Sunday, 28 October 2012

Catholic News in Tamil - 27/10/12

1. திருத்தந்தை : குருத்துவக் கல்லூரிகள், குருக்கள் பேராயத்துக்குக் கீழ் செயல்படும்

2. உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொது ஆலோசனை அவைக்கு மும்பை கர்தினால்

3. அருள்தந்தை லொம்பார்தி : இறைவனால் அன்புகூரப்பட்ட உலகில்...

4. இந்தியத் துறவு சபைகளின் அதிபர்கள் புது வழிமுறைகளைத் தேடும் மாநாடு

5. சீனக் கத்தோலிக்கரின் உலக மாநாடு

6. மிசோராமில் புகையிலைப் பயன்பாடு நிறுத்தப்படுவதற்கு கிறிஸ்தவ சபைகள் உதவுமாறு அழைப்பு

7. முப்பது வயதில் புகைப்பிடிப்பதைக் கைவிடும் பெண்கள், குறைந்த வயதில் இறக்கும் ஆபத்திலிருந்து தப்பிக்கின்றனர்

8. மாலியின் வட பகுதியிலிருந்து கிறிஸ்தவர்கள் திட்டமிட்டு வெளியேற்றப்படுகின்றனர்

9. மியான்மாரில் தொடரும் வன்முறைகள், ஐ.நா.எச்சரிக்கை

10. கூடங்குளம்: வட இலங்கையிலும் எதிர்ப்புத் துண்டுப் பிரசுரங்கள்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : குருத்துவக் கல்லூரிகள், குருக்கள் பேராயத்துக்குக் கீழ் செயல்படும்

அக்.27,2012. குருத்துவக் கல்லூரிகள், குருக்கள் பேராயத்துக்குக் கீழும், மறைக்கல்விகள், புதிய நற்செய்தி அறிவிப்புப்பணியை ஊக்குவிக்கும் திருப்பீட அவையின் கீழும் இனிமேல் இயங்கும் என்பதை இச்சனிக்கிழமையன்று அறிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இச்சனிக்கிழமை காலையில் தொடங்கிய புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி குறித்த 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் 22வது பொது அமர்வின் இறுதியில் இதனை அறிவித்தார் திருத்தந்தை.
252 மாமன்றத் தந்தையர் பங்கு பெற்ற இப்பொது அமர்வில் அனைவருக்கும் நன்றி தெரிவித்த திருத்தந்தை, குருத்துவக் கல்லூரிகளை நிர்வகிக்கும் பொறுப்பு, கத்தோலிக்கக் கல்விப் பேராயத்திலிருந்து எடுக்கப்பட்டு குருக்கள் பேராயத்திடமும், மறைக்கல்விகளை நடத்தும் பொறுப்பு, குருக்கள் பேராயத்திலிருந்து எடுக்கப்பட்டு புதிய நற்செய்தி அறிவிப்புப்பணியை ஊக்குவிக்கும் திருப்பீட அவையிடமும் கொடுக்கப்படுவதாகக் கூறினார்.
ஆழ்ந்த செபம் மற்றும் சிந்தனைகளுக்குப் பின்னர் இதனை அறிவிப்பதாகவும், இந்த மூன்று துறைகளும் தங்களது பணிகளைத் திறம்படச் செய்யும் எனத் தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், புதிய கர்தினால்களாக அறிவிக்கப்பட்டிருப்பவர்களுக்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை, இத்துடன் கடந்த பிப்ரவரியின் கர்தினால்கள் அவை முழுமை அடைகின்றது என்றும் கூறினார்.
மேலும், இச்சனிக்கிழமையன்று இம்மாமன்ற விரிவுரையாளர் வாஷிங்டன் பேராயர் கர்தினால் Donald William WUERL, இம்மாமன்றத்தின் சிறப்புச் செயலர் பிரான்சின் Montpellier பேராயர் Pierre Marie CARRÉ, திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி ஆகியோர் ஆங்கிலம், ப்ரெஞ்ச், இத்தாலியம் ஆகிய மொழிகளில், மாமன்றத் தந்தையரின் பரிந்துரைகள் குறித்து நிருபர் கூட்டத்தில் விளக்கினர்.
மாமன்றத் தந்தையரின் பரிந்துரைகளின் அதிகாரப்பூர்வ இறுதிப் பட்டியல், உலக ஆயர்கள் மாமன்ற விதிமுறைகளின்படி இலத்தீனில் இருக்கும், ஆனால், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் அனுமதியின்பேரில், தற்போது இது ஆங்கிலத்திலும் இடம்பெற்றுள்ளது என்று இந்நிருபர் கூட்டத்தில் கூறப்பட்டது.
இந்தப் பரிந்துரைகள் திருத்தந்தையிடம் கொடுக்கப்பட வேண்டும் என்ற விதிமுறையும் உள்ளது எனவும் கூறப்பட்டது. 
வத்திக்கானில் இம்மாதம் 7ம் தேதி தொடங்கிய இந்த 13வது உலக ஆயர்கள் மாமன்றம், இஞ்ஞாயிறன்று திருத்தந்தை நிகழ்த்தும் திருப்பலியோடு நிறைவடையும். 

2. உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொது ஆலோசனை அவைக்கு மும்பை கர்தினால்

அக்.27,2012. உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொது ஆலோசனை அவைக்கு மும்பை கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ், புதிய கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ள பிலிப்பீன்சின் மனிலா பேராயர் Luis Antonio G. TAGLE உட்பட 12 பேரும், திருத்தந்தையால் மூவரும் நியமிக்கப்ப்ட்டுள்ளனர்.  
இவ்வெள்ளி மாலை நடைபெற்ற இந்த உலக ஆயர்கள் மாமன்றத்தின் 21வது பொது அமர்வில் உலக ஆயர்கள் மாமன்றப் பொதுச் செயலர் பேராயர் நிக்கொலா எத்ரோவிச் இதனை அறிவித்தார்.
இச்சனிக்கிழமை வாக்கெடுப்புக்கு விடப்படவிருந்த மாமன்றத் தந்தையரின் பரிந்துரைகளின் தொகுப்பும், இந்த வெள்ளி மாலைப் பொது அமர்வின்போது மாமன்றத் தந்தையரிடம் கொடுக்கப்பட்டது.
இதில் 249 மாமன்றத் தந்தையர் கலந்து கொண்டனர்.
3. அருள்தந்தை லொம்பார்தி : இறைவனால் அன்புகூரப்பட்ட உலகில்...

அக்.27,2012. இந்த உலகம் முரண்பாடுகளாலும் சவால்களாலும் நிறைந்திருந்தாலும், அதனை இறைவன் அன்பு கூருகிறார் என்ற நம்பிக்கை இன்னும் இருப்பதால், நம்பிக்கையால் பயத்தை மேற்கொண்டு பதட்டமில்லாத துணிவுடன் உலகை நோக்க வேண்டும் எனத் திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.
வத்திக்கான் தொலைக்காட்சி மற்றும் வானொலியின் வார நிகழ்ச்சியில் இவ்வாறு கூறியுள்ளார் அருள்தந்தை லொம்பார்தி.
புதிய நற்செய்தி அறிவிப்புப்பணியின் அவசியம் குறித்து திருஅவை சிந்தித்துள்ள கருத்துக்கள், இன்று உலகில் பல்வேறு இடங்களில் நற்செய்தி அறிவிப்பதற்கு ஏற்படும் இன்னல்கள், மக்கள் இறைநம்பிக்கையிலிருந்து விலகிச் செல்வதால் ஏற்படும் அனுபவங்கள்  ஆகியவற்றிலிருந்து எழுந்தவை என்றும் அருள்தந்தை லொம்பார்தி கூறியுள்ளார்.
உலக ஆயர்கள் மாமன்றத் தந்தையர் திருஅவைக்கு வழங்கியுள்ள செய்தியும், தூய ஆவியின் வல்லமையிலும் உயிர்த்த கிறிஸ்துவின் பிரசன்னத்திலும் இறைவனில் நம்பிக்கை வைப்பதை அடிப்படையாகக் கொண்ட அர்ப்பணமும் நம்பிக்கையும் நிறைந்த வார்த்தைகளாக உள்ளன   என்றும் அருள்தந்தை லொம்பார்தி தெரிவித்துள்ளார். 

4. இந்தியத் துறவு சபைகளின் அதிபர்கள் புது வழிமுறைகளைத் தேடும் மாநாடு

அக்.27,2012. அர்ப்பண வாழ்க்கையை அதிகப் பயனுள்ள விதத்தில் வாழ்வதற்குப் புது வழிமுறைகள் என்ற தலைப்பில் ஆந்திரா மாநிலத்தின் ஹைதராபாத்தில் இந்தியத் துறவு சபைகளின் அதிபர்கள் இஞ்ஞாயிறன்று நான்கு நாள் மாநாட்டைத் தொடங்குகின்றனர்.
இதில், துறவு சபைகளின் அதிபர்கள், மாநிலத் தலைவியர் என 550 பேர் கலந்து கொள்கின்றனர்.
CRI எனப்படும் இந்தியத் துறவு சபைகளின் அதிபர்கள் அவை, 334 துறவு சபைகளையும், அதிபர்கள், மாநிலத் தலைவியர் என 822 தலைவர்களையும் கொண்டுள்ளது.
இந்தியாவில் அருள் சகோதரர்கள், அருள்தந்தையர், அருள் சகோதரிகள் என ஒரு இலட்சத்து 25 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மறைப்பணியாற்றுகின்றனர்.
இந்தியத் துறவு சபைகளின் அதிபர்களின் தேசிய மாநாடு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகின்றது.

5. சீனக் கத்தோலிக்கரின் உலக மாநாடு

அக்.27,2012. பொதுநிலை விசுவாசிகளின் மறைப்பணிகள் குறித்த ஆறுநாள் மாநாடு ஒன்றை உலகின் 27 நகரங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 170 சீனக் கத்தோலிக்கர் ஹாங்காங்கில் இச்சனிக்கிழமையன்று தொடங்கியுள்ளனர்.
ஹாங்காங் மறைமாவட்டம் சிறப்பித்து வந்த பொதுநிலையினர் ஆண்டை நிறைவு செய்யும் விதமாக இந்த மாநாடு நடைபெறுகிறது.
தொலைத்தொடர்புகளும் பயண வசதிகளும் தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்துள்ள ஹாங்காங்கில் இம்மாநாட்டை நடத்துவது பொருத்தமாக இருப்பதாகத் தெரிவித்த ஹாங்காங் மறைமாவட்ட முதன்மைக்குரு Dominic Chan Chi-ming, கடந்த 30 ஆண்டுகளில் வளர்ந்துள்ள  பொதுநிலையினரின்  மறைப்பணிகள் குறித்து விளக்கினார்.

6. மிசோராமில் புகையிலைப் பயன்பாடு நிறுத்தப்படுவதற்கு கிறிஸ்தவ சபைகள் உதவுமாறு அழைப்பு

அக்.27,2012. இந்தியாவின் மிசோராம் மாநிலத்தில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்வேளை, அம்மாநில மக்கள் புகையிலையைப் பயன்படுத்துவதை நிறுத்துவதற்கு கிறிஸ்தவ சபைகள் உதவுமாறு, மிசோராம் புகையிலைக் கட்டுப்பாட்டுக் கழகம் கேட்டுள்ளது.
ஆலயங்களும் ஆலய வளாகங்களும் மக்கள் கூடும் இடங்களாக இருப்பதால், அவ்விடங்களில் புகைப்பிடிப்பது சட்டத்தை மீறுவதாகும் என்று சொல்லி, புகையிலைப் பயன்பாட்டை நிறுத்துவதற்கு கிறிஸ்தவ சபைகள் உதவுமாறு அக்கழகம் கேட்டுள்ளது.
மிசோராம் புகையிலைக் கட்டுப்பாட்டுக் கழகம் நடத்திய கூட்டத்தில் கத்தோலிக்கத் திருஅவை உட்பட பல்வேறு கிறிஸ்தவ சபைகள் கலந்து கொண்டன.
வடகிழக்கு இந்திய மாநிலமான மிசோராமில் ஏறக்குறைய 87 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள்.

7. முப்பது வயதில் புகைப்பிடிப்பதைக் கைவிடும் பெண்கள், குறைந்த வயதில் இறக்கும் ஆபத்திலிருந்து தப்பிக்கின்றனர்

அக்.27,2012. முப்பது வயதில் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கைவிடும் பெண்கள், புகையிலைத் தொடர்புடைய நோய்களால் குறைந்த வயதிலே இறக்கும் ஆபத்திலிருந்து முழுமையாகக் காப்பாற்றப்படுகின்றனர் என்று Lancet மருத்துவ இதழ் வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.
பிரிட்டனில் 12 இலட்சம் பெண்களிடம் எடுத்த ஆய்வின் முடிவில் இவ்வாறு கண்டறிந்துள்ளதாகத் தெரிவிக்கும் அந்த ஆய்வு, ஒரு நாளைக்குப் பத்து சிகரெட்டுக்கும் குறைவாகப் பிடிப்பவர்கள்கூட விரைவிலே இறக்கும் ஆபத்தை எதிர்கொள்கின்றனர் என்று தெரிவிக்கிறது. 
உலகில் ஒவ்வோர் ஆண்டும் ஐம்பது இலட்சத்துக்கு மேற்பட்டோர் புகைப்பிடிப்பதால் இறக்கின்றனர். மேலும், ஏறக்குறைய 25 நோய்களுக்குப் புகைப்பிடித்தல் காரணமாக அமைகின்றது.
மனித உடலைப் பாதிக்கும் நான்காயிரம் வேதியப் பொருள்கள் சிகரெட் புகையில் உள்ளன. இவற்றில் எட்டு, புற்று நோய்க்குக் காரணமாக உள்ளன.   

8. மாலியின் வட பகுதியிலிருந்து கிறிஸ்தவர்கள் திட்டமிட்டு வெளியேற்றப்படுகின்றனர்

அக்.27,2012. மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியின் வட பகுதியிலிருந்து கிறிஸ்தவர்கள் இசுலாம் தீவிரவாதிகளால் திட்டமிட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர் என்று மறைபோதக அருள்பணியாளர் ஒருவர் கூறினார்.
மாலியின் வட பகுதியில் இசுலாம் தீவிரவாதக் குழுக்கள் அமைத்துள்ள ஆட்சியில் ஷாரியா என்ற இசுலாமியச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது மற்றும் பல கிறிஸ்தவர்கள் தென் பகுதிக்குச் சென்று விட்டனர் என்று அருள்பணி Laurent Balas கூறினார்.
கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி, மாலி நாட்டின் வடக்கிலிருந்து இரண்டு இலட்சம் கிறிஸ்தவர்கள் Algeria அல்லது Mauritania விலுள்ள அகதிகள் முகாம்களுக்குச் சென்றுவிட்டனர் எனத் தெரிகிறது.
ஆயினும் இவ்வெண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது எனத் தெரிவித்த அக்குரு, பல முஸ்லீம்களும் தீவிரவாதக் குழுக்களுக்குப் பயந்து வெளியேறியுள்ளனர் என்று கூறினார்.  

9. மியான்மாரில் தொடரும் வன்முறைகள், ஐ.நா.எச்சரிக்கை

அக்.27,2012. மியான்மாரின் மேற்கிலுள்ள Rakhine மாநிலத்தில் புத்த மதத்தினருக்கும், சிறுபான்மை Rohingya முஸ்லிம்களுக்கும் இடையில் அதிகரித்து வரும் இனரீதியான வன்முறைகள் நிறுத்தப்படுவதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.
Rakhine மாநிலத்தில் இடம்பெறும் வன்முறையால் இவ்விரு இனத்தவரும் தொடர்ந்து துன்பப்பட்டு வருவதால், இவ்விரு இனத்தவருக்கும் இடையே ஒப்புரவு ஏற்பட்டு அவர்கள் ஒன்றிணைந்து வாழ்வதற்கு மியான்மார் அரசு உடனடியாக முயற்சிகள் எடுக்குமாறு, மியான்மார் மனித உரிமைகள் குறித்த ஐ.நா.சிறப்புத் தொடர்பாளர் Tomás Ojea Quintana கேட்டுக் கொண்டார்.
மியான்மாரில் கடந்த ஜூன் மாதம் இவ்விரு மதத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட இனக் கலவரத்தில், இரு தரப்பிலும் 90 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 3,000க்கும் அதிகமான வீடுகள் நாசப்படுத்தப்பட்டன. தற்போதைய வன்முறையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் மற்றும் குறைந்தது 2,000 வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளன.
Rohingya முஸ்லிம்களைத் தனது குடிமக்களாக ஏற்க மறுக்கும் மியான்மார் அரசு, அவர்கள் சட்டவிரோதக் குடியேறிகள் என்று கூறி வருகிறது.

10. கூடங்குளம்: வட இலங்கையிலும் எதிர்ப்புத் துண்டுப் பிரசுரங்கள்

அக்.27,2012. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரானப் போராட்டங்களுக்கு ஆதரவாக, இலங்கையின் வட பகுதியில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
கூடங்குளம் அணுமின் நிலையத்தால் இலங்கையில் உள்ள மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விளக்கமளிக்கும் விதமாக இந்தத் துண்டுப் பிரசுரங்கள் அமைந்துள்ளன.
மேலும், கூடங்குளம் பகுதி மக்களின் எதிர்ப்பை இந்திய அரசு பொருட்படுத்தாமல் இருப்பதால் அம்மக்களுக்கு ஆதரவாகத் தாங்களும் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறோம் என்றும் அந்தத் துண்டுப் பிரசுரங்களில் கூறப்பட்டுள்ளன.
மக்கள் போராட்டக் குழு என்ற அமைப்பு வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களில் இதனை ஒழுங்கு செய்திருந்தது.

 

No comments:

Post a Comment