Tuesday, 13 November 2012

Catholic News in Tamil - 07/11/12


1. திருப்பீட அறிவியல் அறக்கட்டளையின் உறுப்பினர்களுடன் திருத்தந்தை சந்திப்பு

2. Guatemalaவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் திருத்தந்தையின் தந்தி

3. அமெரிக்க அரசுத்தலைவர் பாரக் ஒபாமாவுக்குத் திருத்தந்தையின் வாழ்த்துக்கள்

4. திருப்பீடத்தின் தீபாவளி வாழ்த்து

5. உரோம் நகரில் நடைபெறவிருக்கும் கடல் பயணிகளுக்கான 23வது அகில உலக கூட்டம்

6. சிரியாவில் கடத்தப்பட்டுள்ள பத்து அப்பாவி மக்களை விடுவிக்கும் முயற்சிகள்

7. தென்னாப்பிரிக்க பணத்தில் முதல் தடவையாக மண்டேலாவின் படம்

8. அரசு உதவியின்றி 100 கி.மீ., சாலை: சாதித்த இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரி

------------------------------------------------------------------------------------------------------

1. திருப்பீட அறிவியல் அறக்கட்டளையின் உறுப்பினர்களுடன் திருத்தந்தை சந்திப்பு

நவ.08,2012. அறிவியலில் நாம் கண்டுள்ள முன்னேற்றமும், இயற்பியலில் நாம் கண்டுபிடித்துள்ள துல்லியமான கருவிகளும் நம்மை உண்மையின் ஆழத்திற்கு அழைத்துச் செல்கிறது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
உரோம் நகரில் இத்திங்கள் முதல் புதன் முடிய நடைபெற்ற திருப்பீட அறிவியல் அறக்கட்டளையின் ஆண்டு கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்களை, இவ்வியாழன் நண்பகல் சந்தித்தத் திருத்தந்தை, அறிவியலையும், விசுவாசக் கோட்பாடுகளையும் இணைக்க அறக்கட்டளையின் உறுப்பினர்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பாராட்டினார்.
ஒரே உண்மையைப் பல்வேறு கோணங்களில் சிந்திக்கவும், இன்னும் ஆழமாக ஆய்வு செய்யவும் கருத்தரங்குகள் தேவை என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இந்த ஆய்வுகள் நம்மை உண்மையை நோக்கி அழைத்துச் செல்லவேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.
இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் 50ம் ஆண்டு நிறைவை நம்பிக்கை ஆண்டாகக் கொண்டாடி வருகிறோம் என்பதைக் கூடியிருந்த உறுப்பினர்களுக்கு நினைவுருத்தியத் திருத்தந்தை, அறிவியலையும், விசுவாசத்தையும் உறுதியாக இணைக்கும்  திருப்பீட அறிவியல் அறக்கட்டளையின் உறுப்பினர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் தன் சிறப்பு ஆசீரை வழங்கினார்.


2. Guatemalaவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் திருத்தந்தையின் தந்தி

நவ.08,2012. நவம்பர் 7 இப்புதனன்று காலை 10.30 மணியளவில் Guatemala நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் திருத்தந்தை தன் ஆழ்ந்த வருத்தத்தையும், செபங்களையும் தெரிவித்து, தந்திச் செய்தியொன்றை அந்நாட்டின் ஆயர் பேரவைத் தலைவரான ஆயர் Rodolfo Valenzuela Núñez அவர்களுக்கு அனுப்பியுள்ளார்.
இப்புதன் காலையில் 7.4 ரிக்டர் அளவு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் Champerico என்ற நகர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளது. இந்நிலநடுக்கத்தில் இறந்தோரின் எண்ணிக்கை இவ்வியாழன் காலை வரை 48 என்று சொல்லப்படுகிறது. மேலும், 73,000க்கும் அதிகமானோர் வீடுகளை இழந்துள்ளனர் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.
இத்தகையப் பேரிடர்கள் நம்மை மனித நேயத்திலும், பிறரன்புப் பணிகளிலும் ஒன்றிணைக்கும் வாய்ப்பு என்று கூறியத் திருத்தந்தை, இப்பேரிடர் நேரத்தில் அயராமல் உழைக்கும் அனைத்து நல்மனதோரையும் தான் அசீர்வதிப்பதாகக் கூறினார்.
உற்றார், உடைமைகள் ஆகியவற்றை இழந்து தவிக்கும் அனைவருக்கும் தன் செபங்களையும், அனுதாபங்களையும் திருத்தந்தை தன் தந்திச் செய்தியில் வெளிப்படுத்தினார்.


3. அமெரிக்க அரசுத்தலைவர் பாரக் ஒபாமாவுக்குத் திருத்தந்தையின் வாழ்த்துக்கள்

நவ.08,2012. அமெரிக்க அரசுத்தலைவராக இரண்டாம்முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பாரக் ஒபாமாவுக்குத் தன் வாழ்த்துக்களையும் செபங்களையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இச்செவ்வாயன்று அமெரிக்க ஐக்கிய நாட்டில் நடைபெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் பாரக் ஒபாமா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி, பல்வேறு உலகத் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் அனுப்பியுள்ளனர்.
பாரக் ஒபாமா, அமெரிக்க நாட்டின் அரசுத்தலைவராக இருப்பது மட்டுமல்லாமல், அகில உலகின் விவகாரங்களில் ஈடுபடும் ஒரு தலைவராகவும் இருப்பதை தன் செய்தியில் சுட்டிக் காட்டியுள்ளத் திருத்தந்தை, ஒபாமா தன் கடமைகளை உணர்ந்து செயல்படுவார் என்ற தன் நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளார்.
ஒபாமாவின் தேர்தலைக் குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை Federico Lombardi, உலகில் நீதியையும், விடுதலையையும் இன்னும் உறுதி செய்வதில் அமெரிக்க அரசுத்தலைவர் முக்கிய பங்கு வகிக்கவேண்டும் என்ற தன் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினார்.


4.  திருப்பீடத்தின் தீபாவளி வாழ்த்து

நவ.08,2012. சமய, அறநெறிகளில் உறுதியாக நிலைத்து, அமைதியை உருவாக்குபவர்களாக மாற முயற்சிக்கின்ற இளையோருக்கு உற்சாகமூட்டுபவர்களாக இந்துக்களும், கிறிஸ்தவரும், ஏனைய அனைவரும் செயல்படுமாறு அழைப்பு விடுத்து தன் தீபாவளி பெருவிழா வாழ்த்துக்களை வெளியிட்டுள்ளது பல்சமய உரையாடலுக்கான திருப்பீட அவை.
இம்மாதம் 13ம் தேதி, வரும் செவ்வாயன்று சிறப்பிக்கப்படும் தீபாவளி திருவிழாவை முன்னிட்டு பல்சமய உரையாடலுக்கான திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் ஜீன் லூயி தௌரான், செயலர் அருட்திரு. மிகுயில் ஏஞ்சல் ஆயுசோ குல்சாட் ஆகியோர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இளையோரை அமைதி ஏற்படுத்துபவர்களாக மாற்ற என்ன செய்ய வேண்டும் என ஆராய அழைப்புவிடப்பட்டுள்ளது.
பெற்றோர்கள், ஆசிரியர்கள், பெரியவர்கள், துறவறத்தார், சமூகத் தொடர்புத் துறையில் உள்ளோர், மற்றும் அமைதியை உருவாக்கும் உள்ளம் படைத்தோர் அனைவரும் இளைய சமுதாயத்திற்கு அமைதி குறித்துக் கற்பிக்கவும், அன்பின் கனியாம் அமைதியை உருவாக்கவும் தீபாவளி வாழ்த்துச்செய்தியில் அழைப்பு விடுத்துள்ளது திருப்பீட அவை.
அமைதி என்பது நம்பகத்தன்மையானதும் நீடித்து நிற்பதுமாக இருக்க, அது உண்மை, நீதி, அன்பு மற்றும் சுகந்திரத்தின் மேல் கட்டப்பட வேண்டும் எனக்கூறும் இச்செய்தி, குடும்பம்தான் அமைதியின் முக்கிய கல்விக்கூடம். அதில் பெற்றோர்கள்தான் அமைதியின் முக்கிய கல்வியாளர்கள் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.


5.  உரோம் நகரில் நடைபெறவிருக்கும் கடல் பயணிகளுக்கான 23வது அகில உலக கூட்டம்

நவ.08,2012. கடல் பயணிகளுக்குத் தேவைப்படும் ஆன்மீக செயல்பாடுகளில் ஈடுபட இந்த நம்பிக்கை ஆண்டு நம்மைச் சிறப்பான வகையில் அழைக்கிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
இம்மாதம் 19ம் தேதி முதல் 23ம் தேதி முடிய உரோம் நகரில் நடைபெறவிருக்கும் கடல் பயணிகளுக்கான 23வது அகில உலக கூட்டத்தைக் குறித்து, இவ்வியாழனன்று செய்தியாளர்களிடம் பேசிய பயணிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Antonio Maria Veglio இவ்வாறு கூறினார்.
கடல்பயணிகள் மேய்ப்புப்பணி உருவானதன் வரலாற்றைக் குறித்துப் பேசிய கர்தினால் Veglio, முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரின்போது இந்த மேய்ப்புப்பணியின் முக்கியத்துவம் உணரப்பட்டது என்பதையும் எடுத்துரைத்தார்.
இம்மாதம் 19ம் தேதி முதல் 23ம் தேதி முடிய நடைபெறவிருக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ளும் 71 நாடுகளைச் சேர்ந்த 400க்கும் அதிகமான உறுப்பினர்களை, இம்மாநாட்டின் இறுதியில் திருத்தந்தை சந்திப்பார் என்றும் நிருபர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.


6. சிரியாவில் கடத்தப்பட்டுள்ள பத்து அப்பாவி மக்களை விடுவிக்கும் முயற்சிகள்

நவ.08,2012. சிரியாவில் அண்மைய நாட்களில் கடத்தப்பட்டுள்ள பத்து அப்பாவி மக்களை விடுவிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்று Aleppo வின் Maronite ரீதி பேராயர் Youssef Anis Abi-Aad கூறினார்.
சிரியாவில் அரசுக்கும், புரட்சிக் குழுக்களுக்கும் இடையே தொடர்ந்து வரும் மோதல்களின் விளைவாக, எப்பாவமும் அறியாத மக்கள் நாளுக்கு நாள் ஆபத்துக்களைச் சந்தித்து வருகின்றனர் என்பதற்கு அண்மைய கடத்தல்கள் ஓர் எடுத்துக்காட்டு என்று கூறிய பேராயர் Abi-Aad, கடத்தப்பட்டவர்களை மீட்பதற்கு இயேசு சபை அருள்பணியாளர் Murad Abi Seif தலைமையில் ஒரு குழுவினர் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர் என்று Fides செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
சிரியாவில் நிகழ்ந்துவரும் மோதல்களின் விளைவாகப் பாதிக்கப்பட்டுள்ள 450 பேருக்கும் மேற்பட்ட மக்களுக்கு இயேசு சபையினரும், பிரான்சிஸ்கன் சபை அருள்சகோதரிகளும் ஒவ்வொரு நாளும் 6000க்கும் அதிகமான உணவுப் பொட்டலங்கள் தயாரித்து வழங்குகின்றனர் என்றும் Maronite ரீதி பேராயர் கூறினார்.
அமைதிக்கான ஏக்கம் கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்கள் மனங்களில் பெருமளவு எழுந்துள்ளது என்றும், மோதல்களில் ஈடுபட்டிருக்கும் குழுக்கள் இடையிலும் இந்த வேட்கை உருவாகும் நாளை எதிர்நோக்கிச் செபித்து வருகிறோம் என்றும் பேராயர் Abi-Aad கூறினார்.


7. தென்னாப்பிரிக்க பணத்தில் முதல் தடவையாக மண்டேலாவின் படம்

நவ.08,2012. தென்னாப்பிரிக்காவில் முதல் முறையாக தேசத் தலைவர் நெல்சன் மண்டேலாவின் முகம் அச்சிடப்பட்ட ராண்ட் (Rand) நோட்டுக்கள் இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ளன.
அந்நாட்டின் ரிசர்வ் வங்கியின் கவர்னர் Gill Marcus, Pretoriaவில் உள்ள ஒரு சிறிய கடைக்குச் சென்று புதிய நோட்டுக்களை கொடுத்து அதன் மூலம் சில பொருட்களை வாங்கியதன் மூலம் புதிய நோட்டுக்கள் புழக்கத்துக்கு வந்தன.
இப்புதிய நோட்டுகள் மண்டேலாவிடம் காட்டப்பட்டதாகவும், அதைப் பார்த்து அவர் மகிழ்ந்ததாகவும் ரிசர்வ் வங்கி கவர்னர் Marcus தெரிவித்துள்ளார்.
முந்தையக் காலங்களில் தெருக்களுக்கும், நகரங்களுக்கும் தன் பெயர் சூட்டப்படுவது குறித்து மண்டேலா ஆர்வம் காட்டாமல் இருந்தார். அவரது அறக்கட்டளையும்கூட மண்டேலாவின் பெயர் பயன்படுத்தப்படுவது குறித்து மிகவும் கவனமாக இருந்து வருகிறது.
தன் உருவத்தை நாணயங்களில் முதலில் பதித்தவர் உரோமைய அரசனான சீசர் என்று சொல்லப்படுகிறது. தற்போது, உலகின் பல நாடுகளில் தலைவர்களின் படம் பண நோட்டுகளில் இடம்பெற்றுள்ளது.


8. அரசு உதவியின்றி 100 கி.மீ. சாலை: சாதித்த இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரி

நவ.08,2012. அரசு துறையில் நடக்கும் முறைகேடுகளை தடுத்து, தங்களது துணிச்சலான நடவடிக்கைகள் மூலம்,ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மக்களின் கவனத்தை கவர்கின்றனர். இந்த வகையில், கிரானைட் சுரங்கங்கள் கொள்ளை போவதை, வெளிச்சத்துக்கு கொண்டு வந்த மதுரை கலெக்டர் சகாயம்; காங்கிரஸ் கட்சி தலைவர், சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா நடத்திய சட்ட விரோத நில பரிமாற்றத்தை தடுத்து நிறுத்திய அசோக் கெம்கா என, சாதிக்கும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பட்டியல் நீளுகிறது.
இந்த வரிசையில், அரசின் நிதி உதவியை எதிர்பார்க்காமல், மக்களின் நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், 100 கி.மீ., தூரத்துக்கு, சாலை அமைக்க ஏற்பாடு செய்து, பிரமிக்க வைத்துள்ளார் ஆம்ஸ்ட்ராங் பமே (Amstrong Pame).
இவர், இந்தியாவின் வடகிழக்கு எல்லையில், மணிப்பூர், அசாம், நாகலாந்து ஆகிய மாநிலங்களை ஒன்றிணைக்கும் வகையில், நூறுக்கும் மேற்பட்ட கிராம மக்களின், பல நாள் கனவை நனவாக்கியுள்ளார்.
மணிப்பூர் மாநிலம், டமீங்லாங் மாவட்டத்தில்,நூறுக்கும் மேற்பட்ட கிராமங்களில் சாலை வசதி இல்லை . இங்கு சாலைகள் அமைக்க,1982ம் ஆண்டு, மத்திய அரசு 101 கோடி ரூபாய் திட்டத்திற்கு அனுமதியளித்தது. ஆனால், சாலைகள் போடப்படவில்லை.
கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் டைபாய்டு, மலேரியா காய்ச்சலால், டமீங்லாங் மாவட்டத்தில் உள்ள கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியவில்லை.
மலைப்பாங்கான பகுதி என்பதால், பக்கத்து ஊரில் இருந்து டாக்டர்கள் கிராமங்களுக்கு வர மறுத்தனர். டமீங்லாங் மாவட்ட துணை கலெக்டராக இருந்த ஆம்ஸ்ட்ராங், தன் மருத்துவ நண்பர்களின் உதவியை நாடினார். அவர்கள் உதவியால், 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றனர். பலரும் உயிர் பிழைத்தனர்.
சாலைகள் அமைத்தால்தான் மக்களின் நலவாழ்வுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என உணர்ந்த ஆம்ஸ்ட்ராங், கிராம மக்களின் துணையுடன் செயலில் இறங்கினார். வெளிநாட்டில் வாழும் நண்பர்கள் நிதியுதவியுடனும், உள்ளூர் மக்களின் உதவியுடனும், 100 கி.மீ., தூரத்திறகு சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. வரும் கிறிஸ்மசுக்குள் பணிகள் முடிந்துவிடும் என, ஆம்ஸ்ட்ராங் பமே நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
ஆம்ஸ்ட்ராங் பமே, 2005ம் ஆண்டுதான், டில்லி, செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். ஜெமி பழங்குடியினத்தை சேர்ந்த முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்ற பெருமையுடன், தன் சொந்த மாவட்டமான டமீங்லாங்கிற்கு துணை கலெக்டராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...