1. அனைத்துப் புனிதர் விழாவில் திருத்தந்தையின் மூவேளை செபஉரை
2. மனித ஆன்மாவையும், புலன்களையும் ஒன்றிணைக்கும் ஓர் உயர்ந்த முயற்சி கலை – திருத்தந்தை
3. இம்மாதம் 11ம்தேதி இலங்கை திருஅவையில் 'பிறப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளின் ஞாயிறு'
4. புனிதர் Pedro Calungsod அவர்களின் பெயரால் ஓர் இளையோர் நிறுவனம்
5. Sandy சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனங்களின் உதவிகள்
6. திருவனந்தபுரம் லொயோலா கல்லூரியின் பொன்விழா நிகழ்ச்சியில் இந்தியக் குடியரசுத் தலைவர்
7. இந்தியாவில் பணிபுரியும் இருபால் துறவியர் கூட்டமைப்பின் தலைவராக சலேசிய சபை அருள்தந்தை Thomas Vattathara
8. இலங்கையை எச்சரித்துள்ளது அனைத்துலக சட்டத்துறையினர் ஆணைக்குழு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. அனைத்துப் புனிதர் விழாவில் திருத்தந்தையின் மூவேளை செபஉரை
நவ.01, 2012. இவ்வியாழனன்று நாம் கொண்டாடிய அனைத்துப்புனிதர்கள் விழா, மனித குலத்தின் இரு எல்லைகளான 'மண்ணுலகம்' மற்றும் 'விண்ணுலகம்' குறித்து
ஆழ்ந்து சிந்திக்க நமக்கு அழைப்பு விடுக்கிறது என இவ்வியாழன் நண்பகல்
மூவேளை செப உரையின்போது எடுத்துரைத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
வரலாற்றுப் பயணத்தை குறித்து நிற்கும் பூமியும், முடிவற்ற
நிலையின் அடையாளமாக நிற்கும் வானகமும் புனிதர்களின் ஒன்றிப்பு என்ற
உண்மைத் தன்மையில் ஒன்றிக்கின்றன என்று கூறிய திருத்தந்தை, பூமியில் துவங்கும் உண்மை நிலைகள் வானுலகிலேயே தங்கள் முழுமையை அடைகின்றன எனக் கூறினார்.
மனித குலத்தை ஒன்றிணைக்கும் மறையுண்மையின் துவக்கம் திருஅவையே எனவும் கூறியத் திருத்தந்தை, இம்மறையுண்மை முற்றிலும் இயேசுகிறிஸ்துவை நோக்கியதாகவே இருக்கிறது என்றும், அவரே மனித குலத்தை இறைவனை நோக்கியும், அமைதி மற்றும் ஒன்றிப்பை நோக்கியும் அழைத்துச் செல்வதை அறிமுகப்படுத்தினார் என்றும் மேலும் கூறினார்.
சுயநலம்
மற்றும் மரணத்தின் மீது அன்பு கொண்டுவந்த வெற்றியை அனைத்துப்புனிதர்களின்
விழாவை நாம் சிறப்பிக்கும்போது கொண்டாடுகிறோம் என்ற திருத்தந்தை, முடிவற்ற வாழ்வில் நாம் ஆழமாக விசுவாசம் கொள்ளவும், உயிர்துறந்துள்ள நம் அன்புக்குரியவர்களுடன் உண்மையான ஒன்றிப்பை உணரவும், அன்னைமரி நமக்கு உதவுவாராக எனக்கூறி தன் மூவேளை செப உரையை நிறைவு செய்தார்.
2. மனித ஆன்மாவையும், புலன்களையும் ஒன்றிணைக்கும் ஓர் உயர்ந்த முயற்சி கலை - திருத்தந்தை
நவ.01,2012. கலை என்பது மனித முயற்சி என்றாலும், அது மனித ஆன்மாவையும், புலன்களையும் ஒன்றிணைக்கும் ஓர் உயர்ந்த முயற்சி என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
வத்திக்கானில் உள்ள உலகப் புகழ்பெற்ற Sistine சிற்றாலயத்தின் 500வது ஆண்டு நிறைவை இப்புதன் மாலை ஒரு திருவழிபாட்டு நிகழ்வுடன் கொண்டாடிய திருத்தந்தை, அவ்வாலயத்தின் புகழையும், அது எவ்விதம் மக்களை 500 ஆண்டுகளாக இறைவன் பால் ஈர்த்துவந்துள்ளது என்பதையும் எடுத்துரைத்தார்.
திருத்தந்தை இரண்டாம் ஜூலியஸ் அவர்களின் மேற்பார்வையில் உருவாக்கப்பட்ட Sistine சிற்றாலயம், 1512ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி திருத்தந்தை நிகழ்த்திய மாலை வழிபாட்டுடன் திறந்து வைக்கப்பட்டது.
இச்சிற்றாலயத்தின்
கூரையில் புகழ்பெற்ற கலைஞர் மிக்கேலாஞ்சேலோவால் வரையப்பட்டுள்ள
பிரம்மாண்டமான ஓவியத்தைச் சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை
16ம் பெனடிக்ட், இந்த ஓவியத்தைக் குறித்து புகழ்ந்துள்ள ஏனைய கலைஞர்களின் கூற்றுக்களை மேற்கோள் காட்டினார்.
உலகப்
புகழ்பெற்ற இவ்வோவியம் கலை உலகின் கலங்கரை விளக்காக உள்ளதென்று பிற
கலைஞர்கள் கூறியிருப்பது மிகவும் பொருந்தும் என்று கூறியத் திருத்தந்தை, மிக்கேலாஞ்சலோவின் மனதில் ஒளியேற்றிய இறைவனுக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம் என்று கூறினார்.
3. இம்மாதம் 11ம்தேதி இலங்கை திருஅவையில் 'பிறப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளின் ஞாயிறு'
நவ.01, 2012. கருக்கலைப்புக்கு எதிரான தங்கள் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இம்மாதம் 11ம்தேதியை 'பிறப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளின் ஞாயிறு' என அறிவித்துள்ளனர் இலங்கை ஆயர்கள்.
இச்செவ்வாயன்று வெளியிட்ட மேய்ப்புபணி சுற்றறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ள ஆயர்கள், 'பிறப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளின் ஞாயிறு' இம்மாதம்
11ம் தேதி சிறப்பிக்கப்படுவது குறித்த முழு விவரங்கள் இலங்கையின்
அனைத்துக் கோவில்களிலும் இம்மாதம் 4ம் தேதி விசுவாசிகளுக்கு
வழங்கப்படவேண்டும் என அனைத்துக் குருக்களையும் துறவறத்தாரையும்
விண்ணப்பித்துள்ளனர்.
கருக்கலைப்பு என்பது எத்தகையச் சூழலிலும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாதது மட்டுமல்ல, இத்தகையப்
பாவச்செயலில் ஈடுபடுவோர் திருஅவையிலிருந்து நீக்கிவைக்கப்படும் ஆபத்தையும்
எதிர்கொள்கின்றனர் என மேலும் கூறியுள்ளனர் ஆயர்கள்.
இலங்கையில்
கருக்கலைப்பைச் சட்டபூர்வமாக அங்கீகரிக்கும் முயற்சிகள் குறித்து
வன்மையான கண்டனத்தையும் தங்கள் மேய்ப்புப்பணி சுற்றறிக்கையில்
தெரிவித்துள்ளனர் இலங்கை ஆயர்கள்.
4. புனிதர் Pedro Calungsod அவர்களின் பெயரால் ஓர் இளையோர் நிறுவனம்
நவ.01,2012. கடந்த மாதம் 21ம் தேதி திருத்தந்தை 16ம் பெனடிக்ட் புனிதர்களாக உயர்த்திய எழுவரில் ஒருவரான Pedro Calungsod அவர்களின் பெயரால், பிலிப்பின்ஸ் நாட்டின் ஓர் இளையோர் நிறுவனம் அண்மையில் அர்ப்பணிக்கப்பட்டது.
Laoag என்ற மறைமாவட்டத்தின் இளையோர் பணிக்குழு உருவாக்கியுள்ள ஒரு புனித Pedro Calungsod இளையோர் நிறுவனம், புதிய நற்செய்திப் பணிக்கென இளையோரை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இளையோரிடையே உள்ள அனைத்துத் திறமைகளையும் வளர்ப்பதற்கும், இத்திறமைகளை இறைவனின் பணிக்கென பயன்படுத்துவதற்கும் புனித Pedro Calungsod இளையோர் நிறுவனம் உதவிசெய்யும் என்று இந்நிறுவனத்தின் கொள்கை அறிக்கை கூறுகிறது.
5. Sandy சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனங்களின் உதவிகள்
நவ.01,2012. Sandy சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் ஆகியவை அவசரத் தேவை என்றும், பாதிக்கப்பட்டப் பகுதிகளை இன்னும் அடையமுடியாத நிலை இருப்பதால், மற்றத் தேவைகளை இன்னும் சரிவரக் கணிக்க முடியவில்லை என்றும் அமெரிக்க கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பின் இயக்குனர் Kevin Hickey கூறினார்.
இத்திங்கள், செவ்வாய் ஆகிய இருநாட்களும் அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகளில் பெரும் சேதங்களை உருவாக்கியுள்ள Sandy சூறாவளியால்
பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவிகள் செய்யும் முயற்சி அனைத்து
கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனங்களாலும் துவக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ளப் பகுதிகளை மேற்பார்வையிடுதல், உதவிகளை வழங்கும் நிலையங்களைப் பங்குத் தளங்களில் நிறுவுதல் ஆகியப் பணிகளில் பிறரன்பு அமைப்பினர் தற்சமயம் ஈடுபட்டுள்ளனர்.
வாஷிங்டன்
பகுதியில் கத்தோலிக்க பிறரன்பு அமைப்புக்களால் திறந்துவிடப்பட்டுள்ள
அரங்கங்களில் வீடுகளை இழந்துள்ள 1100 பேர் தங்கியுள்ளனர் என்று இணையதள
புள்ளிவிவரம் ஒன்று கூறுகிறது.
கத்தோலிக்கப் பிறரன்புப்பணி அமைப்புக்கள் எடுத்துவரும் முயற்சிகள் போற்றுதற்குரியன என்று Camden மறைமாவட்ட முதன்மைகுரு பேரருள்திரு Roger McGrath கூறினார்.
6. திருவனந்தபுரம் லொயோலா கல்லூரியின் பொன்விழா நிகழ்ச்சியில் இந்தியக் குடியரசுத் தலைவர்
நவ.01,2012.
சமுதாய மாற்றங்களைக் கொணர விழையும் மனிதர்களை உருவாக்க. சமூகவியல்
துறையைத் திறம்பட நடத்திவரும் லொயோலா கல்லூரியின் பொன்விழா நிகழ்ச்சியில்
கலந்துகொள்வதில் பெருமகிழ்வடைகிறேன் என்று இந்தியக் குடியரசுத் தலைவர் Pranab Mukherjee கூறினார்.
கேரளாவின்
திருவனந்தபுரத்தில் இயேசு சபையினரால் நடத்தப்பட்டு வரும் லொயோலா
கல்லூரியின் ஐம்பது ஆண்டு நிகழ்வில் கலந்து கொண்டு தலைமையுற்றையாற்றிய
அரசுத்தலைவர் Pranab Mukherjee இவ்வாறு கூறினார்.
கேரள இயேசு சபை மாநிலத்தின் முதல் தலைவராகப் பணியாற்றிய அருள்தந்தை Joseph Edamaram அவர்களின் கனவில் உதித்த இந்தச் சமூகவியல் கல்விக்கூடம், சமுதாயச் சிந்தனைகளில் கேரள மக்கள் வளர்வதற்குப் பெரும் உதவியாக இருந்துள்ளது என்று அரசுத்தலைவர் எடுத்துரைத்தார்.
கல்வித்தரத்தில் கேரள மாநிலம் 86 விழுக்காடு முன்னேற்றம் அடைந்திருப்பது பெருமைக்குரியது எனினும், இன்னும்
இம்மாநிலத்தில் பெண்கள் பொதுவாழ்வில் பங்கேற்பது இன்றும்
பின்தங்கியிருப்பதை இளையோருக்கு முன் தான் வைக்கும் ஒரு சவால் என்று
குடியரசுத் தலைவர் Pranab Mukherjee கூடியிருந்த மாணவர்களுக்குக் கூறினார்.
7. இந்தியாவில் பணிபுரியும் இருபால் துறவியர் கூட்டமைப்பின் தலைவராக சலேசிய சபை அருள்தந்தை Thomas Vattathara
நவ.01,2012. இந்தியாவில் பணிபுரியும் இருபால் துறவியர் கூட்டமைப்பின் தலைவராக சலேசிய சபையைச் சார்ந்த அருள்தந்தை Thomas Vattathara தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 28 முதல் இப்புதன் முடிய ஹைதராபாத் நகரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இந்தியாவின் பல்வேறு துறவியர் சபைத் தலைவர்களும், மாநிலத் தலைவர்களும் என 550க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், Guwahati மாநிலத்தின் சலேசியத் தலைவராக பணியாற்றிய அருள்தந்தை Vattathara இச்செவ்வாயன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தியாவில் 334 துறவியர் சபைகளைச் சார்ந்த 1,25,000 இருபால் துறவியர் பணி புரிகின்றனர். கல்வி நிலையங்கள், மருத்துவ மனைகள், சமுதாய நிறுவனங்கள் மூலம் பணி செய்யும் இருபால் துறவியரில் 822 பேர் தலைமைப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
8. இலங்கையை எச்சரித்துள்ளது அனைத்துலக சட்டத்துறையினர் ஆணைக்குழு
நவ.01, 2012. இலங்கையில் அண்மைக்காலமாக நீதித்துறைக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும், சட்டத்துறை மீது தாக்குதல்கள் இடம்பெற்று வருவதையும் கண்டித்து அனைத்துலக சட்டத்துறையினர் ஆணைக்குழு செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில்
நீதித்துறை பாதுகாக்கப்பட வேண்டும் என அழைப்பு விடுத்த அனைத்துலக
சட்டத்துறையினர் ஆணைக்குழுவின் ஆசியப் பிரதிநிதி ஷேம் சராசி, நீதித்துறைக்கு எதிராக செயற்படுபவர்கள் சட்டத்தின் முன் கொண்டுவரப்படாவிட்டால், எதிர்காலத்தில் இலங்கை தீய விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் எனவும் எச்சரித்தார்.
மகிந்த ராஜபக்சாவின் நிர்வாகம் நீதித்துறைக்கு எதிராக செயல்பட்டு சர்வதேச சட்டங்களை மீறி வருவதாகவும் சராசி குற்றம் சுமத்தியுள்ளார்.
இதற்கிடையே, பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கான விண்ணப்பம், சபாநாயகர் சமால் ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த்து.
இத்தகைய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க, குறைந்தபட்சம் 75 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் தேவை என்ற போதிலும், 117 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவை தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment