Friday, 19 October 2012

Catholic News in Tamil - 15/10/12

1. திருத்தந்தை : கிராமப்புற கூட்டுறவு அங்காடிகளுக்கு நிதி மற்றும் சட்டரீதியான உதவிகள் வழங்கப்படப் பரிந்துரை

2. ஆயர்கள் மாமன்றத்தில் : இருபதாம் நூற்றாண்டின் மறைசாட்சிகளின் இரத்தம் கிறிஸ்தவ வாழ்வுக்குப்  புத்துயிர் கொடுத்துள்ளது

3. ஆயர்கள் மாமன்றத்தில் : குடும்பங்களைப் பாதுகாப்பதற்குப் பன்னாட்டு அளவில் யுக்திகள் தேவை

4. விசுவாச ஆண்டுக்குப் பன்னாட்டு இறையியல் கழகத்தின் செய்தி

5. இத்தாலிய ஆயர் ஒருவரை வெளியேற்றியுள்ளது Chad அரசு

6. ஆஸ்திரேலிய ஓர் இயேசு சபை அருள்தந்தை உலகின் வயதான பள்ளி ஆசிரியர்

7. ஐரோப்பாவில் முஸ்லீம்களின் வளர்ச்சி அச்சுறுத்துவதாக உள்ளது

8. 34வது உலக உணவு தினம் அக்.16,2012

9. நிலவில் நீர் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்: ஆய்வில் தகவல்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : கிராமப்புற கூட்டுறவு அங்காடிகளுக்கு நிதி மற்றும் சட்டரீதியான உதவிகள் வழங்கப்படப் பரிந்துரை

அக்.16,2012. வேளாண் உற்பத்திக்கும், உணவுப் பாதுகாப்புக்கும், சமுதாய மாற்றத்துக்கும், மக்களின் வாழ்க்கைத்தரத்தைப் பெருமளவில் முன்னேற்றுவதற்கும் கிராமப்புற கூட்டுறவு அங்காடிகள் அதிகம் உதவ முடியும் என்பதால், அவைகளுக்கு நிதி மற்றும் சட்டரீதியான உதவிகள் வழங்கப்படுமாறு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கேட்டுக் கொண்டார்.
அக்டோபர் 16, இச்செவ்வாயன்று உலக உணவு தினம் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனப் பொது இயக்குனர் ஹோசே கிரசியானோ த சில்வாவுக்குச் செய்தி அனுப்பிய திருத்தந்தை, இவ்வுலக தினத்தின் கருப்பொருளாகிய வேளாண் கூட்டுறவு அங்காடிகள் உலகுக்கு உணவு வழங்க முடியும் என்பது குறித்து விளக்கியுள்ளார்.
பொருளாதார நெருக்கடிகளால் இன்றைய உலகம் எதிர்நோக்கும் இன்னல்களைக் களைவதற்கும், உலகமயமாக்கலுக்கு உண்மையான அர்த்தம் கொடுப்பதற்கும் தகுதியான தலையீடுகள் தேடப்பட்டுவரும் சூழலில், கூட்டுறவு அங்காடிகள் மனிதருக்குச் சேவைபுரிவதில் பொருளாதாரத்தின் புதிய அமைப்பை முன்வைக்கின்றன என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.
இந்த ஒரு புதிய சூழலில் இளைய தலைமுறையும், பண்ணைத்தொழில்,  கிராமப்புற மற்றும் பாரம்பரிய விழுமியங்களோடு தொடர்பு ஏற்படுத்தி, தங்களது எதிர்காலத்தை புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடன் நோக்க முடியும் என்றும் திருத்தந்தையின் செய்தி கூறுகிறது. 

2. ஆயர்கள் மாமன்றத்தில் : இருபதாம் நூற்றாண்டின் மறைசாட்சிகளின் இரத்தம் கிறிஸ்தவ வாழ்வுக்குப்  புத்துயிர் கொடுத்துள்ளது

அக்.16,2012. இருபதாம் நூற்றாண்டின் மறைசாட்சிகளின் இரத்தம் கிறிஸ்தவ வாழ்வை உயிர்த்துடிப்புள்ளதாக்கியுள்ளது மற்றும் பல ஆண்டுகள் சர்வாதிகாரத்தால் உருவாக்கப்பட்ட வெறுமையையும் அது நிறைத்துள்ளது என்று இச்செவ்வாய் காலையில் இடம்பெற்ற 13வது பொது அமர்வில் கூறப்பட்டது.
புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி குறித்து வத்திக்கானில் நடைபெற்றுவரும் 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் 13வது பொது அமர்வில் பேசிய மாமன்றத் தந்தையர்கள், 2010ம் ஆண்டில் நிலநடுக்கத்தால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டு சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஹெய்ட்டித் தலத்திருஅவைக்குத் தங்களது ஆதரவையும் ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்தனர்.
கம்யூனிச சர்வாதிகார ஆட்சியில் துன்பங்களை அனுபவித்தத் திருஅவைகளைச் சேர்ந்த மாமன்றத் தந்தையர் பேசுகையில், அப்போது அனுபவித்த துன்பங்கள் விசுவாசத்திற்கு உறுதியான சான்றுகளாக உள்ளன என்று கூறினர்.
மேலும், சீனாவின் Fengxiang ஆயர் Lucas Ly அனுப்பியுள்ள குறுஞ்செய்தியை  இந்தக் காலை பொது அமர்வு தொடங்கியதும் வாசித்தார் உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச்செயலர் பேராயர் நிக்கொலா எத்ரோவிச்.
சீனாவில் இருபது ஆண்டுகள் சிறையில் இருந்த பின்னர் 1979ம் ஆண்டில் விடுதலையான 90 வயதாகும் ஆயர் Lucas Ly, இந்த ஆயர்கள் மாமன்றப் பணிகளைத் தனது செய்தியில் ஊக்குவித்துள்ளார்.
இந்தப் பொது அமர்வில் 252 மாமன்றத் தந்தையர் கலந்து கொண்டனர்.

3. ஆயர்கள் மாமன்றத்தில் : குடும்பங்களைப் பாதுகாப்பதற்குப் பன்னாட்டு அளவில் யுக்திகள் தேவை
அக்.16,2012. இத்திங்கள் மாலை இடம்பெற்ற 12வது பொது அமர்வில் 249 மாமன்றத் தந்தையர் கலந்து கொண்டனர். 16 மாமன்றத் தந்தையர் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்த அமர்வின் இறுதியில் ஐரோப்பாவின் மணிகள் என்ற குறும்படம் திரையிடப்பட்டது.
கிறிஸ்தவத்துக்கும், ஐரோப்பியக் கலாச்சாரத்துக்கும் வருங்கால ஐரோப்பாவுக்கும் இடையே இருக்கும் உறவுகள் என்ற தலைப்பிலான  இப்படத்தைப் பார்த்த திருத்தந்தை, கிறிஸ்தவத்தின் ஒரு புதிய வசந்தம் தெரிவதாகக் கூறினார்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட், ஆங்லிக்கன் பேராயர், கான்ஸ்டான்டிநோபிள் முதுபெரும் தலைவர், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் எனப் பல தலைவர்களுடன் நடத்தப்பட்ட நேர்காணல்கள் இப்படத்தில் இடம்பெற்றிருக்கின்றன.
இந்த ஆயர்கள் மாமன்றத்தில் பேசிய இத்தாலியப் பேராயர் வின்சென்சோ பாலியா, குடும்பங்களைப் பாதுகாப்பதற்குப் பன்னாட்டு அளவில் யுக்திகள் தேவை என்றும், குடும்பங்களின் முக்கியத்துவம் குறித்து உலகின் அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாச்சார அளவில் வலியுறுத்தப்பட வேண்டுமென்றும் கூறினார்.
புதிய நற்செய்தி அறிவிப்புப்பணிக்கு வயதுவந்தவர்கள் தேவைப்படுகிறார்கள் என்று பேசிய பிட்ஸ்பெர்க் பேராயர் வில்லியம் ஸ்கூர்லா, பிரமாணிக்கமான கத்தோலிக்கர் திருஅவையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்றனர் என்று கூறினார்.

4. விசுவாச ஆண்டுக்குப் பன்னாட்டு இறையியல் கழகத்தின் செய்தி

அக்.16,2012. விசுவாச ஆண்டுக்கு மையமாக அமைந்துள்ள மனமாற்றத்துக்காக உழைக்கவும், திருஅவைக்குச் செய்யும் தனது பணியின் அர்ப்பணத்தைப் புதுப்பிக்கவும் இந்த விசுவாச ஆண்டில் விரும்புவதாக பன்னாட்டு இறையியல் கழகம் அறிவித்துள்ளது.
இந்த அக்டோபர் 11ம் தேதி தொடங்கியுள்ள விசுவாச ஆண்டை முன்னிட்டு செய்தி வெளியிட்டுள்ள இந்த இறையியல் கழகம், புதிய நற்செய்தி அறிவிப்புப்பணிக்குத் திருப்பீடத்துக்கு அனைத்து உதவிகளைச் செய்யவிருப்பதாகவும் அறிவித்துள்ளது.
இறையியலாளர், விசுவாசத்தின் சாரத்தை இன்னும் அதிக ஆழமாய்ப் புரிந்து கொள்வது மட்டுமல்லாமல், முழு சுதந்திரத்துடன் இறைவனுக்குத் தங்களை அர்ப்பணிக்கவும் செய்கின்றனர் எனவும் அச்செய்தி கூறுகிறது.
பன்னாட்டு இறையியல் கழகத்தை வழிநடத்தும் திருப்பீட விசுவாசப்பரப்புப் பேராயத் தலைவர் பேராயர் Gerhard Müller, இக்கழகத்தின் ஆண்டுக்கூட்டத்தின்போது வருகிற டிசம்பர் 6ம் தேதி உரோம் புனித மேரி மேஜர் பசிலிக்காவுக்குத் திருப்பயணம் மேற்கொண்டு, இந்த விசுவாச ஆண்டில் இக்கழகம் செய்யவிருக்கும் பணிகளை அன்னைமரியாவிடம் அர்ப்பணிப்பார் என்றும் அச்செய்தி கூறுகிறது. 

5. இத்தாலிய ஆயர் ஒருவரை வெளியேற்றியுள்ளது Chad அரசு

அக்.16,2012. மத்திய ஆப்ரிக்க நாடான Chadல் எண்ணெய்யில் கிடைக்கும் வருமானம் தவறாக நிர்வகிக்கப்படுவதாகக் குறைகூறிய இத்தாலிய கத்தோலிக்க ஆயர் ஒருவரை நாட்டைவிட்டு வெளியேற்றியுள்ளது அந்நாட்டு அரசு.
Chad நாட்டில் 36 ஆண்டுகள் மறைப்பணியாளராகப் பணியாற்றிய கொம்போனி மறைபோதகச் சபையைச் சார்ந்த 67 வயதாகும் இத்தாலிய ஆயர் Michele Russo இஞ்ஞாயிறன்று இத்தாலி திரும்பியுள்ளார்.
Chad நாட்டில் எண்ணெய்வளம் மிகுந்த Doba தென் பகுதியில் 23 ஆண்டுகள் ஆயராகப் பணியாற்றியுள்ள ஆயர் Russo, அந்நாட்டின் எண்ணெய் வளத்திலிருந்து கிடைக்கும் செல்வத்தில் ஏழைகளுக்கு அதிகப் பணம் கிடைக்க வேண்டுமென்று போராடி வந்தார்.      
இதற்கிடையே, ஆயர் Russoவின் கூற்றுக்களை அந்நாட்டு வானொலி நிலையம் தவறாக மொழிபெயர்த்துவிட்டது எனவும், இவ்விவகாரத்தில் சாட் அரசு உரையாடலுக்குத் தயாராக இருப்பதாகவும் தலத்திருஅவை வட்டாரங்கள் கூறுகின்றன.
மத்திய ஆப்ரிக்க நாடான Chad, முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள நாடாகும்.

6. ஆஸ்திரேலிய ஓர் இயேசு சபை அருள்தந்தை உலகின் வயதான பள்ளி ஆசிரியர்

அக்.16,2012. ஆஸ்திரேலிய இயேசு சபை அருள்தந்தை Geoffrey Schneider, உலகின் வயதான பள்ளி ஆசிரியர் எனப் பெயர்பெற்று கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார்.
சிட்னியின் புனித அலாய்சியஸ் கல்லூரியின் ஜூனியர் பள்ளியில் 47 ஆண்டுகளாக ஆசிரியப் பணியாற்றும் அருள்தந்தை Geoffrey Schneider, வருகிற டிசம்பரில் நூறு வயதை எட்டவுள்ளார் என்றும், ஆசிரியப்பணியிலிருந்து ஓய்வுபெறும் எண்ணம் அவருக்கு இல்லை என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.
தனது ஆசிரியப்பணியின் வெற்றிக்குப் பொறுமையே காரணம் எனவும், தவறான காரியங்கள் நடந்தால் கத்தாமல், அமைதியாக விவகாரங்களைக் கைக்கொண்டால் அவை தானாக அமைதியாகிவிடும் எனவும் இயேசு சபை அருள்தந்தை Schneider கூறியுள்ளார்.   
   
7. ஐரோப்பாவில் முஸ்லீம்களின் வளர்ச்சி அச்சுறுத்துவதாக உள்ளது

அக்.16,2012. ஐரோப்பாவில் முஸ்லீம் குடியேற்றதாரக் குடும்பங்களில் பிறப்பு விகிதம் உயர்ந்து, ஐரோப்பியக் குடும்பங்களில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதால் இன்னும் சில ஆண்டுகளில் ஐரோப்பாவில் முஸ்லீம்கள் பெரும்பான்மையினராக இருப்பார்கள் என்று ஓர் ஒளி-ஒலிப்படம் கூறுகிறது.
வத்திக்கானில் ஆயர்கள் மாமன்றத் தந்தையருக்குக் காண்பிக்கப்பட்ட ஏழு நிமிட யு டியுப் ஒளி-ஒலிக் காட்சியில், இன்னும் 39 ஆண்டுகளில் பிரான்ஸ் இசுலாமியக் குடியரசாக மாறும் என்று 2009ம் ஆண்டிலே கணிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
2010ம் ஆண்டில் பிரான்சில் மூன்று முதல் நான்கு விழுக்காட்டு மக்கள் தங்களை முஸ்லீம்கள் எனக் கூறியதாக “Le Figaro” என்ற ப்ரெஞ்ச் தினத்தாள் கூறியுள்ளது.   
இதற்கிடையே, ஐரோப்பாவில் பிறப்பு விகிதம் மற்றும் மதங்கள் குறித்த சரியான புள்ளி விபரங்களை ஐரோப்பிய ஆயர் பேரவை வெளியிடுவதற்குத் திட்டமிட்டு வருவதாகச் சொல்லப்பட்டுள்ளது.

8. 34வது உலக உணவு தினம் அக்.16,2012

அக்.16,2012. இச்செவ்வாயன்று கடைப்பிடிக்கப்படும் 34வது உலக உணவு தினத்தை முன்னிட்டு இலங்கையில் ஒருவாரக் கருத்தரங்குகளும் சமய நடவடிக்கைகளும், குறுநாடகங்களும் இடம்பெற்று வருகின்றன.
உலக உணவுப் பாதுகாப்புக் குறியீட்டில் 105 நாடுகளில் இலங்கை 62 வது இடத்தில் உள்ளதையொட்டி, அந்நாட்டில் உணவுப் பாதுகாப்பு, உணவுப்பொருள்களைக் கொண்டிருப்பதற்கான உரிமை, மீன்பிடித் தொழில்கள் போன்றவை குறித்து கருத்தரங்குகள் இடம்பெற்று வருகின்றன. 
மேலும், இவ்வுலக உணவு தினத்தைச் சிறப்பித்த இந்தியாவின் ஆந்திர மாநிலப் பெண்கள், பாரம்பரிய விவசாய முறைகளை ஊக்குவிப்பது குறித்து எடுத்துக் கூறினர்.
இதன்மூலம், இந்தியாவின் ஊட்டச்சத்துக் குறைபாட்டை அகற்ற முடியும் எனவும் அப்பெண்கள் கூறினர்.
உலகில் சுமார் 87 கோடிப்பேர் பசியால் வாடுகின்றனர்.  

9. நிலவில் நீர் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்: ஆய்வில் தகவல்

அக்.16,2012. நிலவில் நீர் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று தற்போதைய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
நிலவில் உள்ள துருவ எரிமலைகளின் உள்புறத்தில் பனிக்கட்டிகள் இருப்பதற்கான வாய்ப்பை மிச்சிகன் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தங்களது ஆய்வில் உறுதி செய்துள்ளனர்.
சூரியக் காற்றில் உள்ள அபரிமிதமான ஹைட்ரஜன் அணுக்கள், ஆக்சிஜனுடன் இணைந்து நிலவின் மேற்பரப்பில் ஹைட்ராக்ஸல் எனப்படும் சேர்மமாக உருவாகியுள்ளது. இதனைப் புவி அறிவியல் துறை பேராசிரியர் Youxue Zhang தன் ஆய்வில் தெரிவித்துள்ளார்.
இந்த ஹைட்ராக்ஸல் சேர்மம், நிலவில் உள்ளவற்றில் பரவியுள்ளது. நேரடியாகக் குடிப்பதற்கான நீராக இல்லாவிட்டாலும், எதிர்காலத்தில் நிலவில் எளிதாக நீர் கிடைக்க இது உதவியாக இருக்கும் என்று Youxue Zhang தன் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நிலவில் இருந்து அப்போலோ விண்கலத்தால் கொண்டு வரப்பட்ட மாதிரிகளை 5 ஆண்டுகளாக ஆய்வு செய்து இம்முடிவு வெளியிடப்பட்டுள்ளது.


 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...