Wednesday, 24 October 2012

Catholic News in Tamil - 24/10/12

1. திருத்தந்தை சீரோ-மலங்கரா ரீதித் திருஅவைத் தலைவர் உட்பட ஆறு புதிய கர்தினால்கள் அறிவிப்பு

2. புதிதாக நிறுவப்பட்டுள்ள குழந்தைகள் மருத்துவமனை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு அர்ப்பணமாக்கப்பட்டுள்ளது

3. "Vatileaks" வழக்கில் திருத்தந்தையின் தனிப்பட்ட உதவியாளர் Paolo Gabrieleக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பின் முழு விவரங்கள்

4. புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி என்ற இப்புதிய அலையினால், பாகிஸ்தானும் பயன்பெறும் - லாகூர் துணை ஆயர்

5. அமெரிக்க ஆயர்கள் பேரவை பத்து புனிதர்களை மக்களின் கவனத்திற்குக் கொணர்ந்துள்ளது

6. அணு சக்தியில்லாத அமைதி உலகம் என்ற கருத்தில் ஐ.நா நடத்திய ஓவியப் போட்டி

7. முதுமையில் உடற்பயிற்சி மூளைக்கு நலமளிக்கும்

8. 33 கோடி மொபைல் போன் விற்பனையாகும்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை சீரோ-மலங்கரா ரீதித் திருஅவைத் தலைவர் உட்பட ஆறு புதிய கர்தினால்கள் அறிவிப்பு

அக்.24,2012. கேரளாவின் சீரோ-மலங்கரா ரீதித் திருஅவைத் தலைவரான திருவனந்தபுரம் சீரோ-மலங்கரா ரீதி உயர்மறைமாவட்டப் பேராயர்  Baselios Cleemis Thottunkal உட்பட ஆறு புதிய கர்தினால்களை நியமிப்பதாக இப்புதனன்று அறிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இப்புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் பேசிய திருத்தந்தை,  வருகிற நவம்பர் 24ம் தேதி இடம்பெறும் நிகழ்வில் ஆறு பேர் கர்தினால்கள் அவையில் புதிதாக இணையவிருக்கிறார்கள் என்பதை மகிழ்வுடன் அறிவிப்பதாகத் தெரிவித்தார்.
புனித பேதுருவின் வழிவருபவர் தமது சகோதரர்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்தும் திருப்பணியில் அவருக்கு உதவ வேண்டியவர்கள் கர்தினால்கள் என்றுரைத்த திருத்தந்தை, இவர்களுக்காகச் செபிக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டார்.
பாப்பிறை இல்லத் தலைவர் பேராயர் James Michael Harvey, லெபனனின் மாரனைட் ரீதியின் அந்தியோக்கிய முதுபெரும் தலைவர் Bechara Boutros Rai, சீரோ-மலங்கரா ரீதித் திருஅவைத் தலைவர் பேராயர் Baselios Cleemis Thottunkal, நைஜீரியாவின் அபுஜா பேராயர் John Olorunfemi Onaiyekan, கொலம்பியாவின் Bogotà பேராயர் Ruben Salazar Gomez, பிலிப்பீன்சின் மனிலா பேராயர் Luis Antonio Tagle ஆகிய ஆறு பேரைப் புதிய கர்தினால்களாக அறிவித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். 
திருஅவையில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்குட்பட்ட கர்தினால்களின் எண்ணிக்கை, இந்த ஆறு பேருடன் சேர்ந்து 122 ஆக உயர்ந்துள்ளது.


2. புதிதாக நிறுவப்பட்டுள்ள குழந்தைகள் மருத்துவமனை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு அர்ப்பணமாக்கப்பட்டுள்ளது

அக்.24,2012. உலகில் உள்ள அனைத்துக் குழந்தைகள் மீது, சிறப்பாக, உதவிகள் ஏதும் பெறமுடியாமல் துன்புறும் குழந்தைகள் மீது திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கொண்டிருக்கும் அன்பை இந்த உலகம் அறியும் என்று திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே கூறினார்.
குழந்தைகள் நலனுக்கென உரோம் நகரில் புகழ்பெற்ற பணியாற்றிவரும் Bambino Gesù மருத்துவமனையின் புதியதொரு கிளையை இப்புதனன்று திறந்துவைத்துப் பேசிய கர்தினால் பெர்தோனே இவ்வாறு கூறினார்.
உரோம் நகர் சுற்றுச்சுவருக்கு வெளியே அமைந்திருக்கும் புனித பவுல் பசிலிக்காவிற்கு அருகே புதிதாக நிறுவப்பட்டுள்ள இக்குழந்தைகள் மருத்துவமனை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு அர்ப்பணமாக்கப்பட்டுள்ளது என்பதையும் கர்தினால் பெர்தோனே இத்திறப்பு விழாவில் தெரிவித்தார்.
இப்புதிய மருத்துவமனை தன் பெயரால் இயங்கவிருப்பதற்கு திருத்தந்தை தன் மகிழ்வான ஒப்புதலைத் தெரிவித்ததோடு, இம்மருத்துவமனை உருவாக பாடுபட்டோர், மற்றும் இங்கு பணிபுரிவோர், இங்கு மருத்துவ உதவிகள் பெற வரும் குழந்தைகள் அனைவருக்கும் தன் ஆசீரை வழங்குவதாக திருத்தந்தை கூறியதை திருப்பீடச் செயலர் இவ்விழாவில் அறிவித்தார்.
143 ஆண்டுகளுக்கு முன்னர் Salviati என்ற குடும்பத்தினரின் முயற்சியால் நான்கு அறைகளையும், பன்னிரு படுக்கைகளையும் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட BG மருத்துவமனையின் வரலாற்றை, கர்தினால் பெர்தோனே தன் உரையில் மீண்டும் நினைவு கூர்ந்தார்.


3. "Vatileaks" வழக்கில் திருத்தந்தையின் தனிப்பட்ட உதவியாளர் Paolo Gabrieleக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பின் முழு விவரங்கள்

அக்.24,2012. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் தனிப்பட்டக் கடிதங்களை வெளி உலகிற்கு வெளியிட்ட "Vatileaks" வழக்கில் திருத்தந்தையின் தனிப்பட்ட உதவியாளர் Paolo Gabrieleக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பின் முழு விவரங்கள் இச்செவ்வாயன்று வத்திக்கானில் வெளியிடப்பட்டன.
15 பக்கங்கள் அடங்கிய இந்த விவரங்களை வெளியிட்டுப் பேசிய திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை Federico Lombardi, இவ்வழக்கில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படும் வத்திக்கான் கணணிப் பொறியாளர் Claudio Sciarpelletti என்பவர் வருகிற நவம்பர் 5ம் தேதி விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று கூறினார்.
திருத்தந்தையின் தனிப்பட்ட ஆவணங்களின் பிரதிகளைத் திருடிய குற்றத்திற்காக, அவரது தனிப்பட்ட உதவியாளர் Gabriele இம்மாதம் 6ம் தேதி 18 மாதம் சிறை தண்டனைக்குத் தீர்ப்பளிக்கப்பட்டார்.
Gabriele அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனையைத் திருத்தந்தை மன்னிக்கும் வாய்ப்பு உள்ளதென்றும், இதுபற்றிய முடிவுகள் எப்போது வெளிவரும் என்பது வத்திக்கானைப் பொறுத்தது என்றும் அருள்தந்தை லொம்பார்தி செய்தியாளர்களிடம் கூறினார்.


4. புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி என்ற இப்புதிய அலையினால், பாகிஸ்தானும் பயன்பெறும் - லாகூர் துணை ஆயர்

அக்.24,2012. புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி என்ற இப்புதிய அலையினால், மேற்கத்திய நாடுகள் மட்டுமல்லாமல், ஆசிய நாடுகளும், குறிப்பாக, முஸ்லிம் பெரும்பான்மை நாடான பாகிஸ்தானும் பயன்பெறும் என்று பாகிஸ்தான் ஆயர் ஒருவர் கூறினார்.
புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி குறித்த 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் கலந்துகொள்ள வந்திருக்கும் லாகூர் துணை ஆயர் Sebastian Shaw, நம்பிக்கை ஆண்டில், பாகிஸ்தான் திருஅவை சந்தித்துவரும் சவால்களைக் குறித்து Fides செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.
பள்ளிகளில் பயன்படுத்தப்படும் பாடப் புத்தகங்களில் காணப்படும் குறைகளை தலத்திருஅவை பாகிஸ்தான் அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது என்பதைக் குறிப்பிட்ட ஆயர் Shaw, வளரும் தலைமுறையினரை சகிப்புத் தன்மையுடன் வளர்ப்பது அரசின் முதன்மையான கடமை என்று கூறினார்.
'இஸ்லாமிய நாடுகளில் புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி' என்ற தலைப்பில் இம்மாதம் 29ம் தேதி ஆயர் Shaw இலாத்தரன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் உரையாற்றுவார் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


5. அமெரிக்க ஆயர்கள் பேரவை பத்து புனிதர்களை மக்களின் கவனத்திற்குக் கொணர்ந்துள்ளது

அக்.24,2012. நடைபெறும் நம்பிக்கை ஆண்டில் புனிதர்களின் வாழ்வை இன்னும் அதிகமாக அறிந்துகொள்ளும் வகையில் அமெரிக்க ஆயர்கள் பேரவை பத்து புனிதர்களை மக்களின் கவனத்திற்குக் கொணர்ந்துள்ளது.
1646ம் ஆண்டு Iroquois என்ற பழங்குடியினரால் கொடுமையான சித்தரவதைகளுக்கு ஆளாகி, கொல்லப்பட்ட இயேசு சபை அருள் பணியாளர் Isaac Jogues, ஹவாய் தீவில் தொழுநோயாளர்கள் மத்தியில் உழைத்து, தானும் தொழுநோயால் பாதிக்கப்பட்டு 1889ம் ஆண்டு உயிரிழந்த புனித St. Damien de Veuster, இம்மாதம் 21ம் தேதி புனிதர்களாக உயர்த்தப்பட்ட Kateri Tekakwitha, மற்றும் Marianne Cope, உட்பட பத்து புனிதர்களை ஆயர்கள் பேரவை மக்கள் கவனத்திற்குக் கொணர்ந்துள்ளது.
இவர்கள் அனைவருமே அமெரிக்க மண்ணில் வாழ்ந்தவர்கள், அல்லது அமெரிக்க மக்களுக்குப் பணிகள் புரிந்தவர்கள். இவர்களில் மூவர் ஆண்கள், ஏழு பேர் பெண்கள்.


6. அணு சக்தியில்லாத அமைதி உலகம் என்ற கருத்தில் ஐ.நா நடத்திய ஓவியப் போட்டி

அக்.24,2012. அணு சக்தியற்ற உலகை நமது இளைய தலைமுறையினருக்கு உருவாக்குவதில் நான் பெருமளவு நேரத்தைச் செலவழிக்கிறேன் என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் கூறினார்.
அணு சக்தியில்லாத அமைதி உலகம் என்ற கருத்தில் இளையோர் மத்தியில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற 12 பேருக்கு இச்செவ்வாயன்று நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் பரிசுகள் வழங்கிய பான் கி மூன் இவ்வாறு கூறினார்.
5 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைபட்டோருக்கென நடத்தப்பட்ட இப்போட்டியில் 92 நாடுகளைச் சேர்ந்த 6600க்கும் அதிகமான இளையோர் பங்கேற்றனர். 140 நடுவர்கள் அடங்கிய குழு ஒன்று சிறந்த ஓவியங்களைத் தேர்ந்தெடுத்த்து. 5 முதல் 8, 9 முதல் 12 மற்றும் 13 முதல் 17 வயதுக் குழுக்களாகப் பிரிக்கப்பட்ட இவ்விளையோரில் 12 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
போட்டியில் பங்கேற்ற அனைத்து இளையோரும் அணு ஆயுதங்களற்ற, அமைதியான உலகை விரும்புவதாகக் கூறியது, தன்னைப் பெரிதும் கவர்ந்தது என்றும், அமைதிக்காக உழைக்கும் ஆர்வத்தைத் தனக்குள் இன்னும் அதிகரித்தது என்றும் ஐ.நா.பொதுச் செயலர் பரிசளிப்பு விழாவில் கூறினார்.
வருகிற ஆண்டுக்கென ஐ.நா.அவை உருவாக்கும் நாட்காட்டியில் பரிசு பெற்ற 12 ஓவியங்களும் பிரசுரமாகும் என்று ஐ.நா. அறிக்கை கூறுகிறது.


7. முதுமையில் உடற்பயிற்சி மூளைக்கு நலமளிக்கும்

அக்.24,2012. அறுபது, எழுபது வயதுகளில் இருப்பவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம் மூளை சுருங்குவதைத் தடுக்க முடியும் என்றும், இதன் மூலம் வயது முத்ர்ச்சியுடன் தொடர்புடைய dementia எனப்படும் நினைவிழப்பு நோயைத் தடுக்கமுடியும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அறுபது வயதுக்கு மேற்பட்ட 638 பேரிடம் மேற்கோண்ட ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.
உடற்பயிற்சி என்றதும் ஏதோ கடினமான உடற்பயிற்சி தேவை என்பதல்ல; தினமும் நல்ல நடைபயிற்சி செய்தாலே, உரிய பலன் தரும் என்றும், அதேவேளை, மூளைக்கு வேலை தரும் சுருக்கெழுத்து, சொடோகு போன்ற விளையாட்டுக்கள் மூளை சுருங்குவதைத் தடுக்கவில்லை என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
மூளையில் கட்டளைகள் உருவாகும் இடம் grey matter என்கிற சாம்பல் பகுதி என்றும், அந்த கட்டளைகளை கடத்தும் பகுதி white matter வெள்ளைப்பகுதி என்றும் இரண்டாக அறியப்படுகிறது.
வயதாக ஆக, மூளையின் சாம்பல் பகுதி சுருங்கும்போது, மனிதர்களின் நினைவாற்றல் இழப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்படும்.
தினசரி நடைப்பயிற்சி செய்வது, மூளை செல்களில் இரத்தச் சுழற்சியை அதிகப்படுத்துவதால் மூளை சுருங்காமல் தடுக்கப்படுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
எனவே வயதான காலத்தில் மூளைத்திறனை நலமாக வைத்துக்கொள்ள விரும்புபவர்கள், தினசரி உடற்பயிற்சி செய்வது அவசியம் என்பது ஆய்வாளர்களின் அறிவுரை.


8. 33 கோடி மொபைல் போன் விற்பனையாகும்

அக்.24,2012. வரும் 2016ஆண்டில் இந்தியாவில் 33 கோடி செல்லிடப்பேசிகள் மொபைல் போன் விற்பனையாகும் என இத்துறையில் ஆய்வு மேற்கொண்டு வரும் கார்ட்னர் அமைப்பு தெரிவித்துள்ளது.
வரும் 2013ம் ஆண்டில், செல்லிடப்பேசிகள் விற்பனை 25 கோடியே 10 லட்சத்தைத் தாண்ட உள்ளது. இது நடப்பு 2012ம் ஆண்டு விற்பனையைக் காட்டிலும் 13.5% கூடுதலாக இருக்கும்.
இந்திய செல்லிடப்பேசிகள் விற்பனைச் சந்தையில் கடும் போட்டி நிலவுகிறது. செல்லிடப்பேசிகள் தயாரித்து விற்பனை செய்வதில், ஏறத்தாழ 150 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள், குறைந்த விலை செல்லிடப்பேசிகளைத் தயார் செய்வதில் கவனம் காட்டி வருகின்றன.
சீன நிறுவனங்களும் பல்வேறு வழிகளில், பன்னாட்டு நிறுவனங்களுக்குப் போட்டியாக இயங்குகின்றன. இவற்றால், இந்திய நிறுவனங்கள் மிகக் கஷ்டப்பட்டே தங்கள் விற்பனைச் சந்தையைத் தக்கவைப்பது பெரும் சவாலாக உள்ளது.

 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...