Tuesday, 13 November 2012

Catholic News in Tamil - 09/11/12


1. அகில உலக Interpol பொதுஅவை உறுப்பினர்களுக்குத் திருத்தந்தை வழங்கிய உரை

2. திருப்பீட சட்டக் கல்லூரியின் கல்வியாண்டு துவக்கத்தில் திருப்பீடச் செயலர் வழங்கிய உரை

3. தென்கிழக்கு ஆப்ரிக்காவில் கர்தினால் Filoniயின் மேய்ப்புப்பணி பயணம்

4. திருத்தந்தையின் சார்பில் கர்தினால் Robert Sarah லெபனான் நாட்டில் மேற்கொண்டுள்ள பயணம்

5. மோதல்களில் ஈடுபட்டுள்ள குழுக்கள் உண்மையான உரையாடலை மேற்கொள்ள வேண்டும் - ஈராக் ஆயர்கள் வேண்டுகோள்

6. போபால் நச்சுவாயு விபத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மேற்கொண்ட சட்டரீதியான ஒரு போராட்டத்தில் வெற்றி

7. 2015ஆம் ஆண்டோடு இந்தியாவுக்கு நிதி உதவி நிறுத்தப்படும்: பிரிட்டன்

8. பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராமம்

------------------------------------------------------------------------------------------------------

1. அகில உலக Interpol பொதுஅவை உறுப்பினர்களுக்குத் திருத்தந்தை வழங்கிய உரை

நவ.09,2012. கடந்த பல ஆண்டுகளாக, இராணுவப் படையெடுப்பு, இராணுவங்களின் எல்லைமீறியச் செயல்கள் மூலம் மட்டுமே வன்முறைகளைச் சந்தித்து வந்த நாம், இன்று வன்முறையின் பல வடிவங்களைக் காணமுடிகிறது என்று திருத்தந்தை 16ம்  பெனடிக்ட் கூறினார்.
நவம்பர் 5, இத்திங்கள் முதல் வியாழன் முடிய உரோம் நகரில் நடைபெற்ற 81வது அகில உலக Interpol பொது அவையில், 190 நாடுகளிலிருந்து வந்திருந்த 1000க்கும் அதிகமான உறுப்பினர்களை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, ஆங்கிலம், பிரெஞ்ச், ஸ்பானியம் மற்றும் அரேபியம் ஆகிய மொழிகளில் அவர்களிடம் உரையாற்றினார்.
நீதியையும், சட்டத்தையும் நிலைநிறுத்த பணியாற்றும் அரசியல் தலைவர்களும், நீதித்துறை அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் இணைந்து கடந்த நான்கு நாட்கள் மேற்கொண்ட முயற்சியைப் பாராட்டுவதாகத் திருத்தந்தை கூறினார்.
இன்றைய காலக்கட்டத்தில் வன்முறை பல்வேறு வடிவங்களை ஏற்றிருப்பதாகவும், அவற்றில் மிகவும் கவலை தரும் போக்குகள் தீவிரவாதம் மற்றும் தொழில் நிறுவனங்களைப் போல் செயலாற்றும் குற்றங்களும் என்று திருத்தந்தை தன் கவலையை வெளியிட்டார்.
சட்டங்களுக்குப் புறம்பாக, மறைமுகமாக நடைபெறும் மனித வர்த்தகம் குறித்தும், போதைப் பொருட்கள், ஆயுதங்கள், கள்ளப்பணம், தரக்குறைவான, போலியான மருந்துகள் என்று பல துறைகளில் நாடுவிட்டு நாடு மேற்கொள்ளப்படும் வர்த்தகங்கள் குறித்தும் திருத்தந்தை தன் உரையில் சிறப்பாகச் சுட்டிக்காட்டினார்.
வன்முறைகளையும் சட்டச் சீர்குலைவையும் சரிசெய்ய அரசியல் மற்றும் சட்ட நிறுவனங்கள் மட்டும் செயலாற்றினால் போதாது, மாறாக, மக்கள் சமுதாயம் முழுமையும் இந்தச் சீரமைக்கும் பணிகளில் ஈடுபடவேண்டும் என்று திருத்தந்தை சிறப்பான அழைப்பை கூடியிருந்த Interpol பிரதிநிதிகளுக்கு விடுத்தார்.


2. திருப்பீட சட்டக் கல்லூரியின் கல்வியாண்டு துவக்கத்தில் திருப்பீடச் செயலர் வழங்கிய உரை
நவ.09,2012. சட்டம், ஒழுங்கு பற்றிய கிறிஸ்தவ உரோமைய பாரம்பரியம் மிக உறுதியான அடித்தளம் கொண்டது என்று திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே கூறினார்.
இவ்வியாழன் மாலை வத்திக்கானில் Roman Rota எனப்படும் திருப்பீட சட்டக் கல்லூரியின் கல்வியாண்டைத் துவக்கிவைத்துப் பேசிய கர்தினால் பெர்தோனே இவ்வாறு கூறினார்.
திருப்பீடச் சட்டக் கல்லூரியின் மீது தான் கொண்டுள்ள பெரும் மதிப்பைக் குறித்துப் பேசிய கர்தினால் பெர்தோனே, Roman Rota அமைப்பிற்கு திருத்தந்தையரின் முழு ஆதரவு என்றும் இருந்தது என்பதை வலியுறுத்தினார்.
திருஅவை  என்ற குறுகிய வட்டத்தையும் தாண்டி, உலகின் பல துறைகளிலும் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தும் வகையில் Roman Rota பணிபுரிந்துள்ளதையும் கர்தினால் பெர்தோனே தன் உரையில் சுட்டிக்காட்டினார்.


3. தென்கிழக்கு ஆப்ரிக்காவில் கர்தினால் Filoniயின் மேய்ப்புப்பணி பயணம்

நவ.09,2012. மக்களிடம் சென்று பணியாற்றுதல், புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி என்ற இரு தூண்களும், திருஅவை என்ற உயிருள்ள உடலுக்குத் தேவையான இரு தூண்கள் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
நவம்பர் 6 இச்செவ்வாய் முதல் இச்சனிக்கிழமை முடிய தென்கிழக்கு ஆப்ரிக்காவின் Owerri பகுதியில் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்டுள்ள மறைபரப்புப்பணி திருப்பீடப் பேராயத்தின் தலைவர் கர்தினால் Fernando Filoni, இவ்வாறு கூறினார்.
தன்  மேய்ப்புப்பணி பயணத்தின் ஓர் அங்கமாக, இவ்வியாழனன்று அங்கு நிகழ்ந்த ஒரு முக்கியக் கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால் Filoni, கிறிஸ்தவர்கள் தங்களிடம் இல்லாததொன்றை மக்களுக்கு அளிக்க முடியாது என்று கூறினார்.
'புதிய நற்செய்திப்பணி' என்ற வார்த்தைகளை உருவாக்கிய அருளாளர் இரண்டாம் ஜான்பால், புதிய நற்செய்திப்பணியை மையப்படுத்தி அண்மையில் வத்திக்கானில் நிகழ்ந்த ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தை முன்னின்று நடத்திய திருத்தந்தை 16ம்  பெனடிக்ட் இருவரும், நற்செய்தி உலகெங்கும் சென்றடையவேண்டும் என்பதில் காட்டிவரும் ஆர்வத்தைக் கர்தினால் Filoni தன்  உரையில் எடுத்துரைத்தார்.


4. திருத்தந்தையின் சார்பில் கர்தினால் Robert Sarah லெபனான் நாட்டில் மேற்கொண்டுள்ள பயணம்

நவ.09,2012. கர்தினால் Robert Sarah லெபனான் நாட்டில் மேற்கொண்டுள்ள பயணம் திருப்தி தரும் வகையில் அமைந்துள்ளது என்று அந்நாட்டில் உள்ள காரித்தாஸ் அமைப்பின் இயக்குனர் பேரருள்தந்தை Simon Faddoul கூறினார்.
சிரியாவில் நடைபெற்று வரும் வன்முறைகள், கலவரங்கள் ஆகியவை குறித்து, திருத்தந்தை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளார் என்பதை வெளிப்படுத்த, திருத்தந்தையின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கர்தினால் சாரா, அங்குள்ள அரசியல் தலைவர்களையும், பல்வேறு மதத் தலைவர்களையும் சந்தித்து வருகிறார்.
நவம்பர் 7 இப்புதனன்று திருத்தந்தை 16ம்  பெனடிக்ட், தன் புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில், சிரியாவில் அமைதியைக் கொணரும் ஒரு முயற்சியாக, தன் சார்பில் Cor Unum என்ற திருப்பீட பிறரன்பு அவையின் தலைவர் கர்தினால் சாராவை அனுப்புவதாக அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, லெபனான் நாட்டுக்கு இப்புதனன்று சென்று சேர்ந்த கர்தினால் சாராவை, அந்நாட்டு அரசுத் தலைவர் Michel Suleiman வரவேற்றார்.
இப்பயணத்தின்போது மேற்கொள்ளப்பட்ட பல சந்திப்புக்களின் உச்சகட்டமாக, 91 வயது நிரம்பிய அந்தியோக்கு ஆர்த்தடாக்ஸ் தலைவர் நான்காம் Ignatius Hazim அவர்களை, தமாஸ்கு நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இவ்வியாழனன்று கர்தினால் சாரா சந்தித்தார் என Fides செய்தி நிறுவனம் கூறியுள்ளது.


5. மோதல்களில் ஈடுபட்டுள்ள குழுக்கள் உண்மையான உரையாடலை மேற்கொள்ள வேண்டும் - ஈராக் ஆயர்கள் வேண்டுகோள்

நவ.09,2012. மத்தியக்கிழக்குப் பகுதியில் உள்ள பல நாடுகளில், மோதல்களிலும், வன்முறையிலும் ஈடுபட்டுள்ள குழுக்கள், தங்கள் தன்னலக் கொள்கைகளை விடுத்து, உண்மையான உரையாடலை மேற்கொள்ள வேண்டும் என்று ஈராக் ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இச்செவ்வாய், புதன் ஆகிய இரு நாட்கள் ஈராக் கத்தோலிக்கத் திருஅவை  ஆயர்கள் Kurdistanல் உள்ள Ankawa என்ற நகரில் தங்கள் ஆண்டு கூட்டத்தை நடத்தினர். இக்கூட்டத்தின் இறுதியில் ஆயர்களின் சார்பில் Kirkuk பேராயர் Louis Sako, ஆயர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட நான்கு தீர்மானகள் அடங்கிய அறிக்கையொன்றை வெளியிட்டார்.
மத்தியக் கிழக்குப் பகுதியில், முக்கியமாக, ஈராக் நாட்டில் இன்றளவும் தொடந்துவரும் கிறிஸ்தவர்களின் வெளியேற்றம் குறித்து இவ்வறிக்கையில் ஆயர்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
மத்தியக் கிழக்குப் பகுதியில் வாழும் அனைவருமே சகிப்புத் தன்மையையும், ஏனைய மதங்களை மதிக்கும் மனப்பான்மையையும் வளர்த்துக் கொள்வது, நீதியும், அமைதியும் நிறைந்த ஒரு சமுதாயத்தை உருவாக்க சிறந்த வழி என்று ஆயர்கள் கூறியுள்ளனர்.


6. போபால் நச்சுவாயு விபத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மேற்கொண்ட சட்டரீதியான ஒரு போராட்டத்தில் வெற்றி

நவ.09,2012. போபால் நச்சுவாயு விபத்தினால் பாதிக்கப்பட்டுள்ள 25000க்கும் அதிகமான மக்கள், மத்தியப்பிரதேச அரசுக்கு எதிராக மேற்கொண்ட சட்டரீதியான ஒரு போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்தியாவின்  போபால் நகரில் Union Carbide நிறுவனத்தில் 1984ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி இரவு ஏற்பட்ட நச்சுவாயு கசிவினால், இதுவரை 25,000க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இன்னும் பல்லாயிரம் பேர் உடல் நலக் குறைவுடன் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களில் 25,000க்கும் அதிகமானோர் தங்களுக்கு சுத்தமான குடி நீரை அரசு வழங்க வேண்டுமென்று கடந்த பல ஆண்டுகள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இவர்களுக்கு சுத்தமான குடி நீரை அரசு வழங்க வேண்டும் என்று இந்தியாவின் உச்ச நீதி மன்றம் இச்செவ்வாயன்று ஆணை பிறப்பித்துள்ளது.
நச்சுவாயுவால் பாதிக்கப்பட்டோர் பல ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் போராட்டத்திற்கு கிடைத்த ஒரு நீதியான முடிவே உச்ச நீதி மன்றத்தின் இந்த ஆணை என்று, 1984ம்  ஆண்டு முதல் இப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த Rachana Dhingra கூறினார்.


7. 2015ஆம் ஆண்டோடு இந்தியாவுக்கு நிதி உதவி நிறுத்தப்படும்: பிரிட்டன்

நவ.09,2012. இந்தியாவுக்கு நிதி உதவி அளிப்பதை வரும் 2015ஆம் ஆண்டோடு முற்றிலும் நிறுத்தப்போவதாக பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது. வரும் 2013ஆம் ஆண்டில் இருந்து 2015ஆம் ஆண்டு வரை இந்தியாவுக்கு வழங்கப்படும் உதவி படிப்படியாக குறைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
தற்போது இந்தியாவுக்கு 319 மில்லியன் பவுண்டுகளை பிரித்தானிய அரசு வழங்குகிறது. இது 200 மில்லியன் பவுண்டுகள் அளவுக்கு 2015இல் குறைக்கப்படும் என சர்வதேச வளர்ச்சி அமைச்சர் ஜஸ்டின் கிரினிங் (Justine Greening) கூறியுள்ளார்.
உலகின் மிக வேகமான பொருளாதார வளர்ச்சியைப் பெற்று வரும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் இந்தியாவுக்கு, உதவி வழங்கப்படக் கூடாது என்று பிரிட்டனில் கடந்த சில ஆண்டுகளாகவே கோரிக்கை வலுத்து வருகிறது.
அணு ஆயுதங்களை வைத்திருக்கின்ற, சந்திரனுக்கு ராக்கெட் விடுகின்ற ஒரு நாட்டுக்கு நிதி உதவு கொடுப்பது தேவையற்றது என்று பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கருத்து வெளியிட்டிருந்தனர்.
ஆப்பிரிக்காவில் உள்ள வறியவர்களை விட இந்தியாவில் உள்ள 9 பின்தங்கிய மாநிலங்களில் அதிகமான வறியவர்கள் உள்ளனர் எனவே பிரிட்டனின் உதவி அவர்களுக்கு மிகவும் அவசியமானது என்று இத்திட்டத்தை ஆதரிப்போர் வாதிட்டனர்.
இவ்வாண்டின் துவக்கத்தில் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கிரினிங், இந்தியா பல்வேறு துறைகளில் வெகுவாக முன்னேறியிருப்பதாகவும், இந்தியாவுக்கு நிதி உதவி என்ற நிலை மாறி, தொழில்நுட்ப உதவிகளை அளிப்பதே பொருத்தமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
ஏற்கனவே ஒப்புதலளிக்கப்பட்ட திட்டங்களுக்கு உதவி கொடுக்கப்படும் என்றும், ஆனால் புதிய திட்டங்களுக்கு நிதி அளிக்கப்படாது என்றும் பிரித்தானிய அரசு கூறியுள்ளது.
பிரித்தானிய அரசின் உதவி இந்திய நடுவண் அரசுக்கு கொடுக்கப்படுவது கிடையாது. தன்னார்வ நிறுவனங்களுக்கும், மாநில அரசுகளின் சில திட்டங்களுக்குமே அது வழங்கப்படுகிறது.


8. பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராமம்

நவ.09,2012. விருந்தினர் போல வந்து தங்கியிருக்கும் வவ்வால் மற்றும் புல்புல், மைனா உள்ளிட்ட பல்வேறு பறவை இனங்களுக்குத் தொந்திரவாக இருக்கும் என்பதால் வரவிருக்கும் தீபாவளிக்கு யார் வீட்டிலும் பட்டாசு வெடிப்பது இல்லை என்று  தமிழ் நாட்டில் ஒரு கிராமத்து மக்கள் முடிவெடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் சூலூர் தாலூகவில், கருமத்தம்பட்டி கிராமத்தில் உள்ள நொய்யல் பசுமை கழக தலைவர் பழனியாண்டி அவர்களின் தீவிரமான முயற்சியால் இம்முடிவு எடுக்கப்பட்டது,
தமது கிராமத்தில் உள்ள ஆலமரத்தில் ஆயிரக்கணக்கன வவ்வால்கள் இருப்பதையும், அருகாமையில் உள்ள மரங்களில் மற்ற பறவைகள் தங்கிச் செல்வதையும் பார்த்த பழனியாண்டி, அப்பறவைகளையும், வவ்வால்களையும் ஊரைவிட்டு விரட்டாமல் இருக்க, இந்த முடிவை கிராமத்து மக்களுடம் இணைந்து எடுத்துள்ளார்.
இந்த கிராமத்து பஞ்சாயத்து தலைவி ஜோதிமணி பேசும்பொழுது, ஆயிரக்கணக்கான வவ்வால்களும், பறவைகளும் நம்பிக்கையோடு எங்கள் கிராமத்தை தேர்வு செய்து தங்கியிருப்பதால், அந்த நம்பிக்கையையும், மகிழ்வையும் கெடுக்காமல் இருக்க, இந்த தீபாவளிக்குப் பட்டாசு வெடிப்பதில்லை என்று முடிவு செய்தோம் என்கிறார்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...