Tuesday, 13 November 2012

Catholic News in Tamil - 10/11/12

1. திருப்பீட இலத்தீன்மொழி கல்விக்கழகம் துவக்கப்பட்டுள்ளது

2. திருத்தந்தையுடன் Santa Cecilia என்ற திருவழிபாட்டு இசை இயக்கத்தினர் சந்திப்பு

3. லெபனான் நாட்டின் Hezbollah அமைப்புப் பிரதிநிதிகளுடன் Maronite ரீதி முதுபெரும் தலைவர் சந்திப்பு

4. சிரியாவில் மோதல்கள் தொடர்ந்தால், 2013ம்  ஆண்டுக்குள் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை
ஐந்து இலட்சத்தை எட்டும்

5. இஞ்ஞாயிறை 'பிறப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளின் ஞாயிறாக' சிறப்பிக்கிறது இலங்கை திருஅவை

6. போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மலேசிய நாடாளுமன்றக் கூட்டமைப்பு உதவி செய்ய தீர்மானம்

7. நவம்பர் 10 பாகிஸ்தான் சிறுமி Malalaவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாள் ஐ.நா. அறிவிப்பு

------------------------------------------------------------------------------------------------------

1. திருப்பீட இலத்தீன்மொழி கல்விக்கழகம் துவக்கப்பட்டுள்ளது

நவ.10,2012. திருஅவைக்குள் இலத்தீன் மொழியின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் நோக்கில் திருப்பீட கலாச்சார அவையின் கீழ், திருப்பீட இலத்தீன்மொழி கல்விக்கழகம் ஒன்றை உருவாக்கியுள்ளதாக அறிவித்து Motu Proprio என்ற புது ஒழுங்குமுறையை இச்சனிக்கிழமையன்று வெளியிட்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கத்தோலிக்கத் திருஅவையாலும் திருத்தந்தையர்களாலும் இலத்தீன் மொழி எப்போதும் உயர்வாகவே மதிக்கப்பட்டு வந்துள்ளது எனக்கூறும் திருத்தந்தை, இறையியல், திருவழிபாடு மற்றும் பொதுஅறிவு பயிற்சியில், மொழிகளின் பாதுகாவலராகவும், ஊக்கமளிப்பவராகவும் காலம் காலமாக செயல்பட்டு வந்த திருஅவையின் வரலாற்றையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் அதிக ஆர்வம் காட்டிவரும் இன்றைய நவீன உலகில், கலாச்சாரத்திலும், இலத்தீன் மொழியிலும் புதுப்பிக்கப்பட்ட ஓர் ஆர்வம் பெருகிவருவதைக் காணமுடிகிறது என தன் Motu Proprio அறிவிப்பில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
கலாச்சார உலகிலும் திருஅவைக்குள்ளும் இலத்தீன் மொழியை மேலும் பொறுப்புடன் பயன்படுத்தவும், புரிந்துகொள்ளவும், தேவையான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை, இலத்தீன் கலாச்சாரப் பாரம்பரியத்தின் பயன்பாட்டை பெறும் நோக்கில் கல்விநிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்களிடையே நெருங்கிய தொடர்பை வலியுறுத்தியுள்ளார்.


2. திருத்தந்தையுடன் Santa Cecilia என்ற திருவழிபாட்டு இசை இயக்கத்தினர் சந்திப்பு

நவ.10,2012. திருவழிபாட்டு இசையின் வழியாக விசுவாசத்தை மேம்படுத்தவும், புதிய நற்செய்தி அறிவிப்பில் ஒத்துழைப்பு வழங்கவும் இயலும் என்று இச்சனிக்கிழமையன்று Santa Cecilia என்ற திருவழிபாட்டு இசை இயக்கத்தின் அங்கத்தினர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் துவக்கப்பட்டதன் 50ம் ஆண்டு நிறைவையொட்டி கருத்தரங்கு ஒன்றை நடத்திய Santa Cecilia குழுவின் அங்கத்தினர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, புதிய நற்செய்தி அறிவிப்பில் ஒன்றிணைந்த அர்ப்பணத்தை வலியுறுத்தும் நோக்கிலும், திருமுழுக்கு பெற்ற ஒவ்வொருவரிலும் விசுவாசத்தை ஆழப்படுத்தும் நோக்கிலும் நம்பிக்கை ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
பாடல்கள் செவிகளை மட்டும் சென்றடைவதில்லை, அதன்வழி மனதையும், இதயத்தையும் ஊடுருவுகின்றன என்று கூறியத் திருத்தந்தை, புனித அகஸ்தின் அவர்களின் வார்த்தைகளைக் கொண்டு தன்  கருத்தை விளக்கினார்.
திருஇசை என்பது திருவழிபாட்டின் ஒரு பகுதியாக அல்ல, மாறாக, திருவழிபாடாகவே மாறி, படைப்பு முழுமையும் இறைவனை மகிமைப்படுத்த உதவுகிறது எனவும் உரைத்தத் திருத்தந்தை, திருவழிபாட்டு இசைக்கும், புதிய நற்செய்தி அறிவிப்புப் பணிக்கும் இடையே இருக்கும் தொடர்புகளைய்ம் விளக்கினார்.


3. லெபனான் நாட்டின் Hezbollah அமைப்புப் பிரதிநிதிகளுடன் Maronite ரீதி முதுபெரும் தலைவர் சந்திப்பு

நவ.10,2012. லெபனான் நாட்டின் உள்நாட்டுப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் அந்நாட்டின் Hezbollah அமைப்புப் பிரதிநிதிகளைச் சந்தித்து, பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார் லெபனான் Maronite ரீதி முதுபெரும் தலைவர் Beshara al-Rahi.
பேராயர் Al-Rahi கர்தினாலாக திருத்தந்தையால் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக Hezbollah பிரதிநிதிகள் பேராயரைச் சந்தித்தபோது, நாட்டின் இன்றைய நிலைகள் குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
லெபனான் நாட்டில் புதிய தேர்தல் சட்டங்கள் புகுத்தவேண்டியதன் அவசியம், நாட்டின் வளர்ச்சியை தேக்கமடைய வைத்திருக்கும் அரசியல் நெருக்கடிகளிலிருந்து வெளிவரும் வழிமுறைகள் போன்றவை குறித்து இருதரப்பினரும் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, எதிர்கட்சிக்கும், லெபனான் நாட்டின் கிறிஸ்தவ அரசியல் தலைவர்களுக்கும் இடையே நாட்டின் நெருக்கடி நிலை குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


4. சிரியாவில் மோதல்கள் தொடர்ந்தால், 2013ம்  ஆண்டுக்குள் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை ஐந்து இலட்சத்தை எட்டும்

நவ.10,2012. சிரியாவில் தொடர்ந்துவரும் மோதல்களால், ஜோர்டான் நாட்டிற்குள் குடியேறியுள்ள சிரியா நாட்டு புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 2.5 இலட்சத்தை எட்டியுள்ளதாகவும், மோதல்கள் இதே வண்ணம் தொடர்ந்தால், 2013ம்  ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இவ்வெண்ணிக்கை 5 இலட்சத்தை எட்டும் எனவும் கவலையை வெளியிட்டுள்ளார் ஜோர்டான் காரித்தாஸ் இயக்குனர் Wael Suleiman.
சிரியாவிலிருந்து ஒவ்வொரு நாளும் 400 முதல், 500 மக்கள் புலம்பெயர்ந்தோராக ஜோர்டானுக்குள் நுழைவதாகவும், இதில் 75 விழுக்காட்டினர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றும் அவர் கூறினார்.
Zaatari பாலைவனப் பகுதி முகாமில் வாழும் 40000 புலபெயர்ந்தோரும் மனித மாண்புகள் ஏதுமின்றி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக உரைத்தார், ஜோர்டான் காரித்தாஸ் இயக்குனர் Suleiman.
சிரியாவிலிருந்து புலம்பெயர்ந்துள்ள 52,000க்கும் மேற்பட்ட மக்களிடையே, கத்தோலிக்கக் காரித்தாஸ் அமைப்பின் 120 பணியாளர்களும், 1000 சுயவிருப்பப் பணியாளர்களும் சேவை புரிந்து வரும் சூழலில், அங்குள்ள உண்மை நிலைகளைக் கண்டறிய திருத்தந்தையின் பிரதிநிதியாக, கர்தினால் Robert Sarah சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


5. இஞ்ஞாயிறை 'பிறப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளின் ஞாயிறாக' சிறப்பிக்கிறது இலங்கை திருஅவை
நவ.10,2012. கருக்கலைப்பை அனுமதிக்கும் இலங்கை அரசின் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இம்மாதம் 11ம் தேதி, இஞ்ஞாயிறை 'பிறப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளின் ஞாயிறாக' சிறப்பிக்கிறது இலங்கை திருஅவை.
இஞ்ஞாயிறின் தொடர்நடவடிக்கையாக செபக்கூட்டங்களும், கருக்கலைப்பு குறித்தக் கருத்தரங்குகளும் ஏற்பாடு செய்யப்படவேண்டும் என இளைஞர்கள், குடும்பங்கள், மருத்துவர்கள் மற்றும் மறைமாவட்டங்களின் அனைத்து விசுவாசிகளையும் விண்ணப்பிக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளனர் ஆயர்கள்.
கணவனின்றி குழந்தைகளைக் காப்பாற்றப் போராடும் பெண்களுக்கும், ஏழ்மையால் கருக்கலைப்பு ஆய்வுகளுக்கு உள்ளாகும் பெண்களுக்கும் என ஒவ்வொரு பங்குதளத்திலும் நிதி திரட்டப்பட்டு, உதவிகள் வழங்கப்படும் எனவும் இலங்கை திருஅவை அறிவித்துள்ளது.


6. போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மலேசிய நாடாளுமன்றக் கூட்டமைப்பு உதவி செய்ய தீர்மானம்

நவ.10,2012. இலங்கையில் போரினால் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு உதவிகளை வழங்கும் நோக்கில் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், மலேசிய நாடாளுமன்றக் கூட்டமைப்பு ஒன்றை நிறுவியுள்ளனர்.
2009ம் ஆண்டு மே மாதம் முடிவடைந்த போரினை அடுத்து, புலம்பெயர்ந்தோர் முகாமில் வைக்கப்பட்டு, தற்போது மீள்குடியமர்த்தப்பட்டு வரும் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மலேசிய நாடாளுமன்றக் கூட்டமைப்பு அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அதன் தலைவர் டத்தோ ஜொஷாரி அப்துல் தெரிவித்தார்.
இந்த நாடாளுமன்றக் கூட்டமைப்புக்குச் செயலாளராக தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகரன் மாரிமுத்து செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


7. நவம்பர் 10 பாகிஸ்தான் சிறுமி Malalaவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாள் ஐ.நா. அறிவிப்பு

நவ.10,2012. பெண்களின் கல்விக்காகப் போராடியதால் தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி, தற்போது சிகிச்சை பெற்றுவரும் பாகிஸ்தான் சிறுமிக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாக, இம்மாதம் 10ம் தேதி, சனிக்கிழமையை அறிவித்துள்ளார் ஐ.நா. போதுச்செயலர் பான் கி மூன்.
பாகிஸ்தானில் உள்ள தாலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டு, தலையில் காயமடைந்த 15 வயது சிறுமி Malala Yousafzai யைக் கௌரவிக்கும் விதமாக, நவம்பர் 10ம் தேதியை 'Malala நாள்' என அறிவித்த ஐ.நா. பொதுச்செயலர், உலகம் முழுவதும் பெண்களின் கல்விக்குத் தூண்டுதலாக இருந்த Malala வை ஐ.நா. கொண்டாடுகிறது என்றார்.
இதற்கிடையே, பாகிஸ்தான் அரசுத்தலைவர் Asif Ali Zardariயைச் சந்திக்க பாகிஸ்தான் சென்ற ஐ.நா.வின் உலகக் கல்விக்கானச் சிறப்புத் தூதர், பாகிஸ்தானில் பெண்கள் கல்வி முழு செயல்வடிவம் பெறவேண்டும் என 10 இலட்சம் பேர் கையெழுத்திட்ட விண்ணப்பம் ஒன்றை ஒப்படைத்தார்.
மேலும், பாகிஸ்தான் சிறுமி Malalaவுக்கு நொபெல் அமைதி விருது வழங்கப்படவேண்டும் என்று பல ஆயிரக் கணக்கானோர் கையெழுத்திட்டு விண்ணப்பம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...