்டு, அதன் மூலம் நம்பிக்கை எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு குடும்பத்தை உருவாக்குவதே தங்கள் நோக்கம் என்று திருப்பயணிகள் அலுவலகத்தின் இயக்குனர் அருள்தந்தை Cesare Atuire  கூறினார்.
தங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யும் திருப்பயணிகள், அத்தடன் தங்கள் தேவைகளைக் கூறி வேண்டுதல்களுக்கும் விண்ணப்பிக்கலாம் என்று அருள்தந்தை Atuire கூறினார்.


5. பாலஸ்தீன நாடு ஐ.நா.பொது அவையின் ஓர் உறுப்பினராக மாறுவதற்கு ஐரோப்பிய  நாடுகள் ஆதரவு தரவேண்டும் - கிறிஸ்தவத் தலைவர்கள் விண்ணப்பம்

நவ.16,2012. கிறிஸ்தவப் பாரம்பரிய வேர்களுடன் தொடர்புள்ள பாலஸ்தீன கிறிஸ்தவர்களாகிய நாங்கள், பாலஸ்தீன இஸ்லாமிய சகோதர, சகோதரிகளைப் போல எங்கள் குடியுரிமையையும், மனித உரிமைகளையும் இழந்து நிற்கிறோம் என்று புனித பூமியில் வாழும் பல கிறிஸ்தவத் தலைவர்கள் விண்ணப்பம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
பாலஸ்தீன நாடு ஐ.நா.பொது அவையின் ஓர் உறுப்பினராக மாறுவதற்கு ஐரோப்பிய  நாடுகள் அனைத்தும் ஆதரவு தரவேண்டும் என்ற விண்ணப்பத்துடன் எழுதப்பட்டுள்ள ஒரு மடலில், பாலஸ்தீன கிறிஸ்தவத் தலைவர்கள் 100 பேர் கையொப்பம் இட்டுள்ளனர்.
பாலஸ்தீனமும், புனித பூமியும் தங்கள் வேர்கள் என்று கூறும் கிறிஸ்தவத் தலைவர்கள், புனித பூமியின் வளர்ச்சியில் ஐரோப்பிய நாடுகளுக்கு முக்கிய பங்கு இருப்பதால், பாலஸ்தீன நாடு, ஐ.நா.அவையின் உறுப்பினராக மாறுவதற்கும் ஐரோப்பிய நாடுகள் உதவிகள் செய்வது முக்கியம் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இஸ்ரேல் அரசின் ஆக்கிரமிப்பில் உள்ள தங்கள் பகுதிகளைத் தங்களுக்கு மீட்டுத் தந்தால், தாங்களும், இஸ்லாமியச் சமுதாயமும் ஒன்றிணைந்து வாழமுடியும்  என்றும் இவ்விண்ணப்பத்தில் கூறப்பட்டுள்ளது.


6. இயற்கைப் பேரிடர்களில் ஆசிய நாடுகள் 25 மடங்கு அதிகம் துன்பங்களைச் சந்திக்கும் ஆபத்து

நவ.16,2012. இயற்கைப் பேரிடர்கள் நிகழும்போது, ஆப்ரிக்க, ஐரோப்பிய நாடுகள் சந்திக்கும் இடர்பாடுகளைக் காட்டிலும், ஆசிய நாடுகள் 25 மடங்கு அதிகம் துன்பங்களைச் சந்திக்கும் ஆபத்து உள்ளது என்று Asian Development Bank எனப்படும் ஆசிய முன்னேற்ற வங்கியின் அறிக்கையொன்று கூறியுள்ளது.
ஆசிய நாடுகளின் அரசுகளில் காணப்படும் தவறான திட்டவரைவுகள், பெருகிவரும் மக்கள் தொகை, சுற்றுச்சூழல் மாற்றங்கள் ஆகிய காரணங்களால் ஆசிய நாடுகள் பேரிடர்களால் அதிக அளவில் துன்புறுகின்றன என்று இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
வானிலை மாற்றங்களாலும், மழை பொய்த்து விடுவதாலும் கிராமங்களை விட்டு, நகரங்கள் நோக்கி வரும் மக்கள், கடலோரங்களில் தாழ்வானப் பகுதிகளில் வாழ்வதும் இப்பிரச்சனைகளைக் கூடுதலாக்கி உள்ளன என்று இவ்வறிக்கை கூறுகிறது.
இயற்கைப் பேரிடர்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1980களில் எடுக்கப்பட்ட கணக்கின்படி, பத்தாண்டுகளில் 1,00,000 என்ற அளவு இருந்ததென்றும், 2000 முதல் 2009ம் ஆண்டுவரை எடுக்கப்பட்ட கணிப்பின்படி, இவ்வெண்ணிக்கை 6,51,000 ஆக உயர்ந்துள்ளது என்றும் இவ்வறிக்கை கூறுகிறது.


7. ஆப்ரிக்கா மற்றும் கிழக்காசிய நாடுகள் பசியின் கொடூரப் பிடியில் சிக்கியுள்ளன - FAO இயக்குனர்

நவ.16,2012. போர்கள், மோதல்கள், வறட்சி மற்றும் உணவுப் பொருட்களின் விலையுயர்வு ஆகியவை ஆப்ரிக்கா மற்றும் கிழக்காசிய நாடுகள் பலவற்றைப் பசியின் கொடூரப் பிடியில் சிக்கவைத்துள்ளன என்று FAO இயக்குனர் José Graziano da Silva கூறினார்.
கட்டார் நாட்டின் தலைநகர் டோஹாவில் இப்புதன், வியாழன் ஆகிய இருநாட்கள் நடைபெற்ற ஓர் அகில உலகக் கருத்தரங்கில் உரையாற்றிய உணவு மற்றும் வேளாண்மை நிறுவனமான FAOவின் இயக்குனர் da Silva, உலக அரசுகள் மனதுவைத்தால், பசியைப் போக்கமுடியும் என்றும் எடுத்துரைத்தார்.
1990களில் இருந்து ஆப்ரிக்கா, ஆசியா ஆகிய கண்டங்களில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை 8 கோடியே 30 இலட்சமாக உயர்ந்து, தற்போது உலகில் 27 கோடியே 50 இலட்சம் மக்கள் பசியால் துன்புறுகின்றனர் என்று FAO இயக்குனர் கூறினார்.
60 நாடுகளிலிருந்து வந்திருந்த அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இக்கருத்தரங்கின் இறுதியில் பசியை நீக்கும் பல வழிகள் உறுதி மொழிகளாக வெளியிடப்பட்டது.


8. கொள்கை பிடிப்பற்ற இளைஞர்கள் அரசியலில் ஈடுபட வேண்டாம்: ஆங் சாங் சூச்சி

நவ.16,2012. இந்தியாவில் இருக்கும்போது, இந்திய குடிமக்களில் ஒருவராக, தான் உணர்வதாக மியான்மர் எதிர்க்கட்சித்தலைவர் ஆங் சாங் சூச்சி தெரிவித்துள்ளார். இந்தியாவில் பயணங்கள் மேற்கொண்டுள்ள மியான்மர் எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சாங் சூச்சி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.
இவ்வெள்ளியன்று காலை டில்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு சூச்சி பேசுகையில், “இந்த உலகில், இளைய தலைமுறையினரின் நம்பிக்கைகளும், உயிர்ப்புகளும் ஒன்றிணைந்துள்ளன. இளைய தலைமுறையினரின் வெளிப்படைத்தன்மை, அவர்களின் பெருந்தன்மை ஆகியவை அவர்களின் உள்ளங்களில் கசப்பு, கோபம் ஆகியவை இல்லை என்பதைக் காட்டுகிறதுஎன்று கூறினார்.
இளைய உள்ளங்கள் மீது தான் கொண்டுள்ள நம்பிக்கைகள் வீணாகி விடவில்லை எனக் கூறிய சூச்சி, அனுபவங்கள் கசப்பாக மாறுவதும், மகிழ்ச்சியாக மாறுவதும், அதை நாம் அணுகும் முறையில் தான் உள்ளது என்று கூறினார்.
கொள்கைகளை விட்டுக்கொடுத்துச் செல்லக்கூடிய இளையோர் அரசியலில் ஈடுபடவேண்டாம் என்று கூறிய சூச்சி, கொள்கையற்ற அரசியலே உலகில் நிலவும் பெரும் ஆபத்து என்பதையும் சுட்டிக் காட்டினார்.
இந்தியாவிலிருந்து நான் வெகுதூரத்தில் இருப்பதாக நினைக்கவில்லை. நான் இந்தியாவிற்கு வந்ததில் இருந்து, நமது நட்பு மீதான எனது நம்பிக்கை நியாயமானது என்பதை உணர்கிறேன். இந்த நம்பிக்கை நாளுக்கு நாள், ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து குடியரசை நோக்கி நம்மை நடைபோடவைக்கும்என்று மியான்மர் எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சாங் சூச்சி உணர்வு பொங்கப் பேசினார்.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...