Friday, 16 November 2012

Catholic News in Tamil - 15/11/12


1. கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கும் நற்செய்தி அறிவிப்புக்கும் உள்ள தொடர்பு குறித்து திருத்தந்தை

2. அருளாளர் இரண்டாம் ஜான்பால் இத்தாலிய பாராளுமன்றத்திற்குச் சென்றதன் பத்தாம் ஆண்டு நினைவு

3. "மருத்துவமனை: நற்செய்தி அறிவிப்புப்பணியின் தளம்" - அகில உலக கருத்தரங்கில் கர்தினால் பெர்தோனே வழங்கிய மறையுரை


4. ஜெனீவா ஐ.நா.அவை கருத்தரங்கில் பேராயர் சில்வானோ தொமாசியின் உரை

5. நாசரேத் இயேசு என்ற தலைப்பில் திருத்தந்தை எழுதியுள்ள மூன்றாம் பகுதி நவம்பர் 20 வெளியிடப்படும்

6. ஆண், பெண் என்ற அனைத்து மனித உயிர்களும் புனிதமானவை - ஆயர்  Agnelo Gracias

7. Rimsha Masihயின் வழக்கில் இன்னும் ஒரு சில நாட்களில் தீர்ப்பு வெளியாகும்

8. சூரியஒளி, காற்று, மின் ஆற்றலால் இயங்கும் ஆட்டோ

------------------------------------------------------------------------------------------------------

1. கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கும் நற்செய்தி அறிவிப்புக்கும் உள்ள தொடர்பு குறித்து திருத்தந்தை

நவ.15,2012. நற்செய்தி அறிவிப்புப்பணிக்கும் கிறிஸ்தவர்களிடையே காணப்படும் பிரிவினைகளை மேற்கொள்வதற்கும் இடையே இருக்கும் நெருங்கிய உறவை சுட்டிக்காட்டி இவ்வியாழனன்று தன்னை திருப்பீடத்தில் சந்தித்த கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கான திருப்பீட அவையின் அங்கத்தினர்களுக்கு உரை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
'புதிய நற்செய்தி அறிவிப்பில் கிறிஸ்தவ ஒன்றிப்பின் முக்கியத்துவம்' என்பது குறித்து இவ்வவை நடத்திய ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டோரைத் திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் துவங்கியதன் 50ம் ஆண்டு நிறைவு விழாவில் இத்தகையதொரு கூட்டம் இடம்பெறுவது பொருத்தமானதே என்றார்.
இன்றைய உலகில் நம் உடன் வாழ்வோரில் காணப்படும் ஆன்மீக வெறுமை நிலை, அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் ஒரு சவாலாக உள்ளது என்ற திருத்தந்தை, இத்தகையச் சூழல்களில் நற்செய்தி அறிவிப்பிற்கான ஒரு புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணம் அனைத்துக் கிறிஸ்தவசபைகளிலும், சமூகங்களிலும் எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
கிறிஸ்துவில் தன்னை வெளிப்படுத்திய இறைவனில் விசுவாசம் கொண்டிருக்கும் அனைத்துக் கிறிஸ்தவசபைகளும் ஒன்றிணைந்து வருவதற்கான வாய்ப்புகள் அண்மையில் தெரியவில்லை எனினும், ஒன்றிப்பு முயற்சிகளின் அனுபவங்களும், ஆன்மீக வாழ்வும், இறையியல் கலந்துரையாடல்களும் ஆழமான ஒரு சாட்சிய வாழ்வுக்குத் தூண்டுபவைகளாக உள்ளன எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
பிரிந்துவாழும் கிறிஸ்தவர்களிடையே கண்ணால் காணக்கூடிய ஒன்றிப்பு என்பது மனிதர்களின் முயற்சிகளின் பலனாக மட்டும் கிட்டுவதில்லை ஏனெனில் அது இறைவனின் கொடை என்பதையும் கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கான திருப்பீட அவையின் அங்கத்தினர்களிடம் சுட்டிக்காட்டிய‌த் திருத்தந்தை, புதிய நற்செய்தி அறிவிப்பு முயற்சிகளில் கிறிஸ்தவ ஒன்றிப்பின் முக்கியத்துவத்தையும் விளக்கினார்.


2. அருளாளர் இரண்டாம் ஜான்பால் இத்தாலிய பாராளுமன்றத்திற்குச் சென்றதன் பத்தாம் ஆண்டு நினைவு

நவ.15,2012. தன் உடல் நலக் குறைவையும் பொருட்படுத்தாது, அருளாளர்  திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் 2002ம் ஆண்டு இத்தாலிய பாராளுமன்றத்திற்குச் சென்றது இத்தாலிக்கும், திருப்பீடத்திற்கும் இடையே உள்ள வலுவான ஓர் உறவின் அடையாளம் என்று திருத்தந்தை கூறினார்.
2002ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி அருளாளர் இரண்டாம் ஜான்பால் இத்தாலிய பாராளுமன்றத்திற்குச் சென்றதன் பத்தாம் ஆண்டு நினைவையொட்டி, பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் சார்பில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே செய்தியொன்றை இப்புதனன்று அனுப்பினார்.
உலகம் சந்தித்துவரும் சமுதாயப் பிரச்சனைகளுக்கு, கிறிஸ்தவ நெறிமுறைகளிலிருந்து தீர்வுகளைக் காணவேண்டும் என்று திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் விடுத்த அழைப்பை தன்  செய்தியில் குறிப்பிட்டத் திருத்தந்தை, கடந்த பத்தாண்டுகளில் நாம் சந்தித்துள்ள பல கடினமான சூழல்களில் கிறிஸ்தவ விழுமியங்கள் காட்டிவரும் வழிகளை இத்தாலிய அரசு மறந்துவிடக்கூடாது என்று கூறினார்.
இத்தாலிய அரசுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் சுமுகமான, வலுவான உறவு, இத்தாலிய நாட்டை வளமான பாதையில் இட்டுச்செல்லும் என்ற தன் நம்பிக்கையை, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


3. "மருத்துவமனை: நற்செய்தி அறிவிப்புப்பணியின் தளம்" - அகில உலக கருத்தரங்கில் கர்தினால் பெர்தோனே வழங்கிய மறையுரை

நவ.15,2012. இறையரசு கண்ணைக்கவரும் பிரம்மாண்டமான காட்சியாகத் தோன்றாமல், நிலத்தில் விதைத்த ஒரு சிறு விதைபோல் வளர்ந்து பயன்தரும் என்று திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே கூறினார்.
நலம் மற்றும் மேய்ப்புப்பணி திருப்பீட அவை உரோம் நகரில் ஏற்பாடு செய்துள்ள 27வது அகில உலக கருத்தரங்கை இவ்வியாழனன்று துவக்கிவைத்து, திருப்பலியாற்றிய கர்தினால் பெர்தோனே, தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.
புதிய நற்செய்தி அறிவிப்புப்பணியைக் குறித்து சிந்தித்துவரும் இந்த நம்பிக்கை ஆண்டில், நற்செய்திப் பணிக்கு மருத்துவமனைகள் சிறந்த தளங்கள் என்ற கருத்தில் நடைபெறவிருக்கும் கருத்தரங்கின் முயற்சிகளுக்குத் தன் வாழ்த்துக்களைக் கூறினார் கர்தினால் பெர்தோனே.
மருத்துவத்துறையில் மேற்கொள்ளப்படும் பல ஆய்வுகளில் மனித உயிர்கள் பொருட்களைப் போல் பயன்படுத்தப்படுவதை விடுத்து, ஒவ்வொரு மனிதரும் மதிப்புடன் நடத்தப்படுவதற்கு மருத்துவ உலகம் தகுந்த வழிகளைத் தேடவேண்டும் என்றும் திருப்பீடச் செயலர் தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.
"மருத்துவமனை: நற்செய்தி அறிவிப்புப்பணியின் தளம்" என்ற தலைப்பில் சனிக்கிழமை முடிய உரோம் நகரில் நடைபெறும் இக்கருத்தரங்கில் அறுபதுக்கும் அதிகமான நாடுகளிலிருந்து வந்திருக்கும் அங்கத்தினர்கள் கலந்துகொள்கின்றனர்.
இக்கருத்தரங்கின் உறுப்பினர்களை இறுதிநாளன்று திருத்தந்தை சந்தித்து உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


4. ஜெனீவா ஐ.நா.அவை கருத்தரங்கில் பேராயர் சில்வானோ தொமாசியின் உரை

நவ.15,2012. உலக வரலாற்றில் இதுவரை நடைபெற்ற அனைத்து போர்களிலும் மோதல்களிலும், பெரும்பான்மையாய் கொல்லப்பட்டிருப்பது சாதாரண மக்கள் என்றும், மக்களின் உடமைகளே அதிக அளவில் அழிக்கப்பட்டுள்ளன என்றும் வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
பாரம்பரியமாகப் பயன்படுத்தக்கூடிய ஆயுதங்களால் ஏற்படும் விளைவுகளைக் குறித்து இவ்வியாழன், வெள்ளி ஆகிய இருநாட்கள் ஜெனீவாவில் நடைபெறும் ஒரு கருத்தரங்கில் ஜெனீவா ஐ.நா.அவையில் திருப்பீடத்தின் சார்பில் நிரந்தர பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் சில்வானோ தொமாசி உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
மதம், இனம், நாடு, மொழி என்ற பல்வேறு காரணங்களால் போர்கள் எழுந்தாலும், ஒவ்வொரு போரிலும் கொல்லப்படுவதும், உடமைகளை இழப்பதும் எளிய மக்களே என்று கூறிய பேராயர் தொமாசி, இந்நிலையைக் குறித்து நாடுகளும், அரசுகளும் ஆழமான கேள்விகளை எழுப்பவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஆயுத பயன்பாட்டின்போது, மக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் இவை பயன்படுத்தப்பட்டிருப்பதே அதிக எண்ணிக்கையில் மக்கள் இறப்பதற்கு காரணம் என்பதைச் சுட்டிக்காட்டிய பேராயர், மக்களைக் கொல்லும் எம்முறையும் நன்னெறிக்குப் புறம்பானது என்றார்.
சட்டங்களைக் கொண்டுமட்டும் நாம் இக்கொலைகளைத் தடுக்கமுடியாது என்று கூறிய பேராயர் தொமாசி, அமைதியைத் தேடும் ஒரு கலாச்சாரத்தை உருவாக்குவதில் அனைத்து அரசுகளும் முழு முயற்சி எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


5. நாசரேத் இயேசு என்ற தலைப்பில் திருத்தந்தை எழுதியுள்ள மூன்றாம் பகுதி நவம்பர் 20 வெளியிடப்படும்

நவ.15,2012. நாசரேத் இயேசு என்ற தலைப்பில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், ஜோசப் இராட்சிங்கர் என்ற தன் இயற்பெயருடன் எழுதியுள்ள நூல்கள் வரிசையின் மூன்றாம் பகுதி நவம்பர் 20, வருகிற செவ்வாயன்று வெளியிடப்படும் என்று வத்திக்கான் பதிப்பகம் அறிவித்துள்ளது.
இயேசுவின் வாழ்க்கையை விவரித்து திருத்தந்தை எழுதியுள்ள இம்மூன்றாம் பகுதி, "நாசரேத் இயேசு: குழந்தைப்பருவ நிகழ்வுகளின் விளக்கங்கள்" என்ற தலைப்புடன் வெளியிடப்படும் என்றும், இந்நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு விரைவில் வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கலாச்சாரத் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Gianfranco Ravasi, இந்நூலை நவம்பர் 20ம் தேதி வெளியிடுவார் என்றும், திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை Federico Lombardi இவ்வெளியீட்டு விழாவை முன்னின்று நடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


6. ஆண், பெண் என்ற அனைத்து மனித உயிர்களும் புனிதமானவை - ஆயர்  Agnelo Gracias

நவ.15,2012. சட்டத்திற்குப் புறம்பாக, இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடத்தப்பட்டுள்ள பெண் கருக்கலைப்புக் கொலைகள் பெண் சிசுக்களுக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்றுவரும் அநீதிகளுக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு என்று இந்திய ஆயர் ஒருவர் கூறினார்.
மாகாராஷ்டிரா மாநிலத்தின் Beed மாவட்டத்தில் Sudam Munde, என்ற மருத்துவரும், அவரது மனைவியும் சட்டத்திற்குப் புறம்பாக செய்துள்ள கருக்கலைப்பு அறுவைச் சிகிச்சைகள் 28 வயது பெண் ஒருவரின் மரணத்தால் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
மருத்துவர் Mundeயும் அவரது மனைவியும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் மருத்துவர் Munde பிணையத்தில் வெளிவராதவாறு உச்சநீதி மன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.
இத்தீர்ப்பைக் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் குடும்ப நலப்பணி அவையின் தலைவர் ஆயர்  Agnelo Gracias, ஆண், பெண் என்ற அனைத்து மனித உயிர்களும் புனிதமானவை என்று வலியுறுத்தினார்.
கருவில் வளரும் குழந்தை ஆனா, பெண்ணா என்று அறிவது, ஆண் ஆதிக்கம் கொண்ட சமுதாயத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டாம்தரமான இடம் போன்ற காரணங்களால் பெண் சிசுக் கொலை இந்தியாவில் தொடர்கிறது என்று ஆயர் Gracias கூறினார்.


7. Rimsha Masihயின் வழக்கில் இன்னும் ஒரு சில நாட்களில் தீர்ப்பு வெளியாகும்

நவ.15,2012. எப்பாவமும் அறியாத சிறுமி Rimsha Masihக்கு தகுந்த நீதியான ஒரு தீர்ப்பு வெளிவருவதை நம்பிக்கையுடனும், செபங்களுடனும் நாங்கள் எதிர்பார்த்திருக்கிறோம் என்று பாகிஸ்தான் ஆயர் பேரவையின் நீதி, அமைதிப் பணிக்குழுவின் தலைவர் அருள்தந்தை Emmanuel Yousaf கூறினார்.
இஸ்லாமியப் புனித நூலான குரானின் பக்கங்களை எரித்தார் என்ற பொய் குற்றம் சாட்டப்பட்டு, தேவநிந்தனை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட Rimsha Masihயின் வழக்கு விசாரணைகள் முடிவடைந்துள்ளன. இன்னும் ஒரு சில நாட்களில் தீர்ப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
ஆகஸ்ட் மாதம் கைதான Rimsha Masih, மனநலம் குன்றியவர் என்பதும், இவரது பையில் எரிக்கப்பட்ட குரானின் பக்கங்களை மற்றொருவர் வைத்தார் என்பதும் இவ்வழக்கில் உலக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது.
நல்லதொரு தீர்ப்பு கொடுக்கப்பட்டு, இச்சிறுமி விடுதலை செய்யப்படுவார் என்று நம்புவதாகக் கூறிய அருள்தந்தை Emmanuel Yousaf, பாகிஸ்தானில் நிலவிவரும் தேவநிந்தனைச் சட்டம் எவ்வளவு அநீதியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதற்கு இச்சம்பவம் துன்பகரமான ஓர் எடுத்துக்காட்டு என்று கூறினார்.


8. சூரியஒளி, காற்று, மின் ஆற்றலால் இயங்கும் ஆட்டோ

நவ.15,2012. சூரிய ஒளி, காற்று, மின் ஆற்றல்களை கொண்டு இயங்கக்கூடிய ஆட்டோ ஒன்றை திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., கல்லூரி பேராசிரியர் மோசேதயான் அவர்களும், மின்னணுவியல் துறை மாணவர்களும் இணைந்து உருவாக்கியுள்ளனர்.
இந்த ஆட்டோ இயங்கும்போது சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாது. ஆட்டோவை ஒரு முறை முழு அளவில் சார்ஜ் செய்தால், 96 கி.மீ., தூரத்திற்குத் தற்போதைய ஆட்டோக்கள் இயங்கும் வேகத்தில் இயக்கமுடியும் என்கின்றனர்.
இந்தியாவில், ஆண்டுக்கு 300 நாட்கள் சூரிய ஒளி கிடைக்கும். காற்றலை சக்தியும் கிடைக்கும். சூரிய ஒளி மின்தகடுகள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட காற்றாலைகள் மற்றும் மின்சக்சதியின் மூலம் சேகரிக்கப்படும். இச்சக்தி, ஆட்டோவில் இணைக்கப்பட்டுள்ள மின்கலத்தில் சேமிக்கப்படும். ஆட்டோவில் ஆற்றல் குறைந்து விட்டால், பெட்ரோல் மூலமாகவும் இயக்க முடியும்.
நாட்டுக்குப் பயன்படும் வகையில் உருவாக்கி முடித்துள்ள இந்த ஆட்டோ, ஆரம்ப நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் சில மாற்றங்கள் செய்து வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்யும்போது, அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள், என்றனர் திண்டுக்கல் கல்லூரி பேராசிரியரும், மாணவர்களும்.



No comments:

Post a Comment